திங்கள், 24 ஜூன், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - கங்கையில் படகு உலா - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட உ(dh)த்யான் உத்ஸவ் 2024 - நிழற்பட உலா - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். *******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்சென்ற பகுதியில் கங்கைக்கரையில் இருக்கும் படகோட்டிகள் குறித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்தப் பகுதியில் ”மா கங்கா” என்று மரியாதையுடன் அழைக்கப்படும் கங்கை நதியில் சென்ற படகுப் பயணம் குறித்து இங்கே பார்க்கலாம்.  கங்கைக்கரையில், வாரணாசி நகரில் எத்தனை படித்துறைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? மொத்தம் எண்பத்தி நான்கு படித்துறைகள் வாரணாசி நகரில் கங்கையின் கரையில் உண்டு. அனைத்து படித்துறைகளுக்கும் ஏதேனும் ஒரு விசேஷம், தனித்தன்மை உண்டு. அவற்றில் சில மிகவும் பிரபலமானவை - மணிகர்ணிகா Gகாட் (படித்துறை) மற்றும் ஹரிஷ்சந்திரா படித்துறை ஆகிய இரண்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதைத் தவிர இந்தத் தொடரில் பார்த்த நமோ Gகாட் மற்றும் (dh)தசாஸ்வமேத்(dh) Gகாட் குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். மணிகர்ணிகா Gகாட் (படித்துறை) மற்றும் ஹரிஷ்சந்திரா படித்துறை ஆகிய இரண்டுமே அங்கே எரிக்கப்படும் இறந்து போனவர்கள் காரணமாக பிரபலம். வேறு என்னென்ன படித்துறைகள் இருக்கின்றன? அவற்றை எப்படிப் பார்க்கலாம் என்றெல்லாம் சொல்கிறேன். அதற்கு முன்னர் கங்கை நதியில் இந்த படித்துறைகள் ஓரமாகவே ஒரு பயணம் வரலாம் வாருங்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருந்த தமிழ் நண்பர்கள் அனைவரும் காசியில் இருக்கும் ஒரு மாலை நேரத்தில் கங்கை நதியில் ஒரு பெரிய படகில் - Cruise கப்பல் மூலம் உலா அழைத்துச் செல்வது வழக்கம். மொத்தமாக 200 பேர் வரை அந்தக் கப்பலில் இருக்கும் தளங்களில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் பயணிக்கலாம் என்பது நல்லதொரு வசதி. அப்படி குழுவாக அழைத்துச் செல்லும் போது இரண்டு தனித்தனி குழுக்களுடன், வேறு வேறு நாட்களில் கங்கை நதியில் படகில்/கப்பலில் உலா வரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பலமுறை சிறு படகுகளில் உலா வந்திருக்கிறேன் என்றாலும், வாரணாசி நகரில் இப்படியான பெரிய Cruise கப்பலில் பயணித்தது இல்லை. அந்தமான் கடலிலும், நர்மதா நதியிலும் Cruise கப்பலில் பயணித்திருக்கிறேன் என்றாலும் வாரணாசியில் இப்படி பயணித்ததில்லை. இந்தப் பயணத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்ததும், இரு கரம் கொண்டு வரவேற்று பயணித்துவிட்டேன்.  முன்பெல்லாம் இந்த வசதி வாரணாசி நகரில் இல்லை. கடந்த சில வருடங்களாக தான் இந்த வசதி அறிமுகம் செய்திருக்கிறார்கள். கங்கைக்கரை படித்துறைகளில் ஒன்றான சந்த்(th) ரவிதாஸ் படித்துறையில் இருந்து புறப்பட்டு கங்கையில் ராஜ் Gகாட் வரை உலா வந்து (dh)தசாஸ்வமேத்(dh) Gகாட் அருகே நடக்கும் மாலை நேர ஆரத்தி பார்த்து மீண்டும் சந்த்(th) ரவிதாஸ் படித்துறையில் நம்மை இறக்கி விடுவார்கள். அப்படியான வசதி சமீப வருடங்களில் இங்கே வந்திருக்கும் நல்லதொரு வசதி. ஆனால் காசி தமிழ் சங்கமம் சமயத்தில் விழா நடந்த நமோ Gகாட் கரையிலிருந்தே அழைத்துச் சென்று ஆரத்தி பார்த்தபிறகு சந்த்(th) ரவிதாஸ் படித்துறையில் இறக்கி விட்டார்கள்.  இரண்டு வெவ்வேறு நாட்களில் Cruise கப்பலில் உலா வந்தது ஒரு அற்புத அனுபவம்.  இந்த Cruise கப்பலில் யார் வேண்டுமானாலும் உலா வரலாம். அதற்கான கட்டணத்தை கட்டிவிட்டு காலை, மாலை என இரண்டு வேளைகளில் நீங்கள் கங்கை நதியில் உலா வரலாம். Alaknanda Cruiseline என்ற நிறுவனம் இந்த  Cruise கப்பல்களை இயக்குகிறது. மொத்தம் ஐந்து கப்பல்கள்/படகுகள் - அலக்நந்தா, பாகீரதி, ஸ்வாமி விவேகாநந்த், சாம் மானக்‌ஷா மற்றும் வருணா - எனப்பெயரிடப்பட்ட ஐந்தில் வருணா மிகவும் சிறியது - ஆறு பேர் மட்டும் பயணிக்கக்கூடியது. அலக்நந்தா மற்றும் பாகீரதி படகுகளில் 80 பேரும், மற்ற இரண்டில் 200 நபர்களும் பயணிக்க முடியும். நாங்கள் ஸ்வாமி விவேகாந்த் என்ற பெயரிட்ட கப்பலில் பயணித்தோம்.காலை, மாலை என இரண்டு வேளைகளில் சுமார் ஒன்றரை மணி நேர உலா உண்டு.  இதைத்தவிர படகில் பயணித்துக் கொண்டே உங்களுடைய வீட்டு விசேஷங்களையும் - திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் என எதையும் வைத்துக் கொள்ளலாம் - கட்டணம் உண்டு!  இல்லை படகில் உலா வந்தால் போதுமானது என்றால் காலையோ, மாலையோ நீங்கள் தேர்ந்தெடுத்து உலா வரலாம். மாலை நேரத்தில் ஆரத்தி பார்க்கமுடியும். காலை நேரமென்றால் காசி மாநகரம் மற்றும் படித்துறைகள் குறித்த ஒரு கதையை பயணத்தபடியே, ஹிந்தி/ஆங்கில மொழிகளில்  உங்களால் கேட்க முடியும்.  இப்படியான பயணத்திற்கு என்ன கட்டணம், எங்கே முன்பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான பதிலையும் இங்கே தந்து விடுகிறேன் - அங்கே செல்லும் சமயம் உங்களுக்கு வசதியாக இருக்கும்.  குறைந்த பட்சம் 700/- ரூபாய் (ஒரு நபருக்கு), அதிகபட்சம் ரூபாய் 1000/- - உங்களுக்கான இடத்தினைப் பொறுத்தது. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. இந்தக் கட்டணத்தில் தண்ணீர், தேநீர் மற்றும் பிஸ்கெட்டுகள் வழங்குவதும் அடங்கும். இதற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. 


Alaknanda Cruise Varanasi | Official Booking Siteமாலை நேரத்தில் விளக்கொளியில் மின்னும் கரையோர கட்டிடங்கள், படித்துறைகள் ஆகியவற்றையும், மேலே வானத்தினையும், நட்சதிரங்களையும் பார்த்தபடியே கங்கை நதியில் உலா வருவது ஒரு அலாதியான அனுபவம்.  இந்தப் பயணத்தில் இரண்டு முறை இப்படி அனுபவம் எனக்கு வாய்க்க தந்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி. இந்தப் பயணங்களில் என்னுடன் பயணித்த, தமிழகத்திலிருந்து வந்திருந்த பலருக்கும் எனக்குத் தெரிந்த விஷயங்களை, கரையில் இருக்கும் கோயில்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். நமக்குத் தெரிந்த விஷயங்களை தெரியாதவர்களுக்கு பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம் தானே. இப்படியாக Cruise கப்பல் மூலம் இரண்டு நாட்களில் பயணித்து பல இடங்களை பார்க்க முடிந்தது. கூடவே பலருடன் எனது பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.  இந்தப் பயணத்தில் கங்கைக் கரையோரம் இருக்கும் 84 படித்துறைகள் குறித்து நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.  


84 படித்துறைகளில் சில பிரபலமான படித்துறைகள் குறித்தும், தகவல்களையும் தொடர்ந்து இப்பயணத் தொடரில் நாம் பார்க்கலாம். அது வரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே! தொடர்ந்து பயணிப்போம்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

24 ஜூன் 2024


20 கருத்துகள்:

 1. வாசகம் மிக அருமை!

  படங்கள் எல்லாம் மிக மிக அழகு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 2. கங்கைக்கரையில், வாரணாசி நகரில் எத்தனை படித்துறைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? மொத்தம் எண்பத்தி நான்கு படித்துறைகள் வாரணாசி நகரில் கங்கையின் கரையில் உண்டு. //

  யம்மாடியோவ்! (88ன்னும் வேறு எங்கோ பார்த்த நினைவு!!) ஆமாம், ஒவ்வொரு படித்துறைக்கும் சிறப்பு உண்டு இல்லையா? சில தனியாருக்குச் சொந்தமானவை என்றும் வாசித்த நினைவு.

  ஒவ்வொண்ணு பத்தியும் அதன் வரலாற்றுச் சிறப்பு பற்றி நம்ம அனு பிரேம் பதிவு போட்டிருந்தாங்க. அதில் சில தென்னிந்திய பெயரில் கர்நாடகா படித்துறை, அப்புறம் ஒரு தலைவர் பெயரில் என்று ஒரு சில படித்துறைகள் இருக்கு என்று வாசித்த நினைவு! ஒரு சில மட்டும்தான் நினைவில் இருக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழமையான படித்துறைகள் 84 மட்டுமே. சில புதியதாக ஏற்படுத்தப்பட்டாலும் இன்றைக்கும் 84 மட்டுமே புகழ்பெற்றவை.

   பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

   நீக்கு
 3. நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் படித்துறைகள் பெயர் நினைவிருக்கு. மற்றதையும் உங்கள் பதிவில் அறிய தொடர்கிறேந்.

  கங்கையிலும் cruise கப்பல் விட்டிருப்பதும் படங்களும் மிக அழகு. இரு தளங்கள் கொண்டவையோ? படங்களில் அப்படித் தெரிகிறது.

  தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரை பயணித்தது மட்டுமே - அதுவும் 7வயது வரை ஒரு சில முறைகள் அங்கிருந்தும் இங்கிருந்தும் - என் கப்பல் பயணம்!

  கப்பல்கள்/படகுகள் குறித்த விவரங்கள் சுவாரஸியம் என்பதோடு தகவல்களும் தெரிந்து கொள்ள முடிந்தது.

  //மாலை நேரத்தில் விளக்கொளியில் மின்னும் கரையோர கட்டிடங்கள், படித்துறைகள் ஆகியவற்றையும், மேலே வானத்தினையும், நட்சதிரங்களையும் பார்த்தபடியே கங்கை நதியில் உலா வருவது ஒரு அலாதியான அனுபவம். //

  அருமையான அனுபவம். சுட்டியும் பார்த்துக் கொண்டுவிட்டேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரு தளங்கள் கொண்டவை, மூன்று தளங்கள் கொண்டவை என இரண்டும் உண்டு. மிகவும் சிறப்பாக இருக்கின்றன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 4. குறைவான படங்களே ஆனாலும் நிறைவான படங்கள். அழகாக உள்ளன. அதிலும் ஒரு க்ரூயிஸ் படகு மட்டும் உள்ள படத்தை பார்க்கும்போது படகு அலைகளில் சிறிது அசைவது போல் தோன்றுகிறது.
  Jayakumar​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் நான் எடுத்த படங்கள் மிக மிகக் குறைவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 5. வாரணாசி நினைவுகள் அலைமோதுகின்றன.

  படங்கள் அழகு. நாங்கள் க்ரூய்சில் பயணிக்கவில்லை. படகில் பலமுறை பயணித்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படகுகளில் பயணம் ஒரு வகை என்றால் இப்படியான க்ரூயிஸ் பயணங்கள் ஒரு வகை. இரண்டுமே பிடித்தவை தான். வாரணாசி நினைவுகள் மறக்கக்கூடியவை அல்லவே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 6. 84 படித்துறைகளா?  நான் மிக மிகச் சில  படித்துறைகள் சென்று வந்தேன் என் ஒரே விசிட்டில்!  கப்பல்/படகு அனுபவம் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 84 படித்துறைகள் தான் - காலாறா ஒரு நடை நடந்தும் சென்று அந்த சூழலில் மூழ்கலாம். உங்கள் பயணத்தில் சில படித்துறைகளேனும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 7. வாசகம் அருமை.

  //Cruise கப்பல் மூலம் இரண்டு நாட்களில் பயணித்து பல இடங்களை பார்க்க முடிந்தது//

  . Cruise கப்பல் படங்களும், செய்திகளும் போக விருப்பபடுபவர்களுக்கு மிகவும் உதவும்.
  படங்கள் எல்லாம் மிக அழகு.

  //மாலை நேரத்தில் விளக்கொளியில் மின்னும் கரையோர கட்டிடங்கள், படித்துறைகள் ஆகியவற்றையும், மேலே வானத்தினையும், நட்சதிரங்களையும் பார்த்தபடியே கங்கை நதியில் உலா வருவது ஒரு அலாதியான அனுபவம். இந்தப் பயணத்தில் இரண்டு முறை இப்படி அனுபவம் எனக்கு வாய்க்க தந்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.//

  கண்டிப்பாய் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கண்டிப்பாய் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்// - எல்லாம் அவன் செயல் தானே!

   பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 8. பயண தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது கருத்திற்கு நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 9. விஜி வெங்கடேஷ்25 ஜூன், 2024 அன்று 3:51 PM

  நாங்களே பயணிப்பது போல் இருக்கிறது.எல்லோர்க்கும் காசிப் பயணம் ,கங்கை தரிசனம் கிடைப்பதில்லை.அது பூர்வ ஜன்ம புண்ய பலன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத் தொடரின் இந்தப் பகுதி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி. தொடர்ந்து பதிவுகளை வாசித்து வர வேண்டுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. படித்துறைகளை கப்பலில் சென்று பார்ப்பது புது அனுபவத்தை தந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய அனுபவம் தான் மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....