திங்கள், 17 ஜூன், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - கடை வைத்த தமிழர்கள் - ஹிந்தி அவஸ்தை - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட உ(dh)த்யான் உத்ஸவ் 2024 - நிழற்பட உலா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள் - யாரோ!


*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்




சென்ற நான்கு பகுதிகளில் காசிக்கு பயணம் சென்றது குறித்து சில ஆசைகளையும் தகவல்களையும் சொல்லியிருந்தேன்.  சென்ற பகுதிக்கும் இந்தப் பகுதிக்கும் சில காரணங்களால் நீண்ட இடைவெளி அமைந்துவிட்டது - அதற்காக வருந்துகின்றேன்.  சில தகவல்கள் இங்கே பகிர்ந்து கொள்வது வாசிக்கும் சிலருக்கேனும் பயன்படலாம் என்பதால் இங்கே தொடர்ந்து எழுதுகிறேன்.  சென்ற பகுதியில் காசி மாநகரில் இரண்டாம் முறையாக நடந்த “காசி தமிழ் சங்கமம்” குறித்த சில தகவல்களையும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் தெரிவித்திருந்தேன்.  காசி தமிழ் சங்கமம் சமயத்தில் தமிழகத்திலிருந்து பலரை காசிக்கு அழைத்து வந்து காசி, பிரயாக்ராஜ், அயோத்யா ஜி ஆகிய மூன்று இடங்களிலும் கோயில் தரிசனம், நிகழ்வுகள், தகவல் பகிர்வு என சிறப்பாக நடத்துகிறார்கள். தவிர விழா நடக்கும் நாட்களில் சில கடைகளுக்கான வசதிகளும் ஏற்படுத்தி, தமிழகத்திலிருந்து சில கலைஞர்கள் மற்றும் காசி நகரைச் சேர்ந்த சில கலைஞர்கள், தத்தமது கைவினைப் பொருட்கள், புத்தகங்கள் என பலதும் விற்பனைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.




இந்த முறை காசி தமிழ் சங்கமம் காசியின் நமோ Gகாட் பகுதியில் நடந்ததால் நிறையவே சுற்றுலாப் பயணிகள் வருகையும் இருந்தது. அவர்கள் அங்கே அமைந்திருந்த சிறப்புக் கடைகளில் இருந்த பொருட்கள், அணிகலன்கள், புடவைகள் என அனைத்தையும் பார்வையிட்டு, சிலவற்றை வாங்கியும் சென்றார்கள்.  அங்கே இருந்த கடைகள் அனைத்தையும் பார்க்கலாம் என்று நானும் அங்கே ஒரு உலா வந்தேன். விதம் விதமாக கடைகள் - அவற்றில் பெரும்பாலானவை துணிக்கடைகள். அடுத்ததாக சில உணவுக் கடைகள்.  வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தேன்.  உள்ளூர்காரர்கள் கடைகளும் இருந்தன என்றாலும் தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கமத்திற்காகவே வந்து கடைகள் போட்ட தமிழர்கள் பலரைக் காண முடிந்தது. ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே வந்ததோடு, அக்கடைக்கார தமிழர்களிடமும் பேச்சுக் கொடுத்தேன். இவ்வளவு தொலைவு வந்து காசி மாநகரில், தொடர்ந்து ஹிந்தி மொழி கேட்டு அலுப்பில் இருக்கும் சமயத்தில் தமிழில் பேச முடிந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி தானே!



நான் பிறந்த ஊரான நெய்வேலி முன்பு கடலூர் மாவட்டத்தில் இருந்தது - அந்த ஊர் எங்களுக்கும் பிடித்த ஊர் மட்டுமல்ல முன்பு தொடர்பும் இருந்த ஊர். அப்படியான தொடர்புடைய கடலூர் மாவட்டத்திலிருந்து வந்த அன்பர் ஒருவர் கடை வைத்திருந்தார். கைத்தறியில் நெய்யப்பட்ட கைலிகளை கொண்டு வந்து விற்பனைக்கு வைத்திருந்தார்.  அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ”ஹிந்தி மொழி தெரியாமல் தான் கொஞ்சம் திண்டாட்டமாக இருக்கிறது. வரும் நபர்கள் அனைவரும் ஹிந்தியில் பேசுவதால் அவர்களிடம் பேசி, எங்கள் படைப்புகளின் தரம் குறித்து தகவல் அளித்து விற்பனை செய்வதில் நிறைய பிரச்சனைகள். அதனால் விற்பனையும் அத்தனை இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அப்போது உள்ளூர் நபர் ஒருவர் வர, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  அவரும் ஒரு துணி வியாபாரியாம் - கைலிகளின் தரம் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் வெள்ளை நிறம் இருந்திருந்தால் வாங்கிக் கொண்டிருப்பேன் - நான் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் வாங்கியிருப்பார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். 




அவரிடம் நிறைய பேசி, இந்த தரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா, உங்களைப் போலவே இவரும் ஒரு கடைக்காரர், தயாரிப்பாளர் அதனால் அவருக்கு உதவும் விதத்தில் ஒரு கைலியேனும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பேசி அவரை ஒரு கைலி வாங்க வைத்தேன். ஏதோ என்னால் முடிந்த ஒரு உதவி! கடலூரிலிருந்து வந்த கடைக்காரர் ஹிந்தி தெரியாததால் இப்படியெல்லாம் விற்பனை செய்யமுடியவில்லை என்று ஒப்புக்கொண்டார்.  தமிழகத்திற்குள்ளேயே இருந்து விட்டால் மாற்று மொழி அவசியமில்லை - வெளியே வரும் வாய்ப்புகள், தேவைகள் இருக்கும் சமயத்தில், “ஹிந்தி தெரியாது போடா!” என்று கூக்குரல் எழுப்பிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.  எந்தவொரு மொழியாக இருந்தாலும் கற்றுக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. ஆனால் அதனை நம் ஊரில் பலரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம்.  ஹிந்தி மொழி தெரிந்து கொண்டால் இந்தியாவின் பல மாநிலங்களில் உங்களால் நிச்சயம் சமாளிக்க முடியும் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.



பக்கத்திலேயே எமனேஸ்வரம் (!) என்ற ஊரிலிருந்து பருத்தி மற்றும் பட்டு கைத்தறி புடவைகள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு கடையும் இருந்தது. அவர்களிடமும் பேசினேன்.  அவர்களில் ஒருவருக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியுமாம்! அதனால் எங்களால் சமாளிக்க முடிகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். நம் ஊர் உணவு கிடைப்பதில் தான் கொஞ்சம் பிரச்சனை என்றும் விழா நடந்த நமோ Gகாட் நகரத்தின் மையத்தில் இருந்து விலகி இருப்பதால் போக்குவரத்து கடினமாக இருக்கிறது என்று சில கடைக்காரர்கள் அபிப்ராயம் சொன்னார்கள்.  சமீப காலங்களில் மில்லெட் என்று சொல்லக்கூடிய திணை, சாமை போன்ற தானியங்களுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. முன்பு நிறைய பயன்படுத்தப்பட்ட தானியங்கள் என்றாலும் வழக்கொழிந்து மீண்டும் தற்போது அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் மில்லெட் கொண்டு தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் பலவும் ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். மாதிரிக்கு ஒரு சில உணவுப் பொருட்களை சுவைத்துப் பார்க்க வைத்திருந்தார்கள். சுவைத்ததில் நன்றாகவே இருந்தது. 





கடை வைத்த தமிழர்கள் சந்தித்த மொழி பிரச்சினை போலவே நம் ஊரிலிருந்து வந்திருந்த தமிழர்கள் - அதாவது காசி தமிழ் சங்கமத்திற்காக அழைத்து வரப்பட்ட தமிழர்கள் கூட மொழி தெரியாமல் சில இடங்களில் அவதிக்குள்ளானார்கள். உள்ளூர் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை வாங்கும் ஆசை இருந்தாலும், அப்படியான கடைக்காரர்களிடம் பேசி (அதாவது பேரம் பேசி!) வாங்குவதில் அவர்களுக்கு நிறைய இடையூறுகள்.  ஒரு சிலருக்கு மொழிபெயர்ப்பாளராக, பொருட்கள் வாங்குவதில் உதவியாக இருக்க முடிந்தது.  எல்லோரும் பயணத்தில் வந்த போது சொன்ன ஒரு விஷயம் - “ஹிந்தி தெரியாம தான் அவஸ்தைங்க! அவங்க பேசறது எங்களுக்குப் புரியல! நாங்க பேசறது அவங்களுக்குப் புரியல! எங்களை அழைத்து வந்த நபர்கள் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும் தனியாக சென்று ஏதேனும் வாங்க வேண்டும், பார்க்க வேண்டும் என்றால் ரொம்ப அவஸ்தை! ஊர் சுத்திப் பார்க்க ஆசை இருந்தும், ஹிந்தி தெரியாம எங்கேயும் போகாமல் உள்ளூரிலேயே இருக்க வேண்டிய கட்டாயமா இருக்கு!” என்பதுதான். 



இப்படி ஒவ்வொரு விதமான அனுபவங்களை இந்தப் பயணத்தில் கிடைக்கப் பெற்றேன்.  நமோ Gகாட் பகுதியில் இருக்கும் படகுகள், Gகாட் பகுதியிலிருந்து தெரியும் இரும்புப் பாலம், கரையோரத்தில் அமைந்திருக்கும் உலகின் முதலாவது Floating CNG Station, மிதவை பாலம் என்று பல விஷயங்கள் அங்கே பார்க்கக் கிடைத்தது. மேலும் பல அனுபவங்கள் கிடைத்தது.  அவற்றையெல்லாம் தொடர்ந்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன். தொடர்ந்து இந்த காசி பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன். பயணம் நல்லது. ஆதலால் தொடர்ந்து பயணிப்போம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

17 ஜூன் 2024


14 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான விவரங்கள், அனுபவங்கள். இன்னொரு மொழியைத் தெரிந்து கொள்வதில் என்ன காட்டமோ நம்மூர் அரசியல்வியாதிகளுக்கு... கேட்டால் கட்டாயப்படுத்துவதைதான் எதிர்க்கிறோம் என்பார்கள். யார் இவர்களை கட்டாயப்படுத்தினார் என்றெல்லாம் கேட்கக் கூடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த மொழியைத் தெரிந்து கொள்வதில் உள்ள லாபங்கள் நம் மக்களுக்குப் புரிவதில்லை என்பது வேதனையான உண்மை.

      திணிப்பு என்றும் சொல்வார்கள்! என்ன செய்ய!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. யாரோ சொன்ன வாசகம் உண்மை, நன்றாக இருக்கிறது.

    காசி பயண அனுபவம் அருமை. நம் ஊர் மக்களுக்கு உதவி செய்தது மகிழ்ச்சி.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  3. நம் ஊரில் வேலைக்கு வரும் வடவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். பேசாமல் அவர்களில் ஒருவரையும் இந்தக் கடைக்கார்ர்கள் அழைத்துச்சென்று விடலாம். வியாபாரிகளுக்கு மொழியறிவு அவசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கிலிருந்து அங்கே வருபவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். நம்மவர்களுக்குத் தான் ஏனோ அலர்ஜி. வியாபாரிகளுக்கு நிச்சயம் தாய்மொழி தவிர ஒன்றிரண்டு மொழி அறிவு அவசியம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. அவரிடம் நிறைய பேசி, இந்த தரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா, உங்களைப் போலவே இவரும் ஒரு கடைக்காரர், தயாரிப்பாளர் அதனால் அவருக்கு உதவும் விதத்தில் ஒரு கைலியேனும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பேசி அவரை ஒரு கைலி வாங்க வைத்தேன். ஏதோ என்னால் முடிந்த ஒரு உதவி!//

    நல்ல விஷயம் செஞ்சிருக்கீங்க ஜி. இனி அந்தக் கடலூர் வியாபரி கண்டிப்பாக ஹிந்தி கற்றுக் கொள்வார் பேசுவதற்கு என்று நினைக்கிறேன்.

    நீங்க சொல்லியிருப்பது மிகவும் சரியே. வியாபாரிகளுக்கு பல மொழிகள் தெரிந்திருப்பது மிகவும் அவசியம் என்பதோடு நமக்குமே தெரிந்திருந்தால் மிக நல்லது.
    நம்மூர் மக்களைப் பிழைக்க விடாமல் செய்வதற்கு ஒரு கூட்டம் இருக்கிறதே! அந்தக் கூட்டம் ஏதேனும் சொல்லிவிட்டுப் போகட்டும் நாம நம்ம பிழைப்பைப் பார்ப்போம்னு வாழ்வில் முன்னேறுவதைப் பார்க்கணும்.

    இங்கு கூட கன்னடம் தெரியலைனா கூட ஹிந்தி வைச்சு ஓரளவு சமாளித்துவிடலாம். வட இந்தியர்கள் இங்கும் நிறைய இருக்காங்க என்பதோடு இங்குள்ள மக்களும் இந்தி பேசுகிறார்கள். இந்தி என்றில்லை வேறு மொழிகளைத் தெரிந்து கொள்வது மிகவும் பயன் தரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகம் தவிர பல மாநிலங்களில் ஹிந்தியை வைத்து சமாளித்து விடலாம் என்பது எனது பயணங்களில் நான் கண்ட உண்மை. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. படங்கள் எலலம் நன்றாக இருக்கின்றன.

    வாசகம் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மற்றும் வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  6. செல்லும் இடத்து மொழி ஓரளவாவது தெரிந்திருந்தால் வியாபாரிகளுக்கு இலகு.. நீங்கள் அவர்களுக்கு உதவியது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  7. ஹிந்தியின் அவசியத்தை தமிழக மக்கள் இறுதி வரையில் புரிந்து கொள்ள மாட்டார்கள் ஜி.

    எமனேஸ்வரம் ஊர்க்காரர்கள் பெரும்பாலும் ஹிந்தி பேசுவார்கள்.

    அங்கு நூலாடை செய்வதில் பலரும் சௌராஷ்டிர மக்கள்தான்.

    பொன்மொழி அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணத்தில் தமிழகத்தில் தங்கியிருக்கும் நிறைய சௌராஷ்டிர மக்களையும் பார்த்தேன். அவர்களிலும் சிலருக்கு ஹிந்தி தெரியவில்லை கில்லர்ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....