வெள்ளி, 28 ஜூன், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள் - பகுதி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா மைலார்ட் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


சென்ற பகுதியில் வாரணாசி நகரின் எண்பத்தி நான்கு படித்துறைகளில் மூன்று படித்துறைகள் குறித்த சில செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். இந்தப் பகுதியில் இன்னும் சில படித்துறைகள் குறித்தும், கிடைத்த சில அனுபவங்கள் குறித்தும் பார்க்கலாம்! அத்தனை படித்துறைகளுமே ஏதோ ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது தான் என்றாலும் சில படித்துறைகள் தான் அதிக அளவில் பெயர் பெற்றதாக இருக்கிறது. கூடவே ஒவ்வொரு படித்துறைகளிலும் இருக்கும் சிறியது முதல் பெரிய கோவில்கள் அனைத்துமே நம்மை வரவேற்றுக் கொண்டிருப்பது போல ஒரு எண்ணம் எனக்கு.  வாரணாசி நகரில் இருந்த நாட்களில் சில நாட்கள் மாலை நேரத்தில் படித்துறைகள் வழியாக நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.  எத்தனை எத்தனை மனிதர்கள், அவர்களின் வேலைகள், படித்துறைகள் அவர்களுக்கு தரும் வாழ்க்கை, பயணத்தில் வரும் நபர்கள், அவர்களால் பிழைக்கும் உள்ளூர்வாசிகள் என அனைத்தும் ஏதோ விதத்தில் நம்மை ஈர்ப்பவையாகவே இருக்கின்றன. படித்துறைகள் வரிசையில் அடுத்து சில படித்துறைகள் குறித்து பார்க்கலாம். அதற்கு முன்னர் வாரணாசி பெயர்க்காரணம் குறித்தும் பார்க்கலாம்!


வாரணாசி - பெயர்க்காரணம்:



வருணா மற்றும் அஸ்ஸி ஆகிய இரண்டு ஆறுகள் நகரின் வெவ்வேறு இடங்களில் கங்கையுடன் சங்கமிக்கின்றன. இந்த இரண்டு சங்கமங்களுக்கு இடையே இருக்கும் இடமே வருண்-அஸ்ஸி - வாரணாசி என்று பெயர் பெற்றது என்று சொல்கிறார்கள். இந்த புனிதமான இடமே வாரணாசி என்றும் இந்தப் பூவுலகில் இதை விட புனிதமான இடம் இல்லை என்றும் நம்பிக்கை.  இரண்டு சங்கமங்களுக்கு இடையே சுமார் இரண்டரை மைல் தொலைவு - கங்கையின் இந்த இரண்டு உப நதிகளும் முறையே வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இணைகின்றன.  இங்கே உள்ள பக்தர்கள் இந்த இரண்டு சந்திப்புகளுக்கும் இடையே வருடா வரும் ஒரு யாத்திரை செல்கிறார்கள் - பஞ்ச க்ரோஷி யாத்ரா என்று அழைக்கப்படும் இந்த யாத்திரையின் மொத்த தொலைவு ஐந்து மைல் - அதாவது ஆரம்பித்த இடத்திலேயே முடிப்பதால் மொத்தம் ஐந்து மைல். வருடா வருடம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த யாத்திரையைக் காண பக்கத்திலுள்ள அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் வழக்கம்.  அஸ்ஸி என்கிற சிற்றாறு கங்கையுடன் சங்கமிக்கும் இடம் தான் இன்றைக்கு அஸ்ஸி Gகாட் என்று அழைக்கப்படும் படித்துறை! 



அஸ்ஸி Gகாட்  - மா துர்கா ஷும்பா-நிஷும்பா ஆகிய அரக்கர்களை தனது வாளால் வதம் செய்த பிறகு அந்த வாளை அஸ்ஸி எனும் சிற்றாற்றில் வீசி விட்டார் என்றும் அந்த இடம் அஸ்ஸி கங்கையுடன் சங்கமிக்கும் இடம் என்றும் அந்த இடத்திற்கு அஸ்ஸி Gகாட் என்று பெயர் என்றும் சொல்கிறார்கள். இந்த படித்துறையில் ஒரு முறையேனும் புனித நீராட வேண்டியது அவசியம் என்றும் அப்படி இங்கு நீராடினால் இவ்வுலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்யம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் வருடத்தின் பல நாட்களில் - குறிப்பாக மகர சங்கராந்தி, சூரிய/சந்திர கிரகண நாட்கள் ஆகியவற்றில் இந்த படித்துறையில் நிறைய பேர் நீராடுகிறார்கள். நீராடிய பிறகு கங்கையிலிருந்து நீரை எடுத்து கரையில் இருக்கும் அரச மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு சிறு கோவிலில் அஸ்ஸி சங்கமேஷ்வர் லிங்கம் என்ற பெயர் கொண்ட லிங்கமும் உண்டு. அங்கேயும் பக்தர்கள் அபிஷேகம் செய்வதுண்டு.  அஸ்ஸி Gகாட் பற்றிய குறிப்புகள் பல புராணங்களில் இருக்கின்றன என்பதையும் இங்கே பலர் குறிப்பிடுகிறார்கள். 





கேதார் Gகாட் : கேதார் Gகாட் என்கிற படித்துறை தென்னிந்தியர்களிடையே பிரபலமான ஒரு படித்துறை.  எப்போதும் இங்கே பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை இங்கே இருந்த நாட்களில் பார்த்தேன்.  இந்தப் படித்துறையில் தான் சற்றே உயரமான படிகள் வழியே மேலே சென்றால் கேதாரேஷ்வர் மந்திர் எனப்படும் கோவில் இருக்கிறது. (CH)சார் (DH)தாம் என்று சொல்லக்கூடிய நான்கு பிரதான கோவில்கள் - யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய கோவில்களில் ஒன்றான கேதார்நாத் போலவே இக்கோவில் அமைக்கப்பட்டதாகச் சொல்வதுண்டு. கேதார்நாத் போலவே இங்கே இருக்கும் சிவனை கேதாரேஷ்வர் என்றே அழைக்கிறார்கள்.  இந்தக் கோவிலில் சிவபெருமான், பார்வதி ஆகியோருக்கு சன்னதிகள் இருப்பது விசேஷம் என்பதைப் போலவே இக்கோவிலுக்குக் கீழே கௌரி குண்ட் எனும் குளமும் இருக்கிறது. இந்தக் கோவில் மற்ற கோவில்களிலிருந்து வித்தியாசமாக தென்னிந்திய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் என்பதையும் உங்களால் காண முடியும். மிகவும் அழகான கோவில்.  மிகப் பெரிய சிவலிங்கம் காணும்போதே மனதுக்குள் பரவசம் - இந்தச் சிவலிங்கமும் சுயம்புவாக உருவானது என்றும் சொல்கிறார்கள். பக்கத்திலேயே விஜயநகரம் Gகாட் இருக்கிறது. 






இந்தப் படித்துறைகள் பலவும் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை/புனரமைக்கப்பட்டவை என்றும், 19-ஆம் நூற்றாண்டில் உத்திரப் பிரதேச அரசாங்கம் இவற்றை புனரமைத்தது என்றெல்லாம் சொல்வதோடு, பல ராஜா/மஹாராஜாக்கள், பிரபல தொழிலதிபர்கள் போன்றவர்களாலும் புனரமைக்கப்பட்டு இருக்கின்றன.  இப்போது இருக்கும் பல படித்துறைகள் சேதமடைந்து இருக்கிறது என்பதையும் நம்மால் பார்க்க முடியும்.  இது போன்று சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என தொடர்ந்து வரும் இடங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, பெரிய பெரிய நிறுவனங்களின் கடமையும் கூட.  அவ்வப்போது இந்த இடங்களைச் சுத்தம் செய்வதும், பராமரிப்பதும் அத்தியாவசியத் தேவை என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வது நல்லது.  படித்துறைகள் வழி நடக்கும்போதும், படகுகளில் பயணித்தபடி பார்க்கும்போதும் இங்கே இருக்கும் கட்டிடங்களும் கோவில்களும் நமக்குச் சொல்லும் சேதிகள் ஏராளம்.  எத்தனை எத்தனை வரலாற்று நிகழ்வுகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது இந்த இடம் என்பதை மனதில் நினைத்தபடியே படித்துறைகளில் அமர்ந்திருந்த பொழுதுகளில் சிந்தித்து இருக்கிறேன்.  







படித்துறைகளில் கிடைத்த வேறு சில அனுபவங்கள், இங்கே இருக்கும் நேர்மறை அதிர்வுகள், பலரையும் வாழவைக்கும் தொழில்கள், பார்க்கக் கிடைக்கும் காட்சிகள் என ஒவ்வொன்றும் நமக்கு பல விஷயங்களைச் சொல்லித் தரும் என்பதில் ஐயம் வேண்டாம்.  படித்துறைகளில் பல முறை நடந்தும், அங்கே ஏதேனும் ஒரு படியில் அமர்ந்து கொண்டு நடக்கும் விஷயங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதும் அலாதியான அனுபவங்களை எனக்குத் தந்தது.  இந்த ஒன்பது நாள் வாரணாசி பயணத்தில் மூன்று நான்கு நாட்களேனும் ஏதேனும் ஒரு படித்துறையில் அமர்ந்து கொண்டிருந்தேன் - நேரம் போவது தெரியாமல்/நேரத்தைக் கவனிக்காமல் அமர்ந்து கொண்டு நதியையும், மக்களையும் கவனித்துக் கொண்டிருப்பது எனக்கு மனதில் ஏதோ சொல்ல முடியாத ஒரு அமைதியைத் தந்தது என்று சொல்வதில் எனக்கு அச்சமில்லை. இந்த படித்துறைகள் தான் வாரணாசி நகரில் இருக்கும் பலருக்கு வாழ்வாதாரத்தினை தந்து கொண்டிருக்கும்  பெரிய தொழிற்சாலை என்று கூடச் சொல்லலாம்.  







படித்துறை வழி நடப்பதற்கு உங்களுக்கு உதவி தேவை எனில் சில நிறுவனங்கள் படித்துறை வழியே சில நடைப்பயணங்களையும் ஏற்பாடு செய்கிறார்கள் - Of course கட்டணம் உண்டு - உங்களுடன் ஒரு வழிகாட்டியும் வருவதோடு, அவர் வழியில் இருக்கும் இடங்களைக் காண்பித்தபடியே அதன் அருமை பெருமைகளையும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருவார்.  அப்படி அவர் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.  நிறைய வெளிநாட்டவர்கள் இப்படியான பயணங்களை மேற்கொள்வதோடு, அவர்களது அனுபவங்களை புத்தகங்களாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள்.  சில புத்தகங்களை வாரணாசி நகரின் படித்துறைகளில் விற்பனைக்கு வைத்திருந்ததையும் என்னால் பார்க்க முடிந்தது. நிறைய ஓவியர்களையும், அவர்கள் படித்துறைகளில் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்கள் கண்காட்சிகளையும் உங்களால் பார்க்க முடியும்.  தொடர்ந்து அங்கே இருந்தால் நேரம் எப்படிப் போகிறது என்பதை உங்களால் கவனிக்கவே முடியாது என்றும் சொல்லலாம்.  மேலும் சில அனுபவங்களுடன் உங்களை அடுத்த பகுதியில் சந்திக்கிறேன். அதுவரை தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

28 ஜூன் 2024


27 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. இந்தப் படித்துறைகளை அடைவதற்குள் கசகசவென்ற சாலைகளையும் பல்வேறு இடர்களையும் கடக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடர்கள் - இருக்கலாம்! ஒரு படித்துறைக்குள் வந்துவிட்டால் அதன் வழியாகவே பல படித்துறைகளில் ஒரு வலம் வரலாமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. காணக்கிடைக்காத காட்சிகளை காமிரா வாயிலாக காட்சிப்படுத்தி காலையில் பரவசப்படுத்தி விட்டீர்கள்.  இவைகளை நாம் போற்றி பாதுகாக்க  வேண்டும் என்பதில் ஐயமில்லை.  அரசாங்கம் இன்னும் மனது வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போற்றிப் பாதுகாக்க வேண்டிய இடங்களே... அரசாங்கம், பெரிய தனியார் நிறுவனங்கள், மக்கள் என அனைவரும் ஒத்துழைத்தால் இந்தியாவின் பல பொக்கிஷங்களை பாதுகாக்கலாம்.

      படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஒவ்வொரு ஹிந்துவின் லட்சியமும் காசி.. காசி தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி - பல விஷயங்களை தன்னுள் அடக்கியது. அனைவரும் ஒரு முறையேனும் சென்று வரவேண்டிய இடம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. செந்தமிழரின் நினவில் காசி பதிந்து இருந்ததால் தான்
    தென்காசி என்றும்
    சிவகாசி என்றும்
    நகரங்கள் இங்கே உருவாகின...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்காசி, சிவகாசி - ஆமாம். தமிழகத்திற்கும் காசிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது உண்மையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. விஜி வெங்கடேஷ்28 ஜூன், 2024 அன்று 9:01 AM

    மிகத் தெளிவான நீரோடை போன்ற(படித்துறையைப் பற்றியது அல்லவா) நம்மை உடன் அழைத்துச் செல்லும் எழுத்து.அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி.

      நீக்கு
  8. மிக அருமையான விவரங்கள், படங்கள் மூலம் காசியை தரிசனம் செய்த உணர்வு கிடைத்தது. ஒவ்வொரு படித்துறையிலும் அமர்ந்து வெகு நேரம் கங்கையை பார்த்து கொண்டு இருக்க ஆவலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கை படித்துறைகள் - என்றைக்கும் பிடித்த இடமாக இருக்கிறது. உங்களுக்கும் வாய்ப்பு அமையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. படங்களோடு நிறைய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  10. வெங்கட்ஜி காலையிலேயே வாசித்துவிட்டேன். மொபைலில். வரைபடத்தோடு விளக்கம் மிகச் சிறப்பு.

    காசி பற்றியும் அங்கு ஒவ்வொருவருக்கும் எப்படியான அனுபவங்களைத் தரும் என்பதையும், அங்கு வசிப்பவர்களுக்கான வாழ்வாதாரம் கொடுக்கும் நகரமாகவும் இருப்பதைச் சொல்லியிருப்பதும், படித்துறைகள் பற்றிய விவரங்கள் எல்லாமே அருமை.

    உணர்வுபூர்வமான நகரம். எனக்குக் காசிக்குச் சடங்குகள் ரீதியாகச் செல்வதைவிட இப்படி அங்கு தங்கியிருந்து ஒவ்வொன்றையும் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக இருக்கு. கங்கையையும் படித்துறைகளையும், கோயில்களையும் அந்த வாழ்க்கையையும் ஆர அமர்ந்து ரசித்து அனுபவிக்க வேண்டும். (எந்த இடத்துக்குப் போனாலும் எனக்கு அவசரக கதியில் சென்று பார்த்தோமா வந்தோமா என்பதல்லாமல் அனுபவித்து வர ஆசை). வெயில் காலம் அல்லாத தருணங்களில் செல்ல வேண்டும் என்பதும்.

    எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஆசைகளுக்கென்ன குறைச்சல்!!!! மனதில் பல தளங்கள் கட்டிவிட்டது!!!

    பதிவை ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி நகர் - என்னையும் பல விதத்தில் கவர்ந்த நகரம். உங்கள் எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. காசி நகரே பல உணர்வுகளையும், காட்சிகளையும், வரலாற்றையும் உள்ளடக்கியதுதான்!

    பாதுகாக்கப்பட வேண்டிய நகரம். முன்பை விட இப்ப நிறைய முன்னேற்றங்கள் வந்திப்பது போல இன்னும் வரும். அரசும் தனியாரும் இணைந்தால் நிறைய செய்யலாம் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரை விட நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. தொடர்ந்து பராமரிப்பதில் அனைவருடைய பங்கும் இருந்தால் நல்லதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. வாரணாசி பெயர்க்காரணத்தோடு ஏராளமான விஷயங்களை படங்களுடனும் பகிர்ந்து கொண்டது அருமை. ஏராளமான விஷயங்கள் தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி வெங்கட்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. சிவ சிவ என்று தமிழில் எழுதப்பட்டிருப்பதிலிருந்தே தெரிகிறது தென்னிந்தியர்கள் கோயில் என்றும் நம் மக்களின் பங்கும், செல்வாக்கும் அங்கு இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆம் பாரதியாரே அங்கிருந்திருக்கிறாரே.

    துளசிதுரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியார் இருந்த வீடு இன்றைக்கும் இருக்கிறது துளசிதரன் ஜி. பல தமிழர்கள் அங்கேயே இருந்திருக்கிறார்கள் - இன்றைக்கும் இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. வருணா+ அஸ்ஸி இரண்டும் கலக்கும் இடம் புனித இடம் சிறப்பு அறிந்தோம்.

    காசி முக்கிய படித்துறைகள் கோவில்கள் பலதையும் கண்டமகிழ்ச்சி மன அமைதி கிடைத்திருக்கும்.நாங்களும் கண்டுகொண்டோம் நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....