செவ்வாய், 18 ஜூன், 2024

முக நூல் இற்றை - இரயில் பயணங்களில் - What a combination Sir ji! - உப்புமாவும் கெட்ச் அப்பும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் (சமீபத்தில் முகநூலில் வெளியிட்ட இற்றை - இங்கேயும் ஒரு சேமிப்பாக!) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - கடை வைத்த தமிழர்கள் - ஹிந்தி அவஸ்தை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை சமீபத்தில் ரசித்த ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எண்ணம் போல் வாழ்க்கை - பழமொழி;

எண்ணினால் மட்டும் தான் வாழ்க்கை - பணமொழி!


*******


உப்புமா... அதுவும் ரவா உப்புமா என்றாலே காத தூரம் ஓடுபவர்கள் நம்மில் பலர் இங்கே உண்டு - என்னையும் சேர்த்து. அது ஏனோ உப்புமாவைக் கண்டாலே பலருக்கும் ஆவதில்லை. ஆனாலும் வீட்டில் உப்புமா செய்தால் கொஞ்சம் நக்கலடித்துக் கொண்டே சாப்பிட்டு விடுவேன் (வேறு வழி!).  பெரும்பாலும் உணவகங்களுக்குச் செல்லும் போது நான் உப்புமா சாப்பிடுவதே இல்லை. அங்கேயும் போய் எதற்கு அந்தக் கொடுமை! ரவா தோசை, பொடி தோசை என்று தான் சாப்பிடுவது வழக்கம். 


செய்யும் விதத்தில் செய்தால் அது கூட நன்றாகவே இருக்கும் என என் அப்பா சொல்வதுண்டு - அதுவும் ஒரே ஒரு ஆளுக்கு எனச் செய்ய வேண்டும் என்றும், நிறைய நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த பத்துப் பன்னிரெண்டு முந்திரிப்பருப்புகளை சேர்த்து பக்குவமாகச் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்.  ஒவ்வொருவருக்காகச் செய்ய என்னால் முடியாது என்று மொத்தமாக வீட்டில் இருக்கும் ஐந்து பேருக்கும் ஒன்றாகக் கிண்டி இறக்கி விடுவார் அம்மா! சில நேரங்களில் அப்பா தனக்கென்று தனியாக அவருக்குப் பிடித்த விதத்தில் உப்புமா செய்து கொள்வார் - அதில் ஒன்றிரண்டு ஸ்பூன் சாப்பிட்டதுண்டு - கிடைத்தால்! - நன்றாகவே இருக்கும். 


இப்படி உப்புமா வீட்டில் சாப்பிடாத, சாப்பிட்டாலும் நக்கலடிக்கும் எனக்கு சமீபத்தில் ஒரு தண்டனை! சென்னையிலிருந்து தில்லிக்கு இரயிலில் பயணிக்கும் போது காலையில் கிடைத்த ஒரே சைவ உணவு - உப்புமா! வேறு வழியில்லை - அந்தக் கண்றாவி உப்புமாவை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.  


IRCTC Canteen தற்போது பெரும்பாலும் வட இந்தியர்களால் தான் நடத்தப்படுகிறது - அவர்களுக்கு உப்புமா பற்றி அத்தனை விஷயங்கள் தெரிவதில்லை - தெரிந்தவர்கள் செய்தாலே நன்றாக இருக்காது - தெரியாதவர்கள் செய்தால் அந்த உப்புமா எப்படி இருக்கும்! ரவையை வேக வைத்து, கடுகு தாளித்துக் கொடுத்து விடுவார்கள். கொழகொழவென்று ஒரு கரண்டி உப்புமாவை சில்வர் ஃபாயிலில் அடைத்து கொடுத்து விட்டு 40 ரூபாய் காசும் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். உப்புமாவின் மேல் சட்னி என்ற பெயரில் எதையோ ஒரு திரவத்தை வேறு ஊற்றி இருப்பார்கள். 



இந்த முறை கிடைத்த உப்புமா அப்படியே மொத்தையாக இருந்தது - ஆனால் எப்போதும் இருப்பது போல உப்புமா உடன் சட்னி இல்லை! இருந்தது ஒரு சிறு பாக்கெட் கெட்ச் அப்! ”ஏண்டா... ஏன்!” என்று அந்த IRCTC சிப்பந்தியைக் கேட்கலாம் என்றால் அதற்குள் அடுத்த பெட்டிக்குச் சென்று விட்டார் அவர்.  ”உப்புமாவுக்கு கெட்ச் அப்பா?” என்னடா காம்பினேஷன் இது! என்று என்னை நொந்தபடியே அந்த சிறு பாக்கெட்டைப் பிரித்து (அதற்கு ஒரு பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும் - குறிப்பாக உங்கள் கைவிரல்கள் ஈரமாகவோ, எண்ணைய் பசையுடன் இருந்தாலோ!) உப்புமாவை கெட்ச் அப் தொட்டுக்கொண்டு வாயில் போட்டால் - அசட்டுத் தித்திப்புடன் உப்புமா! “என்ன கொடுமை சரவணன்....” என்று கேட்க வேண்டும் போல இருந்தது! 


மனதுக்குள் என் இல்லத்தரசி வந்து ”நான் செய்து தரும் உப்புமாவை நக்கலடிப்பீங்க இல்ல! உங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்” என்று சொல்வது போலவே ஒரு ஃபீலிங்க்!  விதி வலியது என்று சொல்லி இருக்கிறார் - இந்தப் பதிவை முகநூலில் எழுதிய போது!


அனுபவிடா ராஜா என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு அந்த உப்புமாவை உள்ளே தள்ளினேன் - வேற வழி!


வேறு சில இரயில் பயண அனுபவங்களுடன் மீண்டும் சந்திப்போம்…


குறிப்பு: சேர்த்திருக்கும் படம் இணையத்திலிருந்து எடுத்து பட்டி டிங்கரிங் பார்தது! ஏனோ நான் சாப்பிட்ட உப்புமாவை படம் எடுக்கக் கூடத் தோன்றவில்லை!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

18 ஜூன் 2024


14 கருத்துகள்:

  1. IRCTCல் தரும் எந்த உணவுமே நன்றாக இருப்பதில்லை. யார் யாரெல்லாம் ஊழல் செய்கிறார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும் ஊழல் தான் - அதனை சரி செய்ய எத்தனை பிரயத்தனம் செய்தாலும் முடிவதில்லை. இன்னுமொரு விஷயமும் உண்டு - நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டரிங் செய்யும் போது L1 என்ற சமாச்சாரமும் சேர்ந்து கொண்டு தரமற்ற சேவைகளை தருபவர்களுக்கே டெண்டர் கிடைப்பதும் வாடிக்கை. ஒன்றும் செய்வதற்கில்லை. விலையும் குறைவாக வேண்டும், தரமும் ஓரளவுக்கேனும் சரியாக இருக்க வேண்டும் என்றால் நடப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. நான் வீட்டிலேயே உப்புமா சாப்பிமாட்டேன்.

    ரயிலில் உப்புமா சாப்பிட்டவர்களை பார்த்ததுண்டு முகம் அஷ்டகோணலாக சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... வீட்டில் கொடுத்தால் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்! முகம் அஷ்ட கோணலாக மாறுவதை நானும் கண்டிருக்கிறேன் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. IRCTC Canteen தற்போது பெரும்பாலும் வட இந்தியர்களால் தான் நடத்தப்படுகிறது//

    ஆமாம், வெங்கட்ஜி. குறிப்பாக வட இந்திய ரயில்களில். தென்னக ரயில்களில் சேவகர்கள் வட இந்தியர்கள் பெரும்பாலும் இருந்தாலும், 6 மணி நேரப் பயணங்களில் கொடுக்கப்படும் உணவு தென்னக உப்புமாவும் கூட ஸோ ஸோ தான். இதுவும் தவிர்க்க முடியாத நேரத்தில் சாப்பிட்டது. இல்லைனா வீட்டுத் தயாரிப்புகள்தான் கொண்டு செல்வது வழக்கம்.

    உப்புமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். காய்கள் எல்லாம் போட்டுச் செய்வேன், வெங்காயம் இல்லாமல் செய்வது இல்லை. plain உப்புமா செய்தாலும் எனக்குப் பிடிக்கும் பெருங்காயம் எல்லாம் போட்டுச் செய்வோமே...

    உங்க அப்பா சொல்லிருக்காப்ல என் பாட்டி செய்வார் ஆனால் அதிகம் சாப்பிட முடியாது. எண்ணையும், நெய்யும் இருக்கும் என்பதால். கையால் உப்புமாவை எடுக்கும் போதே தெரிந்துவிடும். சுவை அபாரமா இருக்கும் தான் ஆனா...இங்கு கோயில்களில் சிலப்போ உப்புமா பிரசாதம் கிடைக்கும் சுவை நல்லாருக்கும் ஏன்னா எண்ணை, நெய் மிதக்கும்!

    ஆதியின் கமென்ட் சிரிக்க வைத்துவிட்டது!!! சரிதானே அவங்க கமென்ட்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலை தூர பயணங்களில் வீட்டிலிருந்து கொண்டு வருவது பல சமயங்களில் எனக்கு சாத்தியமில்லை. அதனால் இப்படியான உணவையே சாப்பிட வேண்டிய கட்டாயம். பெரும்பாலும் பழங்கள் வைத்தே சமாளிக்கும் பழக்கமும் உண்டு. தில்லியிலிருந்து திருச்சி சென்ற சமயத்தில் அப்படித்தான் சமாளித்தேன் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் உப்புமா விரோதி இல்லை. என் 15 வது வயது முதலே தனியாகச் சமையல் செய்ய வேண்டிய சூழல் வந்ததால், எனக்குக் கை கொடுத்தது உப்புமாதான். இப்போதும் வீட்டில் உப்புமா செய்யும் போது, உங்கள் அப்பா செய்தது போல் அதில் சிறிது நெய், கிஸ்மிஸ், கேரட் சிறிதாக நறுக்கியதைப் போட்டு இன்னும் சில நறுக்கல்கள் எல்லாம் போட்டுச் செய்யும் போது உண்மையிலேயே சுவையாகத்தான் இருக்கும்.

    சமீபகாலத்தில் ரயிலில் பயணித்த போது உப்புமா சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனோடு சட்னி இருந்தது. அந்தப் பயணத்தில் கிடைத்த இட்டலியை விட உப்புமா பரவாயில்லை என்றே தோன்றியது.

    முன்பெல்லாம் ரயில் நிலையங்களில் கிடைத்த இட்டலி நன்றாக மிக மென்மையாக இருக்கும். இப்போது இதில் உளுந்தே சேர்ப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். அரிசியை மட்டும் குதிர்த்து இட்டலி சுடுவதாகச் சொன்னார்கள். அந்த இட்டலி திருப்திகரமாகத் தெரியவில்லை. ரயில் பயணம் என்றால் தண்டனைதான் வேறு வழியில்லாமல் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்புமாவுக்கு விரோதி இல்லை - ஹாஹா... ஏனோ பலருக்கும் பிடிப்பதில்லை. இட்லி பல இடங்களில் கல் போலத்தான் இருக்கிறது! அதுவும் ஆறிப்போய் சாப்பிட்டால் மிகவும் கஷ்டம். சாம்பார்/சட்னி துணையோடு உள்ளே தள்ள வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  5. ரயில் பயணத்தில் கொடுக்கும் உப்புமா முகநூலில் படித்தேன்.
    உப்புமா அவசரத்திற்கு கை கொடுப்பது, வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு இல்லையென்றால் உப்புமா தான். ரயில் பயணத்தில் அதை சாப்பிடுவது பயம் தான். வயிற்றை கெடுக்கவில்லையே! அந்த வகையில் மகிழ்ச்சி.
    ஆதியின் நினைப்பை பகிர்ந்து கொண்டது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை வயிறுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதில் எனக்கும் திருப்தி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. உப்புமாவுக்கு கெட்ச் அப் .. ஹா.. ஹா.. ஹா... முஃகநூளிலும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. அனுபவம் அழகாக பேசியிருக்கிறது.ஆனால் ஏன் உப்புமாவை ஒரு கொடுமைக்கார சிற்றன்னை போல் எல்லோரும் நினைக்க வேண்டும்? நீங்கள் சொல்வதுபோல் இஞ்சி பச்சை மிளகாய் கொத்துமல்லி கறிவேப்பிலை நெய் முந்திரி வெண்டுமென்றால் வெங்காயம் அனைத்தும் சேரும்போது வாசனை வீட்டைத் தூக்காதோ?சட்டென்று 10 நிமிடத்துக்குள் நம் வயிற்றை நிரப்புவது போல் வேறொரு பொருளுண்டோ.தொட்டுக்கொள்ள சாம்பார் ஊறுகாய் தயிர் எதை வேண்டுமானாலும் அது ஏற்றுக் கொள்ளும்.சம்பா கோதுமை ரவை உப்புமா தனி ரகம்.அதைப் பற்றி தனி post தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமைக்கார சிற்றன்னை - ஹாஹா...

      பத்து நிமிடத்துக்குள் நம் வயிற்றை நிரப்புவது போல் வேறொரு பொருளுண்டோ... அது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....