புதன், 26 ஜூன், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள் - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட வலைப்பூவிற்கு புதிய அறிமுகம் - அன்னையர் தினம் - ஜீவி (GV) பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


தொடரின் சென்ற பகுதியில் கங்கை நதியில் சென்ற ஒரு படகு உலா பற்றி பார்த்தோம். தொடர்ந்து இந்தப் பகுதியில் கங்கையின் கரையில் வாரணாசி நகரில் இருக்கும் படித்துறைகள் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.  முன்பு சொன்னது போல கங்கையின் கரையில் மொத்தம் எண்பத்தி நான்கு படித்துறைகள் - ஹிந்தி மொழியில் (ch)சௌராசி Gகாட் என்று அழைக்கப்படும் இந்த படித்துறைகள் என்னென்ன என்று ஒரு பெரிய பதாகையில் கங்கைக் கரையில் எழுதி வைத்திருப்பார்கள்.  சற்றே பழைய அந்த பதாகையை முழுதாக படம் பிடிக்க முயற்சித்தேன் - ஆனாலும் அத்தனை சிறப்பாக படம் எடுக்க முடியவில்லை - குறுக்கும் நெடுக்கும் நிறைய பயணிகள்! ராஜா, மஹாராஜாக்கள் கட்டிய படித்துறைகள், பல புராணக்கதைகள் சொல்லும் படித்துறைகள் என பல படித்துறைகள் இங்கே இருக்கின்றன. சில படித்துறைகள் பழைய பெயர் மாற்றி புதிய பெயர்கள் வைத்திருப்பதும் உண்டு. இந்த படித்துறைகள் தவிர சில இடங்களில் படித்துறை போல இல்லாமல் கரைகளில் சில வசதிகளும் இருந்தன - அவற்றில் ஒன்று கி(d)ட்கியா Gகாட் என்று சொல்லப்பட்ட இடம் தான் புனரமைக்கப்பட்டு நமோ Gகாட் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 


(ch)சௌராசி Gகாட் எனும் 84 படித்துறைகள் எவை?


கங்கைக் கரையின் 84 படித்துறைகளுக்கும் ஒரு வரலாறும் சிறப்பும் உண்டு. அந்த படித்துறைகள் - அவை இருக்கும் வரிசையில் இல்லாமல் பொதுவாக இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். 


(1)அஸ்ஸி Gகாட், (2)தஸாஸ்வமேத் Gகாட், (3)மணிகர்ணிகா Gகாட், (4)ஹரிஷ்சந்திரா Gகாட், (5)கேதார் Gகாட், (6)துள்சி Gகாட், (7)பீம்சாந்தி Gகாட், (8)சௌசாட்டி Gகாட், (9)சரஸ்வதி Gகாட், (10)பதாயினி Gகாட், (11)லலிதா Gகாட், (12)மான்சரோவர் Gகாட், (13)ஹரித்வார் Gகாட், (14)ஆதி கேஷவ Gகாட், (15)பஞ்ச்கங்கா Gகாட், (16)க்ஷ்மேஷ்வரா Gகாட், (17)ராஜா Gகாட், (18)ஷிவாலா Gகாட், (19)முன்ஷி Gகாட், (20)தர்பங்கா Gகாட், (21)அஹில்யாபாய் Gகாட், (22)நிஷாத்ராஜ் Gகாட், (23)நிரஞ்சனி Gகாட், (24)ஷீத்லா Gகாட், (25)ராணி Gகாட், (26)குலாரியா Gகாட், (27)டாண்டி Gகாட், (28)கௌ Gகாட், (29)தத்தாத்ரேயா Gகாட், (30)மீர் Gகாட், (31)மதானா Gகாட், (32)சித்தி வினாயக் Gகாட், (33)ஜைத்புரா Gகாட், (34)வ்யாஸ் Gகாட், (35)ராம் Gகாட், (36)ப்ரிஜ்ராமா Gகாட், (37)ப்ரஹலாத் Gகாட், (38)தன்வந்திரி Gகாட், (39)ஜானகி Gகாட், (40)ஜாகேஷ்வர் Gகாட், (41)கோலா Gகாட், (42)பஞ்சகோடா Gகாட், (43)ராஜேந்திர பிரசாத் Gகாட், (44)ப்ரயாக் Gகாட், (45)சௌம்சாத்தி Gகாட், (46)ஹனுமான் Gகாட், (47)ராஜா க்வாலியர் Gகாட், (48)கங்கா மஹல் Gகாட், (49)ஜெயின் Gகாட், (50)கேதார் Gகாட் (தெற்கு), (51)தஸாஸ்வமேத் Gகாட் (தெற்கு), (52)ராஜ் Gகாட், (53)திக்பதியா Gகாட், (54)கங்காதரா Gகாட், (55)ஜுணா ராஜ் Gகாட், (56)கங்கோத்ரி Gகாட், (57)மீர் Gகாட், (58)ஃபூடா Gகாட், (59)ஜாகேஷ்வர் Gகாட் (தெற்கு), (60)சங்கட Gகாட், (61)ஷிவாலா Gகாட் (தெற்கு), (62)மான்ஸரோவர் Gகாட் (தெற்கு), (63)திரிபுரா பைரவி Gகாட், (64)சிந்தாமணி Gகாட், (65)ராமேஷ்வர் Gகாட், (66)ஷிவாலா Gகாட் (வடக்கு), (67)சேத் சிங் Gகாட், (68)கேதார் Gகாட் (வடக்கு), (69)மணிகர்ணிகா Gகாட் (தெற்கு), (70)க்ஷ்மேஷ்வரா Gகாட் (தெற்கு), (71)அஸ்ஸி Gகாட் (தெற்கு), (72)மணிகர்ணிகா Gகாட் (வடக்கு), (73)ஜானகி Gகாட் (வடக்கு), (74)பஞ்ச்கங்கா Gகாட் (தெற்கு), (75)ஷிவாலா Gகாட் (மேற்கு), (76)தேலியா Gகாட், (77)குலாரியா Gகாட் (வடக்கு), (78)ராம் Gகாட் (தெற்கு), (79)ஜூனா அகாடா Gகாட், (80)டாண்டி Gகாட் (தெற்கு), (81)திகம்பர் அகாடா Gகாட், (82)மன்மந்திர் Gகாட், (83)மஹாநிர்வாணி Gகாட், (84)ஆதி கேஷவ Gகாட் (தெற்கு)! அம்மாடி எத்தனை பெயர்கள்!  இவற்றில் சில படித்துறைகள் வேறு பெயர்களும் காலமாற்றத்தில் ஏற்பட்டு இருக்கலாம். சில வேறு பெயர்களில் அழைக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்க!


பிரதானமான படித்துறைகள்:





(dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட் - அஸ்வமேத யாகம் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். அஸ்வமேத யாகம் செய்வது மிகவும் விசேஷம். அதுவும் ஒரே சமயத்தில் பத்து அஸ்வமேத யாகங்கள் செய்தால் - எவ்வளவு விசேஷம்! அதுவும் அந்த யாகத்தை பிரம்மதேவனே செய்தால்?  அதற்கு ஈடேது! அதுவும் காசி நகரின் பிரதான கடவுளான சிவபெருமானின் அருள் வேண்டி பிரம்மதேவன் செய்தால் அது எத்தனை விசேஷமாக ஒன்றாக இருந்திருக்கும்? நினைக்கும்போதே மனதில் ஒரு வித பூரண உணர்வு உண்டாகிறது அல்லவா? வாரணாசி நகரில் கங்கை நதிக்கரையில் அப்படி பிரம்மதேவன் சிவபெருமானின் அருள் வேண்டி பத்து அஸ்வமேத யாகங்கள் செய்த இடமே (dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட் என்று அழைக்கப்படுகிறது.  காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வெகு அருகில் இருக்கும் படித்துறையும் இது தான். கூடவே, ஒவ்வொரு நாளும் கங்கை நதிக்கு மாலை நேரத்தில் ஆரத்தி நடக்கும் படித்துறையும் இதுவே! அந்த ஆரத்தி பார்க்கப் பார்க்க உங்களுக்குள் உண்டாகும் மாற்றங்களும், மெய் சிலிர்க்க வைக்கும் உணர்வுகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.  ஒரே சமயத்தில் வேத விற்பன்னர்கள் சேர்ந்து கங்கைக்கு ஆரத்தி செய்வதைக் காண்பது பரவசமான விஷயம். அதே சமயத்தில் அந்த ஆரத்தியைப் பார்க்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சிறு அகல் விளக்குகள் கொண்டு கங்கைக்கு ஆரத்தி காண்பித்து கங்கை நீரில் மிதக்க விடுவார்கள்.  மாலை நேரம் முடிந்து இரவு ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அந்த இடம் முழுவதும் விளக்கொலியில் மின்னுவதைப் பார்ப்பது ஒரு அற்புத அனுபவம். 





மணிகர்ணிகா Gகாட் மற்றும் ஹரிஷ்சந்திர Gகாட் - இந்த இரண்டு படித்துறைகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் படித்துறை. காசியில் இறந்தால் முக்தி என்பது மூதோர் வழக்கு. அதனால் இறக்கும் நிலையில் இருக்கும் பலர் இங்கேயே வந்து தங்கிவிடுவது/அப்படியானவர்களைக் கொண்டு விட்டுவிடுவது வழக்கம். அது தவிர சுற்று வட்டாரத்தில் யார் இறந்தாலும் அவர்களது பூத உடல்களை பாடையில் கட்டி இந்த இரண்டு படித்துறைகளில் ஏதேனும் ஒன்றிற்கு எடுத்து வந்துவிடுவார்கள்.  நேரடியாக பாடையுடன் கங்கையில் ஒரு முக்கு! அதன் பின்னர் கரையோரம் வைத்து சடங்குகளை முடித்து அங்கேயே எரியூட்டி விடுவார்கள்.  மிகப்பெரிய மயானம் என்று இதனை அழைக்கிறார்கள்.  எப்போது அங்கே சென்றாலும் ஏதேனும் சில பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியும்.  இன்றைக்கும் விறகுகள் கொண்டு தான் பிணங்கள் எரியூட்டப்படுகின்றன.  முன்பெல்லாம் இந்தப் பகுதியில் எரியூட்டப்படும் உடல்கள் பாதியிலேயே கங்கையில் இழுத்து விட்டு விடுவார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது அப்படியல்ல.  ஆனாலும் இறந்தவர்களின் உடலில் மீது இருந்த பூக்கள், அவர்களது உடைகள் என பலவும் மூட்டை மூட்டையாக இங்கே குவிந்து விடுகின்றன.  சிலர் கங்கையிலும் போடுவதுண்டு என்றாலும் உடனேயே அவை நீக்கப்படுகின்றன.  கரையோரம் குவித்து வைக்கப்பட்டு குப்பைக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.  





இந்த இரண்டு படித்துறைகள் எப்போதும் கூட்டமாகவே காணப்படுகின்றன.  வெளிநாட்டிலிருந்து இங்கே வரும் பயணிகள் இந்தக் காட்சிகளை பிரமித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். எனது பயணத்தில் ஒரு நாள் இந்த படித்துறை அருகே இருக்கும் உயரமான படிகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  எல்லோருக்கும் இது தான் முடிவு - எத்தனை ஆட்டம் போட்டாலும் கடைசியில் இப்படி ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு இடத்தில் உள்ள சுடுகாட்டில் தான் முடியப் போகிறோம் என்ற எண்ணம் அங்கே இருக்கும் போது மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.  நான் குறைந்தது இரண்டு மணி நேரம் அங்கே இருந்தேன்.  எத்தனை எத்தனை பூத உடல்கள் வந்து கொண்டே இருந்தது என்பதற்கு கணக்கில்லை.  பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது - முடிவில்லா சுழல் அது! தொடர்ந்து உடல்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன.  மேலே ஒரு பெரிய சிவலிங்கம். அதன் மீது தொடர்ந்து ஊற்றப்படும் தண்ணீர்… 



மேலே இருக்கும் படிகளில் என்னைப் போலவே பலர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாரிடமும் எந்தவித அசைவும் இல்லை! ஒலியும் இல்லை! எல்லோரும் நம் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.  இப்படியான முடிவு அனைவருக்கும் ஒரு நாள் வரத்தானே போகிறது - அந்த முடிவைத் தடுக்க நம்மால் முடியுமா என்ன! எத்தனை ஆட்டம் போட்டாலும், என்னை யாராலும் அசைக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டாலும், என்றைக்காவது ஒரு நாள் இந்தக் கொழுப்பு அத்தனையும் அடங்கும், உடல் சுருங்கும், உயிர் உடம்பை விட்டு விலகும்… எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் அவன் மரித்தே ஆக வேண்டும்! இங்கே வந்து தான் ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றின. எத்தனை நேரம் அங்கே அமர்ந்து இருந்தேன் என்று தெரியாமல் நேரம் போய்க்கொண்டிருந்தது.  நண்பரின் அழைப்பு வந்த பிறகு தான் என்னையே நான் உணர்ந்தேன் - நாம் இங்கே இருந்து விட முடியாது! என்றைக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்து, அதுவரை இந்த உலகில் இருந்து - உழன்று தானே ஆக வேண்டும்! 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 ஜூன் 2024


24 கருத்துகள்:

  1. இந்த ஆசை !எல்லோருக்கும் இருக்கும். - இன்றைய வாசகம்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்களது கருத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. 84 இடங்களின் பெயர்களையும் பொறுமைகா தேடி எடுத்துக் கொடுத்திருப்பது சிறப்பு. பிரம்மன் செய்த அஸ்வமேத யாகம் - சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்துறை ஒன்றில் அனைத்து படித்துறைகளின் பெயர் உள்ள பதாகையும் இருக்கிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. மணிகர்ணிகா காட் இடம் அவ்வப்போது சுத்தம் செய்யப்படும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கங்கை நதியில் உடல்கள் வீசப்படுவதில்லை என்கிற தகவலும் நிம்மதி தருகிறது. சமீபத்தில் ஒரு மீம்ஸ் பார்த்தேன். நதிகளை தெய்வமாக வணங்காத நாட்டில் நதியின் படம் என்று சுத்தமான ஒரு நதியையும், நதிகளை தெய்வமாக வணங்கும் நம் நாட்டின் நதி என்று குப்பைகள் வீசப்பட்ட ஒரு நதியின் படமும்... வேதனையாய்தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டு நதிகளின் நிலை - வேதனை தான் ஸ்ரீராம். தொடர்ந்து சுத்தம் செய்யப்பட வேண்டும். அரசு, மக்கள் என அனைவருமாக செய்ய வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய விஷயம் சுத்தம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. //எல்லோரும் நம் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. //


    உண்மை. இந்த எண்ணம் வந்த மனிதன் மனதல்காவில் அந்த நிமிடத்திலிருந்து கொஞ்சமாவது மாறினால் நன்றாய்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் அவசியம் தான். அதனை உணர்ந்து கொள்வது தான் இல்லை பலரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இந்தப் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். காசியின் குறுகிய சந்துகளில் ஏற்பட்ட அனுபவமும் மறக்க இயலாத்து. அதனைப் பிறகு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசியின் குறுகிய சந்துகள் - பிரபலமானவை ஆயிற்றே. எனக்கும் அப்படியான சந்துகளில் கிடைத்த அனுபவங்கள் உண்டு - சில எழுதி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாத்து நம்ம ஊரில்தான் நடக்கும். பழைய துணிகள், விரத மாலைகளை வீசுவது என்றெல்லாம். வெளி தேசங்களில் நம் தேசத்தைப் போன்ற ந்திகளையே பார்க்க முடியாது. (இருபுறமும் கரைகள், மணற்பரப்பு என்று) பல நேரங்களில் ஓடைகளையே ந்திகள் என்று அழைக்கிறார்களே என்று தோன்றியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமாக வைத்துக் கொள்வது நம் எல்லோரின் கடமை என்பதை அங்கே வரும் பக்தர்களும், உள்ளூர்வாசிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. வாசகம் சூப்பர். பலருக்கும் மனதில் இருக்கும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. அவர்களது உடைகள் என பலவும் மூட்டை மூட்டையாக இங்கே குவிந்து விடுகின்றன. சிலர் கங்கையிலும் போடுவதுண்டு என்றாலும் உடனேயே அவை நீக்கப்படுகின்றன. கரையோரம் குவித்து வைக்கப்பட்டு குப்பைக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. //

    நல்ல விஷயம். இல்லைனா கங்கை அழுக்காகிவிடும்.

    ஒவ்வொருவருக்கும் அவர்களின் சமூக வழக்கங்களின் படி சில நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் அது பொதுவெளியில் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதாகவோ, அசுத்தப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது. இயற்கை வழிபாடு என்று அதை அழுக்காக்கும் செயல்கள் இல்லாமல் இயற்கையை பாதுகாக்கும், சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கங்கள் வர வேன்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையைக் காப்பது எல்லோருடைய கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. எனது பயணத்தில் ஒரு நாள் இந்த படித்துறை அருகே இருக்கும் உயரமான படிகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். //

    நிறைய தத்துவங்களும் மனப்பக்குவமும் ஏற்படும். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று.

    சிலருக்குப் பயமும் ஏற்படும்.

    இன்றைய பதிவு ரொம்பவே தத்துவார்த்தமாகவும் தத்துவத்திலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி அடங்கும் வாழ்க்கையடா! அதே தான். பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. இன்றைய வாசகம் சிறப்பு.

    இதே பாணியில் முன்பு நானும் எழுதி இருந்தேன்.

    "என்னுடைய மரணம் எந்தவொரு மனிதருக்கும் சந்தோஷத்தை தரக்கூடாது அந்த வகையில் நான் வாழ்ந்து முடிக்க அருள் கொடு இறைவா"

    தகவல்கள் சிறப்பு படங்கள், காணொளிகள் கண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், மரணம் குறித்த தங்கள் சிந்தனை அனைத்தும் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. வாசகம் அருமை. படங்கள், விவரங்கள், காணொளி எல்லாம் நன்றாக இருந்தது. விவரங்கள் காசி போவோருக்கு உதவும் கடைசி காணொளியும் உங்கள் சிந்தனையும் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

    சீர்காழி கோவிந்த ராஜன் பாடல் நினைவுக்கு வருகிறது. நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே! அனைவரும் ஒரு நாள் போகும் இடம் . எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் பிடித்து வைத்து கொள்ள முடியாதே! உயிரை.
    மறுபடியும் மேலே உள்ள வாசகத்தை படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. படித்துறைகளும் அதன் முக்கியத்துவமும் அறிந்தோம்.

    வாசகம் மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....