வியாழன், 13 ஜூன், 2024

கதம்பம் - இந்த நாள் இனிய நாள் - கல்யாண வைபோகமே… - Back to school - காய்கறி சந்தையில் - பேரம் - பூஸ்ட் பர்ஃபி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட 23ஆம் ஆண்டில் அடியெடுத்து…. பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இந்த நாள் இனிய நாள்! - 24 மே 2024:



காலை முதல் அன்பு நெஞ்சங்களின் வாழ்த்து மழையில் நனைந்தோம்! குளிர்ந்தோம்! இன்றைய நாள் இனிதானது!


நம்ம வீட்டில் கொண்டாட்டங்கள் என்றால் பாயசம் வடையோடு முடிந்தது..🙂 எந்த ஆர்ப்பாட்டமும் கிடையாது! இருவரும் ஒரு ஊரில் இருப்பதே அரிது! வெளியில் சென்று உண்பது, ஆர்டர் செய்து வரவழைத்து உண்பது இதெல்லாமும் பழக்கமே இல்லை..🙂


இன்று எந்த திட்டமிடலும் இன்றி காலையிலேயே கிளம்பி திருச்சியில் உள்ள பாடல்பெற்ற சிவ ஸ்தலங்கள் மூன்றிற்குச் சென்று தரிசித்து வந்தோம்! இறைவனை நிதானமாக தரிசித்து மனமுருக பிரார்த்திக்க முடிந்தது! நல்லதே நடக்கணும்! 


மதியம் எனக்கென நானே விதித்துக் கொண்ட நியதிகளை சற்றே தளர்த்திக் கொண்டு சமையலறைக்கு ஓய்வு கொடுத்து வெளியிலிருந்து உணவு வரவழைத்து உண்டு மகிழ்ந்தோம்! தப்பில்ல! தப்பில்ல! என்று சொல்லிக் கொண்டேன்..🙂


இந்த நாள் இனிய நாள்!

*******


கல்யாண வைபோகமே… - 5 ஜூன் 2024:



உறவுகளும் நட்புகளும் சூழ ஒருங்கிணைந்து மகிழ்வோடு கொண்டாடும் ஒரு விழா என்றால் அது திருமணம்! இங்கு புதிதாக ஏற்படும் பந்தங்களும், சந்திக்கும் மனிதர்களும் அதனால் விரிவடையும் வட்டமும் என உணர்வுப்பூர்வமானது! அதுவும் நெருங்கிய உறவில் ஒரு திருமணம் என்றால் மகிழ்வோடு பொறுப்புகளும் உடன் கைகோர்த்துக் கொள்ளும்! 


சமீபத்தில் கோவையில் நிகழ்ந்த என் நாத்தனார் மகளின் திருமணத்தில் தாய்மாமாவும் மாமியுமாக மணமேடையில் எங்கள் இருவரின் கடமைகளும் உரிமைகளும் பொறுப்புகளும் மகிழ்வுக்குள்ளாக்கியது! மாமா மணப்பெண்ணுக்கு மாலையிட, மாமி மெட்டி போட என்று ஒவ்வொரு தருணமும் எங்களுக்கான நிறைய புரிதல்களையும் சிந்தனைகளையும் உருவாக்கியது எனலாம்!


எட்டு விதமான விவாகங்களில் இது மந்த்ர விவாகம்! ஓங்கி ஒலித்த மந்திர உச்சாடனங்களாலும், அக்னி சாட்சியுமாக நிகழ்ந்தது இந்தத் திருமணம். சின்னஞ்சிறு சிறுமியாக வலம் வந்த பெண்ணுக்கு இன்று திருமணம் என்பது ஆச்சரியம் தந்தது என்றால் நான் இன்னும் சிறுமி அல்ல என்பதும் எனக்குப் பின்னே நிற்கும் மகளும் இன்னும் குழந்தையல்ல என்பதும் உணர முடிந்தது!


இந்தத் திருமணத்திற்கு சென்ற போது வழியெங்கும் அப்பாவைத் தேடிய கண்களையும், அப்பா இருந்தால் இந்நேரம் என்னைப் பார்க்க ஓடி வந்து விடுவார் என்ற எண்ணத்தையும் அப்பாவுடன் கைப்பிடித்து வலம் வந்த சாலைகளை கண்ட போதும் என்னுள் கரைபுரண்டு வந்த உணர்வு பிரவாகத்தை மிகுந்த சிரமப்பட்டு தான் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது!


ஒரு டைம் மிஷின் இருந்தால் சட்டென்று சின்னஞ்சிறு சிறுமியாக மாறி கவலைகளும் பொறுப்புகளும் அற்ற பட்டாம்பூச்சியாக கோவையின் ரேஸ்கோர்ஸ் சாலையில் துள்ளலுடன் ஓடி விளையாடியிருப்பேன்! காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்து நம்மை வழிநடத்துகிறது!


உன்னோட போஸ்ட் எல்லாத்தையும் படிச்சிண்டு தான் இருக்கேன்! கமெண்ட் தான் போட தோதுபடல! உன்னோட அப்பா அம்மா எப்படிபட்டவா! நீ எப்படிபட்ட சூழல்ல வளர்ந்த! நீ எந்த மாதிரி கஷ்டங்கள எல்லாம் தாண்டி வந்திருக்கன்னு வாசிச்சு தெரிஞ்சிண்டேன்! உனக்கு தமிழ் அவ்வளவு அழகா எழுத வர்றது! என்ற உறவினர்!


திருமணத்தன்று மாலை எல்லா சடங்குகளும் முடிந்ததும் 95 வயது முதியவர் ஒருவர் என்னவரின் கரம் பற்றி….’நீங்க இவ்வளவு ஆடி ஓடி வேலை செய்யறதும், இத்தனை கலாட்டாவும் பேச்சும் சிரிப்புமா இருக்கறதுக்கும் உங்க wifeக்கு தான் கிரெடிட்ஸ் குடுக்கணும்’ என்று சொல்லிச் சென்றார்!


மாப்பிள்ளை அழைப்பன்று மதியம் கிடைத்த சிறிது நேரத்தில் கோவையிலேயே வசிக்கும் என் பெரிய மாமா மாமியை பார்த்து ஆசி பெற்று வந்தோம்! மாமாவுக்கு என் அம்மா எது செய்தாலும் கொண்டு கொடுப்பார்! அப்படி மாமாவுக்கு இலை வடாம் ரொம்ப பிடிக்கும் என்று அம்மா சொன்ன நினைவு! 


திருமணத்திற்கு ஊருக்கு கிளம்பும் சமயம் நேரம் கிடைத்தால் மாமாவுக்கு கொண்டு கொடுக்கலாமே என்று இந்த வருடம் நான் போட்ட இலைவடாமை எடுத்துச் சென்றிருந்தேன்! மாமாவிடம் அதைச் சொல்லி கொடுத்த போது அவ்வளவு சந்தோஷம்!


எங்க வீட்டு பெரியவர்களையும் இந்தத் திருமணத்திற்கு அழைத்துச் சென்றிருந்ததால் வேலைகளும் பொறுப்புகளும் எங்களை வேறு எங்கேயும் நகர விடலை! இப்படியாக கல்யாண நிகழ்வுகளுடனான எங்கள் அனுபவங்கள் இனிதே கடந்தது!


*******


Back to school...!! - 11 ஜூன் 2024:


எல்லாப் பக்கமும் Back to school தான் இப்போ டிரெண்டிங்ல இருக்கு.  மகளுக்கு ஒவ்வொரு வருடமும்  'கடைசி பெஞ்ச்ல உட்கார வெச்சாலும் கவலைப்படக்கூடாது! ஏன்னா நம்ம உயரமான குடும்ப வரலாறு அப்படி..🙂 வேற டீச்சர் மாறுவாங்க! ஃப்ரெண்ட்ஸ் மாறுவாங்க! அதை எதையும் பெரிசா எடுத்துக்கக்கூடாது! இப்படி வரிசையா சொல்லித் தான்  அனுப்புவேன்..🙂


மகள் இப்போ கல்லூரிக்கு போய்விட்டாள்! என் அட்வைஸ்ல இருந்தும் தப்பித்து விட்டாள்...🙂 ஆனா பாருங்க! காலத்தின் கோலம் நான் இப்போ கிளாஸ்ல இருக்கேன்..🙂 ஹோம்வொர்க், டிக்டேஷன், ரிவிஷன், வீக்லி டெஸ்ட்டுன்னு ஓடுகிறது வாழ்க்கை...🙂


*******


காய்கறி சந்தையில் - 11 ஜூன் 2024 :


என்னக்கா! ரெண்டு வாரமா வரவே இல்ல!


அதுவா ஊருக்கு போயிட்டேங்க! அதான் வர முடியல! கால் கிலோ போதும்! நிறைய வேண்டாம்! செலவாகாது!


வரது ரெண்டு வாரத்துக்கு ஒருதடவ! இதுல கால் கிலோ போதுமாம்! நல்லா சாப்பிடுக்கா!!!


வார சந்தையில் வழக்கமாக வாங்கும் காய்க்காரர்..🙂


*******


பேரம் - 11 ஜூன் 2024:


பத்து ரூபா குறைச்சுகிட்டா என்னப்பா? 


சில்லறை இல்லாதனால தான் இங்க வந்தேன்! 


நான் வாங்கிட்டேன்ல! இனி உனக்கு வியாபாரம் அமோகமா இருக்கும் பாரு!


கட்டுப்படியாதுக்கா! புரிஞ்சுக்கோங்க!  எனக்கு இதுல லாபமே இல்ல! 

வாழைப்பழம் விற்பவரிடம் பத்து ரூபாய்க்காக தர்க்கம் செய்து கொண்டிருந்த பெண்!


அன்றாடம் எத்தனையோ செலவுகளை செய்து கொண்டு தான் இருக்கிறோம்! பத்து ரூபாய் கூட கொடுப்பதால் என்ன ஆகி விடப் போகிறது! சிறு வியாபாரிகளிடம் வீண் வாதம் எதற்கு!


*******


பூஸ்ட் பர்ஃபி - 11 ஜூன் 2024:


புளியை குறைச்சுக்கோ! வெயிட்ட குறைக்கணும்னா ஆயில் ஐட்டம்! தேங்காய்! இனிப்பு! எல்லாத்தையும் மறந்துடு! கனவுல கூட நினைக்காத! நிறைய  Exercise பண்ணு! வாக்கிங் போ!


நேற்றைய பொழுதில் ஆர்த்தோ மருத்துவரிடம் சென்ற போது அவரின் அறிவுரை!


ஓகே சார்!


வெளியே வந்ததும் எதிர்ப்புறத்தில் திருச்சி ஃபேமஸ் 'அஸ்வின்ஸ்'...🙂


பூஸ்ட் பர்ஃபியாம்! எப்படியிருக்குன்னு பார்க்கலாமே! கொஞ்சமா வாங்கிண்டு போலாம் என்றேன் மகளிடம்...🙂


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. திருமண நாள் வாழ்த்துகள்.  திருமண நாளுக்கு இருவரும் இணைந்திருந்ததும், இனைந்து  கல்யாணத்தில் கலக்கியதும் சந்தோஷம் தரும் நிகழ்வுகள்.  பெரியவர் சொன்ன வார்த்தைகள் உணர்வுபூர்வமானது.  அப்பாவின் நினைவுகள் பற்றிய வரிகள் நெகிழ்த்தின.  மகள் கல்லூரி சென்று வருவது உயர அனுபவங்கள் சுவாரஸ்யம்.   நீங்களும் புதியதாய் ஒன்று பயில்வதும் உற்சாகம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சார். ஆமாம் சார். இம்முறை அந்நாளில் இருவரும் ஒரே இடத்தில் இருந்தோம். கோவில்களுக்குச் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. பதிவின் அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. திருமண நாளில் திருமணத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சியான விடயமே.

    கதம்பம் வழக்கம் போல அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் திருமண நாளும் உறவினரின் திருமணம் நடைபெற்றதும் வெவ்வேறு நாளில் சார்...! மேலே தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    கதம்பம் அருமை.
    வாழ்த்துகள் ஆதி, வெங்கட்.
    உறவுகளின் சந்திப்பு, மாமாவுக்கு பிடித்த இலை வடாம் எடுத்து போனது அவர்களின் மகிழ்ச்சி எல்லாம் அருமை.
    சிறு வியாபாரியிடம் பேரம் பேசக் கூடாது.
    பயில்வது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. மாமாவுக்கு இலைவடாம் எடுத்துச் சென்று கொடுத்தது மனதுக்கு நிறைவைத் தந்தது.. அம்மாவின் சார்பில் அவளது மகளாக கொடுத்து வந்தேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. திருமண நாள் வாழ்த்துகள்.
    உங்கள் பொறுப்பும், உறவுகளும் கலந்து கொண்ட இனிய நினைவுகள், வெங்கட்ஜி யின் சகோதரியின் மகள் திருமணம்! வாழ்த்துகள்.
    உறவுகளின் சந்திப்பும் இனிது. ஆமாம் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவது நல்லதல்லதான்.
    கதம்பம் அருமை. ஃபேஸ்புக்கிலும் பார்த்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சார். உறவுகளின் சந்திப்பு இனிமை தான்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  5. மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

    திருமண நாளில் மருமாளுடைய திருமணத்தில் கலந்து கொண்டு ஓடி ஆடி வேலை செய்து பொறுப்பாக சந்தோஷமான இனிய நினைவுகள். சில பொறுப்புகள் மிக்க மகிழ்ச்சியைத் தரும். அதில் இதுவும் ஒன்று.

    மாமாவுக்கு இலைவடாம் செய்து கொண்டு சென்றது நல்ல விஷயம். அவரது மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி. நம்மால் முடிந்தவை இவைதான். இதோ என் நாத்தனார் மகனின் ம்னைவி வருகிறார் வீட்டிற்கு. அவர்கள் ஒரு சின்ன லிஸ்ட் கேட்டிருக்காங்க செய்து தர வேண்டும். உரிமையோடு கேட்ப்பதும் கொடுப்பதும் பிடித்த ஒன்று எனக்கும்.

    பாவம் நடைபாதை வியாபாரிகள் சிறுவியாபாரிகள் அவர்களுக்கு இதுதானே வாழ்வாதாரம். அவர்களிடம் கூடியவரை சிறு தொகைக்கு எல்லாம் பேரம் பேசாமல் வாங்குவது நல்லது. உங்கள் பாலிஸிதான் நம்முதும்.
    அவர்கள் அடாவடி பண்ணினால், ரொம்பவும் அதீதமான விலையில் விற்றால் நான் விவாதத்திற்குப் போகாமல் நகர்ந்துவிடுவது வழக்கம்.

    கோயம்புத்தூர் சென்ற போது உங்கள் பழைய நினைவுகள் குறிப்பாகப் பெற்றோர் நினைவுகள் நெகிழ்ச்சி.

    புதியதாய் கற்கும் போது உற்சாகம் ஏற்படும். வாழ்த்துகள் ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்! எங்களது திருமண நாளில் பாடல் பெற்ற சிவாலயங்களுக்குத் தான் சென்று வந்தோம் என்று சொல்லியிருக்கிறேன்! உறவினரின் திருமணம் நடைபெற்றது வேறு நாளில் தான்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

    புதுமணத் தம்பதியருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!

    உங்கள் நாத்தனாரின் மகளும் எனது மகளும் அவர்கள் தங்களது ஒரு வயதில் தில்லியில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்பது செய்தி. (பெரிய தலைவர்கள் சந்தித்தால் கை கொடுத்து புகைப்படம் எடுப்பார்கள். இவர்கள் ஒருவர் கையிலுள்ள விளையாட்டுச் சாமான்களை மற்றவர் பறித்துக் கொள்ள கை கொடுத்துக் கொண்டார்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சார். வாவ்! இருவரும் சந்தித்துக் கொண்டார்களா!!! ஒருவரின் பொம்மையை மற்றவர் பறித்துக் கொள்ள கை கொடுத்துக் கொண்டார்கள்...:)) சூப்பர். சூப்பர். பசுமைய
      யான நினைவுகள். குஷி படத்தை நினைவூட்டியது இந்த சீன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்து சார்.

      நீக்கு
  7. திருமணத்துக்குச் சென்றால் நிறைய உறவினர்களைக் கண்டு பேச வாய்ப்பு ஏற்படும். எனக்கும் அந்த அனுபவம் சில நாட்களுக்கு முன்பு வாய்த்தது.

    எனக்கும் நிறையதடவை தோன்றும். அப்பாவும் அம்மாவும் (மாமனாரும்) இப்போது இருந்தால் எவ்வளவு விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும், அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளலாம், நம்ம பசங்க நல்ல நிகழ்ச்சிகள்ல அவங்களும் இருந்திருப்பாங்க என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். அப்பாவும் அம்மாவும் இல்லாத கோவைக்கு செல்ல மனமே இல்லை! நிறைய நாள் அவர்களை நினைத்துக் கொள்கிறேன்...:(

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  8. //பாடல்பெற்ற சிவ ஸ்தலங்கள் மூன்றிற்குச் // முன்பு என்றால் நிச்சயமாக படங்களுடன் வெங்கட் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இப்போது எழுதுவாரா?

    எப்போதுமே முடிந்த அளவு எளிமையாக இருப்பதுதான் வாழ்க்கைக்கு மிக நல்லது என்பதை நானும் புரிந்துகொண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்! எல்லாவற்றையுமே எழுத்தாக்கும் ஆற்றல் அவரிடம் உண்டு! விஷயங்களுக்கு பஞ்சமிருக்காது! இப்போது ஏனோ எல்லாவற்றிலும் அலுப்பும் சலிப்புமே தென்படுகிறது..:( விரைவில் இந்த நிலை மாறும் என நம்புகிறேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வாசகமும் நன்றாக உள்ளது. தங்களுக்கு இனிதான திருமணநாள் வாழ்த்துகள். தங்கள் நாத்தனாரின் மகள் திருமணத்தில் நீங்கள் இருவரும் கலந்து கொண்டதும் நல்ல மகிழ்ச்சியை தருகிறது. வாழ்க மணமக்கள்.

    கல்லூரியில் படிக்கும் தங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள் .முயற்சியுடன் படிக்கும் உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். கதம்பம் நன்றாக உள்ளது. தொடர்ந்து பதிவுகளை தாருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்! பதிவின் அனைத்து பகுதிகளையும் வாசித்து அது குறித்தான கருத்துக்களை தெரிவித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி!

      நீக்கு
  10. திருமண நாள் நல்வாழ்த்துகள்...

    மங்கலங்கள் பெருகட்டும்...
    இனிய தொகுப்பு.. உற்சாகமான பதிவு..

    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      பதிலளி

      நீக்கு
  11. ஸ்வாரஸ்யமான கதம்பம்! //சின்னஞ்சிறு சிறுமியாக வலம் வந்த பெண்ணுக்கு இன்று திருமணம் என்பது ஆச்சரியம் தந்தது// ஆமாம், இப்படிப்பட்ட தருணங்களில்தான் நமக்கு வயதாகி விட்டதோ என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....