செவ்வாய், 25 ஜூன், 2024

வலைப்பூவிற்கு புதிய அறிமுகம் - அன்னையர் தினம் - ஜீவி (GV)


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கங்கையில் படகு உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


என்னையும் எனது இல்லத்தரசியையும் தவிர அவ்வப்போது வேறு சில நண்பர்களையும் இங்கே எழுத வைப்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். சமீப மாதங்களாக நானே இங்கே எழுதாமல் இருந்ததால் வேறு நட்புகளும் இங்கே எதுவும் பகிராமல் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட நண்பர் பத்மநாபன் அவர்களிடம் ஏதேனும் எழுதி அனுப்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.  அவர் எழுதி அனுப்ப வேண்டும் என்று காத்திருக்கிறேன்.  எனது பதிவுகள் சிலவற்றை உறவினர் ஒருவருக்கு அனுப்பியபோது அவரது திறமைகள் குறித்தும் சொன்னார். அவரிடம் நீங்களும் என் பக்கத்தில் எழுதலாமே என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர் எழுதிய சில இடுகைகளை எனக்கு அனுப்பித் தந்தார்.  அவ்வப்போது இங்கே வெளியிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். 


இன்றைய தினம் அவரது எழுத்தாற்றலுக்கு ஒரு அறிமுகமாக, சென்ற மாதம் கொண்டாடப்பட்ட அன்னையர் தினம் அன்று எழுதிய பதிவொன்றை அனுப்பி இருக்கிறார் திருமதி ஜீவி - அதாவது ஜீ. விஜி! சில தினங்களாக எனது பதிவுகளில் விஜி வெங்கடேஷ் என்ற பெயரில் பின்னூட்டம் இடுபவரும் இவரே. பல வருடங்களாக மும்பை வாசி - தற்போது தமிழகத்தில் இருக்கிறார். அனைத்து நண்பர்களும் அவரை வரவேற்று அவர் எழுத்தினை ரசிப்பதோடு ஊக்கமும் உற்சாகமும் அளிக்குமாறு வேண்டுகிறேன்.  வாருங்கள் திருமதி விஜி அவர்களின் அன்னையர் தினம் குறித்த பதிவை ரசிக்கலாம் - நட்புடன் வெங்கட் நாகராஜ்.  ஓவர் டு விஜி!


******






தெருவிலும் வீட்டிலும் இலவசமாக நமக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்;


கையில் scale உடன் ஆனால் அடிக்காமலே பாடம் நடத்தும் முதல் ஆசிரியை;


அவளை பாடாய்ப் படுத்தும்போதும், அடித்துவிட்டு பின் தானே அழும்போது (dh)தயையின் உருவம்;


நாம்தான் எல்லோரிலும் உசத்தி எனும் நம்பிக்கையின் வடிவம்;


வயதானபின் மறதியால் சொன்னதையே சொல்லும்போது குழந்தை;


மழையில் நனைந்த நம் தலையை திட்டிக்கொண்டே துவட்டிவிடும் கரம் நமக்கெல்லாம் வரம்!


தனது கடைசி தினங்களில் குச்சிக் கையால் வா நான் தடவி விடறேன் என்று moov ointment-ஓடு நம் முதுகு மேல் படரும் அவள் ஸ்பரிசம் கோடி குடுத்தாலும் இனி கிடைக்காது;


தனக்கென எதுவும் கேட்காது,

பசிக்கும்போது சாப்பிடாது;

நோயுற்றபோதும் அதைப் பாராட்டாது;

நம் பசியாற்றாமல் கண் துஞ்சாது;

நாம் நோயுற்றால் மனம் தாளாது;

வேலை செய்து சலிக்காது;

அன்பைப் பொழிந்து மாளாது; 


அனைத்திற்க்கும் ஒரே பெயர் அன்னை.அவள் பாசத்துக்கு ஏது அணை?


வெய்யிலில் அமர்ந்து காய்கறி விற்கும் அன்னையின் கையில் கூடுதல் பணம் குடுக்க, நெகிழ்ந்து நமைப் பார்த்து 'சாப்டியா தாயி' எனும் குரலில் நம் தாய்!


ரயில் நிலையத்தில் தனியே படியிறங்கும் ஓர் அன்னையின் கைச்சுமையை நாம் எடுத்துக்கொள்ள,  நல்லாயிரு கண்ணு எனும் குரலில் நம் தாய்!


பூ விற்கும் அன்னையின் கையில் புடவையைக் குடுக்க, பொக்கை வாயுடன் சீக்கா இருந்தியே, உடம்பு இப்போ சுகமா இருக்கியா தாயி எனும் கரிசனத்தில் நம் தாய்!


அடுத்த உயிர் மீது கருணை கொள்ளும் ஒவ்வொருவர் வடிவிலும் அவளே;  அவளை ஆராதிப்போம்;


அவளிடமிருந்தே சுயநலமில்லா அன்பைக் கற்று, அளவில்லாமல் பெற்று அவளுக்குச் சொரிவோம்,ஆசிகள் பெறுவோம்🙏🏻🙏🏻🙏🏻


G.V.

12.05.2024.


*******


இந்த வலைப்பூவில் புதிய அறிமுகமாக இன்றைக்கு எழுதி இருக்கும் விஜி அவர்களின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

25-06-2024


26 கருத்துகள்:

  1. மிக அருமை.  பழைய நினைவுகளைக் கிளறும் எழுத்துகள்.  சாலையில் பல அம்மாக்களை சந்திப்பது நெகிழ்ச்சி.  அன்புக்கு எது அடைக்கும்தாழ்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அன்புக்கு ஏதும் அடைக்கும்தாழ்?// அதே தான்.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் அருமை.
    விஜி அவர்கள் எழுத்து அருமை.

    //அடுத்த உயிர் மீது கருணை கொள்ளும் ஒவ்வொருவர் வடிவிலும் அவளே; அவளை ஆராதிப்போம்;//


    அம்மாவை எங்கு காணலாம். நெகிழ்வான எழுத்து.
    தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
    உங்கள் நண்பர் பத்மநாபன் அவர்கள் பதிவையும் படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நண்பர் பத்மநாபன் அவர்களிடம் எழுதச் சொல்லி மீண்டும் சொல்லி இருக்கிறேன். விரைவில் அவரது பதிவும் வெளியிட எனக்கும் ஆசை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பெற்ற தாய் பற்றியும் பெறாத தாய்களின் - தாய்மை - அருமையான பதிவு.

    விஜி அவர்களை உங்கள் பதிவில் கருத்துகளில் பார்க்கிறேன் சமீபகாலமாய். தொடர்ந்து எழுத வாழ்த்துகள் அவங்களுக்கு!

    பப்பு அண்ணாச்சிய எழுத சொல்லுங்க வெங்கட்ஜி! கொஞ்ச நாளாச்சு நாரோயில் தமிழ் கேட்டு சிரித்து!

    வாசகம் செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றைய தினம் கூட பப்பு அண்ணாச்சியிடம் எழுதச் சொல்லி கேட்டிருக்கிறேன். பார்க்கலாம்.

      பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. விஜி! வாங்க ஜி! வரவேற்கிறோம் ஜி!

    அன்னை பெருமை, அருமை!

    இரண்டு மாதம் முன்னர் எங்க வீட்டு பூனை குட்டி போட்டது. மனுஷங்களுக்கு நாங்க சளைச்சவங்க இல்லேன்னு அது காட்டும் பிள்ளைப் பாசத்தை என்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வீட்டுப் பூனை - பூனை வளர்ப்பு அனுபவங்களை எழுதுங்கள் அண்ணாச்சி! உங்களிடமிருந்து விரைவில் ஒரு பதிவினை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கிறோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  5. விஜி வெங்கடேஷ்25 ஜூன், 2024 அன்று 8:26 AM

    என் எழுத்தை வரவேற்று பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.இனி அவ்வப்போது என் மனத்தை எழுதுகோலால் திறந்து சிந்தித்து உங்களை சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எழுத்தை இங்கே வெளியிட அனுமதித்ததற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள் விஜி.

      நீக்கு
  6. அன்னையர் தினத்தில் மட்டும் நினைவு கொள்ளாது என்றும் நினைவில் இருக்கும்படி ஒரு நேர்த்தியான கட்டுரையை நச்சென்று பதிவில் இட்டு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திய உங்களின் அறிமுக அனுபவத்திற்கு சபாஷ் .இலக்கிய நயனங்களை ஆங்காங்கே சேர்த்து இன்னும் மெருகூட்டிய பல கட்டுரைகளை எதிர் பார்க்கும் தங்களின் பழைய வாசகனின் பாராட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதியதொரு நண்பரின் வருகை. மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து இப்பக்கத்திற்கு வந்து பதிவுகளை படித்து உங்கள் கருத்துகளை வெளியிட வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. தாயைக்குறித்த பெருமையான கவிதை போன்ற கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. அருமை. வாசிக்கும் ஒவ்வொருவரின் தாயையும் மனக்கண் முன் நிறுத்தி உருக வைத்துவிட்டார். தொடர்ந்து எழுத வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகமும் அருமை. இன்று தங்கள் தளத்தில், புதியதாக அறிமுகமான சிறந்த எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரது அம்மா கவிதையும், அன்னையர் தினத்திற்கான பதிவும் அருமையாக உள்ளது. படித்து ரசித்தேன். தொடரட்டும் அவரது எழுத்துலகப் பணி. அறிமுகப்படுத்தியமைக்கு தங்களுக்கும் மிக்க நன்றி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      புதிய அறிமுகமாக வெளியிட்ட பதிவிற்கும், எழுதிய விஜி அவர்களுக்கும் உங்கள் ஆதரவினைத் தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. பாராட்டுகள் விஜி....அருமை....கண்கண்ட தெய்வமான அம்மா வை தினம் ஆராதிக்கும் உள்ளங்களின் உணர்வை வெளிப்படுத்தி யதற்கு சபாஷ்.. உன் திறமையை வெளியிட சகோதரருக்கு நன்றி. மேலும் எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி உஷா ஜி. தொடர்ந்து இப்பக்கத்திற்கு வந்து பதிவுகளை படித்து கருத்திட வேண்டுகிறேன்.

      நீக்கு
  12. அருமை எத்தனை முறை உன்னிடம் பதிவிட சொல்லி எப்படியோ வலைக்குள் சிக்கிவிட்டாய் 😅😅 ராம கிருஷ்ண ஹரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே. தொடர்ந்து இப்பக்கத்திற்கு வந்து பதிவுகளை படித்து உங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டுகிறேன்.

      நீக்கு
  13. அன்னையர் தினத்தில் நல்ல பகிர்வை தந்துள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....