சனி, 6 ஜூலை, 2024

காஃபி வித் கிட்டு - 192 - ZOONOSES DAY - நீ - சீதாவனிக்குள் சீதை - க்ரீம் பவுடரா - சோம்பேறிகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட த்வாரகா - சோம்நாத் பயணத்தொடர் - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : WORLD ZOONOSES DAY…



வருடத்தின் ஒவ்வொரு ஜூலை மாதமும் ஆறாம் தேதி அன்று WORLD ZOONOSES DAY என்ற பெயரில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முன்னெடுத்து பல நிகழ்வுகளை நடத்துகிறார்கள் என்பது இந்த வாரத்தின் தகவல்.  ஏன் இந்த நாள்? இந்த நாளில் ஏன் இப்படியான ஒரு நிகழ்வு?  1885-ஆம் வருடம் இதே நாளில் தான் முதன் முறையாக Louis Pasteur அவர்கள் Rabies நோய்க்கு எதிரான மருந்தை  பயன்படுத்தி ஒரு சிறுவனுக்கு நோய் எதிர்ப்பை கொடுத்தது மட்டுமல்லாது உயிரையும் காப்பாற்றினாராம்!  அதனால் அவரை கௌரவப்படுத்தும் விதமாக, இந்த நாள் WORLD ZOONOSES DAY என, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்களாம்! 


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை : நீ…


முகநூல் நண்பரும், எனது தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் உறவினருமான திரு இராஜேஷ் சங்கரபிள்ளை அவர்களின் கவிதை ஒன்று இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக - உங்கள் பார்வைக்கு!



இதையும்

அதையும்

கூட்டினால்

விடை


இதையும்

அதையும்

கழித்தாலும்

விடை


இதையும்

அதையும்

பெருக்கினாலும்

விடை


இதையும்

அதையும்

வகுத்தாலும்

விடை


எப்படி பார்த்தாலும்

விடை வெளி வரும்.


விடை தெரிந்த பின் தான்


அழுகிறோம்

புரளுகின்றோம்

அணைக்கின்றோம்

கூத்தாடுகின்றோம்

அள்ளிக் கொடுக்கின்றோம்.


பின்

முழித்து நிற்கின்றோம்.


ஒன்றுமே புரியவே யில்லை.


வாசலில்

பார்த்த நாய்,


காலை முதல்

சாயுங்காலம் வரை


உங்களை பார்த்த

நாய்க்கு


ஏனோ....


விடை முன்கூடிட்டியே தெரிந்து விட்டது.


அதனால்

அது

முழித்து நிற்கிறது.


நீ....?


இராஜேஷ் சங்கரப்பிள்ளை


******


பழைய நினைப்புடா பேராண்டி : நைனிதால் – சீதாவனிக்குள் சீதை


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நைனிதால் – சீதாவனிக்குள் சீதை - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


கூழாங்கற்கள் நிரம்பிய சிற்றோடை போல ஓடிக்கொண்டிருக்கும் கோசி ஆற்றின் கரையில் சில நிமிடங்கள் அமர்ந்து இளைப்பாறினோம். போகும்போது வாங்கிச் சென்ற சில நொறுக்குத் தீனிகளை நாங்கள் உண்டு மகிழ்ந்தோம்.  கூடவே ஓட்டுனர் வீரப்பனுக்கும் கொடுத்தோம். காலியான அந்த பைகளை காட்டில் போடக்கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடன் எடுத்து வைத்துக் கொண்டோம் – வெளியே சென்ற பிறகு குப்பைக்கூடையில் போடலாம் என!


நாங்கள் அங்கே அமர்ந்திருந்தபோது ஒரு சில தனியார் வாகனங்களும் அந்த இடத்தினைக் கடந்தன. புதிதாய் மணமான ஒரு ஜோடி, இன்னும் சில இளைஞர்கள் இருந்த ஒரு வாகனம் வந்தது. வாகனத்தில் இருந்த அனைவரும் பலத்த சப்தங்களை எழுப்பியபடி வந்தனர்.  வந்தவர்களுக்கு வால்கள் இருந்ததாகத் தெரியவில்லை – ஆனாலும் வானரங்களைப் போல நடந்து கொண்டார்கள்.  இருக்கைகளில் அமர்ந்து கொள்ளாது கதவுகளில் இருக்கும் கண்ணாடிகளை கீழிறக்கி அதன் மேல் பக்கத்திற்கு ஒன்றாய் ஆண்கள் அமர்ந்து கொள்ள ஓட்டுனர் இருக்கைக்கு எதிர் கதவின் மேல் இரண்டு பெண்கள் – வாகனத்தின் மேல் ஒரு இளைஞர் – அவர் கீழே விழுந்துவிடாதபடி பின் பக்கம் இருந்த இளைஞர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். காட்டிற்குள் இருந்த குரங்குகள் கூட இவர்களின் சேஷ்டைகளைப் பார்த்து வெட்கம் கொண்டு ஓடின!


சில நிமிடங்கள் கடந்தபிறகு அந்த சிற்றோடையின் குறுக்கே இருந்த கற்களாலான பாதையை ஜீப்பில் அமர்ந்து கடந்தோம்.  ஜீப் என்பதால் சுலபமாக கடக்க முடிந்தது. கார் போன்றவற்றில் வந்தவர்கள் அந்த இடத்தினைக் கடக்க ரொம்பவே கஷ்டப்பட்டார்கள்.  வெள்ளம் இருந்தால் நிச்சயம் அப்படிக் கடக்கும்போது வண்டி அடித்துக் கொண்டு போய்விடும் அபாயம் இருந்தது.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் : க்ரீம் பவுடரா…


இந்த வாரத்தின் ரசித்த பாடலாக, உத்திராகண்ட் மாநிலத்தின் ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்று - உங்கள் ரசனைக்கு!



மேலே உள்ள காணொளியை பார்ப்பதில் சிக்கல் என்றால், கீழே உள்ள சுட்டி வழியும் பார்க்கலாம்!


Cream Paudara | New Kumauni Folk Song | Rakesh Khanwal & Maya Upadhyay |Pannu Gusain & Shweta Mahara (youtube.com)


******


இந்த வாரத்தின் செய்தி:  சோம்பேறிகள்


சமீபத்தில் தினமலர் நாளிதழில் படித்த செய்தி ஒன்று இந்தியர்கள் சோம்பேறிகள் என்பது போல சொல்லியிருக்கிறது. அந்த செய்தியிலிருந்து சில வரிகள்…


இந்தியாவில் பாதி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாததால், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள உடற்தகுதியை பெறவில்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் வயது வந்தவர்கள் மத்தியில் போதி உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2022ல் 49.4 சதவீதமாக உள்ளது. அதில், பெண்கள் 57 சதவீதம் பேர். ஆண்கள் 49 சதவீதம் பேர். உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2000 ல் 22.4 சதவீதமாக இருந்தது. இது குறித்து 195 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்து உள்ளது.


முழு செய்தியும் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


இந்தியாவில் பாதிபேர் உடல் உழைப்பு இல்லாத சோம்பேறிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் (dinamalar.com)


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

6 ஜூலை 2024


22 கருத்துகள்:

  1. உடல் உழைப்பு இல்லாத சோம்பேறிகள்... ஹா ஹா ஹா... தன்னைத் தான் பார்த்துக்கொள்ள வேண்டும், ஒருவன் உழைப்பதற்கு (வேலையில்) வயது ஒரு தடையல்ல என்ற மேற்கத்தையச் சிந்தனை இங்கு வரும்போதுதான் இந்த நிலை மாறும். பெரும்பான்மையினர் (அரசியல்வாதிகள் பரம்பரைப் பணக்கார்ர்கள் தொழிலதிபர்கள் நீங்கலாக) அறுபது வயது வந்தாலே, வாழ்க்கை முடிந்துவிடப் போகிறது என்று முடங்கிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறுபது வயது வந்தாலே முடங்கி விடுகிறார்கள் - உண்மை.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. வாசகம் நன்று

    வாழ்க்கையின் விடையை தெரியாமல் தெரிந்து கொள்ளவும் முயற்சி எடுக்காமல் இருப்பதைச் சொல்கிறதோ கவிதை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் கவிதை குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. சீதாவனி, கோசி ஆறு என்பதைப் பார்த்ததும் நானும் வாசித்த நினைவு வந்தது,

    ஜி காட்டுக்குள் வந்து இப்படிக் கத்திக் கூச்சல் போட்டுச் செல்லும் மக்களை இளைஞர் பட்டாளங்களைப் பார்க்கும் போது கோபம் வரும். காட்டையும் அங்குள்ள விலங்குகளையும் இயற்கையையும் மதிக்கத்ட் தெரியாத கூட்டம் என்று. அழகான இடம். நான் குறித்தும் வைத்துக் கொண்டுள்ளேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டுக்குள் கூச்சல் போடும் மாக்கள் - திருந்த மாட்டார்கள்.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. க்ரீம் பவுடரா பாடல் நல்லாருக்கு ஜி. சினிமா வில் வரும் சீன் போன்று எடுத்திருக்க்காங்களோ? ஆரம்பம்....
    இடமும் வீடும் ரொம்ப அழகா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் ஆல்பம் பாடல்கள் கூட சினிமா போலவே எடுக்கிறார்கள். பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  5. உடல் உழைப்பு இல்லை என்ற செய்தி நானும் வாசித்தேன் ஜி.

    அதனால்தான் இந்தியா சர்க்கரை வியாதியின் தலைநகரம்னும் சொல்றாங்க.

    நம்மூரில் 50, 60 வந்துவிட்டாலே ஆண்களும் சரி பெண்களும் சரி ஏதோ வயதாகிவிட்டது என்ற உணர்விற்கு வந்திடறாங்க. வயதானாலும் உழைக்கலாம் என்ற எண்ணம் இல்லை. அதற்கு ஏற்ப மக்களில் பலரும் ஹையோ பாவம் வயசாகிடுச்சு அவங்க வேலை செய்யக் கூடாது என்று நினைப்பதுண்டு. இல்லை அவர்களுக்கு ஏதுவான வேலைகளை நாம் வீட்டில் கொடுக்க வேண்டும்.

    அது போன்று வயதானாலும் ஏதேனும் ஒரு உடலுழைப்பு இருந்தால் நல்லது.

    நம் வீட்டில் நான் வயதானவங்களுக்குச் சின்ன சின்ன வேலைகள் அவர்களால் முடிந்ததைச் செய்ய வைப்பதுண்டு. ஆனா பார்க்கறவங்க என்னவோ நான் அவங்களைப் படுத்துவது போலச் சொல்வாங்க!!!! I never mind! நான் நல்லதுதான் செய்கிறேன் என்பதில் நம்பிக்கை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்க்கரை வியாதியின் தலைநகரம் - வேதனை. பலருக்கும் இந்த நோய். இந்த நோய் இல்லாத வீடே இல்லை என்று ஆகிவிட்டது.

      வயதானவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகள் கொடுப்பது நல்லது தான்.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. சிறப்பான பகுதிகள்.
    கவிதை அருமை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  7. ஐந்தறிவு நாய்க்கு தெரிந்த விடை ஆறறிவு மனிதனுக்கு ஏன் தெரியவில்லை. நாயும் முழித்து நிற்கிறது. மனிதனும் முழித்து நிற்கிறான். ஒன்றுமே விளங்கவில்லை. கவிதையைச் சொல்கிறேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  8. விஜி வெங்கடேஷ்6 ஜூலை, 2024 அன்று 2:32 PM

    பயணக் கட்டுரை,கவிதை கருத்துக்கள் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி விஜி.

      நீக்கு
  9. அனைத்தும் அருமை. காணொளி பாடல் நன்றாக இருக்கிறது. எப்படியோ சமாதானம் ஆகி விட்டார்.
    கவிதை மனிதனை விட சில விஷயங்கள் அதற்கு நன்றாக தெரியும்.
    முடிந்தவரை உழைத்து கொண்டு இருப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....