சனி, 13 ஜூலை, 2024

காஃபி வித் கிட்டு - 193 - Bilimora Heritage Train - யானையின் நடனம் - தள்ளாடும் தமிழகம் - விலையுயர்ந்த ஆடை - அங்கோர்வாட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் : Bilimora Heritage Train



இந்தியாவில் பல பழமையான இரயில்பாதைகள் உண்டு - நமது மாநிலத்தில் இருக்கும் ஊட்டி இரயில் உட்பட.  ஊட்டி மலை ரயில், டார்ஜிலிங் ரயில் மற்றும் ஷிம்லா ரயில் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். அதே போல ஒரு பழமையான - 110 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இரயில் குஜராத் மாநிலத்தில் உண்டு. சூரத் மாவட்டத்தில் இருக்கும் பிலிமோரா எனும் இடத்திலிருந்து வகாய் என்ற இடம் வரைக்கும் சுமார் 63 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் இந்த இரயில் மிகவும் அழகிய, இயற்கைச் சூழலில் பயணிக்கும் இரயில் ஆகும்.  சுமார் மூன்று மணி நேரம் இந்த இரயிலில் பயணித்துச் செல்ல வசதிகள் உண்டு.  வகாய் அருகே ஒரு பறவைகள் சரணாலயமும் உண்டு.  ரயில் குறித்த தகவல்கள் இணையத்தில் உண்டு.  ஒரு சிறு காணொளி உங்கள் பார்வைக்கு!


Bilimora waghai Train - YouTube


******


இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை : யானையின் நடனம்…


சமீபத்தில் முகநூலில் பார்த்து ரசித்த ஒரு நடனம் - ஆடியது ஒரு யானை! யானையை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். நம் பதிவுலகிலும் சிலருக்கு யானை மிகவும் பிடித்த விஷயம்.  நான் பார்த்து ரசித்த அந்த யானையின் நடனம் காணொளியை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே! சுட்டி கீழே!


https://www.facebook.com/share/v/TEFzMbZctM5zyvvL/?mibextid=xfxF2i


******


பழைய நினைப்புடா பேராண்டி : தள்ளாடும் தமிழகம்


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தள்ளாடும் தமிழகம் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


சென்னையிலிருந்து காலையில் புறப்பட வேண்டும் என்பதால் திருச்சியிலிருந்து இரவுப் பேருந்தில் பயணம் செய்ய முடிவு செய்தேன். திருவரங்கத்திலிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் அமர்ந்து கொள்ள, புறப்பட்ட சற்று நேரத்திலேயே சத்திரம் பேருந்து நிலையம் வந்துவிட்டது. இரவு நேரம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. எனது பக்கத்து ஜன்னலோர இருக்கை காலியாக இருக்க, சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு மனிதர் அதில் அமர்ந்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்து அவரை வழியனுப்ப வந்திருந்த இருவரிடம் “தம்பிகளா, Neat-ஆ வீட்டுக்கு போயிடணும்... எதுவும் ரவுசு பண்ணக்கூடாது! சொல்லிட்டேன்” என்றார். பேருந்து புறப்பட, அடித்த காற்றில் அவர் சொன்ன Neat-இன் அர்த்தம் எனக்குப் புலப்பட்டது! ஒவ்வொரு முறையும் காற்றடிக்கும் போதெல்லாம் எனது நாசிகளிலும் டாஸ்மாக் வாசம் ஏற மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது எனது நடையிலும் தள்ளாட்டம்!


கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும்:


எனது இருக்கைக்கு இரண்டு இருக்கைகள் முன்னால் ஒரு இளைஞர் – முகத்தில் ஒரு மாத தாடி! அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியது பேருந்தில் இருந்த அனைவருக்கும் கேட்டது! இரவு பதினோறு மணிக்கு, யாரையோ கொஞ்சிக் கொண்டிருந்தார். “அப்படி என்ன நேரமாச்சு, தூங்க இன்னும் நேரம் இருக்கே, பேசு, பேசு செல்லம்!” அதற்குப் பிறகு பேசிய பலவும் இங்கே எழுத முடியாத அளவு இருந்தது! “நாராயணா, இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலையே” Moment பேருந்தில் இருந்த பலருக்கும்!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் ரசித்த துணுக்கு : விலையுயர்ந்த ஆடை


பணக்கார பெண்மணி ஒருவர் விலையுயர்ந்த துணிக்கடையில் நுழைந்து கடைக்காரரிடம்," எனக்கு வயது 26, என்ன உடை உடுத்தினாலும் அதில் நான் எடுப்பாக காண்பதில்லை. நான் பேரழகி இல்லையானால் குரூபி அல்ல. ஏன் உடை எடுத்துக் காட்டுவதில்லை?" என  கேட்டாள்.


கடைக்காரர் அவள் முகத்தை கூர்ந்து கவனித்தால். சந்தோஷத்தின் அறிகுறியே முகத்தில் காணவில்லை. டல்லடித்தது.


" கவலை பட வேண்டாம்.  உங்களுக்கு ஏத்த மாதிரி உடை ஒன்றை சொல்கிறேன். அது உங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். உங்கள் அழகை வெளிக்காட்டும். அந்த உடையை ஆங்கிலத்தில் ELIMS, என்பர்" என்றார். 'அப்படியா!,எவ்வளவு பணமாக இருந்தாலும் நான் அதை வாங்க தயார்" என்றாள்.


கடைக்காரி," மிக பெரிய கடைகளுக்கு சென்று கேளுங்கள். அப்படி உங்களுக்கு ஒரு வேளை கிடைக்காமல் போனால் என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உதவுகிறேன்" என்றாள். சில மணி நேரங்களுக்கு பின் இந்தக் கடைக்கு திரும்பி வந்த அவள்," மிக விலையுயர்ந்த துணி கடைகள் பலவற்றில் சென்று விசாரித்தேன் ELIMS, கிடைக்கவில்லை" என்றதும் கடைக்காரர்," நீங்கள் எங்கு சென்றாலும் அது கிடைக்காது தான்" என சொன்னதும் பணக்காரி "என்ன அது அப்படியென்ன உயர்ந்த உடையா? என்னால் எவ்வளவு செலவானாலும், கொடுத்து அதை வாங்க முடியும்" என்றாள். தலையை ஆட்டிய கடைக்காரர், "அம்மா அந்த உடைக்கு காசில்லை. இலவசம். நீங்கள் இத்தனை நேரமாக தேடிய உடை உங்களிடமே இருக்கிறது. நீங்கள் அதை அணியவில்லை அவ்வளவுதான்" என்றாள். இதைக் கேட்டு குழம்பிய பணக்கார பெண்மணி," புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்", என்றாள். கடைக்காரர் பேச ஆரம்பித்தார் "மேடம் ELIMS, என்ற வார்த்தையை திருப்பி போட்டால் SMILE, ஆக மாறுகிறது. புன்னகையே மிகச் சிறந்த உடை. உங்கள் முகத்தில் சிரிப்பே இல்லையே. சிரிப்பு அழகூட்டும் அணிகலன் . நாம் புன்னகைக்கும் போது நம் மீது நமக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது. இதை கேட்டவுடன் அப்பெண்மணி அருகிலிருந்த கண்ணாடி முன் நின்று புன்னகைத்தாள்  - 'அட இது நானா,!, நானேதான். ஒரு புன்சிரிப்பு இத்தனை மாற்றத்தை தந்தது? நான் வெளியே தேடியது என்னுள்ளே இருக்கிறது என்பதை எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி" என சொல்லி விடை பெற்றாள். புன்னகை அது பொன் நகை!!


******


இந்த வாரத்தின் ரசித்த கட்டுரை :  அங்கோர்வாட்


சொல்வனம் இணைய இதழில் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு பயணக் கட்டுரை - கற் கோவில்கள், கொலைக்களங்கள் - என்ற தலைப்பிட்ட ஒரு பயணக் கட்டுரை.  கம்போடிய நாட்டில் இருக்கும் அங்கோர்வாட் மற்றும் பாட்டம்பாங் சென்று வந்த அனுபவங்களை எழுதியிருக்கிறார் ரகுராமன் என்பவர்.  சிறப்பாக இருக்கிறது அவரது பயண அனுபவம்.  படித்துப் பாருங்களேன்! உதாரணத்திற்கு ஒரே ஒரு பத்தி இங்கே…


பல நாட்கள் இருந்து நிதானமாகப் பார்க்க வேண்டிய அங்கோர் வாட்டை ஒரு நாளிற்குள் காண்பது என்பது ஒரு தலை கிறுகிறுக்கும் அனுபவம். மே மாதத்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்க காட்சிகள் துண்டுதுண்டாக மனதில் பதிகின்றன. நீர் நிலைகள், அதில் நெளியும் கோபுரங்களின் பிம்பங்கள், கற் சுவர்கள், அகலமான பாலங்களின் கைச்சுவர்களில் படர்ந்து தலையை விரித்து கிடக்கும் நாக சிற்பங்கள், தாழ்வாரங்களின் குறுகியத்  திருப்பங்களில் ஒயிலாக இடுப்பை வளைத்து நம்மை உற்று நோக்கும் அப்சரசுகளின் சிற்பங்கள், சிறு சிறு பொத்தல்களோடு சொறசொறக்கும் எரிமலை கற்கள் மேல் அணிவகுக்கும் கருங்கற்கள், தூக்கி நிறுத்தும் இரும்புச் சாளரங்கள் என்று ஒரு திரைப்படத்தின் ட்ரைலர் போல நம் கண் முன் விரிகிறது அங்கோர் வாட்.


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

13 ஜூலை 2024


14 கருத்துகள்:

  1. யானை டான்ஸ் சூப்பர்.  அதுபோல ஒரு நாய் மெல்ல நடந்து வந்து ஒரு பாட்டுக்கு அழகாய்  கொடுத்த காணொளி ஒன்றும் நான் கண்டு ரசித்திருக்கிறேன்!

    பொதுவெளியில் இப்படி நாகரீகமில்லாமல் சத்தமாக பேசுபவர்களைக் காணும்போது எனக்குதான் சங்கடமாக இருக்கும்!

    பழைய நினைப்பில் டாஸ்மாக் பற்றி சொல்லி வருத்தப் பட்டிருக்கிறீர்களா.  இப்போது அதனுடன், அதைவிட கொடுமையான கஞ்சாவும் சேர்ந்து தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது, குறிப்பாக பள்ளிக்குழந்தைகளையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தமிழகம் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. வாசகம் அருமை. குட்டி யானை நடனம் அருமை. பயணம் செய்யும் போது குடித்துவிட்டு வருவது வருத்தம் அளிக்கும் விஷயம்.
    பயணத்தின் போது சத்தமாக பேசுவது எல்லாம் நாகரீகம் இல்லா செயல்.

    அங்கோர்வாட் பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  4. அங்கோர்வாட் பயணக் கட்டுரை
    சிறப்பு..
    நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. யானையின் நடனம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. Bilimora Heritage Train - ஆமாம் இந்த யுட்யூப் பார்த்திருக்கிறேன். செம அழகு, அதைக் குறித்தும் கொண்டேன். இப்பதான் நான் எழுதறதே இல்லையே அதனால் அப்படியே கிடக்கின்றன எல்லாம்.

    வாசகம் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது நீங்களும் எழுதுங்கள் கீதா ஜி. எனக்கும் நிறைய இடைவெளி வந்துவிடுகிறது அவ்வப்போது. சமீப நாட்களாகத் தான் தொடர்ந்து எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. இப்பவும் தமிழகம் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கு இன்னமும் தள்ளாடுகிறது. அங்கும் கருத்து சொன்ன நினைவு. நான் பொதுவாகப் பேருந்துப் பயணத்தைத் தவிர்த்துவிடுகிறேன். நீண்ட தூரப் பயணத்தைச் சொல்கிறேன். அதுவும் கேரளத்தில் சொல்லவே வேண்டாம்.

    ELIMS - அழகான கதை

    யானையின் நடனம் பார்த்து அசந்துவிட்டேன். ஏற்கனவே வாட்சப்பில் வந்து பார்த்தது என்றாலும் மீண்டும் ரசித்தேன்.

    அங்கோர்வார்ட் வாசிக்கிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தள்ளாடிக் கொண்டிருக்கிறது தமிழகம் - வேதனையான உண்மை.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....