செவ்வாய், 2 ஜூலை, 2024

கதம்பம் - அப்பள பஜ்ஜி - பால்கோவா - இசையின் வலிமை - வெற்றிலைத் தாம்பூலம் - நேரம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ஜெய் துவாரகாதீஷ் ஜெய் சோம்நாத் - பயணத் தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


மழையில் நனைந்து - அப்பள பஜ்ஜி - 20 மே 2024:



நீண்ட நாட்களுக்குப் பின்னர் இங்கு நல்ல மழை பெய்தது! மனதும் சூழலும் குளிர்ந்து போச்சு! மாலைநேரம் மகள் கல்லூரியிலிருந்து வந்ததும் டீ போடலாம் என்று Fm கேட்டபடியே பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தேன்! 


அதில் ஆர். ஜே இங்க பாருங்க! ஸ்டூடியோவோட கண்ணாடி ஜன்னல் வழியா பார்த்துட்டு இருக்கேன்! இங்க வானம் அப்படியே இருட்டிகிட்டு எப்படா மழை பெய்யலாம்னு இருக்கு! உங்க ஏரியால்லாம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க! அப்படியே  'நல்ல ஒரு மழைநாளில் என்ன செய்வீங்க?' என்று நேயர்களிடம் கேட்டுக் கொண்டிருக்க...


ஒரு பெண்மணி, 'அதென்னமோ தெரியலைங்க! மழைநேரத்துல சூடா வெங்காய பக்கோடா இல்லன்னா பஜ்ஜி போட்டு சாப்பிடுவேங்க!” என்று சொல்ல.. அட! நாமளும் டீயோடு சூடா பஜ்ஜி பண்ணி சாப்பிடுவோமே! என்று தோன்றவே...


சட்டுனு அப்பளத்தை இரண்டாக உடைத்து பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு எடுத்தால்... அப்பள பஜ்ஜி ரெடி!


மகளும் மழையில் நனைந்தபடியே வந்தாள்! என் பள்ளி கல்லூரி நாட்களை நினைத்துக் கொண்டேன்! எங்கேயும் நிற்கவே மாட்டேன்! தொப்பலாக நனைந்த படியே தான் வீட்டுக்கு வருவேன்...🙂 அம்மாவிடம் திட்டுகளும் வாங்கிக் கொள்வேன் .🙂


*******


பால்கோவா - 21 ஜூன் 2024:


நேற்றைய பொழுதில் வெளியே ஒரு வேலைக்காக சென்றிருந்த போது வழியில் தென்பட்ட மாம்பழ அக்கா புன்னகையுடன் ஹாய் சொன்னார்!நல்லா இருக்கீங்களா? எங்க இங்க வரதே இல்ல! என்று நாட்டு மாம்பழம் ஒன்றை கட் செய்து டேஸ்ட் பார்க்கத் தந்தார்! பெயரைக் கேட்டால் மால்கோவா என்பது போல ஒலிக்கவே மல்கோவாவா? என்றேன்!


மல்கோவா இல்லக்கா! இது பேரு  பால்கோவா! என்ன பால்கோவா கணக்கா இனிக்குதா? வீட்டுக்கு வாங்கிட்டு போலாமில்ல! என்று சிரித்துக் கொண்டே "ஒரு கிலோ போட்டுத் தரேன்!" என்று பையில் போட்டுக் கொடுத்தார்!


இசையின் வலிமை - 21 ஜூன் 2024:


நேற்றைய பொழுதில் Spotify-ல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வீடு பெருக்கிக் கொண்டிருந்தேன்! மனதில் என்னமோ அடுத்தடுத்த வேலைகளைப் பற்றிய எண்ணங்கள் தான் வியாபித்திருந்தன! 


தாலாட்டு மாறிப் போனதே! என் கண்ணில்....!


குறிப்பிட்ட பாடலைக் கேட்டுக் கொண்டே வந்ததும் மனதை என்னமோ செய்து விட எங்கிருந்தோ துக்கம் கரைபுரண்டு ஓடி வர மிகுந்த சிரமப்பட்டு தான் என் எண்ணங்களை திசைதிருப்ப முயற்சி செய்தேன்! இசைக்கு இருக்கும் வலிமையை எண்ணி ஆச்சர்யமும் கொண்டேன்.


வெற்றிலைத் தாம்பூலம் - 21 ஜூன் 2024:



வெள்ளிக்கிழமை என்பதால்  காலையிலேயே வெற்றிலை பாக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள ஒரு அழைப்பு வந்ததும் ஓடிச் சென்று வாங்கி வந்தேன்! யாராவது எனக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன் என்று சொன்னால் ஏன் பதறுகிறேன் எனப் புரியவில்லை...🙂 அடுத்த நிலைக்கு சென்று விட்டேன்! சென்று விட்டேன்! என்று நான் சொன்னாலும் என் மனது அந்த மாற்றத்தை உணரவில்லையோ..🙂


மீள் பதிவு - 21 ஜூன் 2024:


போன வருஷம் இதே நாளில் நான்  எழுதிய பதிவு ஒன்று என் கண்ணில் பட்டது! அதில் என்னவரிடமும், மகளிடமும் நான் பொழுது போகாமல் ஏதாவது பேசுங்களேன்! என்று சொல்வதாகவும் அவர்கள் இருவருமே 'என்னம்மா பேசறதுக்கு இருக்கு! திரும்பத் திரும்ப ஒரே விஷயங்கள் தானே'! என்றும் சொல்லியதாக எழுதியிருக்கிறேன்....🙂


ஆனால் இப்போது...!


சாயங்காலம் நீ ஏன் பேசவே இல்ல??


அதுவா! நேரமே இல்ல! கிளாஸ் முடிஞ்சதும் வெளில போயிட்டு வந்தேனா! சாப்டுட்டு வேலை முடிச்சேன்! இன்னிக்கு டெஸ்ட் இருந்தது! அப்புறம் வொர்க்‌ஷீட் வேற  இருந்தது! எழுதிண்டு இருந்தேன்! அப்புறம் என்ன! ராத்திரி டிபன்! பாத்திரம் தேய்ச்சு கிச்சன க்ளீன் பண்ணி தூங்கப் போக தான் நேரம் இருந்தது...🙂


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

  1. இசைக்கு இருக்கும் மகிமை தனிதான். சில நேரங்களில் சில பாடல்களைக் கேட்டு அடக்கமுடியாமல் அழுதிருக்கிறேன். ஏதோ ஒரு நினைவை அது தூண்டிவிடுவதாலா? தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். சில நேரங்களில் நம்மை உலுக்கி விடுகிறது! இசையின் வலிமை!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  2. அப்பள பஜ்ஜி...  அட!

    இசையின் வலிமையில் சிக்கும் அனுபவங்கள் எனக்கு நிறையவே உண்டு.

    சென்ற வருடத்துக்கும் இந்த வருடத்துக்குமான வித்தியாசம் மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்குமே இந்த அனுபவங்கள் உண்டு தான் போல! நம் நினைவுகளைத் தூண்டி விடும் வலிமை இசைக்கு உண்டு என்பது நிரூபணமாகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. நானும் இசையின் காந்தத்தில் சிக்குவதுண்டு. சில பாடல்கள் துக்கத்தைக் கிளப்பும். பெரும்பாலும் அப்படியான பாடல்களை நான் கேட்பது இல்லை. நம் ஆழ்மனதிற்குள் உறைந்து கிடப்பவை எழுந்துவிடும்.

    நீங்களும் இப்ப பிசியாகிவிட்டீங்க. நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்! எங்கிருந்தோ துக்கத்தை புரட்டி எடுத்து வருகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. ஆஹா அப்பள பஜ்ஜி சூப்பர். நம் வீட்டிலும் முன்பு போடுவதுண்டு. இப்பதான் எண்ணையே வைக்கறதில்லையே!!! கேரளத்து செய்முறையான பப்பட வடா (அப்பள வடை) வும் செய்வதுண்டு. அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, (அப்பளத்தில் உப்பு இருக்குமே நிறைய எனவே பார்த்து போட்டுக் கொள்ள வேண்டும்) கொஞ்சம் பெருங்காயம், எள்ளு இவற்றை (அப்பளத்தில் ஜீரகம் இருந்தால் வேண்டாம் இல்லைனா கொஞ்சம் ஜீரகம் வேணும்னா சேர்த்துக்கலாம்) எல்லாம் தண்ணீர் விட்டுக் கலந்து, ரொம்ப நீர்க்க இருக்கக் கூடாது ரொம்ப கெட்டியாவும் இருக்கக் கூடாது அப்பளத்தை/பப்படத்தை மாவில் போட்டு எடுக்கறப்ப மாவு அதில் தின்னாக ஒட்டியிருக்க வேண்டும். சூடான எண்ணையில் கிரிஸ்பாக பொன்னிறத்தில் பொரிக்கணும்,

    ரொம்ப நல்லாருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பப்பட வடா சூப்பர்! அரிசிமாவில் காரம் சேர்த்து ஒருமுறை செய்து பார்க்கிறேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. பால்கோவா மாம்பழம் பால்கோவா போல தித்திப்பா சுவையா இருக்குமோ...சென்னையில் வீட்டு மாமரத்து மாம்பழம் செம டேஸ்டா இருக்கும் அத்தனை சுவையா இருக்கும். ஆனால் ஏதோ ஒட்டுவகைதான். அதையும் பால்கோவா போல் இருக்குன்னு சொல்வதுண்டு அந்த ளவு அதன் சார் இருக்கும். தித்திப்பு மட்டுமில்லை, ஒரு சுவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பால்கோவா போன்று அவ்வளவு தித்திப்புடன் இருக்கும் என அந்த அக்கா சொன்னார்! நாட்டுப்பழம் இது! நன்றாகத் தான் இருந்தது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை.
    அப்பளபஜ்ஜி , மழை கால நினைவுகள் எல்லாம் எனக்கு பழைய நினைவுகளை மீட்டியது.
    சில பாடல் , நினைவுகள் துக்கத்தை தேக்கி வைக்காமல் வெளியே வர உதவும். இசை ஆறுதல், மகிழ்ச்சி எல்லாம் தரும்.

    ஆமாம், பேச்சை கேட்க நேரமில்லாமல் பறந்த காலங்கள், ஏன் பேசவே இல்லை என்று கேட்கும் காலங்கள் எல்லோருக்கும் வாழ்க்கையில் வரும் போலும்.
    நீங்களும் இப்போது பிஸியாகி விட்டீர்கள். இருந்தாலும் சில நிமிடங்களை ஒதுக்கி பேசிவிடுங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசையின் வலிமை எல்லோருக்குமே அனுபவங்களைத் தந்திருக்கிறது! ஆறுதலும் சில நேரங்களில் உற்சாகத்தையும் அளிக்கும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. அப்பள பஜ்ஜி நன்றாக உள்ளது. நாங்கள் உள்ளே உருளை மசியல் வைத்தும் பொரிப்பதுண்டு. இப்பொழுது எண்ணை உணவுகள் குறைத்து விட்டோம்.

    வகுப்பு, வீட்டுவேலை என பிசியாகி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளை மசியல் வைத்து!!! வித்தியாசமாக உள்ளது! பிரட் பக்கோடாவைப் போல் பஜ்ஜிக்குள்ளும் ஸ்டஃபிங்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  8. சங்கீதம் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பது உண்மையே...

    இன்றைய கதம்பம் சிறப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. மழை நேரத்தில் அப்பள பஜ்ஜி நன்றாக இருக்கும். நானும் செய்துள்ளேன். இசை சில சமயங்களில் மனதுக்குள் சோகத்தை உண்டாக்கும். முன்பே கேட்ட தெரிந்த பாடல் என்றால் அதை கேட்கும் போது மனம் பாரமாவது உண்மை.

    வீட்டு வேலைகள், வகுப்பில் படிப்பது அதனின் ஹோம் ஒர்க் என நேரம் சரியாக இருக்கும் உங்களுக்கு. வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நம் மன உணர்வுகளை தட்டி எழுப்பி விடுகிறது! மனதையும் பாரமாக்கி விடுகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  10. விஜி வெங்கடேஷ்3 ஜூலை, 2024 அன்று 1:44 PM

    அருமையான எழுத்து.மழைக்கு ஒரு கெட்ட சுபாவம்,நம் பசியை, ருசியைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும்.என் அம்மா மழை பெய்யும்போது வேர்க்கடலையை உப்புப் போட்டு வேகவைத்துத் தருவாள்.ஜன்னல் வழியாக மழையைப் பார்த்துக்கொண்டே உரித்து சாப்பிடுவது ஒரு சுகம்.மாம்பழம் பல ஜாதி உண்டு(ஆனால் ஜாதிச் சண்டை வந்ததில்லை!)ஒவ்வொன்றும் ஒரு டெஸ்ட்.மும்பையில் தசேரி என்று ஒரு வகை ஒல்லியாக நீளமாக இருக்கும். கற்கண்டு போல் தித்திப்பு. இசை நெகிழ, உற்சாகமாக்க, அழவெக்கவும் செய்யும்.நிஜம்.keep it up ஆதி.

    பதிலளிநீக்கு
  11. மழை பெய்யும் நேரம். ரேடியோ நிகழ்ச்சியில் ஆர் ஜே சொல்லும் பஜ்ஜி - உடனே அப்பள பஜ்ஜி செய்துவிட்டீர்கள்! சரியான நேரத்தில் மகளும் வந்து சுவைக்க ஏதுவாக இருந்திருக்கிறது. மழை பெய்யும் போது இது போன்றவை நாவிற்கு ருசிதான். எல்லாருக்கும் இப்படிக் கிடைக்குமா? எப்போதேனும் தான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....