வெள்ளி, 19 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சிறிது வயிற்றுக்கும் - காசி நகரின் உணவு - பகுதி பதிமூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - புதிய காசி விஸ்வநாத் மந்திர்


இந்தப் பயணம் குறித்து பன்னிரண்டு பகுதிகள் வந்துவிட்டது - ஆனால் இதுவரை உணவு குறித்து ஒன்றுமே எழுதவில்லை என்று உங்களில் சிலர் கேட்க நினைத்திருக்கலாம்! எனக்கும் இதுவரை ஒன்றுமே சொல்லவில்லையே என்று தோன்றியதால் இன்றைக்கு காசி நகரில் நிச்சயம் ருசிக்க வேண்டிய சிலவற்றை இந்தப் பகுதியில் சொல்லிவிட திட்டம்.  சிறிது வயிற்றுக்கும் என்ற தலைப்பிட்ட இப்பகுதியில் சில உணவு வகைகள் குறித்துப் பார்த்து விடலாம். 



பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு...


பச்சை நிறமே பச்சை நிறமே - இனிப்பு...

பொதுவாகவே வட இந்தியா என்றால் சப்பாத்தி-சப்ஜி, பராட்டா போன்றவை மட்டும் தானே, தென்னிந்தியா போல விதம் விதமான சாதம், குழம்பு வகைகள், ரச வகைகள், பொரியல் வகைகள், சிற்றுண்டி வகைகள் என இருக்கிறதா என்ன என்று நம் ஊர் மக்கள் நினைக்கலாம்.  இங்கேயும் விதம் விதமான உணவு வகைகள் உண்டு.  குறிப்பாக இனிப்புகள் என்று வரும்போது பால் வைத்து தயாரிக்கப்படும் இனிப்புகள் வடக்கிலும் கிழக்கிலும் அதிகம் தான்.  அதிலும் வடக்கில் கிடைக்கும் பால் மிகவும் கெட்டியாக இருப்பதால் (எருமைப் பால்!) பால் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளின் சுவை அதிகம். மதுரா, விருந்தாவன், அயோத்யா என பல இடங்களில் (p)பே(d)டா எனும் இனிப்பு சுவைக்கும்போது அப்படியே வாயில் கரைவதோடு ஒரு வித Ecstasy - பரவசம் மனதுக்குள் வந்து போகும்.  இன்னும் இன்னும் சாப்பிடலாம் என்று தோன்றுவது உண்டு.  எப்போது (p)பே(d)டா சாப்பிட்டாலும் ஒன்றோடு நிறுத்திக்கொள்வது என்பது இயலாத காரியமாகவே இருக்கிறது இன்னும் எனக்கு! 



மலாய்யோ...


ரப்டி...

வாரணாசி நகரில் (p)பே(d)டா கிடைக்கும் என்றாலும் இதைத் தவிர, இந்த ஊரில் அதிகம் கிடைப்பதும், வாரணாசிக்கே உரித்தானதுமான ஒரு இனிப்பு - மலாய்யோ என்று சொல்லக்கூடிய ஒரு பால் பதார்த்தம்!  குளிர் நாட்களில் (நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை) மட்டுமே கிடைக்கும் இந்த மலாய்யோ நுரை போல காட்சி தரும் என்பதும் வாரணாசி நகரில் பல இடங்களில் மண் பாண்டங்களில் இவை விற்பனை செய்யப்படுகிறது என்பதும் எனது முந்தைய பதிவு ஒன்றிலும் சொல்லி இருப்பதாக நினைவு. நிறைய கடைகளில் கிடைத்தாலும் Pபெஹல்வான் லஸ்ஸி Bபண்டார் என்று ஒரு கடை - BHU-விலிருந்து கோயில் நோக்கிச் செல்லும் வழியில் இருக்கிறது - அந்தக் கடையில் கிடைக்கும் மலாய்யோ மிகவும் பிரபலமானது.  இந்தக் கடையில் லஸ்ஸி, ரப்டி, மலாய்யோ, பூரி/கச்சோடி சப்ஜி என அனைத்தும் பிரபலம் தான். இந்தக் கடையில், ஒவ்வொரு நாள் ஒவ்வொன்று என்று மலாய்யோ, ரப்டி, கச்சோடி/சப்ஜி, லஸ்ஸி என்று இந்தப் பயணத்தில் சுவைத்தேன். ஆஹா… அற்புதமான சுவை அது! எப்படிச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் நீங்கள் பார்க்க விரும்பினால் இணையத்தில் நிறைய காணொளி இருக்கிறது!



லஸ்ஸி...

லஸ்ஸி - பொதுவாக நம் ஊரில் லஸ்ஸி என்ற பெயரில் கிடைக்கும் பானத்தை குடிப்பதை விட குடிக்காமல் இருப்பதே மேல்! மிகவும் நீர்க்க இருக்கும்! இங்கேயோ கெட்டியாக இருக்கும் - அதன் கூட மேலாக பாலாடைக் கட்டியாக போட்டும், சில இடங்களில் Rooh Afza எனும் ஷர்பத் சில சொட்டுகள் விட்டுத் தருவதும் உண்டு.  வாரணாசி நகரில் சில கடைகளில் ரப்டி எனப்படும் பால் இனிப்பும் போட்டுத் தருவார்கள். இப்படியான லஸ்ஸி அதுவும் மண்பாண்டத்தில் போட்டு தரும்போது அதைக் குடித்தால் - ஆஹா ஆனந்தம் தான்! ஒரு கிளாஸ் 30/50 ரூபாய் என இருந்தாலும் அதனை குடிப்பதால் எந்தவித கெடுதலும் இல்லை என்பதுடன் ஒன்று இரண்டு மணி நேரத்திற்கு பசியும் எடுக்காது! இது போலவே பால் - சூடான பால் பெரிய பெரிய வாணலிகளில் கடை வாசலில் இருக்கும். அவற்றையும் நீங்கள் வாங்கி அருந்தலாம்! நன்றாக இருக்கும். பால் சுண்டச் சுண்ட அதன் சுவையும் அதிகரித்துக் கொண்டே இருப்பது போல எனக்குத் தோன்றும்.  இப்படியான கடைகள் வாரணாசி நகரில் நிறையவே உண்டு. 



டமாட்டர் சாட்...

காசி Chசாட் Bபண்(d)டார் என்று ஒரு கடை - எப்போதும் அங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் - ஏனெனில் அங்கே கிடைக்கும் உணவின் வகைகளும் சுவையும் அப்படி! மிகச் சிறிய கடை தான் என்றாலும், தொடர்ந்து அங்கே வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். உட்கார்ந்து சாப்பிட இருக்கும் இடம் மிகவும் குறைவு என்பதால் பெரும்பாலும் நின்று கொண்டே தான் சாப்பிட வேண்டியிருக்கும். இங்கே கிடைக்கும் Chசாட் வகைகள் அதிகம் - வட இந்தியாவில் Chசாட் வகை உணவுகள் சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயம் - எப்படி நம் ஊரில் பகோடா, பஜ்ஜி போன்றவற்றை ஒரு கைபார்ப்பார்களோ அப்படி இந்த ஊரில் Chசாட் வகைகளை ஒரு கை பார்க்கிறார்கள். எப்போதும் அங்கே இருக்கும் மக்கள் கூட்டம் இந்த உணவு வகைகளுக்கு இருக்கும் வரவேற்பை பறைசாற்றுகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.  பானி பூரி, டமாட்டர் (தக்காளி) Chசாட், பாலக் (ஒரு வகை கீரை) Chசாட், Bபல்லா (p)பாப்டி போன்றவை தவிர ஃபலூடா போன்றவையும் கிடைக்கின்றன.  அதிக அளவில் Youtubers இந்தக் கடை குறித்து பதிவுகள் வெளியிட்டு இருக்கிறார்கள் - ஆனாலும் ஒரு சிலருக்கு இந்தக் கடையில் கிடைக்கும் உணவு வகைகள் பிடிப்பதில்லை என்பதும் நிதர்சனம். 



சாச்சி கி துக்கான் - கச்சோடி சப்ஜி...

வாரணாசி சென்றால் சுவைக்க வேண்டியவை என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது இணையத்தில்! இணையத்தில் சொல்வதை எல்லாம் சுவைக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது! ஃப்ரைட் இட்லி கூட இங்கே ஒரு சில இடங்களில் பிரபலமாக இருக்கிறது! நமக்கு நம் ஊர் சாஃப்ட் இட்லி, தேங்காய் சட்னி, சாம்பார் போதும் என்று தோன்றிவிடும் என்பதால் இந்த விபரீத விளையாட்டுக்கு எல்லாம் போகவில்லை. பஹல்வான் லஸ்ஸி கடைக்கு பக்கத்திலேயே ஒரு சிறு கடை - (ch)சாச்சி கி (dh)துக்கான் என்பது அந்தக் கடையின் பெயர்.  காலை நேரத்தில் இந்தக் கடை தான் பலருக்கு அன்னதாதா! கச்சோடி/பூரி, ஆலு சப்ஜி, ஜிலேபி, மட்கா சாய் என ஒரு சில உணவு வகைகள் மட்டுமே இங்கே கிடைக்கும் என்றாலும் காலை நேரங்களில் இங்கே கூட்டம் அம்முகிறது! அதுவும் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருப்பதால் பல மாணவர்கள் இங்கே சாப்பிட வந்துவிடுகிறார்கள்.  கடைக்கு வெளியே, சாலையோரமாக வரிசையாக எண்ணெய் டின்கள், அதன் மீது துணி போட்டு இருக்க, அது தான் நாம் உட்கார்ந்து கொள்ள ஸ்டூல்! கையில் தொன்னைகளில் கச்சோடி சப்ஜி வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டியது தான்.  சுவையும் நன்றாகவே இருக்கிறது. 



சென்னா தஹி வடா...


சூடா மட்டர்...


லாய்யா சன்னா...


தஹி சட்னி கோல்கப்பே...


தண்டாய்...

இதைத் தவிர (B)பா(B)பா (th)தண்டாய் என்ற ஒன்றும் இங்கே பிரபலம்.  ஹோலி சமயத்தில் இந்த தண்டாய் குடிப்பது வழக்கம் என்றாலும் எல்லா நாட்களிலும் இந்த பானம் கிடைக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி என்பதோடு சிலருக்கு இது ஒப்புக்கொள்ளாமலும் போகலாம் - கொஞ்சம் போதையூட்டும் என்பதால் தவிர்ப்பது நல்லது!  சென்னா தஹி வடா என்ற ஒரு உணவும் இங்கே பிரபலம் தான்.  ஆனால் எனக்கு என்னவோ நம் ஊர் தயிர்வடைக்கு இவை எல்லாம் ஈடாகாது என்று தோன்றும்.  காலை நேர உணவாக கிடைக்கும் சூடா மட்டர் (அதாவது அவல் மற்றும் பட்டாணி) ஓகே ரகம் தான்.  இத்தனை சாப்பிட்டால் கொஞ்சம் வெற்றிலை பாக்கும் போடத் தோன்றும் அல்லவா? அதாவது பான் பீடா! இங்கே பான் கடைகள் நிறையவே இருக்கிறது. மீட்டா பான் எனப்படும் இனிப்பு பான் தவிர புகையிலை சேர்த்த பான் வகைகளும் இங்கே அதிகம் என்பதால் பான் சாப்பிட ஆசைப்பட்டால் முதலிலேயே மீட்டா பான் தேவை என்பதைச் சொல்லி விடுங்கள். இல்லையெனில் புகையிலை சேர்த்த பான் எதையாவது சாப்பிட்டு, ஒத்துக் கொள்ளவில்லை என்றால் கம்பெனி பொறுப்பல்ல! :) 



பான் மசாலா கடை ஒன்று...

இங்கே குறிப்பிட்டவை தவிர லோங்க்லதா, ரப்டி ஜலேபி, தஹி சட்னி கோல்கப்பே லாய்யா சன்னா என நிறைய உணவு வகைகள் சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்தையும் சுவைத்துவிட ஆசையிருந்தாலும் எல்லாவற்றையும் சாப்பிட்டு உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனால் என்னாவது?  அதனால் அடக்கி வாசிப்பது நல்லது - அதுவும் தனியாகப் போகும்போது! இந்தப் பதிவில் நான் குறிப்பிட்ட அனைத்து உணவு வகைகளையும் சாப்பிட முடியாது என்றாலும் பலவற்றை சுவைத்தேன். படங்கள் நான் எடுத்ததைத் தவிர சில படங்கள் இணையத்திலிருந்து! தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

19 ஜூலை 2024


32 கருத்துகள்:

  1. காலங்கார்த்தால இத்தனையையும் காட்டி நாவூறச் செய்தால் நான் என்ன செய்ய...  எங்கே செல்ல?  லஸ்ஸி அதென்ன மாயோ வா....   அதெல்லாம் ரொம்பவே ஆசை காட்டுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையிலேயே இதெல்லாம் காண்பித்து நாவூறச் செய்துவிட்டேன்! ஹாஹா... ஒரு சில உணவு வகைகள் நம் ஊரிலும் கிடைக்கலாம் - ஆனால் சுவை நிச்சயம் மாறுபடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தஹி சட்னி கோல்கபே லஸ்ஸி ரஃப்டி போன்றவற்றைச் சுவைத்திருக்கிறேன், தவிர ஜாமூன் வகையறாக்களையும் (பலவிதம். பெயர் வேற்றுமை தெரியாது). இருந்தாலும் பயணத்தில் வயிற்றைப் பதம் பார்த்துவிடுமோ என்ற பயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    உணவு வகைகள் படங்கள் , விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதிவு முழுக்க இனிப்பு.
    சுவாரஸ்யமான தகவல்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. விஜி வெங்கடேஷ்19 ஜூலை, 2024 அன்று 9:24 AM

    ஆஹா படிக்க படிக்க சுவை(காசி பயணத்திலேயே இதுதான் hilight!)மொபைலை எச்சில் ஆகாமல் பார்த்துக்கொள்ள பெரும் பாடாக ஆகிவிட்டது.ஆனாலும் இத்தனை variety ஐயும் சுவைத்துவிட்டு சதை போடாமல் இருப்பது உனக்கு எப்படி சாத்தியமாகிறது வெங்கட்?எனக்கே இப்போ ஒரு சுற்று பருத்த உணர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனையும் சுவைத்துவிட்டு சதை போடாமல் இருப்பது - ஹாஹா... கொஞ்சம் சதை போட்டுத்தான் இருக்கிறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு
  6. சப்பையாக போன மச்சான் தொப்பையாக திரும்ப வந்தாங்கற கதை இதுதானோ!

    அப்படியே ஒன்பது நாட்களில் தொப்பை போடுவது எப்படி என்று ஒரு புத்தகம் போடலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்பையாக போன மச்சான் தொப்பையாக திரும்ப வந்த கதை - ஹாஹா... உங்கள மாதிரி என்றும் 28-ஆ இருக்கறது ரொம்ப கஷ்டம் பத்மநாபன் அண்ணாச்சி.

      புஸ்தகம் - போட்டுடலாமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. உணவுகள் சுவைத்துப் பார்க்கத் தூண்டுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாரணாசி பயணம் மேற்கொண்டு, காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு, விதம் விதமான உணவுகளையும் ருசித்துப் பாருங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. ஆஹா வெங்கட்ஜி இப்படி சாப்பாட்டு படங்களா போட்டு நாவில் நீர் ஊற வைக்கறீங்களே!! அதுவும் சாட் எல்லாம் போட்டு!!

    லஸ்ஸி இங்கா ஹாஹாஹா அது வட இந்தியாவில்தான். இப்ப சமீபத்தில் கூட என் கண்ணில் காட்டப்பட்டது. ஆனா நமக்குத்தான் விண்டோ ஷாப்பிங்க் போல வீட்டின் மேசையில் பார்த்து பார்த்து பரவசப்பட்டேன்!!! காலை உணவோடு, மதிய உணவோடும் வீட்டிலேயே செஞ்சு வைச்சாலும்....பெருமூச்சு! ஆமாம் அது முழுவதும் சாப்பிட்டால் பசி கொஞ்ச நேரத்துக்கு எடுக்காது. ரப்டி யும் வீட்டிலேயே தயாரித்தது அதுவும்.

    அதேதான் பாலும்...ஒரு பஞ்சாபி கடை. பெயர் டக்கென்று நினைவுக்கு வரலை. ஆனா பாருங்க சர்க்கரை சேர்த்து செய்திருந்ததால் நமக்கு ஆவாதே. சர்க்கரை இல்லாம கிடைக்குமான்னு கேட்டேன். அப்ப இல்லை என்று சொல்லிவிட்டார். குருகிராமத்தில்.

    மலாய்யோ சுவைத்ததில்லை என்று நினைக்கிறேன். பார்த்தால் தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாட் வகைகள் எப்போதும் அதிகம் என்னை கவர்ந்ததில்லை கீதா ஜி. ஆனாலும் அவ்வப்போது சுவைப்பதுண்டு. ஸ்வீட் வகைகள் சாப்பிடுவது உங்களால் முடியாது என்பது வருத்தமே. சில சமயங்களில் நானும் தவிர்த்து விடுகிறேன்.

      மலாய்யோ குளிர் நாட்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. அந்தச் சமயத்தில் சென்றால் சுவைக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. வட இந்திய சாட் சூப்பரா இருக்கும்.

    குட்டி குட்டி ஃப்ரைட் இட்லி இங்கும் அதில் பொடியில் புரட்டி உடுப்பி ஹோட்டலில் கிடைக்கிறது. முன்பு வீட்டிலும் செய்ததுண்டு மகனுக்காக.

    சென்னா தஹி வடா இனிப்பாக இருந்தது நாங்க வாங்கினப்ப....கூட இருந்தவங்க எல்லாரும் ஆஹா ஓஹோன்னு என்னை கடுப்படிச்சாங்க. ஆனா எனக்கு நம்ம ஊர் தயிர் வடைதான்!!! பிடிக்கும்.

    தஹி சட்னி கோல்கப்பே சாப்பிட்டிருக்கேன் இந்த முறையும். ஒரே ஒரு கோல்கப்பேதான். அதுல ஸ்வீட் சட்னி...

    தண்டாய் சாப்பிட்டதில்லை. பான் பக்கம் நம்ம ஊர் வெற்றிலை பாக்கு கூட போடும் பழக்கம் இல்லை.

    எனக்கு விதம் விதமாகச் சாப்பிடவும் சுவைக்கவும் பிடிக்கும் என்றாலும் வெளியில் செல்லும் போது கவனமாகச் சாப்பிட வேண்டும்தான். எல்லாமே சுவையான உணவுகள் ஆனா இவை எல்லாமே கலோரி கூடுதலான உணவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய சாட் வகைகள் - இங்கே நன்றாக இருக்கின்றன. அதே பெயரில் தமிழகத்தில் கிடைப்பவை - அங்கே அமோக ஆதரவு பெற்றாலும், உண்மையான சுவையில் சுவைத்த எங்களைப் போன்றவர்களுக்கு தமிழகத்தில் கிடைப்பது பிடிப்பதில்லை.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சுவையயூட்டும் பண்டங்களின பெயர்கள், மற்றும் படங்கள் அனைத்தும் பிரமிபூட்டுகின்றன. பார்க்கப் பார்க்க எல்லாமுமே கண்களுக்கு விருந்தாக நன்றாக உள்ளன. எல்லாவற்றையும் ஆசைப்பட்டு உண்டால் வயிற்றுக்கு என்ன பண்ணுமோ ? ஆனாலும் ஒரு சிலதை உண்ணாமல் என்ற ஆசை வருகிறது. (குறிப்பாக லஸ்ஸி) தங்களது இந்தப் பயணபதிவை நிறையதை விட்டு விட்டேன். மன்னிக்கவும். அதையும் படித்து விட்டு தொடர்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடட்டச்சில் பிழையாகி விட்டது. மன்னிக்கவும். "உண்ணலாம் என்ற ஆசை வருகிறது" எனப்படிக்கவும்.

      நீக்கு
  11. வாரணாசி பயணத் தொடர் அருமை...

    அற்புத தகவல்கள்..

    மகிழ்ச்சி..
    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணாசி பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  12. மும்பையில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது மலாய் வஸி முதலானவற்றை சாப்பிட்டிருக்கின்றேன்...

    அவற்றின் தரமே வேறு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மும்பையில் கிடைப்பதற்கும் இங்கே கிடைப்பதற்கும் கூட வித்தியாசங்கள் இருக்கலாம். இங்கே தயாரிக்கப்படும் பால் இனிப்புகள் எருமைப் பாலில் தயாராகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  13. அன்றைக்கு அங்கே சாப்பிட்ட வட மாநிலத்து உணவுகளுக்கு இணையாக இங்கே கிடைப்பதில்லை என்பதே உண்மை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரில் கிடைக்கும் வட மாநிலத்து உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே மேல்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  14. இங்கே கண்டவனும் உணவகத் தொழிலில் இறங்கி ஊரை ஏமாற்றுகின்றனர்.. -

    சைவமோ புலாலோ எல்லாமே இங்கே அநீதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரை ஏமாற்றுபவர் பலர் - உண்மை. ஏமாற மக்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  15. மசாலா சாய் கூட இங்கே தரமில்லை..

    மற்றவைகளைப் பற்றி பேச்செதற்கு ?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே கிடைக்கும் தேநீரின் சுவை - அது வேறு வகை! மசாலா சாய் என்ற பெயரில் எதையோ கொடுத்துவிடுகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  16. "தஹிசட்னி கோல்கப்பே "பார்க்க நன்றாக இருக்கிறது. சுவை என்னவோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையும் நன்றாகவே இருக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....