திங்கள், 15 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா - பகுதி பதினொன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 


*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி





இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் போன்ற நகரங்களில் கல்வி கற்பதற்கு ஏற்ற பள்ளிகள்/கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் மேற்கத்திய கல்வி முறைகளையும் அறிவியல் சார்ந்த விஷயங்களையும் மட்டுமே சொல்லிக் கொடுக்கும் இடங்களாக இருந்திருக்கின்றன.  அது மட்டுமல்லாது அவற்றில் படிப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமானதாக இல்லை.  இப்படியான சூழலில் பண்டிட் மதன் மோகன் மால்வியா அவர்கள், அனைத்து மக்களும் சேர்ந்து படித்து பயன்படும் விதமாக - அதிலும் குறிப்பாக இந்திய நாட்டின் பாரம்பரிய விஷயங்களையும், கலைகளையும் கற்றுக் கொடுக்கும் விதமான ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  அவரது இடை விடா முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் தான் இன்றைக்கும் மிகச் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா என்ற பெயர் கொண்ட பல்கலைக்கழகம்.  



பண்டிட் மற்றும் மஹாமனா (ஒரு அற்புத ஆத்மா) என்ற சிறப்புப் பெயர்களால் அறியப்படும் திரு மதன் மோகன் மால்வியா அவர்கள் இந்திய பாரம்பரியத்தை நவீன கல்வியோடு கலக்கும் விதமான ஒரு பல்கலைக்கழகத்தினை உருவாக்க ஆசைப்பட்டார்.  கல்வி கற்க விரும்பும் அனைத்து மாணவர்களும் - ஏழையோ, வசதி படைத்தவரோ, எப்படி இருந்தாலும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கி மேற்படிப்பை முடிக்கும் விதத்தில் பல்கலைக்கழகம் உருவாக்க எண்ணம் கொண்டார்.  அவரது எண்ணம் செயல் வடிவம் பெறத் தேவையான அனைத்தையும் அவர் செய்து முடித்தார். கல்விக் கட்டமைப்பில் இந்திய மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவதோடு கலாச்சாரங்களிலும் ஆழமான ஒரு அடையாளத்தினை அடையும் விதமாக வெளியேற முடியும் என்பதில் அவருக்கு சந்தேகமில்லை.  அவரது அயராத முயற்சியால் 1916-ஆம் ஆண்டு இந்த பல்கலைக்கழகம் உருவானது.  இன்றைக்கு இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பலவிதமான துறைகளில் கல்வி போதிக்கப்படுகிறது - மருத்துவக் கல்லூரி, கலை இலக்கிய கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பலவித கல்லூரிகளை உள்ளடக்கிய பல துறைகள் இங்கே இருக்கின்றன. 






நான் வாரணாசி சென்றிருந்த சமயம் டிசம்பர் மாதம் அல்லவா?  உலகம் முழுவதும் 25-ஆம் தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் அகல் விளக்குகள், அலங்கார விளக்குகள் என அமர்க்களமாக இருந்தது - காரணம் மஹாமனா என்று அழைக்கப்படும் பண்டிட் மதன் மோகன் மால்வியா அவர்களின் பிறந்த நாள் 25 டிசம்பர் தான்.  பல்கலைக்கழகத்தில் படிக்கும் அத்தனை மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், உழைப்பாளிகள் என அனைவரும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதைக்கு அளவே இல்லை.  பல்கலைக்கழக வளாகத்தில் சாலைகள் ஓரம் முழுவதும் தொடர்ந்து வரிசையாக மாணவர்கள் அகல்விளக்குகள் வைத்து விளக்குகளை ஏற்றி வைத்திருந்ததைப் பார்க்கும் போது அப்படி ஒரு அழகு.  தவிர பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அவரது இல்லம் இப்போது மால்வியா Bபவன் என்ற பெயரில் ஒரு அருங்காட்சியகமாக இயங்கி வருகிறது. அவர் குறித்த பல விஷயங்களை இந்த அருங்காட்சியகத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். வளாகத்தில் இருக்கும் இடத்தில் அவரது பிறந்த நாள் சமயத்தில் ஒரு மலர் கண்காட்சியும் நடைபெற்றது. 


வாரணாசியில் இருக்கும் பிரதான பல்கலைக்கழக வளாகம் எவ்வளவு பெரியது தெரியுமா? கிட்டத்தட்ட 1370 ஏக்கர் பரப்பளவு (சுமார் 5.5. சதுர கிலோமீட்டர் பரப்பளவு)!  இவ்வளவு பெரிய வளாகத்திற்கான இடத்தினை வாரணாசியை ஆண்ட இராஜ பரம்பரையைச் சேர்ந்த காசி நரேஷ் ப்ரபு நாராயண் சிங் என்பவர் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக தானமாகக் கொடுத்திருக்கிறாராம்.  இதற்கு ஒரு ஸ்வாரஸ்யமான கதையையும் இப்பகுதியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.  பல்கலைக்கழகம் கட்ட இடம் வேண்டும் என்று ப்ரபு நாராயண் சிங் அவர்களிடம் சென்று மால்வியா அவர்கள் கேட்டபோது, அவர் சொன்னாராம் - ”இங்கேயிருந்து நீங்கள் நடந்து செல்லுங்கள்… எத்தனை தூரம் நடக்கிறீர்களோ, அத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தினை நான் தானமாகத் தருகிறேன்!” என்று.  அப்படி மால்வியா அவர்கள் தொடர்ந்து நடந்த தூரம் ஐந்தரை கிலோமீட்டர் என்றும் அதனால் அந்த அளவு பரப்பளவு கொண்ட இந்த இடத்தினை பல்கலைக்கழகம் கட்டுவதற்கு தந்தார் என்றும் சொல்கிறார்கள்.  எவ்வளவு பெரிய மனது!


இந்த வளாகத்தினைத் தவிர வாரணாசி நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிர்சாபூர் மாவட்டத்திலும் 2700 ஏக்கர் (11 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகமும் இருக்கிறது.  பல நாடுகளிலிருந்தும் இங்கே வந்து தங்கி படிக்கும் மாணவர்கள், அவர்களுக்கான வசதிகள் என மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.  அங்கே கூட்டம் கூட்டமாக இருக்கும் மாணவர்களை பார்த்தபோது எனக்கும் அங்கே சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை கூட வந்தது! தற்போதைய சூழல் அதற்கு இடம் கொடுக்காது! சிறு வயதில் இப்படியான பல்கலைக்கழகம் இருக்கிறது என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை என்பதையும் நினைத்து சங்கடப்பட்டதும் உண்மை! சரி சரி பரவாயில்லை, பல்கலைக்கழக வளாகத்தில் படிக்காமலேயே பத்து நாட்கள் இருக்க முடிந்ததே என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.  


வளாகத்தின் உள்ளேயே அனைத்து வசதிகளுமே இருப்பதால் வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை.  ஆனாலும் வெளியேயும் நிறைய உணவகங்கள், கடைகள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது - “லங்கா” என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த இடம்.  அங்கிருந்து காசி விஸ்வநாதர் கோவில் சுமார் நான்கு-ஐந்து கிலோமீட்டர் தொலைவு தான். தொடர்ந்து லங்கா என்கிற இடம் (பல்கலைக்கழக வளாகத்தின் நுழைவு வாயில்) அருகேயிருந்து பேட்டரி ரிக்ஷாக்கள் நிறையவே கிடைக்கின்றன. பத்து ரூபாய் கொடுத்து பயணித்தால் கோயிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இறக்கி விட்டு விடுவார்கள்.  அங்கேயிருந்து பொடி நடையாக நடந்து பல இடங்களையும் பார்த்து வரலாம் என்பதால் எனக்கு அது வசதியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இப்படிச் சுற்றிவந்தது பசுமையான நினைவுகள் - என்றைக்கும் மறக்காத நினைவுகளும் கூட! 


பயணத்தில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.  அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருக்கும் படி வேண்டுகிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

15 ஜூலை 2024


20 கருத்துகள்:

  1. சிறப்பான, மற்றும் நெகிழ வைக்கும், பிரமிக்க வைக்கும் தகவல்கள். எவ்வளவு உயர்ந்த ஆத்மா அவர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நாங்களும் முதன் முறை காசி போன போது பல்கலைக்கழகத்தை பார்த்தோம்.

    பல்கலைக்கழக படங்கல் அனைத்தும் அருமை.

    //பல்கலைக்கழக வளாகத்தில் சாலைகள் ஓரம் முழுவதும் தொடர்ந்து வரிசையாக மாணவர்கள் அகல்விளக்குகள் வைத்து விளக்குகளை ஏற்றி வைத்திருந்ததைப் பார்க்கும் போது அப்படி ஒரு அழகு//

    ஆமாம் அழகு.
    நல்லமனிதர் அவருக்கு இப்படி சிறப்பு செய்வது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் சொன்னதோடு, நீங்களும் அங்கே சென்றது குறித்து பகிர்ந்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. விஜி வெங்கடேஷ்15 ஜூலை, 2024 அன்று 8:50 AM

    அருமையான உயர்ந்த மனிதர். மஹா பெரியவா காசியில் இருந்தபோது இவருக்கு மரியாதை செய்திருக்கிறார். நல்லவேளை நாலந்தா நிலை இந்த university க்கு வரவில்லை.இன்னமும் சனாதனம் இருப்பது இவர்களால் தான்.அழகான அருவி போன்ற விவரக் கோர்வை.சபாஷ் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு
  4. காசிப்பயணத்தின்போது இப்பல்கலைக்கழகம் சென்றேன். ஒரு சிற்றூரைப் போல உள்ள பல்கலைக்கழகம். உங்கள் பதிவு மூலம் அதிக செய்திகளைத் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. தகவல்கள் சிறப்பாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. ஆஹா வெங்கட்ஜி இந்தப் பல்கலைக்கழகத்தையும் பார்க்கும் ஆவலில்தான் நான் வாரணாசிக்குச் செல்ல ரொம்ப ஆசைப்படுவது. மாபெரும் மனிதர் பண்டிட் மால்வியா பற்றியும் பல்கலைக்கழகம் பற்றியும் நான் அறிந்தது பல வருட்ங்களுக்கு முன். நான் கல்லூரி படிக்கும் காலத்திலேயே. அப்போது எனக்கு Public Finance வகுப்பு எடுத்த நாகம்மாள் மிஸ் அவர்களின் மூலம். என்னை ஊக்கப்படுத்தினார் என் மேற்படிப்பை அங்கு படிக்கலாம் என்று என் ஆசையைத் தூண்டினார். அப்போதே எனக்கும் உங்களைப் போன்ற ஆசை எழுந்ததுண்டு. ஆனால் நாகர்கோவில் எல்லையைத் தாண்டியிராத சமயம். இப்ப உங்கள் பதிவு பார்த்து ஒரு புறம் மகிழ்ச்சி மற்றொரு புறம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் கூடுகிறது.

    என் மகனின் நண்பன் மிர்சாப்பூர் கால்நடை பல்கலைக்கழகக் கல்லூரியில் வேலை செய்கிறார். அவரும் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்.

    படங்கள் எல்லாம் அருமையாக இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாரணாசி சென்று வாருங்கள் கீதா ஜி. கோயில் தவிர நிறைய விஷயங்கள் இங்கே பார்க்கவும் ரசிக்கவும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. கடைசி பத்தியை குறித்துக் கொண்டேன், ஜி. நிச்சயமாக அருமையான நினைவுகள் பொக்கிஷமான நினைவுகளாக இருக்கும் உங்களுக்கு.

    எனக்கும் அப்படிச் சுற்றிப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது. குளிர்காலத்தில்தான் செல்ல வேண்டும் என்ற ஆசையும். நிறைய பார்க்க முடியுமே என்பதால்.

    இப்பதிவிற்கு மிக்க நன்றி ஜி. வாராணசி பயணம் பற்றிய உங்க பதிவில் இதை நான் எதிர்பார்க்கவில்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெய்யில் காலத்தில் செல்வதை விட குளிர் காலத்தில் பயணங்கள் செய்வதே நல்லது. அதிக அளவு பனிப்பொழிவு இருக்கும் இடங்களுக்குக் கூட அதனை அனுபவிக்க விருப்பமிருந்தால் செல்லலாம்.

      இந்த வாரணாசி பயணம் நிறைய நினைவுகளைத் தந்தது என்பதில் சந்தேகமில்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பண்டிட் மதன் மோகன் மால்வியா அவர்கள், பற்றியும் //அவரது இடை விடா முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் தான் இன்றைக்கும் மிகச் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா என்ற பெயர் கொண்ட பல்கலைக்கழகம்// பற்றியும் பல தகவல்களை அறிந்து கொண்டோம். மிகவும் அருமையான மாமனிதர். மிக்க நன்றி

    அவருக்கு அந்தப் பல்கலைக்கழகம் கட்ட தேவையான பெரிய இடம் வழங்கிய (அக்கதையும் சுவாரசியம்) ப்ரபு நாராயண் சிங் அவர்களுக்கும் எவ்வளவு பெரிய மனது!

    இப்படி நம் முன்னோர்கள் அப்போதைய மக்களுக்கும் பின் வரும் தலமுறையினருக்கும் உதவும் வகையில் கூடவே மேலை நாட்டவர் வந்து தங்கி படிக்கும் வகையிலும் செய்திருப்பது மிகவும் நெகிச்சியான மகிழ்ச்சியான விஷயம். பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

    இதன் முந்தைய பகுதியும் வாசித்துவிட்டேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி வெளியிட்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. பல அற்புதமான மனிதர்கள் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியும்போது நமக்கு உற்சாகம் வரத்தான் செய்கிறது இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. பல்கலைக்கழகமும் அதன் பிரமாண்டமும் வியக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....