புதன், 31 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள் - பகுதி பதினெட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ஜவ்வரிசி - சமையல் போட்டி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


தொடரின் சென்ற பகுதியில் மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர் குறித்து பகிர்ந்த போது காசி நகரத்தில் பக்தர்கள் ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டையும் தரிசிக்க முடியும் என்று சொல்லியிருந்தேன்.  ஜோதிர்லிங்கங்கள் என்று நம் பாரதத்தில் வழிபடக்கூடிய பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் என்னென்ன என்று முதலில் பார்த்து விடலாம்…



  1. சோமேஸ்வரர், சோம்நாத், சௌராஷ்டிரா, குஜராத்.

  2. மல்லிகார்ஜுனேஸ்வரர், ஸ்ரீசைலம், ஆந்திர பிரதேசம்.

  3. மகாகாலேஷ்வர், உஜ்ஜைன், மத்திய பிரதேசம். 

  4. ஓம்காரேஷ்வர், மத்திய பிரதேசம். 

  5. கேதார்நாத், உத்திராகண்ட்.

  6. பீமாஷங்கர், மஹாராஷ்ட்ரா.

  7. விஷ்வேஷ்வர், வாரணாசி, உத்திர பிரதேசம்.

  8. த்ரயம்பகேஷ்வர், நாசிக், மஹாராஷ்ட்ரா.

  9. பைஜ்யநாத், பார்லி, மஹாராஷ்ட்ரா (அ) பைஜ்யநாத், ஜார்க்கண்ட்

  10. நாகேஷ்வர், ஹிங்கோலி, மஹாராஷ்ட்ரா (அ) நாகேஷ்வர், த்வாரகா, குஜராத்

  11. ராமேஷ்வர், தமிழ்நாடு

  12. Gக்ருஷ்ணேஷ்வர், ஔரங்காபாத், மஹாராஷ்ட்ரா.


ஜ்யோதிர்லிங்கங்கள் எவை என்பதற்கு சமஸ்க்ருதத்தில் ஸ்லோகமும் உண்டு - லகு ஸ்லோகம், ஸம்பூர்ண ஸ்லோகம் என இரண்டு விதமாக இருக்கிறது.  லகு ஸ்லோகம் எளிது! ஸம்பூர்ண ஸ்லோகம் விஸ்தாரமாக இருக்கிறது.  லகு ஸ்லோகம் கீழே! இரண்டையும் படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம்! 


லகு⁴ ஸ்தோத்ரம்


ஸௌராஷ்ட்ரே ஸோமனாத⁴ஞ்ச ஶ்ரீஶைலே மல்லிகார்ஜுனம் ।

உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓங்காரேத்வமாமலேஶ்வரம் ॥

பர்ல்யாம் வைத்³யனாத⁴ஞ்ச டா⁴கின்யாம் பீ⁴ம ஶங்கரம் ।

ஸேதுப³ன்தே⁴து ராமேஶம் நாகே³ஶம் தா³ருகாவனே ॥

வாரணாஶ்யான்து விஶ்வேஶம் த்ரயம்ப³கம் கௌ³தமீதடே ।

ஹிமாலயேது கேதா³ரம் க்⁴ருஷ்ணேஶன்து ஷிவாலயே ॥


ஏதானி ஜ்யோதிர்லிங்கா³னி ஸாயம் ப்ராத: படே²ன்னர: ।

ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ॥


ஒவ்வொருவரும் இந்த பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்க தலங்களுக்கும் சென்று எல்லாம் வல்ல ஈஸ்வரனின் தரிசனம் கண்டு முக்திக்கு வழி வகை செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பதுண்டு.  மேலே உள்ள பட்டியலில் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று வருவது என்பது கொஞ்சம் கடினம் தான். ஒரே பயணத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று வர முடியுமா என்ன? தனித்தனியாக அல்லது மாநிலத்திற்கு ஒரு பயணமாக சென்று அனைத்து தலங்களிலும் இறைவனை தரிசித்து வர வேண்டும். அதற்கு நேரமும் தேவை - பணமும் தேவை.  ஆனால் வாரணாசி நகரில் பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் காசி விஸ்வநாதரை தரிசிக்கும் போதே மற்ற பதினொன்று ஜ்யோதிர் லிங்கங்களையும் வாரணாசி நகரிலேயே தரிசிக்கலாம் என்பது ஒரு தகவல்.  என்னதான் இருந்தாலும் பிரதானமான இடத்திலேயே சென்று தரிசிப்பது தான் சிறப்பு என்றாலும் அப்படிச் செல்ல முடியாதவர்கள் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 


வாரணாசி/காசி நகரில் இருக்கும் ஜ்யோதிர்லிங்க கோவில்கள் எவை, எங்கே இருக்கிறது போன்ற தகவல்களைப் பார்க்கலாம் வாருங்கள். 


  1. சோமேஷ்வர், மன் மந்திர் ஸ்ரீ சோமேஷ்வர ஸ்வாமி மந்திர், மன் மந்திர் Gகாட், வாரணாசி

  2. மல்லிகார்ஜுனேஸ்வரர், சிகரா, வாரணாசி

  3. மகாகாலேஷ்வர், ம்ருத்யஞ்ஜெய மகாதேவ் மந்திர், தாராநகர், வாரணாசி 

  4. ஓம்காரேஷ்வர், ஓம்காரேஷ்வர் மகாதேவ் மந்திர், ஆலம்புரா, வாரணாசி.

  5. கேதார்நாத், ஸ்ரீ கௌரி கேதாரேஷ்வர் மந்திர், கேதார் Gகாட், வாரணாசி

  6. பீமாஷங்கர், காசி கர்வட் மந்திர், கோவிந்த்புரா, வாரணாசி

  7. விஷ்வேஷ்வர், காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி

  8. த்ரயம்பகேஷ்வர், ஸ்ரீ த்ரயம்பகேஷ்வர் மந்திர், ஹர்ஹா, வாரணாசி

  9. பைஜ்யநாதேஷ்வர், பைஜ்நாத் மகாதேவ் மந்திர், கம்ச்சா, பேலுபூர், வாரணாசி.

  10. நாகேஷ்வர், நாகேஷ்வர் மஹாதேவ் மந்திர், கோவிந்த்புரா, வாரணாசி.

  11. ராமேஷ்வர், ராமேஷ்வர் ஜ்யோதிர்லிங்க, லஹோரி தோலா, வாரணாசி.

  12. Gக்ருஷ்ணேஷ்வர், ஸ்ரீ Gக்ருஷ்ணேஷ்வர் மஹாதேவ் மந்திர், கம்ச்சா, பேலுபூர், வாரணாசி.


காசி நகரில் இருக்கும் இந்தக் கோயில்கள் அனைத்துமே பிரதான கோவிலான காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பிரதான சதுக்கமான Gகோடாலியா Chசௌக் பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர் பரப்பிலேயே, சுலபமாகச் சென்று வரக்கூடிய தொலைவுகளிலேயே அமைந்திருக்கிறது.  எனது இந்த வாரணாசி பயணத்தில் மூன்று தலங்களுக்கு மட்டுமே சென்று வர முடிந்த்து.  மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அனைத்து தலங்களுக்கும் சென்று தரிசித்து வரவேண்டும் என்ற ஆவல் உண்டு - எல்லாம் அவன் செயல் - அவன் அழைத்தால் மீண்டும் ஒரு முறை அங்கே சென்று தரிசனம் செய்து வரவேண்டும்.  ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் உள்ள இறைவனை தரிசிப்பதன் மூலம் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்று ஒரு நம்பிக்கை.  பாவங்கள் விலகுவது ஒரு புறம் இருக்க, இத்தனை இடங்களிலும் பக்தி Bபாவத்துடன் சென்று தரிசனம் செய்து வந்தாலே நமக்கு மன அமைதி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


இணையத்தில் காசியில் அமைந்திருக்கும் கோவில்கள் குறித்து தேடியபோது, ஒரு அற்புதமான வலைப்பூவின் சுட்டி கிடைத்தது.  ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்றாலும் பல்வேறு விவரங்களை எழுதி இருக்கிறார்.  காசி குறித்து அவர் எழுதி இருக்கும் பதிவினை நீங்கள் வாசிக்க விரும்பினால் இங்கே சென்று வாசிக்கலாம். பயணத்தில்  தொடர்ந்து கிடைத்த அனுபவங்கள் மற்றும் தகவல்களை வரும் பகுதிகளில் பார்க்கலாம். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

31 ஜூலை 2024


16 கருத்துகள்:

  1. தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. என்னதான் அங்கேயே அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களை தரிசித்து விட்டாலும் அதனதன் ஸ்தலத்தில் தரிசிக்கும் பாக்யம் வரவேண்டுமே என்று மனம் ஏங்கும்.  ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இதாவது தரிசனம் செய்ய முடிந்ததே என்றும் தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கல்யாண்கீதா அவர்களின் 'க்ஷேத்ராடனம்' பக்கம் சென்று பார்த்து லிங்க் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன், அவ்வப்போது  படிக்கலாம் என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல தளம். முடிந்தபோது படிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் பற்றிய விவரமும், ஸ்லோகமும் அருமை.
    //வாரணாசி நகரில் பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் காசி விஸ்வநாதரை தரிசிக்கும் போதே மற்ற பதினொன்று ஜ்யோதிர் லிங்கங்களையும் வாரணாசி நகரிலேயே தரிசிக்கலாம் என்பது ஒரு தகவல்.//


    நல்ல தகவல், வாய்ப்பும் வசதியும் இருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் போய் தரிசிக்கலாம். இல்லையென்றால் இப்படி ஒரே ஊரில் தரிசனம் செய்து மனநிறைவு அடையலாம்.

    5 ஜ்யோதிர்லிங்கங்களை தரிசனம் செய்து இருக்கிறோம். மீதியை பாடலை பாடி படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. ஜோதிர்லிங்க விவரங்கள் அறிந்து கொண்டேன் வெங்கட்ஜி அருமையான தகவல்கள்.

    கல்யாண்கீதா அவர்களின் தளத்தையும் பார்த்துக் கொண்டேன், ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. தங்களது விரிவான தகவல்கள் பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. பயண குறிப்புகளும் அனுபவ பகிர்வும் அருமை. சமீபத்தில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் பயணித்த அனுபவத்தை நினைவுபடுத்தியது தங்களின் இந்த ஆன்மீக ஸ்தல பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  8. பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனங்கள் கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....