வியாழன், 1 ஆகஸ்ட், 2024

கதம்பம் - கத்தி மாதிரி மூக்கு - மனது - இற்றைகள் - திரைப்படங்கள் - கேரக்டர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


கத்தி மாதிரி மூக்கு - 12 ஜூலை 2024:



இங்க சரியா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க!


ஐயா! இன்னும் கொஞ்சம் மேல இருக்கலாம்னு தோணுது! என்னோடதப் பாருங்களேன்!


அம்மாடி! நீ நல்ல நீளமா ஷார்ப்பா க*த்*தி மாதிரி மூக்கு வெச்சிருக்க...🙂  மேல போட்டிருக்க..:)) (என்னவர் தான்  'ரன்வே மூக்கு' என்று எப்போதும் சொல்வார் என்றால்....:)) இங்கு!! என் நேரம்...:)) அசடு வழிந்தேன்!)


இங்கப் பாரு பாப்பாவுக்கு இருக்கறது இத்துனூன்டு மூக்கு! எப்படி இதில இன்னும் மேல போடறது! 


சரிங்க! நீங்க புள்ளி வெச்ச இடத்திலயே குத்திக்கலாம்!


கீச் கீச் என்று காலணியால் சப்தம் உண்டாக்கிக் கொண்டு அங்கு வலம் கொண்டிருந்த குழந்தை ஒன்றைக் கண்டதும் 'இங்கேர்ந்து ஓடிடு! எங்கம்மா உனக்கும் காது குத்தி விட்டுடுவா! என்று அதுவரை என்னை கலாட்டா செய்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்த மகள் பாவம் வலியில் துடித்துப் போய்விட்டாள்!


அவளுக்கு முன்பு தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கும் மூக்கு குத்தப்பட்டது! இப்போதைய ட்ரெண்டிங்காம்! குச்சி போன்று ஒரு மூக்குத்தி போட்டுக் கொண்டாள்! 


மகளை சமாதானம் செய்து அழைத்து வந்தேன். அவளுடன் அந்த நேரத்தில் உடனிருக்கும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்! 


எங்கிட்ட ஏன் பேச மாட்டேன்னு சொல்றடா செல்லம்! அப்பாகிட்ட உனக்கு என்ன கோபம்! அம்மா தான உன்ன கூட்டிண்டு போய் இப்படி பண்ணினா!!


நல்லா இருக்கில்ல....:))


*******


மனது - 20 ஜூலை 2024:


இதற்குள் தான் எத்தனை எண்ணங்களும்! போராட்டங்களும்! தயக்கங்களும்! ஒவ்வொரு செயலுக்குப் பின்னேயும் எத்தனை எத்தனை காட்சிகளை திரைப்படம் போல ஓட்டிப் பார்க்கிறது! நினைத்த போதினில் எங்கேயோ எப்போதோ நிகழ்ந்த காட்சிகள் எல்லாம் நம் கண்முன்னே! ஆனால்! அவற்றை எல்லாம் மறக்க நினைத்தால் முடிகிறதா!!!?? ம்ம்ம்ஹூம்!!


*******


இற்றைகள் - 20 ஜூலை 2024:


வாரநாட்களில் தொடர்ந்து வகுப்புகளும், டெஸ்ட்டுகளும், ஹோம்வொர்க் எனச் செல்வதும், வார இறுதிக்களில் வீட்டை சுத்தப்படுத்துவதும், அரைக்க வேண்டிய மாவு, பொடிவகைகள் என செய்து கொள்வதும், புடவைக்கு ஓரமடித்தல், மகளின் உடையை ஆல்ட்டர் செய்தல் என தைக்க வேண்டியவைகளை செய்வதும் எனச் செல்கிறது!


பள்ளி கல்லூரி நாட்களில் பரீட்சையில் எடுத்திருக்கும் மார்க்கை பற்றி உற்சாகத்துடன் அப்பாவிடம் ஓடி வந்து சொல்வேன்! ஓ! அப்படியா! என்றில்லாமல் அப்பாவும் அதை மனதார பாராட்டி வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்! அப்படியொரு அப்பா எனக்கு கிடைத்தது வரம்! வருடங்கள் பல ஆனாலும் தான் என்ன! வகுப்பில் மகள் முழு மதிப்பெண்களை எடுத்துக் கொண்டிருக்கும் இப்போதும் அப்பா இருந்திருந்தால் அப்படித்தான் இருப்பார் என நினைத்துக் கொண்டேன்!


*******


திரைப்படங்கள் - 20 ஜூலை 2024:


சில நாட்களாக மதிய நேரத்தில் 80களில் 90களில் வெளிவந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பார்த்து வருகிறேன். பொதுவாக படம் பார்க்கும் பழக்கம் என்பது பெரிதாக என்னிடம் இல்லையென்றாலும் இப்போது என்னமோ அப்படி ஒரு எண்ணம் உருவாகியிருக்கிறது! வாசிப்பை வகுப்போடு முடித்துக் கொண்டு விடுகிறேன்…:)


கதையும், கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் பார்ப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்! ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அப்போதைய நம் எண்ணங்களும் மாறுபடும்! இதனால் தான் காட்சியை இப்படி அமைத்திருப்பார்களோ! என்று நம்மை சிந்திக்க வைக்கும்!


*******


கேரக்டர் - 20 ஜூலை 2024:


கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ! இங்கு வந்ததாரோ!


பாஞ்சாலி! பாஞ்சாலி!

பரஞ்சோதி! பரஞ்சோதி!


வார இறுதிக்களில் சூரியன் FM 93.5ல் Retro weekend கேட்பது வழக்கம்! மகளுக்கு இன்று கல்லூரி உண்டு என்பதால் சமைத்துக் கொண்டே இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன்!


பரஞ்சோதி! பரஞ்சோதின்னு ஷூக: (கிளி) சொல்றதுடா கண்ணு! இந்த படத்தில ஹீரோவோட பேர்! நான் நேத்து பார்த்தேன்னு சொன்னேனே கல்கி! பாலச்சந்தர் சார் படம்! அதில வர்ற ஹீரோ ரகுமான் பேர் கூட பரஞ்சோதி தான்! என்று மகளிடம் சொன்னதும்….!


அம்மா! நான் கொஞ்ச நாள் முன்னாடி படிச்சேனே சிவகாமியின்  சபதம்! அதுல வர்ற முக்கியமான கேரக்டர் பேர் பரஞ்சோதி தான்! எனக்கு அதான் ஞாபகம் வர்றது! என்றாள்!


ஆமாண்டா கண்ணு! படத்துல அந்த ஹீரோயின் ஹீரோ கிட்ட உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு! அமரர் கல்கி எழுதின கதைல வர்ற கதாப்பாத்திரம்! அப்படின்னு சொல்லுவாங்க.


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. காது குத்தும் சில குழந்தைகளின் ரீல்ஸ் சில பார்த்து ரசித்திருக்கிறேன்.  சட்டென மாறும் அந்தக் குழந்தைகளின் முகபாவங்கள்...  உங்கள் மகளுக்கு இப்போது மூக்கு குத்தினீர்களா?  பாவம், வலித்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். குழந்தைகளின் முகபாவங்கள் மாறுவது அழகாக இருக்கும்.

      அவளுக்கு மூக்கு குத்திய அனுபவத்தை பற்றி தான் எழுதியிருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. முழு மதிப்பெண்களா?  எனக்கு அல்லது என் அப்பாவுக்கு அந்த பாக்கியம் கிடைத்ததேயில்லை அல்லது நான் கிடைக்கச் செய்ததே இல்லை!  ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. எனக்கும் பள்ளியில் முழு மதிப்பெண்கள் தந்தது இல்லை. இரண்டு மார்க்காவது குறைத்து விடுவார்கள்..:) இப்போது ஆன்லைன் வகுப்பில் தான் வாங்கி விடுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. பழைய திரைப்படங்கள் நானும் அவ்வப்போது ஓட்டி ஓட்டியாவது பார்க்கிறேன்!  பரஞ்சோதி பெயர் உரையாடல் சுவாரஸ்யம்.  இளையராஜாவின் மிக இனிமையான பாடல்களில் ஒன்று அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். இனிமையான பாடல்! பூவரசம்பூ பூத்தாச்சு பாடலும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. இன்றைய கதம்பம் வழக்கம் போல சுவாரஸ்யமாக இருந்தது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. மூக்கு குத்தும் வைபவம் இனிதே நடந்தேறியதா! ஆமாம் வலித்திருக்கும் அதுவும் வயதான பிறகாச்சே. எனக்கும் கல்லூரி முடிக்கும் தருணத்தில்தான் குத்தினாங்க புண் வந்து கொஞ்ச நாள் தேங்காய் எண்ணை போட்டு போட்டு ஆறியது. குத்தியதும் உப்பு தண்ணீர் விட்டார் அந்த ஆசாரி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய பெண்ணாக வளர்ந்த பிறகு குத்தினால் வலிக்கும் தான். எனக்கு 10ல் முதல் முறையும், 15ல் இரண்டாவது முறையும்..:) குத்திய பிறகு இரண்டு நாட்களுக்கு தீரண எண்ணெய் தான் வைத்து விட்டேன். மூலிகைகள் அதில் இருப்பதால் புண்கள் ஏற்படாது! எரிச்சலும் இருக்காது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. ஆஹா முழு மதிப்பெண்!!!!!!! எனக்கெல்லாம் சுத்தமா கிடைத்தது இல்லை. பாஸானாலே பெரிய விஷயம். அதுவும் அறிவியல் கணக்கு இரண்டிலும்.

    வேறு பல விஷயங்களில் பேச்சுப்போட்டி, கட்டுரை என்று மாவட்ட அளவில் கிடைத்திருந்தாலும் நம் வீட்டில் அதெல்லாம் கேட்டுக் கொள்ளக் கூட மாட்டாங்க கூட்டுக் குடும்பம் படிப்பு ஒன்றுதான் முக்கியம்னு...இருந்த காலம். மார்க் வாங்கியிருந்தாலும் மெச்சுதல் என்பதெல்லாம் என் பெற்றோரிடம் எதிர்பார்த்திருந்திருக்க முடியாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டு குடும்ப வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் பாராட்டெல்லாம் கிடைக்காது! பள்ளியில் எனக்கும் முழு மதிப்பெண்கள் தந்ததில்லை! ஆன்லைன் வகுப்பில் தான் வாங்குகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. அழகான பாடல் அது....கோவில்மணி ஓசை தன்னை....

    உங்க இருவரின் உரையாடலை ரசித்தேன் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். மிகவும் இனிமையான பாடல்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. மனதைப் பற்றி சொல்லிய வரிகள் அருமையாக இருக்கிறது. கவிதையாக்கி இருக்கலாம். ஸ்ரீராம் அதைப் பார்த்திருப்பார் ஒரு வேளை அது வியாழன் பகுதியில் கவிதையாகக் கூட வரலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையாக எழுதும் அளவு நேரம் இருப்பதில்லை. அப்போது மனதில் என்ன தோன்றியதோ அதை தான் எழுதியிருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  9. பரஞ்சோதி பற்றிய பேச்சுகள் அருமை.

    திடீரென்று மகள் குத்திக் கொண்டாள், ஏதோ ஃபேஷன் போலும் கல்லூரியில் சேர்ந்த போது. அதைப் பார்த்து மனைவியும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகளும் மனைவியும் குத்தி கொண்டது அருமை.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  10. இதில் மூக்குகுத்திக் கொளும் வைபவம் பற்றி முகநூலில் படித்த நினைவு. சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிஜி!

      நீக்கு
  11. மூக்குத்தி படங்கள் அழகாக இருக்கின்றன.

    மகளின் மூக்குத்தியையும் படம் எடுத்து போட்டிருக்கலாம்.
    டாக்டரிடம் சென்று விறைக்கவைத்து குத்தி இருக்கலாம் வலிதெரியாமல் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....