புதன், 14 ஆகஸ்ட், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம் - விருந்தினர்களுடன் ஒரு பயணம் - பகுதி இருபத்தி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்


ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்


பஞ்ச்க்ரோஷி யாத்ரா


சாரநாத் - சில தகவல்கள்


இந்தப் பயணத்தில் வாரணாசியில் நடந்த இரண்டாவது காசி தமிழ் சங்கமம் குறித்தும் அங்கே குழுக்களாக வந்திருந்த தமிழக பயணிகளைச் சந்தித்தது குறித்தும் முன்னர் எழுதி இருந்தேன்.  அப்படி வந்த ஒரு குழுவினருடன் அவர்கள் செல்லும் பேருந்திலேயே ப்ரயாக்ராஜ் மற்றும் அயோத்யா ஜி செல்லும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.  வாரணாசியிலிருந்து ஒரு அதிகாலை புறப்பட்டு நேரடியாக ப்ரயாக்ராஜ். அங்கிருந்து புறப்பட்டு அயோத்யா ஜி சென்று இரவு நேர தங்குதல். அடுத்த நாள் காலை அயோத்யா ஜியில் ராம் லல்லாவின் தரிசனம். பிறகு அங்கிருந்து புறப்பட்டு வாரணாசி இரண்டாம் நாள் இரவு திரும்புதல் என கொஞ்சம் பரபரப்பான பயணம். ஆனால் இந்த பரபரப்பான பயணமும் நிறையவே ஸ்வாரஸ்யமாக இருந்தது - தமிழகத்திலிருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று அவர்களோடு சில இடங்களை பார்த்ததோடு, எனக்குத் தெரிந்த பல விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. மொத்தம் ஐந்து பேருந்துகளில் அனைவரும் ஒரு குழுவாக பயணித்தோம். அப்படி ஒரு பேருந்தில் என்னுடன் பயணித்த, என்னிடமிருந்து பல தகவல்களைப் பெற்ற தமிழ் மக்களுக்கும் என் உடனனான பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். எப்படி இருந்தது அந்தப் பயணம் - பார்க்கலாம் வாருங்கள். 



படம்: இணையத்திலிருந்து...

வாரணாசி நகரில் இருந்த ஒரு நாள் மாலை, காசி தமிழ் சங்கமத்தினை இந்திய அரசு நடத்துவதில் பிரதான பங்களித்த நண்பர், என்னிடம் நாளை சங்கமத்தின் பகுதியாக வந்திருந்த பயணிகளுடன் நீயும் சென்று வா என்று சொல்லி விட்டார்.  அடுத்த நாள் அதிகாலையில் காசி தமிழ் சங்கமத்தின் விருந்தினர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அங்கிருந்து காத்திருக்கும் பேருந்து ஒன்றில் புறப்பட வேண்டும்.  அதிகாலையிலேயே குளித்து, வண்டி பிடித்து புறப்பட்டு விட்டேன்.  அதிகாலை நேரம் - குளிர்காலம் என்பதால் அதீத அளவில் பனிமூட்டமும் குளிரும் இருந்தது.  தகுந்த உடைகள் இருந்ததால் கவலையின்றி வாகனத்தில் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று சேர்ந்து விட்டேன். எனக்கென்று ஒரு பேருந்தில் முன் இரண்டு இருக்கைகளில் ஒன்றை ஒதுக்கி இருந்தார்கள்.  உடன் சுமார் 40 பயணிகள், வழி நடத்தும் நபர்கள் (IRCTC நபர்கள்) என அனைவரும் அவரவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொள்ள, மற்ற பேருந்துகளிலும் அனைவரும் ஏறிக் கொள்ள பேருந்துகள் புறப்பட்டன.  


ஐந்து பேருந்துகள் ஒன்றாக செல்லும்படியான ஏற்பாடு - அனைத்து பேருந்துகளுக்கும் முன்னதாக ஒரு Pilot ஜீப் - துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் அந்த வண்டி மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் - வாரணாசியிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு காவல்நிலைய எல்லை வரை ஒரு வண்டி, அடுத்த காவல் நிலைய எல்லையைத் தொட்டவுடன் அடுத்த வண்டியில் இருக்கும் காவலர்கள் முன்னே செல்ல எங்கள் வண்டிகள் பின் தொடரும்.  உள்ளே இருக்கும் பயணிகளுக்கு இது குறித்து தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது.  தமிழ் சங்கமத்திற்காக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் பயணிகளுக்கு எந்த வித தொல்லையும் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.  அதனால் வழியில் எந்தவித தடங்கல்களும் இன்றி சீரான வேகத்தில் ஐந்து வண்டிகளும் ப்ரயாக்ராஜ் நோக்கி பயணித்தன.  மற்ற வண்டிகளில் இருந்தவர்கள் எப்படியோ, எங்கள் வண்டியில் இருந்த பயணிகளில் சேலத்தினைச் சேர்ந்த ஒரு நபர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு வந்தார்.  தில்லியில் இருப்பதால் வடக்கில் உள்ள நிறைய இடங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்து இருக்கும். அவற்றை எல்லாம் சொல்லுங்கள் என்று ஆர்வமாகக் கேட்டார். 



படம்: இணையத்திலிருந்து...

ஹரித்வார், ரிஷிகேஷ், அயோத்யா, ப்ரயாக்ராஜ் அனுபவங்கள் என பேசிக் கொண்டு வந்தோம். ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு எங்கள் வாகனத்தில் இருந்த மைக் துணையுடன் அவர் சக பயணிகளிடம் பேச ஆரம்பித்தார்.  என்னைப் பற்றிய சிறு அறிமுகம் தந்து என்னை எனது பயண அனுபவங்கள் குறித்து பேச அழைத்தார்.  வாரணாசி - ப்ரயாக்ராஜ் - அயோத்யா ஜி - வாரணாசி எனத் தொடர்ந்த இந்த இரண்டு நாள் பயணத்தில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த சமயங்களில் எல்லாம் விட்டு விட்டு நிறைய தகவல்களை சக பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு அமைந்தது. அனைவருக்குமே மிகவும் பிடித்திருந்தது எனது அனுபவங்கள். அப்படியே கொஞ்சம் எனது வலைப்பூ குறித்தும், அதில் இருக்கும் பயணக் கட்டுரைகள் குறித்தும் சுயதம்பட்டமும் அடித்துக் கொண்டேன் - “தேவையா உனக்கு?” என்று மனதில் சுய எள்ளல் அவ்வப்போது தோன்றினாலும் ஏனோ இந்த அறிமுகமும் தேவையாகவே இருந்தது. நான் நிறுத்தினாலும் நம் ஊரிலிருந்து வந்த பயணிகள், இந்தப் பகுதிகளுக்கெல்லாம் எங்களால் வர இயலாது என்பதால் எனது வழி பல அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றும் சொன்னார்கள் (ஏத்தி விடாதீங்கப்பா! என்று யாரேனும் சொல்லி இருக்கலாம்!) 


பயணம் முழுவதிலும் நிறைய தகவல்களை - இந்தியா முழுவதிலும் நான் பயணித்த இடங்கள், அங்கே பார்த்த பிரமிக்க வைக்கும் விஷயங்கள், சந்தித்த பலதரப்பட்ட மனிதர்கள், இராணுவ வீரர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை, பல இடங்களில் கிடைக்கும் உணவு வகைகள், ஹிந்தி போன்ற அன்னிய மொழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம், போன்ற பல தகவல்களை பரிமாற்றம் செய்தேன். சக பயணிகளில் சிலரும் எனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து பேசினார்கள். பலர் என்னுடைய தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டார்கள். வண்டி நிற்கும் இடங்களில் என்னுடன் படங்களும் எடுத்துக் கொண்டார்கள்! அவர்களைப் பொறுத்தவரை நான் ஏதோ பெரிய ஆள்! நமக்கு நம்மைப் பற்றிய உண்மை தெரியுமே! இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சிக்காக படங்கள் எடுத்துக் கொண்டேன் (கொஞ்சம் தன்னடக்கம் தான்!) அவர்களில் சிலர் இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் இங்கே சொல்ல வேண்டிய தகவல்.  



படம்: இணையத்திலிருந்து...

சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ஐந்து பேருந்துகளும் ப்ரயாக்ராஜ்  நகரை அடைந்து நேரடியாக திரிவேணி சங்கமத்தின் அருகே உள்ள மணற்பரப்பில் அமைந்திருந்த கூடாரத்திற்குச் சென்று சேர்ந்தது.  அங்கே காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க வந்திருந்த அனைத்து தமிழக பயணிகளுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் மாலை மரியாதைகள் செய்யப்பட்டு, அங்கே வந்ததன் நினைவுப் பரிசாக கேடயங்களும் வழங்கப்பட்டன.  சில கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. அதன் பிறகு விசைப்படகுகள் மூலம் அனைவரும் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.  நானும் உடன் சென்றிருந்தேன்.  அங்கே அனைவரும் சங்கமம் பகுதியில் குளித்த பிறகு கரைக்கு திரும்பவும் அதே விசைப் படகுகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சிறப்பான ஏற்பாடுகள் இருந்ததால் எந்தவித இடைஞ்சல்களும் இன்றி திரிவேணி சங்கமத்தில் திவ்யமான குளியல். Bபடே ஹனுமான் தரிசனமும் கிடைத்தது. பயணத்தினை ஏற்பாடு செய்திருந்த IRCTC குழுவினர் சிறப்பான மதிய உணவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை சுவைத்த பிறகு அயோத்யா ஜி நோக்கி பேருந்துகள் மீண்டும் புறப்பட்டன.  


அயோத்யாஜியில் பார்த்த இடங்கள், அங்கே கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

14 ஆகஸ்ட் 2024


14 கருத்துகள்:

  1. பயண அனுபவங்களில் உங்களை அடித்துக் கொள்ள வெகு சிலரே உண்டு.    உங்கள் அனுபவங்கள் அவர்களுக்கும் பயன்பட்டதிலும், நீங்கள் புதிய அவதாரம் எடுத்ததிலும் மகிழ்ச்சி.  தொடரட்டும் இது.  உங்கள் வலைப்பூ பற்றி சொன்னதிலும் தவறில்லை.  உங்கள் அனுபவங்கள் அவர்களுக்கு பயன்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண அனுபவங்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் நல்லதே. வலைப்பூ பற்றி சொன்னதிலும் தவறில்லை - நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. அப்படி ஒரு பேருந்தில் என்னுடன் பயணித்த, என்னிடமிருந்து பல தகவல்களைப் பெற்ற தமிழ் மக்களுக்கும் என் உடனனான பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.//

    பயணம் எத்தனை நட்புகளைப் பெற்றுத் தருகிறது! உங்களுக்கு இருக்கும் பயண அனுபவங்கள் கண்டிப்பாக அவங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அந்த அளவு அனுபவங்கள் உங்களுக்கு உண்டே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் பல நட்புகளைப் பெற்றுத் தருகிறது - உண்மை கீதா ஜி. சில தொடர்கின்றன. சில விட்டுப் போகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. ஒரு Pilot ஜீப் - துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் அந்த வண்டி//

    அட! அரசு பாதுகாப்புடன் பயணம். இந்தச் சங்கமம் அரசின் ஏற்பாடு என்பதால் இல்லையா? நல்ல ஏற்பாடு என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஏற்பாடுகள் இருந்தன கீதா ஜி. இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. இந்த இரண்டு நாள் பயணத்தில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த சமயங்களில் எல்லாம் விட்டு விட்டு நிறைய தகவல்களை சக பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு அமைந்தது. //

    நல்ல விஷயம் ஜி. இதுவும் சிறப்பான அனுபவம்.

    //அனைவருக்குமே மிகவும் பிடித்திருந்தது எனது அனுபவங்கள். அப்படியே கொஞ்சம் எனது வலைப்பூ குறித்தும், அதில் இருக்கும் பயணக் கட்டுரைகள் குறித்தும் சுயதம்பட்டமும் அடித்துக் கொண்டேன் - “தேவையா உனக்கு?” என்று மனதில் சுய எள்ளல் அவ்வப்போது தோன்றினாலும் ஏனோ இந்த அறிமுகமும் தேவையாகவே இருந்தது.//

    நிச்சயமாக சுயதம்பட்டம் இல்லை ஜி வலைப்பூ பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

    நீங்கள் பயணித்த பல ஊர்களைப் பற்றிச் சொன்னது எல்லாமே மிகவும் தேவை. இதுவும் ஒரு சுற்றுலா பற்றியும் மற்றும் நம் நாட்டில் என்னென்ன மகத்துவமான இடங்கள் இருக்கின்றன என்று பலருக்கும் தெரியவரும். நல்ல ஒரு அறிமுகம் ஜி இது. நம் நாட்டில் சுற்றுலாத் துறை வளர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டில் சுற்றுலாத் துறை நிறையவே வளர வேண்டும் - இதில் எனக்கும் உடன்பாடு உண்டு. மாற வேண்டும் என்பதோடு வளர வேண்டும் என்றும் சொல்லலாம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. மிகச் சிறப்பான பயண ஏற்பாடாகத் தெரிகிறது. IRCTC வாழ்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. IRCTC ஏற்பாடுகள் சிறப்பானதாகவே இருந்தது கீதா ஜி. நான் அங்கே இருந்த நாட்களில் நிறையவே இது குறித்து பார்க்க முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பயண அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் வெங்கட்! எப்போதுமே ரயில், பஸ் பயணங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை தான்!
    [ விமானப்பயணங்களைத்தவிர!]
    எந்த நாட்டிலுமல்லாத பல தரப்பட்ட அருமையான சுற்றுலா தளங்கள் நம் நாட்டில் மட்டுமே உண்டு. ஆனால் மற்ற நாடுகள் அவர்களது நாட்டு சுற்றுலாத்துறைக்கு அளித்திருக்கும் முக்கியத்துவம் நம் நாட்டில் நம் அரசாங்கத்துக்கு கிடையாது!!
    நான் எப்போதுமே வருந்தும் விஷயம் இது!
    //Pilot ஜீப் - துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் அந்த வண்டி மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் //
    இந்த மாதிரி மாறி மாறி காவல் துறை கண்காணிப்பது ஆங்கில நாவல்களில் மட்டுமே படித்திருக்கிறேன். அதனால் இந்த விஷயம் எனக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      நீக்கு
  7. உங்கள் பயண அனுபவங்கள், மற்றும் உங்கள் வலைப்பூ பற்றி சொன்னது நல்லது தான். பிறருக்கு உதவும்.
    இப்போதும் சிலர் உங்கள் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி. பயணம் செய்ய சரியான காலம், பயணம் செய்யும் போது போக வேண்டிய இடங்களில் கிடைக்கும் உணவுகள், பாதுகாப்பு விஷயங்கள் என்ற உங்கள் அனுபவங்கள் அவர்களுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை தெரிவித்தமைக்கு நன்றி கோமதிம்மா. சிலருக்கேனும் எனது பயண அனுபவங்கள் பயனுடையதாக அமைந்தால் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....