வியாழன், 8 ஆகஸ்ட், 2024

சாப்பிட வாங்க - டிக்கு என்றொரு Vlogger - டிக்கு சொன்ன டிக்கி!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட பஞ்ச்க்ரோஷி யாத்ரா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாப்பிட வாங்க வரிசையில் ஒரு பதிவு! சமீபத்தில் எனது சாப்பிட வாங்க பதிவுகள் வரிசையில் எந்தப் பதிவும் எழுதவில்லை.  இன்றைக்கு எழுதப் போவது கூட நான் சமைத்தது குறித்த பதிவு அல்ல! ஆனால் வெளியே சாப்பிட்ட உணவு குறித்து தான்.  தலைநகர் தில்லியில் ஒவ்வொரு இடத்திலும் சில பழமையான கடைகள் உண்டு - அவற்றைத் தேடித் தேடிச் சென்று அங்கே உணவு உண்ணும் ஆட்களும் உண்டு.  ஒரு சிலர் இந்த இடங்களுக்குச் சென்று ரீல்களும், காணொளிகளும் செய்து தங்களது முகநூல்/இன்ஸ்டா பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் எல்லா கடைகளிலும் உணவு நன்றாக இருக்கும் என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. அவருக்குப் பிடித்திருக்கலாம் அல்லது கடைக்காரர்கள் இவர்களது புகழ் காரணமாக இவர்களை அழைத்து கடை பற்றி இவர்களது தளங்களில் வெளியிடச் சொல்லி இருக்கலாம் - வியாபாரத்தில் இப்படியெல்லாம் நடப்பது சகஜம் தானே.  அதனால் Food Vlogger-கள் சொல்லும் அனைத்து கடைகளுக்கும் சென்று அவர்கள் சொல்லும் உணவு வகைகளை ருசித்துப் பார்ப்பது என்று புறப்பட்டுவிட்டால் நம் உடலுக்குத் தான் கேடு உண்டாகும்! கூடவே பணமும் செலவாகும். 






பொதுவாக நான் வெளியில் சென்று உணவு உண்பது அரிது தான். எப்போதேனும் சமையல் செய்வதற்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டால் வெளியில் சென்று சாப்பிடுவது வழக்கம்.  இப்போதெல்லாம் தீவிரமாக Diet-இல் இருப்பவர்கள் கூட cheat day என்று ஒன்றை வைத்துக் கொண்டு விரும்பியதை சாப்பிடுவது வழக்கம் தானே.  அப்படி ஒரு cheat day சமீபத்தில் எனக்கும் வாய்த்தது - இல்லை இல்லை வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டேன்.  ஞாயிறு ஒன்றில் காலை ஆறு மணிக்கு எழுந்தவன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு அலைபேசியை நோண்டியபடி இருந்தவன் மீண்டும் உறங்கி விட்டேன். எழுந்த போது (அதுவும் மனைவியின் அழைப்பு வந்து தான் எழுந்தேன்) மணி 10.30. அதற்குப் பிறகு, குளியல், தோய்க்கும் வேலைகள் முடிந்து, சமைப்பது கடினம் என்று தோன்றியதால் புறப்பட்டு விட்டேன். வெளியே செல்லலாம் என்று நினைத்தவுடன் சமீபத்தில் பார்த்த ஒரு Influencer Vlogger ஆன டிக்கு அவர்களின் காணொளி ஒன்றில் பார்த்த இடங்கள் நினைவுக்கு வந்தன.  தில்லியைச் சேர்ந்த சர்தார்ஜியான Gகுர்ப்ரீத் சிங் டிக்கு என்பவர் மிஸ்டர் டிக்கு என்ற பெயரில் இன்ஸ்டா, ரீல்ஸ், முகநூல் என அனைத்திலும் பிரபலமாக இருக்கிறார்.  உணவு மீது அவருக்கு அலாதியான காதல் இருக்கிறது என்பதை அவரது காணொளிகளில் காணலாம்!



தில்லியின் கரோல் Bபாக்g பகுதியில் இருக்கும் சில உணவகங்கள் குறித்து அவரது காணொளி ஒன்றில் பார்த்திருந்தேன். வீட்டிலிருந்து 10 நிமிட பயணத்தில் கரோல் Bபாக்g இருக்கிறது என்பதால் புறப்பட்டு விட்டேன்.  முதலில் சென்றது Sindhi Corner எனும் ஒரு கடை.  அங்கே கிடைக்கும் ஆலூ டிக்கி (இதய வடிவில்!) மற்றும் அதற்கான சட்னி குறித்து மிகவும் ஸ்லாகித்துச் சொல்லி இருந்தார் டிக்கு! சரி என முதலில் அங்கே சென்று விட்டேன்.  இரண்டு இதய வடிவ ஆலூ டிக்கி இருக்கும் ஒரு ப்ளேட் 90 ரூபாய்!  தொகையைச் செலுத்திவிட்டு அதற்கான வட்ட வடிவ டோக்கனை கொடுத்தபோது அங்கே இருந்த உழைப்பாளிகளை பார்த்தேன்.  தொடர்ந்து சூடான இடத்தில் வேலை செய்வதால் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தார்கள் - பனியனுடன் இருந்தவர்களை பார்த்ததும் கொஞ்சம் தயக்கம் வந்தது உண்மை. தொடர்ந்து வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து இதயவடிவ தகர அச்சு கொண்டு அழகழகாய் டிக்கி உருவாகிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.  அவற்றை ஒவ்வொன்றாக சூடான எண்ணையில் பொரித்து, சட்பட்டா சட்னியுடன் ஒரு ப்ளேட்டில் வைத்து தருகிறார்கள்.  மொறுமொறுவென்று, ஆவி பறக்கும் சூட்டில் நம் கைக்குக் கிடைக்கும் டிக்கி நம் நாக்கின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  அதுவும் அந்த சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது நன்றாகவே இருக்கிறது.  இந்தக் கடையில் கிடைக்கும் லஸ்ஸி மற்றும் குலாப் ஜாமூன் போன்றவையும் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் என்றும் தெரிந்தது. 


சிந்தி கார்னர் எனும் இந்தக் கடை மிகவும் பழமையானது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில் பாகிஸ்தானிலிருந்து வந்த சிந்த் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் ஆரம்பித்த உணவகம் இது. சிறிய அளவில் தான் இன்றைக்கும் இருக்கிறது என்றாலும் இந்தப் பகுதிகளில் மிகவும் பிரபலமான கடையாகவே இருக்கிறது.  நான் சென்றபோது ஒரு சிலர் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றாலும் பார்சல் வாங்கிச் செல்ல நிறைய பேர் காத்திருந்தார்கள் - ஸ்விக்கி போன்ற செயலிகள் மூலம் வீட்டிலிருந்தபடியே வாங்கி சுவைப்பது தானே இப்போதெல்லாம் அதிகம்.  அதே பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த திரு ஓம் ஷர்மா என்பவரின் கடை தான் நான் அடுத்ததாகச் சென்ற இடம். அதுவும் இந்த சிந்தி கார்னர் கடையிலிருந்து சில மீட்டர் தொலைவு நடந்தால் வந்து விடும்.  ஓம் Bபட்டூரே வாலா என்கிற கடை தான் அது. இந்த பெயர் மிகவும் பிரபலம் என்பதால் இதே பெயரில் கொஞ்சம் மாற்றம் செய்து ஓம் கார்னர் என்ற பெயரிலும் ஒரு கடை வெகு அருகில் இருக்கிறது. என்றாலும் பழமையான கடை இன்றைக்கும் ஓம் Bபட்டூரே வாலா என்ற பெயரிலேயே இயங்குகிறது. 



இந்தக் கடைக்குச் சென்று ஒரு ப்ளேட் Bபட்டூரே (இதுவும் 90 ரூபாய் தான்) வாங்கிச் சுவைத்தேன்.  கடுகு எண்ணெயில் பொரித்த Bபட்டூரே, தொட்டுக்கொள்ள கருப்பு chசன்னா (கொண்டக்கடலை), வெங்காயம் (பச்சையாக), மேலே கொஞ்சம் புதினா/கொத்தமல்லி சட்னி மற்றும் மிக்ஸ் வெஜ் ஊறுகாய். நன்கு உப்பி இருக்கும் Bபட்டூரே-வை நடுவில் கை வைத்து ஓட்டை போட்டால் உள்ளிருந்து வரும் ஆவியுடன் பனீர் மற்றும் Bபட்டூரேவின் வாசம் நாசியைத் துளைத்து வா, வா என்று வரவேற்கிறது.  Bபட்டூரே ஒரு பீஸ் எடுத்து சன்னாவில் தொட்டு, கூடவே இரண்டு வெங்காயம், கொஞ்சம் ஊறுகாய் என வைத்து உள்ளே தள்ளினால் நன்றாகத் தான் இருக்கிறது!  பொதுவாகவே இந்த Bபட்டூரே சாப்பிட்டால் வயிறு பொம்மென்று ஆகிவிடும்.  சில இடங்களில் இவற்றைச் சாப்பிட்டால் நெஞ்சு கரிப்பதும் உண்டு.  நல்ல வேளையாக இந்த இடத்தில் சாப்பிட்ட அன்று இப்படியான பிரச்சனைகள் ஏதும் இல்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி தான். இந்தக் கடையில் இருக்கும் இன்னுமொரு விசேஷம், விதம் விதமான சுவைகளில் (மாம்பழம், ஆரஞ்ச் போன்ற சுவைகளில்) கிடைக்கும் லஸ்ஸி.  இங்கேயும் நான் அனைத்தையும் சுவைக்க முயற்சி செய்யவில்லை.  எல்லாவற்றையும் சுவைத்தால் வீட்டுக்கு வருவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் லஸ்ஸி குடிப்பதை “அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்” என்று விட்டு விட்டேன்.


கரோல் Bபாக் உணவகங்கள் குறித்த காணொளி...


கடையில் திரு ஓம் ஷர்மா அவர்களின் பயணம் - பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தது, அவர் அடைந்த துயரங்கள், கடை ஆரம்பித்தது, அதில் அவருக்குக் கிடைத்த புகழ் என எல்லாவற்றையும் பதாகை ஒன்றில் எழுதி வைத்திருப்பது நல்ல விஷயம்.  வேதனை தந்த பிரிவினை போன்ற சூழல்களிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருப்பது அடுத்தவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  கடையில் அவரது முயற்சி குறித்த தகவல்களை எழுதி வைத்திருப்பதை படிக்கும் நமக்கும் ஒரு உந்துதல் நிச்சயம் கிடைக்கும் - பிரச்சனைகளிலிருந்து விடுபட நிறைய வழிகள் உண்டு என்பதையும் உணர்த்தும் அல்லவா! இரண்டு கடைகளிலும் இப்படி உணவைச் சுவைத்த பிறகு பொடி நடையாக நடந்து அஜ்மல் கான் ரோடு வழியே கரோல் Bபாக் மெட்ரோ ஸ்டேஷன் வரை வந்து அங்கிருந்து ஒரு பேருந்து மூலம் வீடு வந்தடைந்தேன்.  இந்த Influencer எனப்படும் நபர்கள் சொல்லும் எல்லா இடங்களுக்கும் சென்று அவர்கள் ஸ்லாகித்த உணவை சுவைப்பது சரியல்ல என்றாலும் எப்போதேனும் சாப்பிடுவதில் தவறில்லை தான்! 🙂(சமாளிக்கிறேன்!)  மீண்டும் எங்கேனும் இது போன்று சென்று சாப்பிட்டு வந்தால் இங்கே எழுதுகிறேன் (நாவடக்கம் தேவை என்று எனக்குள்ளேயிருந்து ஒரு குரல், கொஞ்சம் சத்தமாகவே கேட்கிறது!) 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

8 ஆகஸ்ட் 2024


28 கருத்துகள்:

  1. ஆலூ டிக்கி நாவூறுகிறது.  லஸ்ஸி இங்கெல்லாம் சாப்பிட்டு சசாப்பிட்டு நொந்து போகிறேன்.  தரமாகவே இருப்பதில்லை - ஸ்ரீ மித்தாயில் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரில் கிடைப்பவை நன்றாக இருப்பதில்லை - திருச்சியில் ஒரு முறை சுவைத்து நொந்து போனேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சாப்பிடும் விஷயத்தில் நாவடக்கம் கொஞ்சம் கஷ்டம்தான்!  புதிய இடங்களில் அங்கு சுவை எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது முயற்சித்து விடுவேன்.  தரம் நன்றாக இருந்தால் நம்மை அறியாமல் நாமே மறுபடி  அங்கு செல்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரம் நன்றாக இருந்தால் மீண்டும் சுவைக்கத் தோன்றுவது இயல்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. டிக்கு காணொளி பார்த்தேன்.  அவ்வப்போது ஸ்ரீகாந்த் போல கண்களை சிமிட்டுகிறார்.  அவர் கூட இருக்கும் பெண் ஒரு சாக்லேட் விளம்பரம் என்று நினைக்கிறேன், கிரிக்கெட் ஆட்டத்துக்கு நடுவில் மைதானத்துக்குள் நுழைந்து ஆடுவார், அந்தப் பெண்ணை நினைவுபடுத்துகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கேட்பரி சாக்லேட் விளம்பரம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. உணவைப் பற்றியும் உள்ளே புகுந்து விளையாடியிருக்கிறீர் வெங்கட். ஜொள்ளு formation pucca.roadside கடைகளில் சுவை அதிகம்.ஆனால் 100% hygeine இருக்குமா என்பது கேள்விக்குறியே.
    விஜி வெங்கடேஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு
  5. இன்றைய quote superb
    விஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி.

      நீக்கு
  6. இரண்டுமே நல்ல பகிர்வு. எனக்கு வட இந்திய உணவுகளின் மசாலா அலர்ஜியை உண்டாக்கும். புதிய கடை ஒன்றில் சுவைத்தான் மனதுக்குள் பயமும் ஒன்றரை மணி நேரம் கடக்கும்வரை திகிலும் இருக்கும்.

    வ்லாகர்களின் உணவுக் காணொளிகள், அவர்களுக்குச் சுவையாக இருந்திருக்கலாம். நான் பல சமயங்களில் ஏமாற்றமடைந்திருக்கிறேன். உணவகங்களும் காசு கொடுத்து இவர்களை விளம்பரம் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. புகைப்படமே சாப்பிடும் ஆசையை தூண்டுகிறது ஜி.

    இன்றைய வாசகம் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. சுவையோ சுவை!!! கரோல்பாக் இந்த பட்டூரே கடையில் சமீபத்தில் அதாவது சில மாதங்களுக்கு முன் மகன் சாப்பிட்டுவிட்டு என்னிடம் சொன்னான் சூப்பர் பழைய கடை ஆனால் பட்டூரே கடலை நன்றாக இருந்தது என்று. நாமளும் போகலாம் என்றான் ஆனால் அப்புறம் போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
    நான் வீட்டிலும் கருப்பு கொண்டைக்கடலை பயன்படுத்தி ராவல்பிண்டி ஸ்டைலில் செய்வதுண்டு ஆனால் இப்படி நேரடியாகச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அங்கு சுவை எப்படி இருக்கு என்று. இங்கு தென்னகத்தில் பட்டூரே சன்னா எல்லாம் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை அது வட இந்திய கடையாக இருந்தாலும்.

    லஸ்ஸியும் இங்கு ம்ஹூம்....அங்கு போன்று இருக்காது என்பது உங்களுக்கும் தெரியும். வட இந்திய உணவுகளை அங்கு சுவைத்துவிட்டு இங்கு சுவைத்தால் அது போன்று இருப்பது இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் சுவைத்து விடுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. வீட்டருகில் தில்லி உணவகம் ஒன்று இருக்கிறது. ஒரிஜினலா என்று தெரியவில்லை. சென்று பார்க்க வேண்டும்.

    ஆலு டிக்கி கவர்கிறது!

    இந்த டிக்கு காணொளியும் பார்த்தேன். இது எப்போதேனும் பார்ப்பதுண்டு. நம்ம உறவினர்கள் அங்கு இருப்பதால் சொல்வதுண்டு கரோல்பாக் பற்றி உணவகங்கள், பழைய தில்லி என்று.

    அடுத்த முறை குருகிராமம் செல்லும் போது போய் பார்த்துவிட வேண்டியதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. இன்றைய வாசகம் சூப்பர்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  12. வெங்கட் ஜி சென்னையில் நான் மிகவும் மிஸ் பண்ணுவது டெல்லி Bபட்டூரே தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகரில் கிடைப்பது போல சென்னையில் கிடைப்பது கிடையாது. பல வருடங்கள் தில்லியில் இருந்த உங்களுக்கு நிச்சயம் இதெல்லாம் கிடைக்காமல் இருப்பது வருத்தம் தரும் விஷயமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  13. வாசகம் அருமை.
    காணொளி அருமை.

    கரோல் Bபாக்g கடை ஆலூ டிக்கி பார்க்கவே நன்றாக இருக்கிறது.Bபட்டூரே வும் அருமை.
    பத்து நிமிட நடையில் உணவு கிடைக்கிறது என்றால் சமைக்க முடியாத, சமைக்க பிடிக்காத நாளில் வாங்கி சாப்பிடுவதில் தப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      எப்போதேனும் சாப்பிடலாம் தான். வீட்டின் அருகே இப்படியான நிறைய கடைகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. ஆலு டிக்கி, பட்டூரா இரண்டுமே நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....