சனி, 31 ஆகஸ்ட், 2024

காஃபி வித் கிட்டு - 200 - கச்சோரா(டா) - Gகடி வாலா BபாBபா - கண்ணுக்கு மை அழகு - Sorry Maa - ஸ்பெஷல் - எண்பது ரூபாயா?


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தம்பதிகள் ஜாக்கிரதை - நாரதரின் சாபம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் உணவு : கச்சோரா(டா)…



கச்சோரி(டி) எனும் வட இந்திய உணவு குறித்து உங்களில் சிலர் அறிந்திருக்கலாம்.  அதுவே எங்களுக்குத் தெரியாது, இதுல புதிதாக கச்சோரா(டா) என்று ஒன்றைப் பற்றி சொல்ல வந்திட்டியே பெரிசா! என்று உங்களில் சிலர் சொல்லலாம்! கச்சோடி எனும் இந்த உணவுப் பதார்த்தம் பொதுவாக சிறியதாக இருக்கும்.  அதுவே பெரியதாக இருந்துவிட்டால் கச்சோடா! அவ்வளவு தாங்க விஷயம். எனது ஒரு பதிவில் இதே போல ஜலேபி, ஜலேபா என்று கூட தகவல்களைச் சொல்லி இருக்கிறேன்! ஆனால் கச்சோடாவின் செய்முறை கொஞ்சம் வித்தியாசம்! அத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் கச்சோடா ஒன்று சாப்பிடவே கஷ்டம் என எனக்குத் தோன்றுகிறது!  ராஜஸ்தானில் நசீராபாத் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கே இருக்கும் ஒரு இனிப்பகம்/உணவகம் - (CH)சவன்னிலால் ஹல்வாய்! அங்கே கிடைக்கும் கச்சோடா மிகவும் பிரபலம்.  ராஜஸ்தான் வாசியான எனது நண்பர் ஒருவர் அந்த ஊர் காரர்! ஊரிலிருந்து ஒரு முறை இந்த கச்சோடா எடுத்து வந்திருந்தார்! எண்ணையில் பொரித்துச் செய்யப்படும் இந்த கச்சோடா ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது என்கிறார்!  செய்முறையும், கடை குறித்த காணொளியும் பார்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!


Biggest Kachori | Indian Street Food | Chawannilal Nasirabad Kachora | Rajasthan Street Food


******


இந்த வாரத்தின் தகவல் : Gகடி வாலா BபாBபா…




நம்மில் பலரும் “எனக்கு நேரமே சரியில்லை” என்று புலம்புவது உண்டு.  இந்தப் புலம்பல் இல்லாத மனிதரும் இல்லை, ஊர்களும் இல்லை!  நேரம் சரியில்லை என்ற புலம்பல்களுடன் சிலர் நாடுவது ஜோசியர்களை! சிலர் நாடுவது ஆலயங்களை! இப்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மக்கள் நாடுவது இந்தோர் அருகே உள்ள Gகடி வாலா BபாBபா-வை! அது என்ன தகவல்? சொல்கிறேன்.  இந்தப் பகுதிகளில் நேரம் சரியில்லை என்று விசனப்பட்டு மக்கள் நாடும் இடம் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே அமைந்திருக்கும் சிறு ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் Gகடி வாலா BபாBபா வைத்தான்.  சில வருடங்களாகவே அந்த ஆலயம் அமைந்திருக்கிறது என்றாலும் இந்த மாதிரி புகழ்பெற்றது சில வருடங்கள் முன்னர் தான் என்று தெரிகிறது. நேரம் சரியில்லை என்று இங்கே வந்து தரிசனம் செய்து அதற்கான நிவாரணம் கிடைத்தவுடன் ஒரு பக்தர் தனது கைக்கடிகாரத்தினை ஆலயத்திற்குத் தந்தாராம்.  அது அப்படியே மெல்ல மெல்லப் பரவ, பலரும் இங்கே வந்து வேண்டிக்கொண்டு, அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு ஆலயத்திலும், ஆலயம் அமைந்திருக்கும் ஆல மரத்திலும் கடிகாரங்களை கட்டி விடுகிறார்கள்.  அப்படிக் கட்டப்பட்ட கடிகாரங்கள் தற்போது ஆயிரக்கணக்கில் இருக்கிறதாம்! யாரும் அந்தக் கடிகாரங்களை திருடுவதும் இல்லை என்பது கூடுதல் தகவல்.  இன்னும் அதிகத் தகவல் தேவை என்றால் கீழே உள்ள சுட்டி வழி ஒரு ஆங்கிலப் பதிவினை வாசிக்கலாம்!


Travel Guide: Ghadi Wale Baba, Ujjain | Story, How To Reach (wanderon.in)


******


பழைய நினைப்புடா பேராண்டி : கண்ணுக்கு மை அழகு


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கண்ணுக்கு மை அழகு - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  



எனது பெரியம்மாவின் வீட்டிற்குச் சென்றபோது அங்கே மீன் வடிவத்தில் இந்த கண் மை வைக்கும் சிமிழ் பார்த்ததும் அதனை எனது மொபைல் கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன். இந்த மாதிரி கண் மைச் சிமிழ்கள் இப்போதெல்லாம் யாரும் பயன்படுத்துவது இல்லை. Eyetex கண் மை தான் பலரும் பயன்படுத்துவார்கள்.  அதற்கு முன்னர், எங்கள் அம்மாவின், பாட்டி காலத்தில் இந்த கண்மையை வீட்டிலேயே தயாரிப்பார்களாம். அதற்காகவே கேமரா ரூம் என அழைக்கப்படும் இருட்டறையில் தான் தயாரிப்பார்கள் என்று சொல்வார்கள்!


இப்போதெல்லாம் வீட்டில் தயாரிப்பது இல்லை, Eyetex கண் மையும் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் மாறி பென்சில் வடிவத்தில் வந்து விட்டது! கண் மையே இல்லாத போது கண் மை வைத்துக் கொள்ள பயன்படும் இந்தச் சிமிழ் எங்கே! இந்தப் படத்தினை முக நூலில் பகிர்ந்து “இது என்ன தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்” என்று கேட்டபோது பலரும் சரியான விடையைச் சொல்லி விட்டார்கள்....  புன்னகை புரிய வைக்கும் சில பதில்களும் வந்தன!


தமிழர்கள் மட்டுமல்ல, மலையாள நண்பர், ஜார்க்கண்ட் மாநில நண்பர் என இந்தியாவின் வேறு வேறு மூலையிலும் இந்த வடிவில் கண் மைச் சிமிழ் பயன்பட்டிருக்கிறது என்ற தகவலும் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் ரசித்த குறும்படம் : Sorry Maa…


சென்ற வருடத்தின் Mother’s Day சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு குறும்படம்.  ஹிந்தி மொழியில் தான் என்றாலும் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் உண்டு! அதனால் பார்ப்பதற்கு மொழி தடையில்லை! ஒரு அம்மாவாக, மனைவியாக எல்லா வேலைகளையும் செய்யும் ஒரு ஹோம் மேக்கர் தனது பிறந்த நாளுக்காக செய்ய ஆசைப்படும் விஷயம் நடந்ததா இல்லையா என்பதைச் சொல்லும் குறும்படம்.  நன்றாகவே இருந்தது. முடிந்தால் பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியை பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம். 


Mother's Day Special 2023 | Sorry Maa | Short Film on Women Empowerment | Family Drama | Why Not - YouTube


******


இந்த வாரத்தின் வலைப்பூ தகவல் :  ஸ்பெஷல்…



இன்றைய காஃபி வித் கிட்டு பதிவு கொஞ்சம் ஸ்பெஷல்!  தலைப்பில் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்! காஃபி வித் கிட்டு பதிவுகள் எழுத ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.  வாரா வாரம் எழுத வேண்டும் என்று ஆரம்பித்திருந்தாலும், சில வாரங்கள், சில மாதங்கள் வெளியிடாமலேயே சென்று விட்டது.  முதல் முதலாக காஃபி வித் கிட்டு பதிவு எழுதியது 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்! இதோ 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் கடைசி நாளான இன்று காஃபி வித் கிட்டு பதிவுகள் வரிசையில் 200-ஆவது பதிவு.  இந்த காஃபி வித் கிட்டு பதிவுகளில் உங்களைக் கவர்ந்த விஷயம் எது? தொடர்ந்து இந்த வரிசையைத் தொடரலாமா? அல்லது ஃப்ரூட் சாலட் என்ற தலைப்பில் இதே போன்ற பல விஷயங்களைத் தொகுத்து 200 பகுதிகள் எழுதிய பின்னர் நிறுத்தி விட்டேனே அதே முடிவு இந்த காஃபி வித் கிட்டு பதிவுகளுக்கும் ஏற்பட வேண்டுமா?  பார்க்கலாம்! தொடர்வேன் என்று தான் நினைக்கிறேன்.  பல காஃபி வித் கிட்டு பதிவுகளில் எழுதிய ராஜா காது கழுதைக் காது பகுதிகள் சமீபமாக எழுதவே இல்லை என்பதும் ஒரு விதத்தில் வருத்தம் தருகிறது! இந்த வாரம் அப்படி ஒரு விஷயம் சேர்த்திருக்கிறேன்! காஃபி வித் கிட்டு பதிவின் 200-ஆம் பகுதி என்பதன் கூடவே இந்தப் பதிவு, இந்த வலைப்பூவில் 3400-ஆம் பதிவு என்பதும் கூடுதல் தகவல்!


******


ராஜா காது கழுதைக் காது :  எண்பது ரூபாயா?


சமீபத்தில் தலைக்கு மேல் வேலை இருந்ததால் சலூன் சென்றிருந்தேன்.  எப்போதும் செல்லும் கடை தான். அங்கே ஒரு பெரியவர் இருப்பார் - ஹரி ஓம் ஷர்மா என்பது அவர் பெயர்.  மிகவும் பொறுமை - பேச்சு மிக மிகக் குறைவு. வரும் வாடிக்கையாளர்களிடம் என்ன தேவை என்று கேட்பதோடு சரி. அதைத் தவிர வேறு சம்பாஷணைகளே கிடையாது! இந்த முறை சென்றிருந்தபோது எனக்கு அடுத்து தலைக்கு மேல் வேலை என்று ஒருவர் வந்திருந்தார்! முன்னும், பின்னும் நடுவிலும் வழுக்கை! அவர் தான் கடைக்காரரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்… அவர் புலம்பல் தான் இது!


தலைல நிறைய முடி இருந்து உங்ககிட்ட வந்து அதை நீங்கள் அழகுபடுத்தினால் எண்பது ரூபாய் தரலாம்! எனக்கோ நல்ல வழுக்கை. இருக்கற கொஞ்சம் முடியை ட்ரிம் பண்றதுக்கு எண்பது ரூபாயா? மனசு கலங்குது!


இதைக் கேட்டு அந்தப் பெரியவர் சிரித்துக் கொண்டாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை - எப்போதும் போல! எனக்குத்தான் நாக்கு துறுதுறுவென்று வந்தது - அவர் வாங்கற காசு உங்க தலைல முடிய தேடறதுக்கு என்று சொல்லலாம் என! ஏன் அவரின் சோகத்தை அதிகப்படுத்தவேண்டும் என்று விட்டுவிட்டேன் - பத்மநாபன் அண்ணாச்சியின் முடியில்லா தலையும் நினைவுக்கு வந்தது! ஹாஹா…


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

31 ஆகஸ்ட் 2024

22 கருத்துகள்:

  1. கச்சோடி மகன்கள் சௌகார்பேட் சென்று சாப்பிட்டு வருவார்கள்!  கச்சோடா பற்றி அவர்களிடம் சொல்கிறேன்!  இங்கு கிடைக்குமா என்றும் தெரியவில்லை.


    பயம்!  கடிகாரங்களைத் திருட பயம்!  அப்படித் திருடினால் நேரம் சரியில்லாதவரின் சரியில்லாத நேரம் தனக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்கிற பயம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கச்சோடா அங்கே கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது ஸ்ரீராம்.

      கடிகாரங்களை திருட பயம் - அதே தான். கெட்ட நேரம் நமக்கு வந்து விடுமோ என்ற பயம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. அந்த மீன் வடிவ மைச்சிமிழ் எங்கள் வீட்டிலும் இருந்தது.

    விளம்பரக்குறும்படம் வழக்கம்போல சிறப்பு.  எனக்கொரு கதைக்கரு கிடைத்தது அதில்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கரு - ஆஹா மகிழ்ச்சி. எழுதி வெளியிடுங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. காஃபி வித் கிட்டு தொடரின் 200 வது எபிசோடுக்கு வாழ்த்துகள்.  தொடருங்கள்.

    ராகாககா புன்னகைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம். ராகாககா - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை. காஃபி with கிட்டு தொடரவும்.எல்லா பதிவுகளும் அருமை.
    விஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. காஃபி வித் கிட்டு 200 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எழுத்துக்கள் வசிகரமானவை. மேலும் உங்கள் பதிவுகளின் மூலம் பல பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    பதிவில் இது 3400ஆம் பதிவு என்பதும் மகிழ்விற்குரிய விஷயம். அதற்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. இன்றைய வாசகம் அருமையான வாசகம்!!!! பலருக்கும் தேவையான ஒன்று

    அட! காஃபிவித் கிட்டு 200!!! வாழ்த்துகள்! இன்னும் உங்களோடு நிறைய காஃபி குடிக்கக் காத்திருக்கிறோம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      காஃபி வித் கிட்டு - 200-ஆம் பதிவு - வாழ்த்தியமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. கச்சோரி (டி) வட இந்தியாவில்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கெல்லாம் வட இந்தியர்களே தயாரித்தாலும் கூட அவ்வளவாகக் கவரவில்லை, ஓ பெரிய வெர்ஷன் தான் கச்சோரா(டா) வா!! வட இந்தியாவுக்கு வரப்ப சுவைத்திட்டா போச்சு! தகவல்கள் பார்த்துக் கொண்டேன் நினைவிலும் சேமித்தாயிற்று!! சுட்டி அப்புறம் பார்க்கிறேன். பணிச் சுமை!!!
    ஆமாம் ஜலேபி ஜலேபா நினைவிருக்கு!

    Gகடி வாலா BபாBபா தகவல்கள் சுவாரசியம். இப்படி நிறைய நம்பிக்கைகள்!

    மைச்சிழிழ் எங்கள் வீட்டிலும் இப்படியேதான் இருந்தது. மற்றொரு வீட்டில் அன்னம் போன்ற அமைப்பு! குருவி போன்று என்று பல வடிவங்களில்!

    ஸாரி மா - பின்னர் பார்க்கிறேன் ஜி!

    தலைக்குமேல் வேலை பகுதியில் //பத்மநாபன் அண்ணாச்சியின் முடியில்லா தலையும் நினைவுக்கு வந்தது! ஹாஹா…//

    இதுதான் என் கண்ணில் டக்கென்று பட்டது!!!!!! பப்பு அண்ணாச்சி!!! சிரித்துவிட்டேன்!

    இன்று ஆஜர் வைத்துவிட்டேன் ஆனால் சில பின்னர்தான் பார்க்க வேண்டும்...சுட்டி, காணொளி எல்லாம்

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தந்த ஊர் பதார்த்தங்களை அந்தந்த ஊரில் சாப்பிடுவது தான் சிறந்தது கீதா ஜி. நம் ஊரில் கிடைக்கும் வட இந்திய பதார்த்தங்களை சுவைத்து வேதனைப்படுவதை விட சும்மா இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. இன்றைய கதம்பம் சிறப்பாக உள்ளது.

    மக்களின் வாழ்வாதாரம் எத்தனை தின்றால் பித்தம் தீரும் என்ற நிலைதான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. கதம்பம் சிறப்பு
    காபி வித் கிட்டு 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. வாசகம் அருமை. 200 வது காஃபி வித் கிட்டு பதிவுக்கு வாழ்த்துக்கள்
    3400 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
    இன்றைய பகிர்வு அனைத்தும் அருமை.

    Mother’s Day சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு குறும்படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. காபி வித் கிட்டு வாழ்த்துகள்.

    மீன் வடிவ கண்மை சிமிழ் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....