வியாழன், 29 ஆகஸ்ட், 2024

சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீ ரத்னேஷ்வர்  மஹாதேவ் மந்திர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


மும்பை வாசியாக இருந்த எனது உறவினர் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சேரும் முன்னர் சென்னைக்கு வந்த ஒரு பயணம் குறித்த அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.  ஒரு குறும்பயணம் என்றாலும் அவருக்கு அந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்த அவருக்கு மனம் நிறைந்த நன்றி. இரண்டு பகுதிகளாக இந்த பயணக் கட்டுரை இங்கே வெளிவரும்.  ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


******


சென்னைப் பயணம் 1



ஜனவரி கடைசியில் ஒரு உறவினர் திருமணத்திற்காக சென்னை பயணமானேன். அடிக்கடி தகராறு செய்யும் உடல் நிலையை காரணம் காட்டி நான் வரலை என்று சொல்லச் சொல்ல என் மாமன் மகள் வசந்தி 'நீ வந்தா காஞ்சிபுரம் (மஹாபெரியவா பிருந்தாவனம்) கூட்டிக்கொண்டு போவேன் என்று என் பலவீனமான பாயிண்டை சொல்லி மடக்கியே பணிய வைத்தாள். ஆகாஸா Air-ல் (இப்போதுதான் கேள்விப்படுகிறேன்) ஏறி உட்கார்ந்து ஒரு 1 மணி கடந்திருக்கும், 'ஒரு தேனினும் இனிய குரல் (அக்குயில் குரல் இவ்வளவு பயத்தை உண்டுபண்ணும் என்று தெரியாது) மைக்கில் 'பயணிகள் கவனத்திற்கு, வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக plane சிறிது தடுமாறுகிறது, ஆனால் பயப்படத்தேவையில்லை’😟 என்று கூறும்போதே plane சற்று நடுங்கி நடுங்கி 'வலம்புரிபோல் நின்று அதிர்ந்தது'. 'ஐயோ அவர்கள் கையை விரித்து விரித்து தற்காப்பு விதிகளை சொல்லும்போது அலட்சியமாக இருந்து விட்டோமே' என்று கதி கலங்கியது. 'நடு வானில் கிடு கிடு, நெஞ்சமெலாம் நடு நடு'. இந்த சந்தர்ப்பத்தில் இந்த எதுகை மோனை எல்லாம் ரொம்ம்ம்ம்ப முக்கியம் என்று நீங்கள் நினைத்தாலும், நான் சற்றும் மனம் தளரேன், அப்புறம் என் புலமையை எங்க எப்போ காட்றது😜.


ஒரு வழியாக சென்னை நடுங்கிக்கொண்டே வந்து சேர காலமில்லா காலத்தில் மழை பெய்து (அட, விஜி நீ நவீன ரிஷ்யஸ்ருங்கரா, பலே😁) அதன் சாக்காக traffic jam, அதனால் வந்து சேர சிறிது நேரமானது. அவளுடன் பயணிக்கும்போதே சில வருடங்கள் கழித்துப் பார்க்கும் சென்னையை ரசித்துக்கொண்டே சுவரெங்கும் சிரிக்கும் 'வாரிசு' முகத்தைப் பார்த்துக்கொண்டே   வீடு வந்து சேர்ந்தோம். என்ன சொல்லுங்க நம்ம சென்னை பேட்டை பேட்டைதான். ஒரு ஓட்டுதல், தாயின் மடிபோல்👌🏻🙂 சாப்பாடு, சிறிது ஓய்வு (வாய்க்கு அல்ல). என்னைக்கு சென்னை போய் சேர்ந்தேனோ அன்னிக்கு சாயந்திரம் வசந்தி என்னை கோயம்பேட்டில் இருக்கிற ஒரு சிவன் கோவிலுக்கு கூட்டிண்டு போனா. அது பேரு குறுங்காலீஸ்வரர் கோவில்னு பேரு. பேரு வந்த கதை என்னன்னா ஒரு ராஜா தன் தேர்ல வந்துட்டு இருக்கும்போது இந்த லிங்கம்  இருக்கிறத பார்க்காம அது மேல தேர் விட்டதுனால அது கொஞ்சம் பூமிக்குள்ள இறங்கிவிட்டதாம், அந்த ஆவுடையார் பாதி பூமிக்குள்ள புதைந்து இருக்கிறதுனால அந்த லிங்கம் சற்று குள்ளமாக நம் கண்ணுக்கு தெரிகிறதாம். ரொம்ப அழகான அமைதியான கோவில். 


இது மாதிரி இன்னும் எத்தனை ஆயிரம் கோவில்கள் நமக்கு தெரியாம பிரபலம் ஆகாம இருக்குங்குற விஷயமே தெரியாதது வருந்தக்கூடிய விஷயம். கோவில் வாசலுக்கு எதிர்க்க ஒரு மண்டபத்துக்குள்ள சரபேஸ்வரர் இருக்கார் ஒரு தூண்ல. அதுக்கு தனியா அர்ச்சனை பூஜை இதெல்லாம் நடந்துகிட்டு இருக்கு. அன்னைக்கு ராத்திரி வசந்தியோட 12 வயது பேரன் வந்தான். எங்கிட்ட ரொம்ப ஒட்டி  உட்கார்ந்து கொண்டு ஆகாசா ஏர் போயிங் 737 (அதான் நான் வந்த flight) இதுவரைக்கும் எந்தெந்த வருஷம் எங்க எங்க crash ஆயிருக்கு, எதனால அப்படிங்கிற விவரத்தை புட்டு புட்டு வெச்சான். சொன்னா எனக்கு புரியாது என்று ஸ்மார்ட் டிவி ல வேற அதை எனக்குப் போட்டுக் காட்டி எதனாலெல்லாம் அது failure ஆச்சு அப்படிங்கற விவரம் அத்தனையும் ஒண்ணு விடாம விளக்கி இருக்கான்! என் மனம் ஃபிளாஷ் பேக்கில் நடு வானத்தில் கிடு கிடுவை மறுபடி உணர்ந்தது! பேச்சே வராம உட்கார்ந்து கொண்டு இருந்தேன். எவ்ளோ பெரிய அபாயத்தை தாண்டி வந்து இருக்கேன்! அவன் சொல்லி முடிக்கவும் உள்ளே இருந்து வசந்தி 'ஏண்டா அவகிட்ட இதை சொல்லாதேன்னு சொன்னேன் இல்ல' என்று கேட்டுக் கொண்டே வந்தாள். அதுக்குள் அவன் சொல்லி முடிச்சு ஒரு நிம்மதியுடன்(!) goodnight சொல்லிவிட்டுப் படுக்கபோனான். அப்புறம் எனக்கு ஏது 'good'night😟. சும்மா சொல்லக் கூடாது பேராண்டி கூகிள்-ல கரைச்சு குடிச்சதை நல்லாவே என்கிட்ட விளக்கி(கக்கி) யிருக்கான்! நல்ல எதிர்காலம் உண்டு lecturer ஆ. 


மறுநாள் காலை கிளம்பி நங்கநல்லூர் போனோம். ஆஞ்சநேயர் கோவில் சென்றோம். ஆஞ்சநேயர் மஹா மஹா உருவத்தின் முன் நிற்கும்போது நாம் இன்னும் சிறுத்து அவருள் கரைந்து ஒன்றுமில்லாமல் போவது போல ஒரு நினைவு. அப்புறம் வேண்டுதலாவது ஒண்ணாவது! அற்புத தரிசனம். அவ்வளவு பெரிய உருவம் வணங்கிக் கைகூப்பிக் கொண்டு காட்சி தருவது 'நீ எத்தனை உயரத்துக்கு போனாலும் எத்தனை சாதித்தாலும் அடக்கம் என்பது இருந்தால் மட்டுமே மேன் மேலும் மேன்மைகளை அடையமுடியும்' என்று சொல்வது போல் இருந்தது! அங்கிருந்து குருவாயூரப்பன் கோவில் சென்ற போது சீவெலி  (ஒரு சப்பரத்தில் குருவாயூரப்பனை வைத்து சுற்றி வருகிறார்கள்). நடந்து கொண்டிருந்தது. பின்னர் அழகிய புன்சிரிப்புடன் இருந்த கண்ணனின் திவ்ய தரிசனம்🙏🏻



மஹா பெரியவா சரணாலயம். திரு.ராஜகோபாலன் என்பவரின் முயற்சியில் ஒரு ஹாலில் அழகாக வெண்கல சிலா ரூபத்தில் மகாபெரியவா அதன்முன் அவர் பாதுகை🙏🏻. வாசல் தெளித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடமிருந்து கோலமாவு வாங்கி கோலம் போட்டது மனதுக்கு ஒரு திருப்தி🙏🏻 மஹா பெரியவா அனுகிரஹம்🙏🏻 இந்தச் சென்னைப் பயணத்தில் கிடைத்த மேலும் சில அனுபவங்களை இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் (அது தான் கடைசியும்!) சொல்கிறேன். 


பயணங்கள் முடிவதில்லை...,..


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

29 ஆகஸ்ட் 2024


20 கருத்துகள்:

  1. மிகவும் சுருக்கி வரைந்து விட்டீர்கள் போல...!  நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் தொன்னையில் என்ன பிரசாதம் கிடைத்தது?  வெண்பொங்கலா, புளியோதரையா?  (நம் கவலை நமக்கு!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா அதானே ஸ்ரீராம் நமக்கெல்லாம் அது ரொம்ப முக்கியமாச்சே! கண்டிப்பா அது புளியோதரையாகத்தான் இருக்கும்!!!!!!! ஹாஹாஅஹாஹா

      கீதா

      நீக்கு
    2. பிரசாதம் என்ன? அதானே... நமக்கு அதுவும் முக்கியம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. புளியோதரை - சாப்பிட்டு நாளாச்சு. இங்கே பெருமாள் கோயிலில் கிடைக்கும் என்றாலும் சென்று நாளாச்சு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  2. நான் செய்த ஒரே விமானப் பயணத்திலும் இந்த டர்புலென்ஸ் பயமுறுத்தல் இருந்தது.  அது கேடி பிரதர்ஸ் ஃபிளைட் என்று சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டர்புலன்ஸ் எனது சில பயணங்களில் அனுபவித்து இருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. டர்புலென்ஸ் அனுபவித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. அந்த விமானப் பயணத்தின் கிடு கிடு அனுபவம் உண்டு. இதுவரை ஆகாசாவில் பயணித்தது இல்லை! அந்தக் குட்டிப் பேரன் மத்த விமான விபத்துகளைச் சொல்லாமல் போனானே! நல்லதாச்சு.

    சென்னைப் பயணம் குட்டிப் பயணம் போல!

    நங்கநல்லூர் ஆஞ்சு கோயில் பத்தி சொல்லிட்டுப் ஆஞ்சு என்ன பிரசாதம் கொடுத்தார்னு சொல்லாம விட்டுட்டீங்களே! எனக்கும் ஆஞ்சு, பிள்ளையார் ரெண்டு பேரும் என் மனதுக்கினிய நண்பர்கள்!

    புதியதாக ஒரு கோயில் அந்த சிவன் கோயில் பற்றியும் அதன் புராணம் பத்தியும் தெரிந்து கொண்டோம்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரக் கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.(பதிவுகேற்ற வாசகம்.)

    சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் நகைச்சுவை சொற்கள் கலந்த பதிவை ரசித்து படித்தேன். நங்க நல்லூர் ஆஞ்சநேயர் கோவில் இது வரை பார்த்ததில்லை. இனி பார்க்கும் சந்தர்ப்பம் வர ஆஞ்சநேயர் மனது வைக்க வேண்டும். நாங்கள் சென்னையில் இருக்கும் போது அக்கோவில் கட்டுமானம் வரவில்லை என நினைக்கறேன். மற்ற சிவன் கோவில் கோவிலின் தலபுராணம் படித்தறிந்தேன். அருமையான பதிவுடன் தொடர்கிறேன். விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "சென்னைக்கு ஒரு பயணம்" என நீங்கள் பதிவுக்கு அழகாக தலைப்பிட்டால், நான் தட்டச்சு செய்த கருத்து என்னை கேட்காமலேயே இரு தடவைகள் பதிவில் வந்து அமர்ந்து விட்டது. ஹா ஹா. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. சில சமயங்களில் இப்படி இரு முறை வந்துவிடுகிறது! ஒன்றை அழித்துவிட்டேன் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    சென்னை பயண அனுபவத்தை விஜி நன்றாக சொல்லி இருக்கிறார்கள்.
    பயத்தையும் நகைச்சுவை உணர்வுடன் கொடுத்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. நன்றி நண்பர்களே.

    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதுங்கள் விஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பயண அனுபவம், விமானத் திரில், கோவில் தரிசனங்கள், என நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....