வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர் - பகுதி பத்தொன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்



வாரணாசி எனும் காசி நகரில் எண்ணிலடங்கா கோயில்கள் பார்ப்பதற்கு உண்டு.  ஒன்பது நாள் பயணத்தில் எல்லா கோயில்களையும் பார்க்க முடிந்ததா என்றால் நிச்சயம் இல்லை. ஆனாலும் முடிந்த வரை அவ்வப்போது சில கோயில்களுக்கு தேடித்தேடிச் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை தந்தவை என்று சொல்வதில் தவறில்லை. காசியில் புதியதாக சந்தித்த ஒரு சகோதரியின் கணவர் தனது காசி அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது ஸ்ரீ கர்த்மேஷ்வர் மஹாதேவ் மந்திர் எனும் கோயில் பற்றிச் சொல்லி, அழகான குளமும், பக்கத்தில் சிறப்பான கோயில் மற்றும் சிற்பங்கள் உண்டு என்றும், நான் தங்கியிருந்த பனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாவிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்றும் தகவல் சொன்னார்.  ஒரு நாள் மாலையில் தங்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரம் என்று கூகிளில் தேடியபோது தகவல் கிடைக்க உடனே பொடி நடையாக புறப்பட்டுவிட்டேன்.  செல்லும் வழியெங்கும் உள்ளூர் மக்கள் தவிர வெளியூர்/சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லை - என்னைத்தவிர.





அதனால் நான் அந்த வழியில் சென்றபோது கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனாலும் என்ன ஆகிவிடப்போகிறது - நமக்கோ மொழி பிரச்சனையில்லை - சென்று பார்த்துவிடலாம் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன்.  வழியெங்கும் பார்த்த காட்சிகள் வாரணாசி நகரின் பழமையை பறைசாற்றிக் கொண்டிருந்தது. பழைய காலத்தில் கடைகள் எப்படி இருந்திருக்குமோ அதையே இன்றைக்கு வரை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். வேர்க்கடலை வறுக்கும் முறையைப் பார்த்தாலே இன்னும் மாறவில்லை என்று தோன்றியது. பார்க்கும் உணவுப் பொருட்கள் நம்மை வாங்கத்தூண்டும் விதமாக இல்லை - வித்தியாசமாக இருந்தது - அதாவது எந்தவித படோடாபமும் இல்லாமல் சாதாரணமாக இருந்தது.  அவற்றை உள்ளூர் மக்கள் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றாலும், சென்ற இடத்தில் வாங்கிச் சாப்பிட்டு ஏதேனும் உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் என்னாவது என்று கண்களாலே பார்த்துக் கொண்டே சென்றுவிட்டேன். படமாக எடுத்துக் கொள்ளவும் தயக்கம் - சுற்றுலாப் பயணி என்று தெரிந்து விடக்கூடாது என்று கவனமாக படம் எடுப்பதை தவிர்த்தேன்.  சுமார் நான்கு-ஐந்து கிலோமீட்டர் நடைப்பயணத்திற்குப் பிறகு கோயில் இருக்கும் இடம் வந்துவிட்டது.








கோயில் செல்லும் வழியில் ஒரு சிறு பதாகை - ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர் என்று பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதி ஆயிற்று.  மிகவும் பின்தங்கிய  கிராமம் போல காட்சியளித்ததால் அந்த தயக்கம்.  ஒரு அழகிய குளம், குளக்கரையில் மிகப்பெரிய ஆல/அரச மரங்கள், அழகான கோபுரம், கோயில் வெளிப்புறச் சுவரில் சிற்பங்கள், எண்ணிலடங்கா குரங்குகள், அவை அவ்வப்போது எழுப்பும் ஒலி, மரத்திலிருந்து குளத்தில் விழும் பழங்கள், குச்சிகள் எழுப்பிய ஒலி தவிர நிசப்தம்.  குளக்கரையில் சென்று பார்த்தால் உள்ளூர் சிறுவர்கள் சிலர் அங்கே தொங்கும்  மரத்தின் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு குளத்தில் குதித்து விளையாடிக் கொண்டும் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்படி விளையாடிய சிறுவர்கள், “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” என்ற பாடலை நினைவுபடுத்தினார்கள்.  குளக்கரையிலிருந்து தெரியும் காட்சிகளையும், அங்கே இருந்த அமைதியையும் கொஞ்சம் ரசித்த பிறகு கோயில் அருகே சென்றேன்.  என்னைத் தவிர கோயிலில் வேறு யாருமே இல்லை. சுற்றிலும் குரங்குகள் - பெரியதும் சிறியதுமாக! “என்னடா எங்க ஏரியாவுக்கு வந்திருக்க!” என்று பார்வை வீசிய குரங்குகளைக் கண்டு கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. 



கொஞ்சம் தைரியத்துடன் கர்பக்கிரகத்துக்குச் சென்றால் அங்கேயும் மூன்று குரங்குகள் உட்கார்ந்து கொண்டு சிவபெருமானுக்கு சார்த்திய பூக்களை எடுத்துத் தின்பதும் அங்கே இருக்கும் தண்ணீரைக் குடிப்பது எனவும் இருந்தன.  இந்தக் கோயில் மிகவும் பழமையான கோயில் என்பதோடு, காசி நகரிலேயே இருக்கும் பழமையான கோயில் இது தான் என்பதால் தற்போது Archaeological Survey of India வசம் உள்ளது. ஆனாலும் காலை மாலை வேளைகளில் உள்ளூர் பூஜாரி ஒருவர் வந்து பூஜைகள் செய்கிறாராம். ஆனால் நான் சென்ற மாலை நேரத்தில் பூஜை முடித்துக் கொண்டு சென்று விட்டதால் மொத்த கோயிலும் குரங்குகள் பாதுகாப்பில் இருந்தது! சிறிய இடமே இருக்கும் கர்பக்கிரகத்துக்குள் குரங்குகள் இருக்கும் போதே செல்வது அத்தனை பாதுகாப்பில்லை என்பதால் எனக்கு தயக்கம். சரி வெளியிலிருந்து இறைவனை தரிசித்து வணங்கி, சுற்றுப்புறச் சுவர்களில் இருக்கும் சிற்பங்களை ரசித்துக் கொண்டும் படம் எடுத்துக் கொண்டும் இருந்தேன்.  ஒரு சிலர் வந்தாலும், வெளியே குரங்குகளுக்கு பழங்களை தந்து விட்டு அப்படியே வெளியிலிருந்தே சென்று விட்டார்கள். 



உள்ளே சென்று சிவபெருமானை வணங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காத்திருந்தேன்.  வேறு ஒரு உள்ளூர் பெண்மணி கையில் கூடை, பால், தண்ணீர், வில்வ இலைகள் உடன் வந்தார்.  அவரும் குரங்குகள் இருப்பதால் காத்திருந்தார்.  கையில் குச்சி எடுத்து வர மறந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்னும் சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு வேறு ஒரு பெண்மணி கையில் கூடையுடன் வந்தார். மற்றொரு கையில் ஒரு பெரிய தடி! அதனை கையில் கொண்டு வந்ததும் அவர் அடிக்க மாட்டார் என்றாலும், ஒரு பயம் குரங்குகளுக்கு - ஒவ்வொன்றாக கர்பக்கிரகத்தினை விட்டு வெளியேறின.  அந்தப் பெண்மணிகள் உள்ளே சென்றதும் நானும் சென்றேன்.  நான்கு பக்கங்களில் ஒரு சிறு இருக்கை - ஜமக்காளம் போல. அதில் இரண்டு பக்கங்களில் அந்தப் பெண்கள் அமர்ந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தூப, தீபம் காண்பித்து பிரார்த்தனை செய்தார்கள். நானும் கோயிலில் வைத்திருந்த ஒரு சொம்பு எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தினை தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு சில நிமிடங்கள் நிஷ்டையில் அமர்ந்து தியானம் செய்தேன். மனதில் அப்படி ஒரு அமைதியும் நிம்மதியும் கிடைத்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. 



மிகவும் பழமையான கோயில் - பராமரிப்பதோடு, சுற்றுலாத் துறையினரும் கொஞ்சம் கவனித்தால் இந்தக் கோயிலுக்கு பக்தர்களை மேலும் வரவழைக்கலாம். உள்ளூர் பக்தர்கள் மட்டுமே சாதாரண நாட்களில் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு சில நாட்கள் மட்டும் பக்கத்து கிராமங்களிலிருந்து அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தது.  வாரணாசி பகுதியில் ஒரு வித யாத்ரா செய்வது வழக்கம்.  பஞ்ச்க்ரோஷி யாத்ரா என்று பெயர் - அந்த யாத்ரா சமயத்தில் பல பக்தர்கள் நடைப்பயணமாகச் சென்று நிறைய கோயில்களை தரிசிப்பது வழக்கமாக இருக்கிறது. அப்படிச் செல்லும் கோயில்களில் இந்த கர்த்மேஷ்வர் கோயிலும் ஒன்று என்பதால் அதிக அளவில் கூட்டம் வரும் என்று உள்ளூரில் இருந்த ஒரு கடைக்காரரிடம் பேசியதில் தெரிந்தது.  இன்னும் இந்த யாத்திரை பற்றி விவரங்கள் - அவருக்குத் தெரிந்த அளவு பகிர்ந்து கொண்டார்.  மேலும் சில உள்ளூர்வாசிகளுடன் பேசியதில் தெரிந்து கொண்ட விஷயங்களை வேறொரு பகுதியில் சொல்கிறேன்.  நிம்மதியாக தரிசனம் கிடைத்ததோடு மனதுக்குள் ஒரு வித அமைதி - அந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து தங்கியிருந்த இடம் நோக்கி மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். 


கோயில் குறித்த புராணக் கதைகள் நிறையவே இருக்கின்றன.  இணையத்தில் தேடினால் கிடைக்கும். இருந்தாலும் ஒரு கதை மட்டும் இங்கே.  காசி நகரம் சிவபெருமானின் திரிசூலத்தின் மீது அமைக்கப்பட்டு இருக்கிறது என்றும் காசி நகரின் பழமையான கோயிலாக இருக்கும் கர்த்மேஷ்வர் கோயில், கர்த்தம் என்கிற ரிஷியால் உருவாக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் அமைந்திருக்கும் கோயில் என்பதால் இக்கோயிலுக்கு அந்த ரிஷியின் பெயரிலேயே கர்த்மேஷ்வர் கோயில் என்ற பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள். கூடவே அவரது கண்ணீரினால் உருவானது தான் அங்கே இருக்கும் குளம் என்றும் அந்தக் குளத்திற்குப் பெயர் கர்த்தம் குளம் என்றும் சொல்கிறார்கள்.  இந்தக் குளத்தில் நீராடி, கர்த்மேஷ்வர் மஹாதேவ் அவர்களை வணங்குபவர்களுக்கு எல்லா பாபங்களும் தீரும் என்பதும் நம்பிக்கை. இராவணனை வதம் செய்ததால் இராமனுக்கு உண்டான பிரஹ்மஹத்தி தோஷம் இந்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதால் அகன்றது என்றும் கதை.  கர்த்மேஷ்வர் கோயிலுக்குச் சென்று வந்த அந்த மாலை நேரம் மனதில் என்றைக்கும் நீங்காத இடம் பிடிக்கும் வகையில் அமைந்தது.  இந்தப் பயணத்தில் கிடைத்த மேலும் சில அனுபவங்களை வரும் பகுதிகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  பயணத்தில்  தொடர்ந்து கிடைத்த அனுபவங்கள் மற்றும் தகவல்களை வரும் பகுதிகளில் பார்க்கலாம். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

2 ஆகஸ்ட் 2024


22 கருத்துகள்:

  1. அந்த இடங்களை பார்க்கும்போதே - புகைப்படத்தில்தான் - அங்கு செல்லும் ஆர்வம் மீதூறுகிறது.  எங்கே?  மிகப் பழமையான, மிகத் தனிமையான கோவில் என்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மூன்றாவது படம்... குளத்துக்கு அடுத்த படம்.. அதென்ன அந்தக் கிளை அப்படி அந்தரத்தில் நிற்கிறது? என் கண் பிழையா? படங்களை மறுபடி மறுபடி ரசிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழுது - வெட்டிவிடப்பட்டதால் அந்தரத்தில் தொங்குவது போல மாறி இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கோபுரத்தின் குறுக்கே வருவது போல தெரியும் அந்தக் கிளை யானையின் துதிக்கை போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கிரேஸ்.

      நீக்கு
  4. அழகான படங்களும் அனுபவப்பகிர்வும் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கிரேஸ்.

      நீக்கு
  5. மூன்று பின்னூட்டங்கள் இட்டேன். அந்தரத்தில் நிற்பது போல இருக்கும் கிளை பற்றிய பின்னூட்டத்தை தயவு செய்து ஸ்பாமிலிருந்து விடுவிக்கவும்!

    பதிலளிநீக்கு
  6. ஆஹா... எவ்வளவு புராதானமான கோவிலில் உங்களுக்கு தரிசனம் வாய்த்திருந்திருக்கிறது. புண்ணியம் செய்தவர் நீங்கள். அந்த எளிய மக்களும் ஏகாந்தமாக இறைவனுக்கு பூசை செய்ய எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும். மிக அருமையான முக்கியமான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. மிக மிக அழகான கோயில்! பழமை சொட்டுகிறது!.

    அந்த மரம் தடி கிளை கீழே தழைந்திருப்பது ஏதோ ஒரு விலங்கு தண்ணீரில் எதையோ கவ்வ வருவது போல் தோற்றம் என் மனதில் அப்படித்தெரிந்தது!!! அதுன் வடிவம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. இப்படி கூட்டமில்லா கோயில் மனதைக் கவர்கின்றது, வெங்கட்ஜி.

    படங்கள் மிக அழகு அதுவும் வெளிப்புறத்தில் எடுத்திருக்கும் சிற்பங்கள் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. வாரணாசிக்கு எல்லாம் குழுவோடு பயணிக்காமல் இப்படித் தனியாகச் சென்றால்தான் நாம் தங்கி பார்க்க முடியும். கோயில் கோபுரம், சிவலிங்கம், குளம் மரம் என்று ஊரே அழகு. கிராமம் என்பதும் தெரிகிறது.

    சில சமயம் தோன்றும் எனக்கு என்னவென்றால், முன்னேற்றம் என்றும் பலரும் வர வேண்டும் என்றும் நாம் செய்வது அவற்றின் அழகியலைக் கெடுத்துவிடுகிறதோ என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. அரியதொரு கோயிலைக் காணும் அரிய வாய்ப்பும் அனுபவமும் உங்களுக்குக்கிடைக்கப்பெற்று எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    எப்படியோ நீங்கள் அவ்வளவு சிரமப்பட்டு அங்கு சென்ற போது தரிசிக்க முடியாமல் ஆகிவிடுமோ என்று வாசித்து வந்த போது அந்த இரு பெண்களின் வருகையும் அதுவும் தடியுடன் வந்து குரங்குள் சற்று நேரம் விலகி இருக்க, நீங்கள் இறைவனுக்கு அபிஷேகமும் செய்து தரிசிக்க முடிந்தது இறைவனின் அருள். இது போன்ற ஆலயங்கள் பரமாரிக்கப்பட வேண்டியது அவசியம். எல்லாம் இறைவன் சித்தம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. கோவில் மிகவும் அழகாக இருக்கிறது. சிற்பங்களும் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....