புதன், 7 ஆகஸ்ட், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பஞ்ச்க்ரோஷி யாத்ரா - சில தகவல்கள் - பகுதி இருபது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்


ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்



படம்: இணையத்திலிருந்து...

சென்ற பகுதியில் ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர் குறித்து எழுதியபோது வாரணாசி நகரில் மிகவும் பிரபலமான ஒரு யாத்திரை குறித்து சொல்லி இருந்தேன். வாரணாசி எனும் காசி நகரிலும் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இருக்கும் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் பஞ்ச்க்ரோஷி யாத்ரா என்கிற யாத்திரை நடக்கும் நாட்களுக்காக காத்திருப்பது வழக்கம்.  சுமார் 80 கிலோமீட்டர் தொலைவு நடைப்பயணமாக நடந்து யாத்திரை செய்வார்கள். இதற்கென இறைவனிடம் வேண்டிக் கொண்டு வருடா வருடம் இந்த யாத்திரையில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.  ஹிந்தியில் ஒரு கோஸ் (Kos) என்பது சுமார் 3.2 கிலோமீட்டர் தொலைவு.  அந்தக் கணக்கில் பார்த்தால் இந்த பஞ்ச்க்ரோஷி யாத்ரா என்பது 25 கோஸ் அளவு.  இந்த யாத்ரா சமயத்தில் பார்க்க வேண்டிய கோயில்கள் என ஐந்து கோயில்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  எதற்காக இந்த யாத்திரை, யாத்திரையின் வழி என்ன, எங்கே எப்படி தொடங்கும் போன்ற சில தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 


காசி நகரில் பலவித யாத்திரைகள் நடந்தாலும் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வதும், அதிக அளவில் வரலாற்றுக் குறிப்புகளில் இடம் பெற்றிருப்பதும் பஞ்ச்க்ரோஷி யாத்திரை மட்டுமே.  சித்திரை, வைகாசி, மாசி, ஆனி, ஆடி மாதங்களில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த யாத்திரையில் கலந்து கொள்பவர்கள் மோக்ஷத்தினை அடைவார்கள் என்பது நம்பிக்கை.  அதற்காக வேண்டுதல்கள் செய்து கொண்டு, இந்த யாத்திரையை இறைவன் அருளோடு நிச்சயம் நான் நடந்து முடிப்பேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு தொடங்குகிறார்கள்.  கிட்டத்தட்ட ஐந்து நாட்களில் இந்த யாத்திரையை நிறைவு செய்கிறார்கள்.  சிவராத்திரி சமயங்களில் ஒரே நாளில் யாத்திரையை நிறைவு செய்பவர்களும் உண்டு என்றாலும் ஐந்து நாட்கள் யாத்திரை அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் யாத்திரையாக இருக்கிறது. புனித நதியாம் கங்கையில் நீராடி, காசியின் ராஜாவான விஸ்வநாதரை தரிசிப்பதோடு, கால பைரவர், அன்னபூரணி, விசாலாட்சி, டுண்டி கணபதி ஆகியோரை தரிசனம் செய்து, ஞானவாபி அருகே சங்கல்பம் செய்து கொண்டு அதன் பிறகு மணிகர்ணிகா Gகாட் அருகே இருக்கும் சக்ரபுஷ்கரணி தீர்த்தம் அருகேயிருந்து யாத்திரை தொடங்குகிறது. 



படம்: இணையத்திலிருந்து...

இந்த யாத்திரை ஐந்து பாகங்களைக் கொண்டதாக அமைந்து இருக்கிறது. மணிகர்ணிகா Gகாட் அருகே ஆரம்பிக்கும் யாத்திரை, கர்த்மேஷ்வர், பீம்சண்டி, ராமேஷ்வர், ஷிவ்பூர் மற்றும் கபில்தாரா ஆகிய ஐந்து இடங்களில் (இவற்றை (p)ப(d)டாவ் என்று ஹிந்தியில் சொல்கிறார்கள்) கோயில் தரிசனம், ஓய்வு எனக் கடந்து மீண்டும் மணிகர்ணிகா Gகாட் பகுதியில் முடிவடைகிறது. யாத்திரையின் முடிவில் மீண்டும் ஒரு முறை விஸ்வநாதர், கால பைரவர், அன்னபூரணி, விசாலாட்சி, டுண்டி கணபதி ஆகியோரின் தரிசனமும் நிச்சயம் உண்டு. ஆதிகாலத்தில் மட்டுமல்ல, இப்போதும் இந்த யாத்திரை முழுவதும் வெற்றுக் கால்களுடன், bபக்தி bபாவத்துடன்  நடந்தே செல்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.  சாதாரணமாக இப்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டுக் கொள்வது வழக்கமாகிவிட்டது. செருப்பில்லாமல் நடப்பது என்பதை இப்போதைய குழந்தைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முன்பு சிறு வயதில் நடந்திருந்தாலும் தற்போது செருப்பில்லாமல் நடக்கச் சொன்னால் பலராலும் நடக்க முடியாது என்பதே நிதர்சனம்.  இதில் இந்த யாத்திரை செல்பவர்கள் 80 கிலோ மீட்டர் தொலைவை காலணி அணியாமல் நடந்து செல்கிறார்கள்.  


இந்த யாத்திரை பாதையில் மொத்தம் 108 சிவன் கோவில்கள் இருக்கின்றன என்றும் தெரிகிறது - தொடங்கும் இடமான மணிகர்ணிகா Gகாட்-இல் இருந்து வரிசையாக கோவில்களில் தரிசனம் செய்து கொண்டு, இரவுகளில் தங்கி, மீண்டும் யாத்திரை தொடங்கி ஐந்து நாட்களில் யாத்திரையை நிறைவு செய்வதற்கு யாத்திரை நாட்களில் நிறைய வசதிகள் இருக்கின்றன.  வழியெங்கும் தங்குமிடங்களும், உணவு உண்பதற்கான வசதிகளும் இருக்கின்றன.  மணிகர்ணிகா Gகாட்டிலிருந்து சுமார் 3 கோஸ் தொலைவில் இருக்கும் கர்த்மேஷ்வர் கோயில் குறித்த தகவல்களை இதற்கு முந்தைய பகுதியில் நாம் பார்த்தது நினைவில் இருக்கலாம். இரண்டாவது படாவ் கர்த்மேஷ்வர் கோவிலிலிருந்து 5 கோஸ் தொலைவில் இருக்கும் பீம் சண்டி!  இந்த இடத்தில் உக்கிரமான ரூபத்தில் பீம் சண்டி எனும் துர்கா தேவி கோவில் இருக்கிறது கோவில் வளாகத்தில் சண்டிகேஸ்வரர் எனும் நாமத்துடன் சிவபெருமானும் இருக்கிறார்.  தவிர பஞ்ச பாண்டவர்கள் சிலைகளும், கந்தர்வ சாகர் குண்ட் என்ற பெயருடைய அழகிய குளமும் இருக்கிறது. 



படம்: இணையத்திலிருந்து...

அடுத்தது சுமார் 7 கோஸ் தொலைவில் அமைந்திருக்கும் ராமேஷ்வர்.  இருப்பதிலேயே அதிக தொலைவு இருக்கும் பகுதி! ராமேஷ்வர் பகுதியில் இருப்பது ராமேஷ்வர் மஹாதேவ் மந்திர்.  இராவணனை இலங்கையில் வதம் செய்த பிறகு இராமபிரானுக்கு ஏற்பட்ட பிரஹ்மஹத்தி தோஷத்தினை போக்கிக்கொள்ள இந்த இடத்தில் இராமபிரான் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்ததோடு தவமும் இருந்தார் என்று ஒரு கதை.  ராமேஷ்வரிலிருந்து ஷிவ்பூர் 4 கோஸ் தொலைவு. பஞ்ச பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி சிலைகள் இந்த ஷிவ்பூர் பகுதியில் இருக்கின்றன.  நாட்டை இழந்து அலைந்து திரிந்த சமயத்தில் பஞ்ச பாண்டவர்கள் இந்த பஞ்ச்க்ரோஷி யாத்திரை செய்து சிவபெருமானை வழிபட்டார்கள் என்றும் ஒவ்வொருவரும் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள் என்றும் சொல்வதுண்டு.  இப்படி நிறைய இடங்களில் கதைகள் சொன்னாலும், ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு கோயில்கள், கதைகள்.  இந்த இடத்தில் த்ரௌபதி பெயரில் ஒரு குளமும் இருக்கிறது.


ஷிவ்பூரிலிருந்து கபில்தாரா 3 கோஸ். இந்த கபில்தாராவில் கர்த்ம் முனிவரின் மகனான கபில் முனிவர் அமைத்த ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இங்கே பூஜைகள் செய்த பிறகு கடைசியாக கபில்தாராவிலிருந்து மணிகர்ணிகா Gகாட் 3 கோஸ் வரை நடந்து சென்று யாத்திரையை மணிகர்ணிகா வரை நடந்து விஸ்வநாதர், கால பைரவர், அன்னபூரணி, விசாலாட்சி, டுண்டி விநாயகர் தரிசனத்துடன் நிறைவு செய்கிறார்கள்.  ஆக மொத்தம் இந்த யாத்திரை 25 கோஸ் (80 கிலோ மீட்டர்). ஐந்து நாட்களில் 80 கிலோமீட்டர் என்பது தொடர்ந்து நடப்பவர்களுக்கு பெரிய விஷயம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் சாதாரண மனிதர்களால் யாத்திரையை நிறைவு செய்வதற்கு இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையும் பக்தியும் மட்டுமே உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.  இந்த யாத்திரை குறித்து சில காணொளிகளும் இணையத்தில் இருக்கின்றன.  ஒரு சில தளங்களில் விரிவான தகவல்களும் ஹிந்தி/ஆங்கில மொழிகளில் இருக்கின்றது.  காசி குறித்து பல தகவல்களைக் கொண்ட ஒரு தளமாக வாரணாசி குரு எனும் தளத்தினைச் சொல்லலாம். நிறைய தகவல்கள், அனுபவங்கள் இத் தளத்தில் உண்டு. நேரம் கிடைத்தால் பாருங்கள். 


இந்த யாத்திரை குறித்து அறிந்து இருந்தாலும், என்னால் இப்படி 80 கிலோ மீட்டர் நடைப்பயணம்/யாத்திரையை செய்ய முடியுமா என்ற கேள்வி எனக்குள் இருந்தது.  தகுந்த நட்பு கிடைத்தால் இந்த மாதிரி ஒரு பயணத்தினை என்னாலும் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.  வாய்ப்பும் அமைந்தால், ஈசனின் அருள் இருந்தால் இப்படி ஒரு பஞ்ச்க்ரோஷி யாத்திரை செய்து வர வேண்டும். அப்படிச் சென்றால் நிச்சயம் அந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.  வாரணாசிக்கு இந்த முறை சென்ற போது கிடைத்த அனுபவங்களையும், தெரிந்த தகவல்களையும் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து வருகிறேன். இந்தப் பதிவுகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்றே தோன்றுகிறது.  இந்தப் பயணத்தில் வாரணாசி தவிர்த்து வேறு சில இடங்களுக்கும் சென்று வந்தேன் என்பதால் இன்னும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உண்டு.  அவையும் வரும் பகுதிகளில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

7 ஆகஸ்ட் 2024


28 கருத்துகள்:

  1. யாத்திரை குறித்தான தகவல் சுவாரஸ்யம்.  இந்த அளவிலாவது மதத்தைப் பின்பற்றுபவர்கள் இருப்பதும் சந்தோஷம்.  செருப்பில்லா கால்களுடன் 80 கிலோமீட்டர் நடைபயண யாத்திரை - நினைத்தாலே வலிக்கும்!  பக்தி இல்லையா, மனோ திடம் இல்லையா...  தெரியாது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தமிழ்நாட்டிலும் ஏகப்பட்ட யாத்திரைகள் நடைப்பயணத்தில் நிகழ்த்துகிறார்கள். சென்னையிலிருந்து மேல்மருவத்தூர், வேளாங்கண்ணி, திருத்தணி, என்று இரு மதத்தினரும் பயணிக்கிறார்கள்.  வழிநெடுக பக்தர்கள் அவர்களுக்கு இலவச உணவு, தண்ணீர் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தமிழகத்திலும் இப்படி யாத்திரம் செய்வதை பார்த்ததுண்டு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பஞ்சக்ரோஷி யாத்திரை பற்றிய பகுதி சுவாரசியம். தெரியாத தகவல்கள் நிறையுள்ளன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. இன்றைக்கு நடைப் பயிற்சி செருப்பில்லாமல் செல்லலாமா என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலத்தில் செருப்பில்லாமல் நடந்திருக்கிறோமே! முயற்சி செய்தீர்களா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. சுவாரஸ்யமான தகவல்கள். சில தகவல்கள் பிரமிப்பை அளிக்கின்றன. இணையத்திலிருந்து நீங்கள் வெளியிட்டிருக்கும் படம் கூட அந்த வகையைச் சார்ந்தது தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  6. பஞ்சக்ரோஷி யாத்திரை பற்றிய விவரங்கள் புதியவை...

    எதிர்வருகின்ற ஞாயிறு அன்று இங்கேயும் ஒரு பாத யாத்திரை.. வேறொரு கோயில் விசேஷமும் வருகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. பஞ்சக்ரோஷி யாத்திரை - ஆர்வத்தைத் தூண்டுகிறது வெங்கட்ஜி! ஆம் சமீபகாலங்களில் செருப்பு போட்டே நடப்பது பழக்கமாகிவிட்டது.

    என்னைப் போன்ற ஸ்வீட் வாசிகளுக்கு காலில் எதுவும் குத்தக் கூடாதுன்னு வேற சொல்லி வைச்சிருக்காங்களே!! இருந்தாலும் எனக்கு ஆர்வம் உண்டு இப்படி செருப்பில்லாமல் நடக்க. நான் இங்கு பார்க்கில் அப்படி நடப்பதுண்டு, அங்கு சுத்தமாக இருக்கும் என்பதால்.

    நல்ல தகவல்கள் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலில் - பெரிய கோவில்களில் செருப்பில்லாமல் தானே நடக்கிறோம் இல்லையா - ஆனால் அங்கு சுத்தமாக இருக்கும்தான் - அப்படி நினைத்துக் கொண்டு நடந்து விடலாம் இல்லை இப்பவும் பழகலாம் என்று எனக்குத் தோன்றியது.

      திருப்பதி மலை ஏறும் போது செருப்பில்லாமல் தானே ஏறினோம்.

      சிறிய வயதில் செருப்பில்லாமல்தானே நடந்த அனுபவங்கள்! இதை எல்லாம் நினைத்து மனதளவில் தயாராகிவிட்டால் நடந்துவிடலாம்.

      கீதா

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    3. மனதளவில் தயாராகிவிட்டால் நடந்து விடலாம் - அதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. ராமேஸ்வரத்தில்தான் ராமர் பிரம்மஹத்திக்கு சிவ பூஜை செய்து பரிகாரம் செய்வார் என்று கதை அறிந்ததுண்டு. காசியில் ராமேஷ்வர் எனும் பகுதியிலுமா...இது இப்போதுதான் அறிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை தானே எல்லாம் - இப்படி பல கோவில்கள்! எல்லாம் நல்லதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. என்னால் இப்படி 80 கிலோ மீட்டர் நடைப்பயணம்/யாத்திரையை செய்ய முடியுமா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. //

    நிச்சயமாக முடியும் ஜி! உங்களால்.

    தகுந்த நட்பு கிடைத்தால் இந்த மாதிரி ஒரு பயணத்தினை என்னாலும் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.//

    கண்டிப்பாக நிறைவேறும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடை நல்லது - நடக்கவும் முடியலாம்! இந்த வருடம் முடிந்துவிட்டது என தகவல். அடுத்த வருடம் யோசிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. அபூர்வ தகவல்கள்,அழகிய புகைப்படம். நடைப்பயிற்சிக்காக நடப்பதை தவிர நடப்பதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பானுமதி ஜி.

      நீக்கு
  12. முதல் படம் இரு குழந்தைகளும் அழகு.

    //சாதாரண மனிதர்களால் யாத்திரையை நிறைவு செய்வதற்கு இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையும் பக்தியும் மட்டுமே உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.//

    ஆமாம், நடைபயண யாத்திரைக்கு மன உறுதியும், இறைநம்பிக்கையும், தான் உதவும்.

    உங்களால் முடியும் பஞ்ச்க்ரோஷி யாத்திரை போய் வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. எண்பதுகிலோமீற்றர் பாதயாத்திரை காலணி இல்லாமல் என்பது நினைத்துப்பார்க்க முடியாதது.

    பக்தியும் வேண்டுதல்களும் கூடிவரும் போது இவையும் இயல்பாகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலணி இல்லாமல் இத்தனை தொலைவு நடப்பது கடினமே மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....