திங்கள், 22 ஜூலை, 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கால பைரவர் கோவில் - பகுதி பதினான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - வந்தே பாரத் பயணம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - இரயில் அனுபவங்கள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - காசி தமிழ் சங்கமம்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - ஹிந்தி அவஸ்தை


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படகோட்டிகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கையில் படகு உலா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - கங்கைக்கரை படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மேலும் சில படித்துறைகள்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - புதிய காசி விஸ்வநாத் மந்திர்


வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சிறிது வயிற்றுக்கும்




காசி நகரம் என்றாலே காசி விஸ்வநாத் மந்திர் எனப்படும் சிவ பெருமானின் பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயமே நமக்கு நினைவுக்கு வரும்.  ஆனால் காசி நகரைக் காப்பவராக கருதப்படுபவர் யார் தெரியுமா? சிவபெருமானின் ருத்ர ரூபமாகக் கருதப்படும் கால பைரவர் தான்.  நகரில் எந்த விஷயம் நடக்க வேண்டுமென்றாலும் கால பைரவரின் அனுமதியின்றி நடத்த முடியாது.  காசி நகரின் இப்பகுதியில் இருக்கும் காவல் நிலையம் - கோட்வாலி என்று ஹிந்தியில் அழைக்கப்படும் காவல் நிலையத்தின் பிரதான அதிகாரியாக கால பைரவர் இருக்கிறார் என்றும் அதனால் அவருக்கு காவல் நிலையத்தில் பிரதான இருக்கை உண்டு என்பதும் உங்களுக்குத் தெரியுமா? காவல் நிலையத்தில் உயர் அதிகாரியான Station House Officer கூட தனக்கென்று வேறு இருக்கையை உபயோகிக்கிறார்.  கால பைரவருக்கான இருக்கையில் கால பைரவரின் படம் ஒன்று வைத்து பூஜைகள் செய்கிறார்கள்.  அந்த இருக்கையில் யாரும் அமர்வதில்லை.  அந்த அளவிற்கு காசி நகரில் கால பைரவருக்கு மரியாதையும் பயபக்தியும் உண்டு.  




காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வந்த பலன் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் காசியின் காவல் நாயகனான கால பைரவரையும் நிச்சயம் தரிசிக்க வேண்டும் என்றும், அப்படி தரிசிக்காவிடில் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் நமக்கு கிடைக்காது என்றும் நம்பிக்கை. காசி விஸ்வநாதர் காசி நகரின் அரசர் காசி விஸ்வநாதர் என்றால் கால பைரவர் காசி அரசின் காவல் படைத்தளபதி - அவர் இன்றி காசியில் ஒரு அணுவும் அசைவதில்லை! அதனால் இங்கே செல்லாமல் பக்தர்கள் காசி நகரை விட்டு திரும்புவதில்லை. தவிர சிவபெருமானே கால பைரவரை காசி நகரின் சேனாதிபதியாக, காவலுக்கு அதிபதியாக நியமித்து இருப்பதால் காசி நகரில் பதவி ஏற்கும் அனைத்து அதிகாரிகள், நீதிபதிகள், சட்டசபை/பாராளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்னரும், பதவி ஏற்றுக் கொண்ட பின்னரும் கால பைரவர் கோயிலுக்குச் சென்று தரிசனம்/பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.  அப்படிச் செய்யாமல் விட்டால் அவர்களது பணியில் பல இடைஞ்சல்கள் வந்துவிடும் என்பதும் ஒரு நம்பிக்கை.




காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே சுமார் பத்து நிமிடங்கள் நடந்தால் கால பைரவர் கோயிலை அடைந்து விடலாம். ஆனால் உள்ளே சென்று பார்க்க, சாதாரண நாட்களிலேயே எப்படியும் ஒரு மணி நேரம் ஆகிவிடும்.  சிறு சிறு சந்துகள் வழியே சென்று தான் கால பைரவரை பார்க்க முடியும்.  எந்த சந்தின் வழி உள்ளே வருகிறோம் எந்த சந்தின் வழி வெளியே வருவோம் என்று தெரியாமல் செல்ல வேண்டியிருக்கும்.  கோயிலுக்குப் போகும் வழியெங்கும் ஸ்வாரஸ்யம் தான். சிறு சிறு கோயில்கள், வீடுகள், கடைகள், மனிதர்கள் கூட்டம் என வழியெங்கும் ஸ்வாரஸ்யமான விஷயங்களை கவனிக்க முடியும். நாம் வரிசையில் செல்லும்போதே சிலர் அங்கே இருக்கும் பூசாரிகளிடம்/தரகர்களிடம் காசு கொடுத்து குறுக்கு வழியில் செல்வது அதிகம் நடக்கிறது.  அவர்களிடம் சண்டை போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதால் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.  இப்படி முன்னால் சென்றால் கால பைரவர் அவர்களை தனியாக கவனிக்கப் போவதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. 




வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் காசி விஸ்வநாதரையும் கால பைரவரையும் தரிசிக்கிறார்கள் என்றால் உள்ளூர் மக்களும் வட இந்தியர்களும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக அளவில் இங்கே வந்து தங்களது கவலைகள், பிரச்சனைகள், உபாதைகள் என அனைத்தையும் கால பைரவரிடம் சொல்லி, பூஜைகள் செய்து அவற்றுக்கு எல்லாம் நிவாரணம் அவரிடம் கிடைக்கும் என்பதோடு மன நிம்மதியும் உண்டாகும் என்பதில் அதிக அளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இங்கே இருக்கும்.  பக்தர்களின் நற்செயல்களுக்கு பலன்கள் அளிக்கும் அதே நேரம் தீய செயல்களுக்கு உண்டான தண்டனையும் கால பைரவர் அளிப்பார் என்பது இங்கே இருக்கும் பக்தர்கள் சொல்லும் விஷயம்.  கால பைரவர் பிரம்மஹத்தி தோஷம் இருக்க அதனைத் தீர்க்க மூன்று லோகங்களிலும் அலைந்து இங்கே வந்த பிறகு தான் அவரது பிரம்மஹத்தி தோஷம் தீர்ந்தது என்றும் அதன் பிறகு காசி விஸ்வநாதர் குடிகொண்டிருக்கும் காசி நகரிலேயே கால பைரவர் தங்கி தவம் செய்ததாகவும் காசி நகரைச் சுற்றி எட்டு இடங்களில் இவரது ரூபங்கள் வெளியானதாகவும் நம்பிக்கை. 



கோயிலுக்குச் செல்லும் சிறு சிறு சந்துகளில் இரண்டு புறமும் வீடுகள், கடைகள் என நிறைய உண்டு. அப்படி இருக்கும் வீடுகள்/கடைகள் போன்றவற்றின் சுவற்றில் வண்ண ஓவியங்களும் வரைந்து இருக்கிறார்கள். கோயிலுக்கு எடுத்துச் செல்ல பூஜை சாமான்கள், பூக்கள் என இருப்பதோடு இக்கோயிலில் விசேஷமாக பூஜை செய்யப்பட்டு தரப்படும் வண்ண வண்ண கயிறுகள் இங்கே கிடைக்கின்றன.  நாம் கொண்டு செல்லும் கயிறுகளை காலை பைரவர் காலடியில் வைத்து அங்கே இருக்கும் பூசாரிகள் நம் கைகளில்/கழுத்தில் கட்டி விடுகிறார்கள். அப்படிச் செய்தால் நம்மை பிடித்திருக்கும் தீய சக்திகள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. கால பைரவருக்கு வெள்ளை, சிவப்பு, ஊதா போன்ற நிறத்தில் இருக்கும் பூக்களே அதிகம் ப்ரீத்தி என்றும் நம்பிக்கை இருப்பதால் இந்த நிறத்தில் உள்ள பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன.  சுற்றிலும் உள்ள கடைகளில் இவை தவிர நிறைய பித்தளை பூஜா பாத்திரங்களும் கிடைக்கின்றன.  அவற்றையும் வாங்கி கோயிலுக்கு கொடுப்பதையும் இங்கே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலும் மொழி தெரியாதவர்கள் இங்கே கடைக்காரர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது. 





பூக்கள் தவிர, ஒரு சில நாட்களில் கால பைரவருக்கு மதிரா என அழைக்கப்படும் மதுவும் சமர்ப்பணம் செய்வதுண்டு.  ஆனால் எல்லா நாட்களிலும் இப்படி மது கொடுப்பதை பார்க்க முடிவதில்லை.  கால பைரவரின் வாகனமாக நாய் இருக்கிறது. ஆனால் கால பைரவர் கோயிலில் நாம் பார்க்கும்போது அதிக அளவு பூக்களால் அலங்காரம் செய்திருப்பதால் நமக்கு கால பைரவரின் மீசை வைத்த முகம் மட்டுமே தெரிகிறது.  அவரது உடலோ, அவரது வாகனமோ எதையும் பார்க்க முடிவதில்லை.  ஒரு வேளை அதிகாலை நேரத்தில் அங்கே சென்றால் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை.  கால பைரவரின் வாகனமாக இருக்கும் பைரவருக்கு இங்கே உள்ளவர்கள் வெள்ளை நிற பர்ஃபியை நைவேத்யம் செய்கிறார்கள்.  கோயிலைச் சுற்றி இருக்கும் சந்துகளில் பல இனிப்பு கடைகள் இருக்கின்றன - அங்கே வெள்ளை நிற பர்ஃபியைத் தவிர வேறு பால் இனிப்புகளும் கிடைக்கின்றன.  அவற்றையும் பக்தர்கள் வாங்கிக் கொண்டு செல்வதுண்டு - அவை கால பைரவரின் காலடியில் வைத்து திருப்பித் தந்துவிடுகிறார்கள். 





இந்த முறை வாரணாசி பயணத்தில் ஒரு முறை கால பைரவர் சன்னதிக்குச் சென்று அவரை தரிசித்து வந்தேன்.  வரிசையில் நின்று சுற்றி நடப்பதை பார்த்துக் கொண்டே மெதுவாக நகர்ந்து சென்று கால பைரவர் தரிசனம் கிடைக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது.  ஆனால் ஆலயத்திற்குள் நின்று நிதானித்து தரிசனம் செய்ய வேண்டுமெனில் கொஞ்சம் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும் - நடுவில் செல்லாமல் பக்கவாட்டில் சென்று சற்று ஓரமாக சுவர் அருகே நின்று கொண்டால் சில நிமிடங்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியும். நடுவில் செல்லும் போது தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதால் ஓரிரு வினாடிகள் தான் நம்மால் கால பைரவரை தரிசனம் செய்ய முடியும். பெரிய மீசை கொண்ட அவரது கம்பீர முகத்தை தரிசிப்பதற்கு உள்ளாகவே நம்மை துரத்தி விடுகிறார்கள். அதன் பிறகு எங்கே அவரிடம் நம் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் வைப்பது? அதனால் சற்று ஓரமாக நின்று சில நிமிடங்கள் பிரார்த்திக்க முடிந்தது என்பதில் மகிழ்ச்சி.  







கோயிலுக்குச் சென்று தரிசனம் முடிந்து திரும்புவது வேறு வழியாக இருப்பதால் மீண்டும் வரிசை ஆரம்பிக்கும் சிறு சந்துக்குள் சென்று அங்கே எனது காலணி வைத்திருந்த கடையை தேடி அங்கிருந்து காலணி அணிந்து கொண்டு புறப்பட்டேன்.  இது போன்ற பக்தர்கள் கூட்டம் நிறைந்த கோயில்களில் தரிசனம் செய்து திரும்புவது என்பது பெரிய சாகசச் செயலாகவும் இருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தம் தரும் விஷயம் தான். நின்று நிதானித்து இறைவனை தியானிக்க முடிவதில்லை! இருந்தாலும் வாரணாசி செல்லும் நாட்களில் ஒரு முறையேனும் கால பைரவரை தரிசித்து நமக்கு நல்லதையே அருள வேண்டிக்கொள்வது நல்லது.  உங்களுக்கு காசிக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தால் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து கொள்வதோடு, காசி நகரின் பிரதான காவலர்/சேனாதிபதியான கால பைரவர் சன்னதிக்கும் சென்று அவரது அருளை பெற எனது வாழ்த்துகள்.  மேலும் தொடர்ந்து காசி/வாரணாசி குறித்த தகவல்களை வரும் பகுதிகளில் பார்க்கலாம். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

22 ஜூலை 2024


14 கருத்துகள்:

  1. காலபைரவர் தரிசன நினைவுகளை மீட்டெடுத்தது பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு உங்கள் நினைவுகளை மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. காலை பைரவர் வழிபாடு குறித்த தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. காசி கால பைரவர் வழிபாடு பற்றிய விவரங்கள் வாசிக்க மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நாங்களும் தரிசனம் செய்து கொண்டோம் உங்கள் வாயிலாக.

    இப்படி சிறு சிறு சந்துகள் வீடுகள் கடைகள் வழி கோயிலுக்குச் செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும் இல்லையா? கோயிலைச் சுற்றி ஆக்ரமிப்புகளாகத்தான் இருக்கும் இவை எல்லாம். காசியில் கோயில்கள் வீடுகளுக்கு, கடைகளுக்கு இடையில் என்பது போல் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. இல்லையேல் முன்பும் காசி இப்படித்தான் இருந்ததோ? இவ்வளவு கூட்ட நெரிசல்களில் ஃப்ரீயாகப் போய் கும்பிட்டு வருவதற்கு வசதி இல்லாமல் போய்விட்டதே என்பது நீங்கள் சொல்லியிருப்பது போல் வருந்தத்தக்க விஷயம் தான். ஆதங்கமும் கூட.

    துளசிதரன்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடுகளுக்குள் கோயில் - அப்படித்தான் இருக்கிறது. தற்போது நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. இன்னும் சில வருடங்களில் பக்தர்களுக்கு மேம்பட்ட வசதிகள் கிடைக்கும். தற்போது காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயில்கள் நன்றாக இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  4. வாசகம் மிகவும் பிடித்தது வெங்கட்ஜி!

    காலபைரவர் பற்றிய தகவல்களும் வழிபாட்டு முறையும் பிரசாதம் பற்றிய தகவல்களும் சிறப்பு.

    ஆமாம் ஜி அந்த டெக்னிக் அதாவது வரிசையிலிருந்து கொஞ்சம் விலகி அதுவும் சன்னதி கிட்ட வரும் போது கொஞ்சம் அப்படி ஒதுங்குவது போல செய்து கொண்டால் தரிசனம் சில நொடிகள் கிடைக்கும். முன்பு நான் திருப்பதியில் அப்படிச் செய்ததுண்டு. அடுத்த முறை சென்ற போது அங்கிருந்த காவலர்களுக்கு அந்த டெக்னிக் தெரிந்துவிட்டது போல!!!! என்னைத் தொட்டு கொஞ்சம் அழுத்தி வரிசைல வாங்கன்னு இழுத்து விட்டுட்டாங்க!!!! பாருங்க நானோ நாலடியார், சைடில் பார்த்தாலும் பார்க்க முடியாது. எம்பி எம்பி நோ சான்ஸ்!!!!!!! எனவே திருப்பதிக்குச் செல்வதை தவிர்த்துவிட்டேன். கூட்டமே இல்லாம அவர் பல கோயில்களில் இருக்காரே குறிப்பாக நாராயணவரம் அங்கு அடிக்கடி போனதுண்டு. சென்னையில் இருந்தவரை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      கால பைரவர் தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      அதிக கூட்டம் இருந்தால் எனக்கும் பிடிப்பதில்லை. வாரணாசி நகரில் இருந்த நாட்களில் ஒரே ஒரு முறை மட்டுமே இங்கே சென்றேன். மற்றபடி சென்ற கோயில்களில் எல்லாம் கூட்டம் இல்லாத இடமாகவே பார்த்துச் சென்றேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. இங்கும் படங்களில் வரிசை கூட்டத்தைப் பார்க்கறப்ப திகிலாக இருக்கு. கொரோனாவில் ஏன் மூடினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    ஆனாலும் அந்தக் கடைகள் எல்லாம் ஈர்க்கின்றன. வாய் நோக்கத்தான்! இப்படியான கடைகளைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.

    ஆமாம் காசி விஸ்வநாதரின் காவல் தளபதி இந்தக் கால பைரவர். அனுமனுக்கும் இந்தக் காலபைரவ்ருக்குமான ஒரு கதை கூட உண்டே!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிக அளவிலான கூட்டம் கொஞ்சம் திகில் தரக்கூடியதே.

      கடைகளும், அவற்றில் இருக்கும் வண்ண வண்ண பொருட்களும் கண்களை ஈர்க்கக் கூடியதே.

      கால பைரவர், அம்மன், சிவ பெருமான் குறித்த கதைகள் உண்டு. நிறைய இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    கால பைரவர் தரிசனத்திற்கு நிற்கும் கூட்டத்தைப்பார்த்தால் பயமாக இருக்கிறது. ஒரு மணி நேரம் வரிசையில் நின்று என்று படிக்கும் போது மேலும் கவலை அளிக்கிறது.
    முன்பு ஒருதடவை மட்டும் ஆடி மாதம் திங்கள் கிழமை போய் கூட்டத்தில் அக்ப்பட்டு கொண்டது நினைவில் வந்து போனது.
    ஆனாலும் இவ்வளவு கூட்டம் இல்லை. பைரவர் கோயில் பண்டா (குருக்கள்) நம்மை மயில் பீலீயால் அடித்து மீன்டும் வருக என்று சொல்வதை சொல்லவில்லையே! இப்போது அப்படி செய்வது இல்லையோ!
    மீசை உள்ள வெள்ளி கவசம் சாற்றிய பைரவர் படம் எங்கள் வீட்டில் இருக்கிறது. மதுரையில் வீட்டுக்கு அருகில் இருந்த சிவன் கோவிலில்
    ஞாயிறு கூட்டு வழி பாடு செய்வோம் முன்பு.
    படங்கள், விவரங்கள் எல்லாம் பயன் உள்ளவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      அதிக கூட்டம் தான். மயில் பீலியால் அடிப்பது இன்றைக்கும் தொடர்கிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் இது கொஞ்சம் குறைவு. நான் சென்ற அன்று எனக்கு இந்த மயிலிறகு கொத்தால் அடி கிடைக்கவில்லை!

      படங்கள், தகவல்கள் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. காசி விஸ்வநாதர் தரிசனத்துடன் காள பைரவர் தரிசனம் முக்கியம் அறிந்துகொண்டோம்.

    படங்கள் தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....