செவ்வாய், 9 ஜூலை, 2024

கதம்பம் - மஞ்சள் குங்குமம் - வாய்ப்புகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட த்வாரகா - சோம்நாத் பயணத் தொடர் - பகுதி நான்கு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


மஞ்சள் குங்குமம் - 22 ஜூன் 2024:




பொதுவாக வீட்டில் நடைபெறும் விசேஷங்களிலோ, யார் வீட்டுக்கேனும் நவராத்திரி கொலு அல்லது பண்டிகைகள் போன்றவற்றுக்குச் செல்லும் போதோ வெற்றிலை பாக்குடன் மஞ்சளும் குங்குமமும் வைத்து தருவது வழக்கம்! இவை அழகிய சிறிய டப்பாக்களிலோ, பூக்குடை போன்ற வடிவங்களிலோ அல்லது பாக்கெட்டுகளிலோ கூட தரக்கூடும்!


என்றாவது இவற்றை எல்லாம் யாராவது திறந்து பார்த்திருக்கிறார்களா???  அல்லது  இவற்றில் இருந்து குங்குமமோ மஞ்சளோ எடுத்து உபயோகித்திருக்கிறார்களா???


பொதுவாக தாம்பூலத்தில் வைத்து தரும் பிளவுஸ் பிட்களை மேட்சிங் இல்லாமல் போனால் ரொட்டேஷனில் விட்டு விடுவது தான் வழக்கம்! அவை அளவில் சிறியதா! எண்ணெய் குங்குமம் போன்ற கறைகள் இருக்கா! போன்றவற்றையெல்லாம் பார்க்காது யாருக்கேனும் கொடுத்து விடுவார்கள்! அவை அப்படியே பலரின் வீடுகளில் சுற்றி சுற்றி ஒருநாள் நமக்கே வந்து சேரும்...🙂


அது போல தான் இந்த மஞ்சள் குங்கும டப்பாக்களும்!! சுற்றி சுற்றி வலம் வரும்! அதையும் மீறி விமோசனத்துக்காக  ஒருநாள் அதை யாரேனும் திறந்து பார்த்தால் உள்ளே ஒன்றுமே இருக்காது!! இல்லையென்றால் வண்டுகளோடு காணப்படும்!! பாக்கெட்டுகளிலும் இதே நிலை தான்!! 


கோபுரம் போன்ற பிராண்டுகளில் தரமாகவும் அதேசமயம் நீடித்தும் இருக்கிறது! மற்றவற்றில் எல்லாம் பொதுவாக இந்த மாதிரி மஞ்சள் குங்குமத்தில் கலர்ப்பொடிகள் தான் இடம்பெற்றுள்ளன!


கடந்த சில வருடங்களாக எனக்கு கிடைப்பவற்றில் எல்லாம் நான் இந்த வேலையை தவறாது செய்து கொண்டிருக்கிறேன்! மஞ்சள் குங்கும டப்பாக்களை பிரித்து பார்த்து நன்றாகவும் தரமாகவும் இருந்தால் மட்டுமே பத்திரப்படுத்தி வைத்து  யாருக்காவது வைத்துத் தருகிறேன்! இல்லையென்றால் அவற்றை மீண்டும் வலம் வர விடாமல் டிஸ்போஸ் செய்து விடுகிறேன்!


மஞ்சள் கிழங்கோ, அல்லது மஞ்சள் குங்கும டப்பாக்களோ அல்லது  பாக்கெட்டுகளோ ப்ரீசரில் தான் வைத்துக் கொண்டு தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கிறேன்!


இது சிறிய விஷயம் தான் என்றாலும் நேரம் இருக்கும் போது நீங்களும் முயற்சி செய்து இதுபோன்ற கலப்படங்களை கண்டறிந்து அப்புறப்படுத்தலாமே! தெரிந்தே ஒருவருக்கு ஏன் தீங்கு செய்ய வேண்டும்!!!


*******


வாய்ப்புகள் - 29 ஜூன் 2024:


வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் போது அதை விட்டுவிடாமல் இறுகப் பற்றிக் கொள்ளணும் என்று சொல்வதைக் கேட்டிருப்போம்! அதைப் போல எல்லாத்துக்கும் நேரம் வந்தா தான் எல்லாம் நடக்கும்! நாம நினைச்சா மட்டும் போதுமா?? என்று சொல்லியும் கேட்டிருப்போம்! எதற்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா??


கற்றலில் அடுத்த அடியை எடுத்து  வைத்திருக்கும் விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு! இரண்டு மாதங்களாக நான் சமஸ்கிருதம் கற்று வருகிறேன் என்பதை இங்குச்  சொல்லியிருந்தேன்! ஹிந்தி எழுத படிக்கத் தெரிந்ததால் சமஸ்கிருதம் எளிதாக இருக்கிறது என்றால் இப்போது சமஸ்கிருதம் கற்பதால் அதை referenceஆக வைத்து அதோடு தொடர்புடைய இரண்டு வகுப்புகளிலும் சேர்ந்திருக்கிறேன்...🙂


20 வயதில் நின்று விட்ட கற்றல் என்பது காலத்தின் ஓட்டத்தில் பல அனுபவங்களுக்குப் பிறகு எனக்கு 40+ல் கிட்டியிருக்கிறது! அதுவும் ஆன்லைன் கல்வி முறையில் இப்போது எதுவும் சாத்தியமே! உலகின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களையும் இந்த வகுப்புகள்  ஒன்றிணைக்கிறது! வயது வித்தியாசமின்றி நட்புடன் கூடிய கற்றல் முறை!


அன்றாடம் அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விதமான வகுப்புகள்! அதில் கிடைக்கும் நட்புவட்டம்! நடத்தப்படும் பாடங்களும் அவைக் குறித்தான டெஸ்ட்டுகள், ஹோம்வொர்க், டிஸ்கஷன், க்ரூப் ஸ்டடி என்று வாழ்க்கை வேறு கோணத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது! கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மகளை விட நான் இப்போது பிஸியாக இருக்கிறேன்...🙂


சிறுவயதில் படித்ததை, கேட்டதை எல்லாம் சட்டென்று நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது! அவற்றில் ஒரு சில விஷயங்கள் இன்னும் கூட நினைவில் இருக்கு! ஆனால் இப்போது  எந்தவொரு விஷயத்தையும் மனதில் பதிய வைப்பது தான் சவாலான விஷயமாக இருக்கிறது! செல்ஃபோனுக்குள் சுருங்கிப் போய்விட்ட வாழ்க்கை முறையல்லவா!!!


அப்போது Bright studentஆக இருந்தது பெரிய விஷயமல்ல...🙂 இப்போதும் அப்படி இருக்க முடியுமா என்று தான்  முயன்று வருகிறேன்! வீட்டுப் பொறுப்புகளும், வேலைகளும் என்னை ஒருபுறம் நெருக்கிக் கொண்டிருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்! பார்க்கலாம்!


அப்புறம்! ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே! எல்லா வகுப்புகளிலுமே ரோல் நம்பர் ஒன் நான் தான்...🙂


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


10 கருத்துகள்:

  1. முகநூலிலும் படித்தேன்.  தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கப்படும்  மஞ்சள் குங்கும டப்பாக்களை அனேகமாக பெரும்பாலும் யாராலும் பிரித்துப் பார்க்கவும் படுவதில்லை, உபயோகபப்டுத்தப்படுவதுமில்லை என்றே நினைக்குமிறேன்.  சமயங்களில் மீனாட்சி அம்மன் குங்குமம் என்று ஸ்பெஷலாக தரும்போது எடுத்து வைத்துக் கொள்வார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அவை பிரித்து பார்க்கப்படாமலேயே உலவிக் கொண்டிருக்கின்றன.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. வயது பற்றி கவலைப் படாமல் கற்றுக்கொள்வது பாராட்டுக்குரியது.  எங்கள் , வீட்டில் இப்போது 60,70,80 + எல்லாம் சமஸ்கிருதம் கற்றுக் கொள்கிறார்கள், யோகா கற்றுக் கொள்கிறார்கள்.  அதுவும் ஆன்லைனில்தான்.  கற்றுக்கொடுப்பதும் அந்தந்த துறைகளில் எக்ஸெல் ஆகி இருக்கும் எங்கள் உறவுகளே... 

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை.
    முகநூலில் படித்தேன். மஞ்சள் குங்கும டப்பாக்களை திறந்து பார்த்து நன்றாக இருந்தால் . குளிசாதன பெட்டியில் வைத்து விடுவேன். வீட்டுக்கு யாராவது வந்தால் அவரக்ளுக்கு வைத்து கொடுத்து விடுவேன்.

    கற்றல் தொடர வாழ்த்துகள் ஆதி.

    //அப்போது Bright studentஆக இருந்தது பெரிய விஷயமல்ல...🙂 இப்போதும் அப்படி இருக்க முடியுமா என்று தான் முயன்று வருகிறேன்!//

    இப்போதும் Bright studentஆக இருப்பீர்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
  4. நான் கோபுரம் மார்க் பாக்கெட்டுகளையே தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்தேன். கோவில் குங்குமங்களே நிரம்பியிருக்கும்போது, தாம்பூல மஞ்சள் குங்குமத்துக்கு வேலையில்லை. முன்பு விரலி மஞ்சள் தருவார்கள், உபயோகம். இப்போல்லாம் எல்லாம் ஃபார்மாலிட்டியாகிவிட்டது. அதாவது சத்தை விட்டுவிட்டு சக்கையைப் பிடித்துக்கொண்டுவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  5. மஞ்சள், குங்குமம் விடயங்கள் சிறப்பான செயல்.

    பதிலளிநீக்கு
  6. என்னைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள் நெருங்கியவர்கள் என்னிடம் இதை வைத்துக் கொடுப்பதை எதிர்பார்க்க மாட்டாங்க, அவங்க வீட்டுக்குப் போறப்பவும் தரமாட்டாங்க!!!!!!! ஆனால் என்னைப் பத்தி தெரியாதவங்க வரப்ப வைத்துக் கொடுக்கும்படி ஆகும் அது போல அவங்க வீட்டுக்குப் போறப்ப கொடுக்கும் வழக்கம். பல வருடங்களுக்கு முன்பே தொடங்கிய ஒன்று. எல்லாம் நீங்க சொல்லியிருக்கும் காரணங்கள்தான். நான் சேர்த்து வைத்திருப்பது எல்லாம் கோயிலில் இருந்து வரும் பிரசாதம் குங்குமம் விபூதி, இவற்றை. அதுவும் நிறைய என்றால் கு பெ யில் வைத்துவிடுகிறேன்.

    எனக்குக் கொடுக்கப்படுவதை மஞ்சள் குங்குமம் இவற்றை உடனே பிரித்துப் பார்த்துவிடுவேன். பெரும்பாலும் பூச்சிகள் இருக்கும் இல்லைனா குங்குமம் நூல் கோர்த்துக் கொண்டு இருக்கும். தூரப் போட்டுவிடுவது வழக்கம். பாக்கெட் பாக்கு, விரளி மஞ்சள், மஞ்சள் பொடி பாக்கெட் எல்லாம் அதிகமானால் எல்லாம் குபெக்குப் போய்விடும். பெரும்பாலும் சேர்த்து வைப்பதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ப்ளவுஸ் பிட்டுகள் முன்பு நிறைய சேரும். நான் பெரும்பாலும் அதை வைத்துக் கொடுக்கும் வழக்கம் பின் பற்றுவதில்லை அப்படியே கொடுத்தாலும் அவங்க சாரி கட்டறவங்கன்னு தெரிஞ்சா, அவங்க தைச்சுக்குவாங்களான்னு கேட்டுக் கொண்டுதான் கொடுப்பது வழக்கம்!!!!!

    நான் புடவை கட்டுவது என்பது வெகு வெகு அபூர்வம் (அபூர்வம்ன்ற சொல்லே பொருள் வந்துடும் அதிலும் கூடவே வெகு சேர்த்திருக்கேன் பாருங்க....நிறைய வெகு சேர்த்துக்கோங்க!) எனவே எனக்கு வருபவற்றை அப்படியே என் தங்கைகள் அல்லது பெரும்பாலும் தெருக் கூட்டறவங்க, வேலை செய்யறவங்களுக்கு அவங்க கிட்ட கேட்டுக்குவேன் நான் கொடுப்பது பயனுள்ளதான்னு கேட்டு அவங்க ஓகேன்னு சொன்னா கொடுத்துவிடுவது வழக்கம். 99.9% வாங்கிக்குவாங்க!

    எனக்கு வருவதை மீண்டும் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. Busy Bee! உங்கள் கற்றல் தொடரட்டும்! வாழ்த்துகள், ஆதி! எந்த வயதிலும் கற்றல் நல்லதே அது எதுவாக இருந்தாலும் நமக்குப் பிடித்தவற்றைக் கற்றுக் கொண்டே இருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....