திங்கள், 1 ஜூலை, 2024

ஜெய் துவாரகாதீஷ் ஜெய் சோம்நாத் - பயணத் தொடர் - விஜி வெங்கடேஷ் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நோய்டா ஃப்ளவர் ஷோ - 2024 - நிழற்பட உலா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******



குஜராத் மாநிலத்தில் உள்ள த்வாரகா மற்றும் சோம்நாத் ஆலயங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்.  இதுவரை இரண்டு முறை சென்றிருக்கிறேன். இரண்டு முறையும் எனது அனுபவங்களை இங்கே பதிவுகளாக வெளியிட்டு இருக்கிறேன். இதோ இன்று முதல் சில பதிவுகளாக த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை - 2022 ஆம் ஆண்டு சென்ற பயணம் என்பதை நினைவில் கொள்க! - நம்முடன் பகிர வருகிறார் திருமதி விஜி வெங்கடேஷ். சமீபத்தில் தான் நம் பக்கத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறார் - அவரது முதல் பதிவு இங்கே! வாருங்கள் த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை திருமதி விஜி வெங்கடேஷ் அவர்களின் வார்த்தைகளில் படித்து ரசிக்கலாம்! - நட்புடன் - வெங்கட் நாகராஜ், புது தில்லி! ஓவர் டு விஜி!


******


எனது த்வாரகா மற்றும் சோம்நாத் பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் த்வாரகா/சோம்நாத் பயணம் செய்ய வாய்ப்பினை நல்கட்டும்.


ஜெய் ஸ்ரீ சோம்நாத் கி - ஜெய் ஸ்ரீ த்வாரகாதிஷ் கி🙏🏻🙏🏻🙏🏻


பயண ஏற்பாடு:




2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிளான் பண்ணி 2022 ஜனவரிக்காக துவாரகா, சோம்நாத் தரிசனத்துக்கு டிக்கெட் Bபுக் பண்ணியதிலிருந்தே பலப் பல speedbreakers. நாள் முழுக்க மனம் முழுக்கவும், lunch வேளைகளில் வாய் மணக்கவும் அதைப் பற்றியே பேச்சு. மூன்றாம் அலை ஆட்டம் போட, துவாரகா தீஷ் 1 வாரம் தன் கதவைச் சாத்திக்கொள்ள, கதவடைப்பு extend ஆகுமோ என்ற பயத்தில் எங்கள் லப் டப் (படியேறாமலே) அதிகமானது. நல்ல வேளையாக எங்கள் மேல் கருணை கொண்டு 23rd கிருஷ்ணன் தன் மணிக்கதவம் தாள் திறந்தான்.      3 தோழிகள்  ஒவ்வொருவராக இன்னபிற காரணங்களால் வர முடியாது போக (அதுவும் trip பற்றிய உற்சாகப் பந்தான வைஷாலி துரதிருஷ்டவசமாக உடல் நலம் கெட்டு வர முடியாமல் போனது மிக வருத்தம்) எண்மர், எழுவராகி, அறுவராகி,பின் ஐவரானோம். 24th இரவு வரை சாமான்கள் வாங்கி சேகரிக்கப்பட்டன.


25.01.2022:


25th காலை ஏர்போர்ட் வந்து சேர்ந்து food lounge ல் வயிறார (ATM card க்கு இலவசம்) சாப்பிட்டுவிட்டு flight-ல் ஏற அங்கும்  complimentary  food பாக்கெட் துரத்தியது. அவர்கள் மனம் வருந்தாமல்(!?!!) இருக்க அதையும் வாங்கிக்கொண்டோம். அது எத்தனை நல்லதாகப் போயிற்று என்பது Rajkot இறங்கிய பிறகு தெரிந்தது. எங்கு காணினும் பொட்டலடா. பஞ்ச பூதங்களில் ஆகாயமும்,நிலமும் மட்டுமே ஏராளம். 3 நாட்கள் மதிய உணவே இல்லாமல் பயணித்தது சிரமமாக இருக்கவில்லை. நிற்க.


Rajkot ல் ஏற்பாடு செய்திருந்தபடி சிறிது நேரம் எதிர் 'பார்த்த' பிறகு 'சாரதி' கண்ணில் பட்டார். அக்ரூரராக அனு Bபாய் செலுத்த இன்னோவா தேரில் துவாரகா நோக்கிப் பயணம். ஜில் ஜில் ஜிலீர் குளிர். நம் தோல், எலும்பு, மஜ்ஜை அனைத்தையும் கடந்து உள் செல்வதால் குஜராத் குளிரும் கடவுளே. 



6 மணிநேரம் கழித்து கோபுரம் கண்ணில் பட சற்று நிமிர்ந்து உட்கார்ந்து சுறுசுறுப்பானோம். துவாரகாதீஷ் கி ஜெய் கோஷத்துடன் ஹோட்டல் கோம்தியை அடைந்து அறைகளில் சாமான்களை இறக்கி, குளித்து தரிசனத்துக்கு ரெடியாகி முதலில் ஹோட்டல் எதிரிலேயே ஓடிக்கொண்டிருந்த  கோம்தி (கோமதி அல்ல) நதியில் கால் நனைத்து ஜலத்தை சிரசில் புரோஷித்துக்கொண்டோம். நதி நீர் அவ்வேளையிலும் ஜிலீர் என்று உறைய வைக்க  மறுநாள் காலை அதில் முழுகி ஸ்நானம் செய்யும் எண்ணத்தை அங்கேயே நீரில் விட்டோம். கோவில் நோக்கிப் பயணம். எதிர்பார்த்திருந்த புரோஹித் தைச் சந்தித்து அவருடனேயே ஸ்தல புராணம் கேட்டுக்கொண்டு எல்லா சன்னிதிகளிலும் தரிசனம் செய்துகொண்டு துவாரகாதீஷ் முன்னால் நின்றோம். அவ்வளவுதான். கால நேர வர்த்தமானங்கள் ஸ்தம்பித்து நின்றன. இரு கண்கள் போதவில்லை, கிருஷ்ணனின் அழகைப் பருக. இரு கைகள் போதவில்லை அவனை நோக்கி கரம் கூப்ப. எதுவும் வேண்டத் தோன்றாமல் ஒரு சூனிய வெட்டவெளியில் நாமும் அவனும் மட்டுமே🙏🏻



நம் முன்னால் நிற்கும் பெண்கள் தன் குழந்தைகளுக்கு திருஷ்டி கழிப்பார்களோ இல்லையோ அந்த கோபாலனைப்  பார்த்துப் பார்த்து பாவனையாக அவன் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தது வெகு அழகு. அலங்காரப் பிரியனான கண்ணன் வேளைக்கு வேளை பல அலங்காரங்களில் ஜொலித்தான். அருளைப் பொழிந்தான், சொக்க வைத்தான், சுருட்டி தனக்குள் ஒடுக்கிக்கொண்டான். துவாபர யுகத்தில் கோபிகைகளாக இருந்தோமோ என்னவோ. ஒவ்வொருவரும் தனக்கு மட்டுமே கேசவன் என சொந்தம் கொண்டாட அனைவரையும் தன் கருணை வலையில் வீழ்த்தி திருடிக்கொண்டான்   நவநீதக் கள்ளன். எவ்வளவு முறை சுற்றிச் சுற்றி வந்து ஆரத்தியை தரிசித்தோம் என்பது அவனுக்கு மட்டுமே (CCTV க்கும்) தெரிந்த கணக்கு. திருப்தி இல்லாமலே திரும்பினோம். ஒரு ஆறுதல் - மறுபடி காலை பார்க்கப் போகிறோமே. மனம் முழுக்க செவ்வரியோடிய தாமரை நயனங்கள், மாயப் புன்னகை சிந்தும் அதரங்கள், திருஷ்டி பொட்டுடன் கூடிய அவனின் கண்ணாடிக் கன்னங்கள் இவையே நிறைந்திருந்தன.



துவாரகா தீஷ் தரிசனம் முடிந்து வெளியே வந்தவுடனேயே உள் பிராகரத்திலேயே 6,7 படிகள் ஏறினால் அங்கு ஆதிசங்கரர் ஸ்தாபித்த 4 பீடங்களில் ஒன்றான  சாரதா பீடம். காலடி உதித்த மகானின் காலடிகள் அங்கு பதிந்திருக்குமே என்ற எண்ணத்தில் மனது உவகை அடைந்தது. தொடர்ந்து எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை வரும் பகுதிகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இப்பயணத் தொடரில் என்னுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்.  அடுத்த பகுதியில் மீண்டும் சந்திப்போம். அதுவரை… நட்புடன் விஜி வெங்கடேஷ்.


*******




இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

1 ஜூலை 2024


18 கருத்துகள்:

  1. உணர்வுபூர்வமாக செல்கிறது.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதிவு படித்து செல்வதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. சுவாரஸ்யமான, அனுவபித்து எழுதியிருக்கீங்க, விஜி. நல்லதொரு தொடக்கம். தொடர்ந்து வருகிறோம் உங்கள் பயண அனுபவங்களை வாசிக்க

    படங்கள் கொள்ளை அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. விஜி வெங்கடேஷ்1 ஜூலை, 2024 அன்று 2:55 PM

    பயணக் கட்டுரைத் தொடரைப் படித்து ஊக்கமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.படிப்போர் ஒரு கணமேனும் நான் அடைந்த அந்த ஆனந்த அனுபவத்தை உணர முடிந்தால் அதுவே எனக்குப் போதும்.நன்றி.வாருங்கள் பயணிக்கலாம் தொடர்ந்து.
    Special thanks to Kittu for composing it beautifully with beautiful picures.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து உங்கள் பதிவுகளை இங்கே வெளியிட வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு
  5. தங்களின் பயண கட்டுரை மிகவும்.அருமையாகவும் விரு வருப்பாகவும் அழகாகவும் இருந்தது பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அடுத்த பதிர்வுக்கு காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனந்தராமன் ராமசுப்ரமணியம் ஜி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.

    துவாரகாதீஷ் முன்னால் நின்று தரிசனம் செய்த போது கிடைத்த அனுபவங்களை சொன்ன விதம் அருமை. கண்ணனின் அலங்கார கோலங்கள் அழகு.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. துவாரகாதீஸ் மெய்மறந்து பெண்கள் திருஷ்டி கழிப்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்..
    அலங்காரம் படங்கள் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. நேரில் நானும் சென்று வணங்கியது போல உணர்வு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி ரூபன்.

      நீக்கு
  9. Superb Viji....படிக்க படிக்க ஃபிளாஷ் பேக் updated

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....