வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - சாரநாத் - சில தகவல்கள் - பகுதி இருபத்தி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட டிக்கு சொன்ன டிக்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்


ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்


பஞ்ச்க்ரோஷி யாத்ரா



படம்: இணையத்திலிருந்து...

ஒன்பது நாட்கள் வாரணாசி பயணத்தில் இதுவரை இருபது பகுதிகள் வெளிவந்திருக்கின்றன. மேலும் எழுத வேண்டிய/எழுத நினைக்கும் தகவல்கள் இன்னும் உண்டு.  எழுதி வரும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். வாரணாசி நகரில் இருக்கும் எண்ணற்ற வழிபாட்டு தலங்கள் அனைத்தும் பார்த்து முடிக்க நான் அங்கே இருந்த ஒன்பது நாட்கள் மட்டும் நிச்சயம் போதுமானதாக இருக்காது.  ஒன்பது நாட்களில் நடுவே ஒன்றிரண்டு நாட்கள் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) மற்றும் அயோத்யா ஜி சென்று வந்ததைக் கழித்தால் இருந்தது ஏழு நாட்கள் மட்டுமே! அதிலும் கிட்டத்தட்ட அரை நாள் வாரணாசியை அடுத்த சாரநாத் சென்று வந்ததில் போய்விட்டது.  இன்றைய நாளில் சாரநாத் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களையும் சாரநாத் குறித்த சில தகவல்களையும் பார்க்க இருக்கிறோம்.  சாரநாத் - வாரணாசி அருகே இருக்கும் ஒரு பிரபலமான புத்த மதத்தினைத் தொடர்பவர்களின் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று.  புத்த மதத்தினர் அதிக அளவில் இங்கே செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வாருங்கள், இந்தப் பதிவு வழி சாரநாத் வரை உங்களை கைபிடித்து அழைத்துச் செல்கிறேன். 



படம்: இணையத்திலிருந்து...

புனிதமான கங்கை நதியும் வருணா நதியும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே, வாரணாசி நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது சாரநாத்.  புத்தர், புத்த மதத்தின் கொள்கைகளை தனது பிரதான சீடர்களுக்கு உபதேசம் செய்த புனிதமான ஸ்தலம் இது என்பதால் அனைத்து நாட்டிலுள்ள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இங்கே ஆயிரக் கணக்கில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.  புத்த மதத்தினைப் பொறுத்த வரை நான்கு இடங்கள் மிகவும் புனிதமானவை, போற்றத்தக்கவை என்று கருதப்படுகிறது. அந்த நான்கு இடங்கள் - புத்தர் பெருமான் பிறந்த இடமான லும்பினி, புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்தகயா, புத்தர் தனது கொள்கைகளை சீடர்களுக்குச் சொன்ன சாரநாத் மற்றும் புத்தர் பெருமான் மகாபரிநிர்வாணா எனும் மரணத்தைத் தழுவிய இடமான குஷிநகர்.  இந்த நான்கில் லும்பினி மட்டும் நேபாளத்தில் இருக்கிறது.  மற்ற மூன்றும் இந்தியாவில் - புத்தகயா பீஹாரிலும், சாரநாத் மற்றும் குஷிநகர் உத்திரப் பிரதேசத்திலும் இருக்கிறது.  இந்த நான்கில் நான் இது வரை புத்தகயா மற்றும் சாரநாத் ஆகிய இரண்டு இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். குஷிநகர் செல்லவும் வாய்ப்பு கிடைக்கலாம். லும்பினி செல்வதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!



படம்: இணையத்திலிருந்து...

நாங்கள் சாரநாத் சென்ற போது அங்கே ஒரு Guide வைத்துக் கொண்டோம்.  புத்தர் பெருமான் தனது சீடர்களுக்கு புத்தமதத்தின் சாரத்தினை உபதேசித்த இடத்தில் புத்த மத வழிபாட்டுக்கான பல இடங்கள், பள்ளிகள் இருந்திருக்கின்றன.  அவை அனைத்தும் காலப்போக்கில் அழிந்து விட்டன.  அங்கே இருந்த கட்டிடங்களின் எச்சங்கள் மட்டுமே இப்போதைக்கு மிச்சம்.  அங்கே அகழ்வாராய்ச்சி செய்து கண்டு எடுக்கப்பட்ட பல சிலைகள், சாரநாத்-இல் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை பார்த்த பிறகே நாங்கள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் இருந்த இடத்திற்குச் சென்றோம். இப்போதைக்கு இருப்பது ஒரு பெரிய ஸ்தூபி மட்டுமே - அதுவும் முழுமை பெறாத ஸ்தூபி போலவே இருக்கிறது.  மற்ற இடங்கள் அனைத்தும் அழிந்து போய்விட்டன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்து கிடைத்த கற்களைக் கொண்டு தரை மட்டத்தில் மட்டும் சில கட்டிடங்களுக்கான அடித்தளம் போன்றவற்றை இன்றைக்கு நாம் பார்க்க முடிகிறது. அழிந்து போன அந்த இடம் குறித்து அந்த வழிகாட்டிச் சொல்லிச் சென்ற வரலாற்றுத் தகவல்கள் நிறையவே உண்டு.  இப்படி இழந்த பழமையான விஷயங்களை நினைத்தாலே மனதில் சோகம் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து விடுகிறது. 



படம்: இணையத்திலிருந்து...

இப்போதும் புத்த மதத்தினைச் சேர்ந்த பிக்குகள் அங்கே வந்து அமர்ந்து புத்த மத வழிபாட்டு முறையை பின்பற்றி அமைதியாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் புத்த மதத்தினைச் சேர்ந்தவர்கள் இந்த இடங்களில் இருக்கும் கற்கள் மீது மெல்லிய தங்க நிற தாள்களை ஒட்டிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  அப்படிச் செய்வது தடை செய்யப்பட்டிருந்தாலும் தொடர்ந்து அவர்கள் பழக்கத்தினை கைவிடாமல் ஒரு இடத்திலேனும் அப்படி ஒட்டி விடுகிறார்கள்.  அதற்காகவே ஸ்தூபியின் அருகே போக முடியாதபடி தடுப்புக் கம்பிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு இடத்தில் மட்டும் தொட்டு வணங்கும் விதமாக ஏற்பாடுகளும் இருக்கின்றன. அந்த அமைதியான சூழலில் வெளிநாட்டிலிருந்து வரும் புத்தமதத்தினைச் சார்ந்த பக்தர்களும் சரி, நம் நாட்டு பக்தர்களும் சரி வழிபாடுகளை நடத்துகிறார்கள் என்றால் சுற்றுலாவாக வரும் பயணிகள் செய்யும் செயல்கள் நம்மை கொஞ்சம் அசர வைக்கும் விதமாக இருந்தன.  அங்கேயும் செல்ஃபி/ரீல்ஸ் மோகம் பிடித்து ஆடுகிறார்கள். இந்த செயல்கள் சரியல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவே போவதில்லை எனும் போது இவர்களிடம் பேசி பயனில்லை என்பதால் அங்கிருந்து மௌனமாக நகர்ந்து போவதே நமக்கு நல்லது. 



படம்: இணையத்திலிருந்து...

சாரநாத் பகுதியில் தான் நம் நாட்டின் சின்னமாக இருக்கும் அசோகர் காலத்திய தூண் இருந்தது. அதன் சில பகுதிகள் அருங்காட்சியகத்திலும் சில பகுதிகள் வெளியேவும் இருக்கின்றன.  தாமேக் ஸ்தூபா, சௌக்கண்டி ஸ்தூபா என பல விஷயங்கள் இங்கே பார்ப்பதற்கு இருக்கின்றன.  சாரநாத் குறித்த தகவல்களை பொறுமையாக படிக்க வேண்டுமென்றால், உங்களுக்கு விருப்பமிருந்தால் தகவல்கள் நிறையவே இணையத்தில் இருக்கின்றன.  சில தளங்களில் புத்த மத கோட்பாடுகள், சாரநாத் நகரின் வரலாறு, அதில் ஏற்பட்ட மாற்றங்கள் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வரலாற்றில் விருப்பம் இருப்பவர்கள் இவற்றை எல்லாம் பார்த்து, படித்து பிரமிக்க வாய்ப்பு இருக்கிறது. எனது பயணத்தில் அங்கே சென்ற போது சில தகவல்களை அருங்காட்சியகத்தில் படித்தும், வழிகாட்டி சொன்னதன் மூலமும் அறிந்து கொண்டேன்.  அருங்காட்சியகத்தில் இருந்த வரலாறு உண்மையானதா என்பதும் சந்தேகமே - ஏனெனில் அசோகர் காலத்திற்குப் பிறகு நிறைய அரசர்கள், அவரவர் விருப்பத்திற்கேற்ப வரலாற்றை மாற்றி இருக்கலாம்! வழிகாட்டி சொன்ன விஷயங்களும் அப்படியே! 



படம்: இணையத்திலிருந்து...

யுனெஸ்கோவினால் World Heritage Site என்று அறிவிக்கப்பட்ட இந்த இடத்திற்கு ஒரு முறையேனும் சென்று வாருங்கள். உங்களுக்கு புத்த மதத்தில் இருக்கும் விஷயங்கள் குறித்தும், புத்தர் இங்கே அவரது சீடர்களுக்கு முதன் முதலாகச் சொன்ன தத்துவங்கள் குறித்தும் உங்களால் அறிந்து கொள்ள முடியும்.  எங்களது வழிகாட்டி சொன்ன ஒரு விஷயம் மட்டும் இன்னமும் எனது மனதில் நீங்காமல் நின்று விட்டது - அது புத்தர் தனக்குப் பிறகு சிலைகள் ஏதும் வைக்கக்கூடாது என்று சொன்னதாகச் சொன்ன தகவல்.  பிற்காலத்தில் அவரது சீடர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, சிலை வைக்க ஆரம்பித்தார்கள் என்றும், ஒரு பிரிவினர் மட்டும் சிலைகள் இல்லாமல் புத்தரின் அஸ்தி வைத்து ஸ்தூபா என்ற அழைக்கப்படும் கட்டிடங்களை அமைத்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  எது எப்படியோ பிரிவினை இல்லாத இடமே இல்லை என்பதும், குருவாக ஏற்கப்பட்ட புத்தர் பெருமானின் விருப்பமாக இருந்த சிலை இல்லா கோட்பாட்டினை மாற்றி அமைக்கவும் துணிந்திருக்கிறார்கள் என்பதும் நினைக்கும் போது சற்றே வேதனையாக இருந்தது. ஒரு புறம் வேதனை இருந்தாலும், இப்படி இவர்கள் சிலை வைக்காவிட்டால் இன்றைக்கு புத்தர் இப்படித் தான் இருந்தார் என்பது தெரியாமலேயே போயிருக்கும் என்றும் தோன்றுகிறது. 



படம்: இணையத்திலிருந்து...

அருங்காட்சியகம், Archeological Survey of India வசம் இருக்கும் இடங்கள் தவிர ஒரு சில நாட்டினர் அமைத்திருக்கும் வழிபாட்டுத் தலங்களும் இங்கே உண்டு.  என் உடன் வந்தவர்கள் அதிக நேரம் இருக்க முடியாது என்றும் வேலை இருக்கிறது என்றும் சொன்ன காரணத்தினால் அரை நாள் மட்டுமே அங்கே இருக்க முடிந்தது.  மாலை வரை அங்கே இருந்திருந்தால் இன்னும் சில இடங்களை பார்த்திருக்க முடியும்.  தனியாகச் செல்லாமல் வேறு சிலருடன் சென்றதால் இப்படிச் சில அசௌகரியங்கள் இருந்தன.  ஒரே ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு மட்டும் சென்று பிறகு வாரணாசி திரும்பினோம். பயணத்தில் கிடைத்த வேறு சில அனுபவங்களை வரும் பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

9 ஆகஸ்ட் 2024


28 கருத்துகள்:

  1. நான் சாரநாத் செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேன்.

    புதிய குரு என்ன உபதேசம் சொன்னாலும், அவற்றைப் பின்பற்றாமல் குருவையே கடவுள் நிலைக்கு உயர்த்தி வழிபடுவதுதான் உலகெங்கிலும் வழக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்த முறையே இங்கே பயணிக்க வாய்ப்பு அமைந்தது. வாரணாசி அருகில் சீதாமடி என்ற இடமும் உண்டு - சீதை பிறந்த இடம் என்றும் சொல்வார்கள். சீதைக்கு அங்கே ஒரு கோயில் உண்டு. அங்கே செல்லும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தும் ஒரே பயணத்தில் பார்த்து விட முடிவதில்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கயா சென்றும் புத்தகயா பார்க்கவில்லை.  சாரநாத் போன்ற இடங்கள் எல்லாம் பார்க்க வாய்க்குமோ என்னவோ...  சுவாரஸ்யமான தகவல்கள்.  அருமையான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்த கயா பார்க்க வேண்டிய இடம் ஸ்ரீராம். ஒரு நாளேனும் அங்கே தங்கும்படிச் சென்று பார்த்துவரலாம். பல நாடுகள் புத்தகயாவில் வழிபாட்டுத் தலங்களை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் அப்படி ஒரு அழகு! அமைதியும் சூழலும் மிகவும் சிறப்பாக இருக்கும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. // இப்படி இவர்கள் சிலை வைக்காவிட்டால் இன்றைக்கு புத்தர் இப்படித் தான் இருந்தார் என்பது தெரியாமலேயே போயிருக்கும் என்றும் தோன்றுகிறது. //

    இப்போதும் புத்தர் இப்படிதான் இருந்தார் என்று நிச்சயமாக சொல்ல முடியுமா என்ன?  பக்தர்களின் கற்பனையும் கலந்துதான் இருக்கும்?  யாரோ பார்த்திருப்பதாகச் சொல்லும் சிவன், விஷ்ணுவையே நாம் நம் கற்பனையில்தானே வடித்திருக்கிறோம்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனை தான் - புத்தரும் இப்படி இருந்தார் என்று கற்பனை செய்திருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    //இப்படி இவர்கள் சிலை வைக்காவிட்டால் இன்றைக்கு புத்தர் இப்படித் தான் இருந்தார் என்பது தெரியாமலேயே போயிருக்கும் என்றும் தோன்றுகிறது.//

    இதுவும் நியாயமான கருத்தாகபடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதிவும் படங்களும் அழகு.. சிறப்பு..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. //இப்படி இவர்கள் சிலை வைக்காவிட்டால் இன்றைக்கு புத்தர் இப்படித் தான் இருந்தார் என்பது தெரியாமலேயே போயிருக்கும் என்றும் தோன்றுகிறது///

    முன்னோர்கள் மீது ஏன் நம்பிக்கை இல்லாமல் போயிற்று?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோர்கள் மீதான நம்பிக்கை - இருப்பவர்களும் உண்டு, இல்லாதவர்களும் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. இன்று வழக்கத்துக்கு மாறாக மிகவும் சின்ன கருத்து அடித்தேன் 3, 4 வரிகளே...அதையே கூகுள், ப்ளாகர், கருத்து மிகவும் நீளமாக இருக்கு என்று சொல்கிறது! ஓ மை, கீதாவுக்கு வந்த சோதனை! ஒரு வார்த்தை பதில் சொல்லச் சொல்லுதோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் ப்ளாக்கர் படுத்துகிறது. எனக்கும் சில தளங்களில் இப்படியான பிரச்சனை வந்தது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. ஆ !!!! கருத்து நீளமா இருக்க்னு சொல்லி போட மறுக்கிறதே!!!

    கொஞ்சம் முன்னதானே எஎங்கள் ப்ளாகில் போட்டேன். அங்க போட்ட அதே அளவு கருத்துதானே அதை ஏற்றது...இங்க ஏற்க மாட்டேங்குதே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... சில தளங்களில் இந்த மாதிரி பிரச்சனைகள் வருகின்றன. காரணம் ப்ளாக்கருக்கே வெளிச்சம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. காசியைப் பார்க்க வேண்டும் என்று பல வருடக் கனவு அதில் இந்த இடமுன் உண்டு பட்டியலில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசியை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கும் அமைய எனது பிரார்த்தனைகள் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. கருத்தை பிரித்துப் போட முயற்சி செஞ்சா ஒரு வரியை போட முடிந்தது கூட ரெண்டு வரி இருக்கும் கருத்தை அடுத்ததா போட முயன்றால் போட மாட்டேங்குது கருத்து நீளம்னு சொல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிது நேரம் கழித்து முயற்சித்தால் வருகிறது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. புத்தரின் புண்ணியதலங்களில் நான்கு இடங்களில் ஒன்று சாரநாத் என்பது தெரிந்து கொண்டோம்.

    புத்த மத சிஷ்யர்களில் பிரிவினை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் இது காலப் போக்கில் இதெல்லாம் தவிர்க்க முடியாததோ என்று தோன்றுகிறது.

    என்றாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரு பிரிவினர் சிலை வடித்து புத்தரை ஆராதித்ததால்தானே நமக்கும் இப்படியான தோற்றமுள்ள புத்தரை பார்த்து அறிய முடிகிறது. இதுவும் அவசியம் தான் இல்லையா.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சில விஷயங்களை உங்களுக்கும் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. வாசகம் அருமை.
    புத்தமதம் மன்னர்கள் காலத்தில் பல மாறுதல்களை அடைந்தது உண்மைதான்.

    சாரநாத் நாங்கள் போய் இருக்கிறோம். அப்போது பிலிம் ரோல் போடும் காமிரா
    அதனால் அந்த படங்கள் ஆலபத்தில் இருக்கிறது.
    கடைசி படம் அழகு, அவர் கால்கள் துண்டிக்கப்பட்டு இருக்கா? பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      புத்தர் படம் - துண்டிக்கப்பட்டே இருந்தது. பல சிற்பங்கள் அழிக்கப்பட்டு விட்டன/அழிந்து விட்டன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. புகைப்படங்கள் பிரமிப்பைக்கொடுக்கின்றன! ரொம்பவும் நுணுக்கமாக படம் பிடித்திருக்கிறீர்கள் வெங்கட்!

    தாய்லாந்து, வியட்நாமிலும் இப்படித்தான் புத்தரின் தோற்றம் இருக்கிறது! அதனால் மூலம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. சாரநாத் பற்றிய தகவல்கள் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....