வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - மகாகவி பாரதியார் இல்லம் - பகுதி இருபத்தி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்


ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்


பஞ்ச்க்ரோஷி யாத்ரா


சாரநாத் - சில தகவல்கள்


விருந்தினர்களுடன் ஒரு பயணம்


அயோத்யா ஜி


வீராங்கனா ராணி லக்ஷ்மிபாய்


சென்ற பகுதியில் வீராங்கனா ராணி லக்ஷ்மிபாய் அவர்களுக்கும் வாரணாசி நகருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பார்த்தோம் அல்லவா, அதே போல இந்த நாளில், தொடரின் இன்றைய பகுதியில், வாரணாசி நகருக்கும் பாரதியார் அவர்களுக்கும் இருக்கும் தொடர்பு குறித்தும், வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீடு குறித்தும் சில தகவல்களை பார்க்கலாம். 


காசி நகரில் இருந்த ”சிவமடம்” என்ற பெயர் கொண்ட தமது அத்தையின் வீட்டில், மகாகவி பாரதியார் அவர்கள், தனது இளமைக் காலத்தில் சில வருடங்கள் வாழ்ந்து இருக்கிறார். இன்றைக்கும் பாரதியார் வசித்த சிவமடம் வீடு இருக்கிறது என்பதோடு அவரது உறவினர்கள் சிலரும் அங்கே வாழ்ந்து வருகிறார்கள். இந்த வீட்டில் அவர் வசித்தபோது கிடைத்த வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு சிறுகதையை பாரதியார் எழுதி உள்ளார்.  இந்தச் சிறுகதையை நீங்கள் இதுவரை படித்திராவிடில் ஒன்றும் தவறில்லை - இப்போதும் படிக்கலாம் - நானும் கூட இந்தப் பதிவுக்காக கதையைத் தேடிய போது தான் படித்தேன் - படிக்க ஏதுவாக, சொல்வனம் இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் இந்தக் கதைக்கான சுட்டி கீழே இருக்கிறது!


ஆறில் ஒரு பங்கு – சொல்வனம் | இதழ் 324 | 11 ஆக 2024 (solvanam.com)


தவிர, பாரத தேசத்திற்கான தேசிய கீதங்கள் எழுதியபோதும், கீழே உள்ளவாறு எழுதியிருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்!


காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்


இப்படி காசி நகருக்கும் மகாகவி பாரதியாருக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை இங்கே சொல்லிக்கொண்டு, எனது இந்தப் பயணத்தில் அவர் சில காலம் வாழ்ந்த சிவமடம் இல்லத்திற்கு நான் சென்று வந்த அனுபவங்களையும் பார்க்கலாம்.  1898 ஆம் வருடம் முதல் 1902-ஆம் வருடம் வரை சுமார் நான்கு ஆண்டு காலம் பாரதியார் காசியில் தங்கி இருந்த வீடு தான் சிவ மடம்.  காசியின் படித்துறைகளில் ஒன்றான ஹனுமான் Gகாட் அருகே ஒரு சங்கர மடம் இருக்கிறது. அதன் எதிரிலேயே இருக்கிறது சிவ மடம் என்னும் வீடு.  ஒரு காலத்தில் தமிழர்கள் காசிக்கு வரும்போது தங்கி உணவு உண்டு திரும்பிய இடம் இது.  பாரதியாரின் அத்தை தனது குடும்பத்தினருடன் வசித்த வீட்டில் தான் பாரதியாரும் இருந்தார்.  அங்கே நான்கு வருடங்கள் படிக்கவும் செய்தார் என்றெல்லாம் தகவல்கள் இருக்க, எனக்கும் அவர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று சில நிமிடங்களேனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்கு முன்னரும் காசி நகருக்கு சில முறை சென்றிருந்தாலும் ஏனோ ஒரு முறை கூட இந்த வீட்டிற்குச் சென்றதில்லை. இந்த முறை ஒன்பது நாட்கள் காசியில் தங்கியதால் பாரதியார் தங்கிய வீட்டிற்கும் சென்று வருவது என்பதை முன்னரே முடிவு செய்திருந்தேன்.  






ஒரு நாள் தங்குமிடத்திலிருந்து பொடி நடையாக புறப்பட்டு கூகுள் மேப் உதவியுடன் அங்கே சென்றடைந்தேன்.  வீட்டின் வாயிலில் இருந்த ஒரு அறை பூட்டி இருந்தது. பக்கத்தில் இன்னுமொரு கதவு வழி சென்றால் பாரதியாரின் உறவினர்கள் தற்போதும் வசித்து வரும் சிவ மடம் உள்ளே செல்லலாம்.  கதவு பூட்டியிருக்கிறதே என்று எதிரே விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கேட்டபோது பக்கத்தில் இருக்கும் கதவைத் தட்டி அழையுங்கள். உள்ளேயிருந்து ஆட்கள் வருவார்கள், என்று சொல்லியதோடு இந்த அறைக்குள் பாரதியாரின் தங்கச் சிலை இருக்கிறது, அதனால் பூட்டியே வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி தனது விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  அது தங்கச் சிலையோ, தங்க முலாம் பூசப்பட்ட சிலையோ அதைப்பற்றி நமக்கெதற்கு? இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழக அரசாங்கம் சிவ மடம் வீட்டில் முன்னே இருக்கும் அறையை வாடகைக்கு எடுத்து அங்கே ஒரு நினைவு இல்லம் போல அமைத்து இருக்கிறார்கள். மாதாமாதம் தமிழக அரசின் சார்பில் வாடகையும் தந்து விடுகிறார்கள் என்று தெரிகிறது.  


முதலில் ஒரு இளைஞர் வந்தார். அவரிடம் ஹிந்தியில் பேசி பாரதியார் இருந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, காத்திருங்கள் என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார். பின்னர் ஒரு பெண்மணி சாவியுடன் வந்து கதவைத் திறந்து விட்டார்.  எங்கேயிருந்து வந்திருக்கிறேன், எப்படித் தெரியும், எங்கே பணிபுரிகிறீர்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார். அவருக்கு பதில் சொன்னபடியே அறைக்குள் நுழைந்து சில நிமிடங்கள் பாரதியார் கால்கள் இங்கே தானே பதிந்து இருக்கும், இந்த இடத்திலும் அவர் பல பாடல்களை எழுதி இருப்பாரே என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அங்கே எழுதி இருந்த சில தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவரது வாழ்க்கையின் சில பிரதான தகவல்கள் அந்தப் பதாகைகளில் எழுதி இருந்தது.  நான் அங்கே இருக்கும் வரை அந்தப் பெண்மணியும் காத்திருந்தார்.  கதவை பூட்டி சாவி எடுத்துக் கொண்டு போக வேண்டுமே! ஒரு சில நிமிடங்கள் பாரதியாரின் நினைவுகளில் மூழ்கி இருந்தேன்.  அவர் இருந்த வீட்டில் நிறைய வசதிகள் செய்யலாம், தமிழகத்திலிருந்து பாரதி மீது பற்று கொண்டவர்கள் காசிக்கு வந்து பார்த்துச் செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்யலாம் என்றெல்லாம் மனதுக்குள் தோன்றியது.  


ஆனாலும் சில விஷயங்கள் இப்படி நினைக்கும் விதத்தில் நடந்து விடுவதில்லை.  பாரதியார் சில ஆண்டுகள் வசித்த காசியில் இருக்கும் சிவ மடம் மற்றும் அந்த சந்து, அவர் அங்கே படித்த ஜெய் நாராயணா பள்ளி, கங்கைக் கரையில் அவர் உலவிய இடங்கள் என பல விஷயங்கள் உண்டு - அவற்றை எல்லாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை வேண்டும்.  ஆனால் நம் நாட்டில் பழமையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளோ, ஏற்பாடுகளோ அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை என்பது தெரிந்த விஷயம் தானே! இந்த இல்லத்தின் தற்போதைய நிலை குறித்தும், இல்லத்திற்கு அருகே இருக்கும் ஒரு சிறு இடத்தில் உத்திரப் பிரதேச ஹிந்தி கழகம் ஏற்படுத்திய ஒரு பாரதியார் சிலை குறித்தும் படிக்கும்போது மனதில் வேதனை தான் மிஞ்சியது.  காசியில் வாழ்ந்த சில வருடங்கள் தான் பாரதியாரின் பார்வையில் பல மாற்றங்களை உண்டுபண்ணியது என்றும் இணையத்தில் படிக்க முடிந்தது. காசி நகரம் அப்படித்தான் - செல்லும் அனைவருக்குள்ளும் சில மாற்றங்களையேனும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்கிறேன். 


உள்ளே அதிக நேரம் அமர்ந்து அந்தப் பெண்மணிக்கும் தொல்லை தர வேண்டாம் என்ற எண்ணத்துடன், அவருக்கு நன்றி சொல்லி வெளியே வந்தேன். கதவைச் சாற்றி, பூட்டிக் கொண்டு அவர் வீட்டின் உள்ளே சென்று விட்டார். சில நிமிடங்கள் அந்த வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன்.  உள்ளுக்குள் ஏதேதோ எண்ண அலைகள் - இந்தத் தெருவில் எத்தனை முறை புரட்சிக் கவிஞர் பாரதியார் நடந்து சென்றிருப்பார். இங்கே வசித்த போது தான் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள் பாடலை எழுதியதாகவும் மேலே குறிப்பிட்ட சொல்வனம் கட்டுரையில் படித்த போது அங்கே அந்த குறுகிய சந்தில் நின்று கொண்டு இதே பாடலை நினைவு கூர்ந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது.  அதிக நேரம் அங்கே இருக்க முடியவில்லை என்றாலும், அப்படியே சந்துகள் வழி நடந்து சிறு தொலைவில் இருக்கும் ஹனுமான் Gகாட் (படித்துறை) சென்று விட்டேன். அங்கே நீண்ட நேரம் அமர்ந்து அலைபேசியில் சில பாரதியார் பாடல்களை ஓட விட்டு கேட்டுக் கொண்டிருந்தேன் - சில பாடல்களை கூடவே பாடிக்கொண்டும் இருந்தேன். கங்கை உற்சாகமாக துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தாள்.  பாரதியாரின் பாடல்களைக் கேட்டதால் அவளின் ஓட்டத்தில் அதிக துள்ளல் இருந்ததோ என்ற சந்தேகமும் எனது மனதுக்குள் வந்து போனது! இருக்கலாம் - பாரதியாரின் பாடலுக்கு இருக்கும் மகிமை அது! 


இனிய நினைவுகளுடன் தங்குமிடம் திரும்பினேன்.  இன்னும் காசியில் பார்த்த இடங்கள், அங்கே கிடைத்த அனுபவங்கள் போன்றவற்றை வரும் சில பகுதிகளில் சொல்ல இருக்கிறேன். அது வரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

23 ஆகஸ்ட் 2024


20 கருத்துகள்:

  1. நான் இந்த இல்லத்துக்குச் சென்றிருந்தேன். உள்ளே சிறு கோவிலும் உண்டு. காணொளியில் ஸ்டாலின் திறந்துவைத்ததாகப் பலகை உண்டு. இந்த வீட்டின் மற்றொரு புறத்தில்தான் பாரதியார் நினைவிற்காக முன்பு சிலை அமைக்கப்பட்டிருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இந்த இடத்திற்குச் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாரணாசி மகாகவி இல்லம் கண்டு மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பாரதியாரின் தொகுப்பு நிகழ்வுகள் படிக்கும் போது மனதை என்னவோ செய்கிறது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் அருமை, வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  5. சென்ற பகுதியில் வீராங்கனா ராணி லக்ஷ்மிபாய்//

    அன்றே வாசித்தேன் வெங்கட்ஜி அன்று கருத்து போட முடியாத அளவுக்கு நேர நெருக்கடி. அது வாசித்தது பற்றி கோமதி அக்கா பதிவிலும் சொல்லியிருந்தேன். அவங்க அங்கு போயிருந்த ஒரு எரிமலை இடத்தை பத்தி போட்டிருக்காங்க இல்லையா ...பாருங்க அங்கு எப்படி ஒவ்வொண்ணையும் காட்சிப்படுத்துறாங்க சுற்றுலாவுக்கு ஏற்ப செய்யறாங்கன்னு....இப்படியான வரலாற்று மிக்க இடத்தை சுற்றுலாவுக்கு வரும் மக்களைக் கவரும் வகையில் நீங்க சொல்லியிருப்பது போல் செய்யலாம்,.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிம்மாவின் பகுதியில் குறிப்பிட்டிருந்ததையும் பார்த்தேன் கீதா ஜி. நிறைய செய்யலாம். ஆனால் செய்வதில்லை என்பதே நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆனால் நம் நாட்டில் பழமையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளோ, ஏற்பாடுகளோ அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை என்பது தெரிந்த விஷயம் தானே//

    அதேதான் ஜி. நான் அடிக்கடி நினைப்பது அதுவும் சில வெளிநாட்டு இடங்களைப் பற்றிய பதிவுகளை வாசிக்கும் போதும் தோன்றும். நம்ம நாட்டில் இல்லாததா எவ்வளவு அருமையான இடங்கள் இருக்கின்றன!

    இந்த வீட்டை பலரும் பார்க்கும் வண்ணம் வசதிகள் செய்தால், இப்ப நீங்க அங்கு அந்தப் பெண்மணியை காக்க வைக்க வேண்டாம் என்று சட்டென்று வெளியில் வந்தது போல இல்லாமல் அதிக நேரம் நம் மனம் திருப்திப்படும் வகையில் அங்கு இருந்துவிட்டு வரலாமே அதற்கான தகுந்த ஏற்பாடுகள் செய்திருந்தால்!

    சொல்வனம் சென்று வாசிக்கிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விஷயங்கள் செய்யலாம் - மனதிருந்தால்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. அங்கே நீண்ட நேரம் அமர்ந்து அலைபேசியில் சில பாரதியார் பாடல்களை ஓட விட்டு கேட்டுக் கொண்டிருந்தேன் - சில பாடல்களை கூடவே பாடிக்கொண்டும் இருந்தேன். கங்கை உற்சாகமாக துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தாள். பாரதியாரின் பாடல்களைக் கேட்டதால் அவளின் ஓட்டத்தில் அதிக துள்ளல் இருந்ததோ என்ற சந்தேகமும் எனது மனதுக்குள் வந்து போனது!//

    ஜி! சத்தியமா அழகான கதைக்கான வரிகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கான வரிகள் - உற்சாகம் தரும் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. இரு கோடுகள் படத்தில் காசியில் தமிழர் வாழும் பகுதி என்று காட்டுவார்கள்.
    பாரதி மேல் பற்று உள்ளவர் பாலசந்தர், பாரதி வாழ்ந்த வீடு என்று ஏதாவது காட்டி இருப்பாரா பார்க்க வேண்டும்.

    "பாரதி" படத்தில் பார்த்து இருக்கிறேன், அது இந்த வீடு தானா? தெரியவில்லை.
    நினைவு இடம் திறந்து காட்ட வருவதே பெரிய விஷயம் போல இருக்கிறது.அந்த சிறுவன் சொன்னது போல தங்கசிலையை பாதுகாக்க அந்த அம்மா கூடவே நிற்கிறார்கள் போலும்.

    சொந்தமாக அந்த இடத்தை வாங்கி , பாதுகாப்புக்கு ஆள் போட்டு தினம் திறந்து வைத்தால் பார்வையாளர்கள் வந்து பார்த்து போக வசதியாக இருக்கும்.

    உங்கள் மூலம் அவர் வாழ்ந்த வீட்டை பார்த்து கொண்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. தங்கள் பதிவின் வழியே மகாகவி வாழ்ந்த வீட்டை தரிசித்துக் கொண்டேன்,

    மகிழ்ச்சி..
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  10. வெங்கட்ஜி,
    பாரதியார் வாழ்ந்த வீட்டின் படம் பார்க்கும் பொழுதே லேசான திடுக்.
    ஏனென்றால் அது தமிழக அரசு அந்த வீட்டின் முன் அறையை வாடகைக்கு எடுக்காத காலம். நல்ல காரியம் தான் செய்திருக்கிறார்கள்.

    நான் போயிருந்த பொழுது பார்த்த காட்சிகளை விவரமாக என் 'பூவனம்' தளத்தில் எழுதியிருந்தேன். பின்னர் பாரதியார் கதை என்ற பெயரில் அது நூலாகவும் உரு எடுத்தது.

    வெளியிலிருந்தே பார்த்தால் தெரியும் படி வீட்டினுள் பாரதியின் மார்பளவு சிலையொன்று இருக்குமே! பார்த்தீர்களா?

    தங்கள் எழுத்தில் விவரிப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை - மிக்க மகிழ்ச்சி ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....