புதன், 15 நவம்பர், 2017

விதம் விதமாய் தேநீர் – ஹிமாச்சல் தேநீர்



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 8

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6 7


தரம்ஷாலா - தேயிலைத் தோட்டங்கள்....


தரம்ஷாலா - தேயிலைத் தோட்டம் ஒன்றில் நான்....
படம்: நண்பர் பிரமோத்!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூர், காங்க்ரா பகுதிகள் தேயிலைத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றவை. பல வருடங்களாகவே இங்கே தேநீர் பயிரிடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்திலேயே இங்கே தேநீர் பயிரிட ஏதுவாக இருக்கும் என்று உணர்ந்து 1800-களில் தேநீர் பயிரிட ஆரம்பித்தார்களாம். Black Tea, Green Tea என இரண்டுமே பயிரிடுகிறார்கள் என்றாலும் முதல் வகை தான் அதிகம் பயிரிடப் படுகிறது. எனது நண்பருக்கு பாலம்பூர் சென்று, அங்கே உள்ள தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து வர வேண்டும் என்பது ஆசை. அதற்கு பாலம்பூர் வரை ஏன் செல்ல வேண்டும், தரம்ஷாலா, மெக்லாட்கஞ்ச் பகுதியிலேயே மிகப் பெரிய தேயிலைத் தோட்டங்கள் உண்டு – மிகவும் பழமையான தேயிலை நிறுவனமான ஹிமாச்சல் தேநீர் நிறுவனம் இங்கே தான் இருக்கிறது என்று சொன்னார் எங்கள் ஓட்டுனர்.




தரம்ஷாலா - தேயிலைத் தோட்டத்திலிருந்து தௌலாதார் மலைத்தொடர்.....

தலாய் லாமா – புத்தர் கோவிலிலிருந்து நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது தேயிலைத் தோட்டங்களைப் பார்க்கத் தான்! 1848-ஆம் ஆண்டில் தான் முதன் முதலாய் தேயிலை இங்கே பயிரிடப்பட்டதாம் – அதுவும் சைனீஸ் வகை தேயிலை! தொடர்ந்து தேயிலைகளில் பல வகைகள் இங்கே பயிரிடப்பட, ஒரு காலத்தில், அதாவது 1882-ஆம் ஆண்டு, இந்தியாவில் பயிரிடப்படும் தேயிலைகளிலேயே காங்க்ரா பகுதியில் பயிரிடப்படும் தேயிலை தான் மிகச் சிறந்தது என்று Kangra District Administration, Gazette Notification வெளியிட்டதாம்! அவ்வளவு சிறப்பாக இருக்கும் இந்த தேயிலை, பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விதம் விதமாய் தேநீர் வகைகள் உண்டு.  இப்படி இருந்த தேயிலை தோட்டங்களுக்கு ஒரு பெரிய இடி – 1905-ஆம் ஆண்டு வந்த மிகப் பெரிய பூகம்பம். 


தரம்ஷாலா - தேயிலை - ஒரு கிட்டப்பார்வை....

பூகம்பத்திற்குப் பிறகு மீண்டும் தேயிலைத் தோட்டங்கள் சூடு பிடிக்க சில வருடங்கள் ஆயின. தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களை விற்று தங்களது நாட்டிற்குச் செல்ல, தொழிலில் சுணக்கம். ஆனாலும் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியது தேயிலை வியாபாரம். பல வித முன்னேற்றங்கள், விதம் விதமாக தேயிலை என தயாரிக்க ஆரம்பித்தார்கள். இங்கே கிடைக்கும் தேயிலை வகைகள் பல – Oolong Tea, Ginger Green Tea, Hibiscus Green Tea, Lemongrass Ginger Tea, Kashmiri Kahwa Green Tea, Mint Green Tea, Rose Green Tea, Saffron Green Tea என பல வகைகளில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இந்தியாவிலும் கிடைக்கும் என்றாலும் விலை சற்றே அதிகமாகவே இருக்கிறது - 25 Tea Bag கொண்ட ஒரு பெட்டி 325/- ரூபாய் மட்டுமே!


தரம்ஷாலா - தேயிலைத் தோட்டத்திலிருந்து ஒரு இயற்கைக் காட்சி....

சில தேயிலை நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைத் தோட்டங்களை பார்வையிடவும், அங்கே ஓரிரு நாட்கள் தங்கி அந்தச் சூழலை ரசிக்கவும் தங்கள் தேயிலை தொழிற்சாலையைப் பார்வையிடவும், தேயிலைத் தோட்டங்களில் ஒரு நடைப்பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்கிறார்கள். தேயிலை சுற்றுலா என பெயரிட்டு, அங்கேயே வீடுகளில் தங்கும் வசதியோடு சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். நாங்கள் அப்படிச் செல்லவில்லை என்பதால், தேயிலைத் தோட்டங்களை மட்டுமே பார்வையிட முடிந்தது. தேயிலை தொழிற்சாலைகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. சாலையோரத்தில் இருந்த சில தேயிலைத் தோட்டங்களில் சென்று அந்த சூழலை ரசித்து, சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  சில படங்கள் ரொம்பவே மனதுக்குப் பிடித்தபடி வந்திருந்தன. 


தரம்ஷாலா - சாலையோரத்தில் தேயிலைத் தோட்டங்கள்....

இந்தப் பகுதியில் அப்படி ஒரு அமைதி நிலவுகிறது. தேயிலைத் தோட்டத்திற்கு வேலி கூட இல்லை. நாங்கள் சாலையோரத்தில் வாகனத்தினை நிறுத்தி விட்டு யாருடைய அனுமதியும் இன்றி [யாராவது இருந்தால் தானே அனுமதி கேட்க!] தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து தேயிலைகளை ஸ்பரிசித்து, முகர்ந்து, சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கே ஓரத்தில் இருந்த ஒரு Bench-ல் அமர்ந்து சில நிமிடங்கள் அந்த அமைதியை ரசித்தோம். தேயிலைத் தோட்டத்திலிருந்தும் தௌலாதார் மலைத்தொடர் தெரிய அதனையும் ரசித்தோம். அங்கிருந்து புறப்பட மனதில்லை என்றாலும் புறப்பட்டுத்தானே ஆக வேண்டும். அடுத்ததாய் எங்கே சென்றோம், அந்த இடத்தின் சிறப்பு என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

28 கருத்துகள்:

  1. குளிர் காலையில் சூடான தேநீர் அருந்திய எஃபெக்ட்! பொள்ளாச்சிக்கு மேலே ஒரு தேயிலைத் தோட்ட நடுவே கிடைத்த வேலையை இங்கு இருந்தால் போரடிக்கும் என்று 80 களில் அந்த வேலையை மறுதளித்து விட்டு ஓடிவந்தவன் நான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே ஒரு வேலை! சுகமாக இருந்திருக்கலாம்னு இப்ப தோன்றுகிறதா உங்களுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தேயிலைத் தோட்டங்களைப் பார்க்கையிலேயே தேநீரின் மனம் வீசுகிறது ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. தேநீர் தோட்டங்கள் என்பது தவறான சொற்பிரயோகம்.
    தேயிலைத் தோட்டங்கள் என்பதே சரியான சொற்பிரயோகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

      தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி THEVESH!

      நீக்கு
  4. அழகான படங்கள்..
    மழைச்சாரலில் தேநீர் அருந்தியதைப் போல பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. எனக்கும் டீ எஸ்டேட்டை ஒருமுறை சுத்தி பார்க்கனும்ன்னு ஆசை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது மாநிலத்தில் கூட தேயிலைத் தோட்டங்கள் உண்டு. சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  6. குளிர்ச்சியான காட்சிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  7. மிக அழகான இடம்! முணாறு, ஊட்டி, தேக்கடி மற்றும் எங்கள் ஊர்ப்பகுதியில் இருக்கும் டீ எஸ்டேட் களே அழகு என்றால் அதையும் விட இன்னும் அழகாய் இருப்பது போல் உள்ளது. ஆள்நடமாட்டம் குறைவாக இருப்பதாலோ என்னவோ. ஆம் மனிதன் நடமாட்டம் அதிகம் இல்லை என்றால் நன்றாகத்தான் அமைதியாகத்தான் இருக்கும் இல்லையா..படங்கள் அழகு வெங்கட்ஜி!

    கீதா: ஜி நாங்கள் திருநெல்வேலி மாஞ்சோலை டீ எஸ்டேட் மற்றும் சின்னார், மூணார், ஊட்டி, மற்றும் வால்பாறை எஸ்டேட் எல்லாம் பார்த்த நினைவு. தரம்ஷாலாவிலு அந்த நிறுவனத்திற்குச் செல்லவில்லை. ஆனால் மாஞ்சோலையில் டீ தயாரிக்கும் ஃபேக்டரிக்குப் போயிருந்த போது அங்கு தயாரிப்பு பற்றி அறிந்தோம். அது போல வால்பாறை எஸ்டேட்டில். அப்புறம் ஊட்டி நிறுவனத்தில். அவர்கள் சொன்னது, இந்தியாவில் கிடைக்கும் ஹை க்வாலிட்டி என்பது 2 ஆம் தரம் தான். முதல் தரம் எல்லாம் வெளி நாடுகளுக்குத்தான் போகிறதாம். இங்கு கிடைக்கும் 2 ஆம் தரம் முதல் தரத்தின் விலையில் விற்கப்படுகிறதாம். அது போல மூன்றாம் தரமும். அப்படியாக இவை விலை கூடுதல் என்று நம்மைப் போன்ற சாதாரண மக்கள் வாங்கும் டீ அனைத்துமே 3 அல்லது 4 ஆம் தரம் தானாம். வெறும் சக்கைதானாம். அதையும் காட்டினார்கள். ஏற்றுமதி செய்யப்படும் டீ லீஃபையும், உருண்டிய வடிவையும், டஸ்ட் ஆக விற்கப்படுவதையும் காட்டினார், இந்தியாவில் சாதாரண மக்கள் நாம் வாங்குவதற்கு விற்கப்படும் டீயையும் காட்டினார். அப்படி விற்கப்படும் டீ லீஃப் கூட இரண்டாம் தரம் தானாம். ஆனால் முதல்தர ரேட்டில். அந்த டீ ஃபேக்டரியிலேயே முதல் தரம் கிடைக்குமே என்றால் அதுவும் இல்லை முழுவதும் ஏற்றுமதிக்கு. அங்கு நமக்குக் கிடைக்கும் நல்ல தரம் என்று கிடைப்பது இரண்டாம் தரமே. அதையும் அவர் வெளிப்படையாகச் சொன்னார். அஸ்ஸாம் முதல் மாஞ்சோலை வரை இப்படித்தான் என்றார் தென்னகத்தவர். பாவம் நாம் சாதாரண இந்திய மக்கள்.

    படங்கள் அழகு ஜி! டீயைப் பார்த்ததும் க்ரீன் டீ அருந்தும் ஆசை வந்துவிட்டது... தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். முதல் தர தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே கிடைப்பவை மூன்றாம் நான்காம் தரம் தான்.

      உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. எல்லாமே அழகு என்றால் முதல் படமும், அந்த ரோட்ய் வளைவுப் பகுதிப்படமும் அருமையஓ அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. க்ரீன் டீ ஜப்பானில் சர்வசாதாரணம் மெஷின்கள் மூலம் தேவையான அள்வுக்குப் பிடித்துக் கொள்ளலாம் பொதுவாக தங்குமிடங்களில் இவ்வகை வெண்டிங் மெஷிகள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. தேயிலைத் தோட்டங்கள் எப்போதும் புகைப்படம் பிடிக்க ஏதுவாக இருக்கும். காலாற நடப்பதற்கும் சுகமாயிருக்கும் (இடையில் பாம்புகள் ஏதும் வராமல் இருந்தால்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையில் பாம்புகள் ஏதும் வராமல் இருந்தால்! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. தேயிலை பற்றிய விளக்கங்களும் வரலாறும் அறிந்து கொண்டேன் படங்கள் அருமை எவ்வளவு நெருக்கமாய் அடர்த்தியாய் பார்பதற்க்கு ரம்மியமாய் இருக்கு பயமில்லையோ உள்ளே நடப்பதில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமெதற்கு? பயமில்லை. ரம்மியமான இடம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  12. மூணாறு, இலங்கை இங்கெல்லாம் தேயிலை தோட்டம் போய் இருக்கிறோம்.
    பச்சை பசேல் இலைகளுடன் குத்து செடிக்ளின் இடையே நடந்து போவது, அருமையாக இருக்கும். நெல்லைத் தமிழன் சொன்னது போல் படம் எடுத்துக் கொள்ள அழகான இடம்.
    உங்கள் படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் மூணாறு போனதில்லை! :( போகணும் குடும்பத்தோட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  13. தேயிலைத் தோட்டப் படம் அருமை. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு போய்ப் எப்படி தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது என்பதை பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....