வெள்ளி, 24 நவம்பர், 2017

இரவினில் ஆட்டம் - தங்கும்விடுதி - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 12

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


டான்ஸ் பார்ட்டி!

அருங்காட்சியகத்தினைப் பார்த்த பிறகு வாகன ஓட்டிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தினைக் கொடுத்து அடுத்த நாள் எங்கே செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து சொல்கிறோம் என அனுப்பி வைத்தோம். தரம்ஷாலாவின் பிரதான சாலைகளில் அப்படியே நடக்க, ஒரு மால் - அந்த ஊருக்கு அது பெரிய மால்! – தில்லியில் இருந்தால் ஒரு சிறு காம்ப்ளெக்ஸ் தென்பட்டது.  அங்கே நுழைந்து கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் – கொஞ்சம் கொறிக்க, சுவைக்க! இப்படியாக நடந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் கடை! டீக் கடை! கொஞ்சம் தேநீர் அருந்தினோம். சுவையான தேநீர் – மிதமான குளிருக்கு இதமாய் இருந்தது. வேடிக்கை பார்த்தபடியே நடக்க இன்னுமொரு கடை – அது நண்பர்களுக்குத் தேவையான கடை!

இம்முறை வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் எனக்குப் பழக்கமில்லாதவர். மற்ற இருவரும் பழக்கமானவர்கள் – என்னுடன் சில பயணங்கள் மேற்கொண்டவர்கள். அவர்களுக்கும் மதுப் பழக்கம் உண்டு என்றாலும் கொஞ்சம் நிதானமாகவே இருப்பவர்கள். புதியவர் கடையைப் பார்த்ததும் உடனே உள்ளே புகுந்து விட்டார். மூன்று பேருக்குத் தேவையான சரக்கை வாங்கிக் கொண்டு தங்குமிடம் நோக்கி நடந்தோம். பொதுவாக புதிய இடங்களில் இருக்கும்போது இப்படி சரக்கு அடிப்பதில் சில சிக்கல்கள் உண்டு. அங்கே அனுமதி உண்டா இல்லையா? அப்படி அனுமதி இல்லை எனில் எங்கே சரக்கடிக்க? என்ற கவலை ஏதுமில்லாமல் கைகளில் சரக்கோடு உள்ளே நுழைய அங்கே பார்த்த காட்சி – தங்கும்விடுதியின் உள்ளே தங்கி இருக்கும் பெரும்பாலானோர் ஏற்கனவே கச்சேரியை ஆரம்பித்திருந்தார்கள்! சில அறைவாசிகள் கச்சேரி முடிந்து வாசலில் பாட்டில்களும் எலும்புத்துண்டுகள் நிறைந்த தட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.    

இரண்டு அறைகள் எடுத்திருந்தோம் என்பதால் நானும் நண்பரும் [என்னைப் போல சரக்கடிக்காதவர்!] ஒரு அறைக்குச் செல்ல, மற்ற மூவரும் அவர்களது அறைக்குச் சென்றார்கள். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்து, அரை மணி நேரம் கழித்து மற்றவர்கள் அறைக்குச் சென்றால் “வெள்ளம் அடி!” துவங்கி இருந்தது – ஏற்கனவே இரண்டு ரவுண்டு உள்ளே போயாச்சாம்! சைட் டிஷ்-உம் சரக்கும் மாற்றி மாற்றி உள்ளே போய்க்கொண்டிருந்தது. சரி இரவு உணவு சாப்பிட உணவகத்திற்குப் போகலாம் என புறப்பட்டோம். பக்கத்திலேயே பிரதான சாலையிலிருந்த ஒரு உணவகத்தில் சைவம்-அசைவம் என இரண்டும் இருக்க அங்கே சென்றோம். சப்பாத்தி, சப்ஜி, ராய்த்தா, சலாட் என நான் சொல்ல, அவர்கள் சிக்கன், மட்டன் என சொல்லிக் கொண்டு, கால்களை – அதாங்க கோழியின் கால்களை கடித்து இழுத்தார்கள்.

இரவு உணவிற்குப் பிறகு நானும் என் அறை நண்பரும் கொஞ்சம் நடக்க, மற்ற மூவரும் இன்னும் கொஞ்சம் சரக்கு வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள்! நாங்கள் தங்குமிடம் திரும்பியபோது மூவரில் ஒருவருக்கு பயங்கர போதை! கைலியை மடக்கிக் கட்டி – ஸ்வெட்டர் கழற்றி இருந்தார் – உள்ளே போன சரக்கு குளிரை மறக்கடிக்கவிட்டது போலும்! முதல் முறை குளிர் பிரதேசத்தில் வந்திருந்த அவருக்கு இது நல்லதல்ல எனச் சொல்ல, “ஹா… இதெல்லாம் பெரிய குளிரா?” என்று சத்தமாக பேசிக்கொண்டும், மற்றவர்களை வம்புக்கிழுத்தும் கொண்டிருந்தார். தள்ளாடியபடியே, மொட்டைமாடிக்குச் சென்று சிறிது நேரம் இருக்கலாம் என மூவரும் செல்ல நானும் என் நண்பரும் எங்கள் அறைக்குத் திரும்பினோம் – நண்பர் அவர்களிடம் சீக்கிரமா தூங்குங்க, நாளைக்கு காலையில் சுற்ற வேண்டும் என்று சொன்ன பிறகு.

தூங்கலாம் என நாங்கள் நினைத்தாலும் தூங்க இயலவில்லை. மேலே சென்றவர்கள் ஒரே ஆட்டம். இருவர் தன் நிலையில் இருக்க, பயங்கர போதையில் இருந்தவர் ஆடிக்கொண்டும், சத்தமிட்டபடியும் இருக்க, வேறு வழியில்லாமல் நண்பர் கதவைத் திறந்து கொண்டு மாடிக்குச் சென்று அனைவரையும் திட்டி, வெளியூர் வந்திருக்கும் சமயத்தில் பிரச்சனையை இழுத்து விட்டுக் கொள்ளாதீர்கள் என அறைக்குள் அடைத்தார். போதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாத அளவிற்கு போதை! அவருக்கு வீட்டில் சரக்கு அடிக்க அத்தனை வாய்பில்லை என்பதால் இப்படி வெளியே வரும்போது நிறைய சரக்கு அடிப்பவராம்! என்னதான் வாய்ப்பு கிடைக்கிறது என்றாலும் தன் நிலை மறக்கும் அளவிற்கு சரக்கடிப்பது என்ன பழக்கமோ? அறைக்கு வந்த பிறகும் நீண்ட நேரம் பேச்சுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. தங்கும் விடுதியில் இருந்த பல அறைகளில், இரண்டு அல்லது மூன்று அறைகளிலிருந்து இப்படி சத்தம்!

காலையில் நாங்கள் எழுந்து தயாராக, அவர்கள் அறையில் நிசப்தம்! இரவு ஒன்றரை மணி வரை போதையில் பேச்சு தொடர்ந்திருக்கிறது – மற்ற இருவரும் அமைதியாக இருக்க, இவர் மட்டும் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். அனைவரையும் தயாராகச் சொல்லிவிட்டு கீழே செல்ல, தங்கும் விடுதியின் உரிமையாளர் எங்களைப் பார்த்து புன்னகைத்து – “ராத்திரி கொஞ்சம் ஓவரோ?” எனக்கேட்க, ”நேரம்டா டேய்!” என நினைத்து, ”எங்களுக்கல்ல, மற்ற நண்பர் ஒருவருக்கு” எனச் சொல்லி சிரித்தோம். ”இரண்டு மணி வரை புலம்பிக் கொண்டே இருந்தாரே” என்று சொல்லி, ‘இன்னிக்கு காலி பண்ணிடுவீங்கதானே?” என்று கேட்டார்! முதல் நாள் வண்டி அனுப்பிய சர்தார்ஜியிடம் பேசினோம். அன்றைக்கு எங்கே செல்ல வேண்டும் என முடிவு செய்து வண்டி அனுப்பச் சொல்லி தேநீர் அருந்திய பிறகு அறைக்குத் திரும்பி தயாரானோம்.

இரவு முழுவதும் ஆடிய நண்பர், குளித்து முடித்து தயாராக இருந்தார். பார்க்கும்போதே தெரிந்தது அவருக்கு போதை தெளியவில்லை என.  எதற்காக இப்படி குடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, கேரளாவில் சரக்கு விலை அதிகம், இங்கே குறைவாக இருக்கிறதே, ”காசுக்குக் காசு மிச்சம், ஜாலிக்கு ஜாலி” என்பதால் அடிக்கிறார்களாம்! நல்ல சாக்கு தான்! இரவு அடித்த சரக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று தோன்றியது! நான் நினைத்தது சரியாகவே இருந்தது – அன்றைக்கு முழுவதும் அவர் Off! எல்லோரும் அவரை கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அவர் கேட்ட கேள்வி அப்படி – ”ராத்திரி ஏதும் ரொம்பவே பேசினேனோ?”

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

22 கருத்துகள்:

 1. ஒரு முறை சரக்கடித்து, சாப்பிட்டு உடனே மறுபடியுமா? என்னதான் இருக்கோ? என் நண்பர்கள் சிலரும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள். ஒருமுறை என்னைத் தீட்ட விரும்பிய என் நண்பர் ஒருவர் சரக்கடித்துவிட்டு தன்னிலை மறைந்தவர் போல திட்டி, பின்னர் "தெளிந்ததும்" மன்னிப்பு கேட்டார்! போதையில் இருந்த போதும் திட்ட மறக்கவில்லை. தெளிந்த பின்னும் திட்டியதை மறக்கவில்லை!!! காரிய போதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலர் போதை போல நடிப்பதும் உண்டு :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 3. இன்றைக்கு சரக்கு மஹாத்மியமாப் போயிடுத்து. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. இடம் எதுவாக இருந்தாலும் இப்படித்தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 7. //என்னைப் போல சரக்கடிக்காதவர்!//
  Compare பண்ணிக்கூட குடிப்பீங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் குடிப்பேன் என எங்கே எழுதி இருக்கிறேன்! :) குடிப்பழக்கம் எனக்கு இல்லை நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பக்கிரிசாமி ஜி!

   நீக்கு
 8. பயண அனுபங்கள்-ன்னு நிறைய சரக்கு வெச்சிருக்கீங்க போல ஜி ! எழுதித் தள்ளுங்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய சரக்கு! :) ஹாஹா

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்....

   நீக்கு
 9. அடக்கடவுளே நல்லகாலம் பிரயாணம் தடைப்படவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரயாணம் தடைப்படவில்லை என்பது எங்களுடைய உணர்வும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   நீக்கு
 10. ஹா..ஹா...
  போடுற ஆட்டமெல்லாம் போட்டுட்டு எல்லாரும் கேக்குறதுதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 11. என்ன ஜி! இப்ப்படியா சரக்கு!!! நீங்கள் ஒவ்வொரு சுற்றுலா பதிவிலும் இப்படியான அனுபவங்களைச் சொல்வதுண்டு. இருந்தாலும் எப்படி ஜி நீங்கள் இவர்களோடு அட்ஜஸ்ட் செய்து கொண்டு...ம்ம்ம்ம்....ஏனென்றால் நீங்கள் போவதோ அருமையான இயற்கையும் அழகும், வரலாறும் நிறைந்த இடங்களுக்கு. கூடவே இப்படியான அனுபவங்களும் அதுவும் கூடவே பயணிப்பவர்கள்!நல்ல காலம் அந்த தெளியாத நண்பரினால் உங்கள் அன்றைய பயணத்திற்கு இடையூறு இல்லாமல் இருந்ததெ பெரிய விஷயம். அவருக்கு ஏதேனும் ஆகியிருந்தால்...மொட்டை மாடி என்றதும் கொஞ்சம் திக் திக் என்று வேறு இருந்தது..அவர் தள்ளாடியதில் கீழே விழுந்திருந்தால்...ஆ!!

  வெங்கட்ஜி உங்களுக்கு ரொம்பவே பொறுமை!! உங்கள் சகிப்புத்தன்மைக்கும் பெரிய சல்யூட்! பூங்கொத்து!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சமயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது. தனியாகப் போக முடிவதில்லை! சில சமயங்களில் இப்படியான் அனுபவங்களும் கிடைக்கத்தான் செய்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....