செவ்வாய், 7 நவம்பர், 2017

சாப்பிட வாங்க – சாக்லேட் தோசா – கோவா இட்லி – கிச்சடி - கோகுர் கேசர் சாய், இன்னும் பல!


சாக்லேட் தோசா


தலைநகர் தில்லியில் ஒரு வசதி – இரண்டு அரசாங்கம் – அட தில்லி அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் என்கிற இரண்டும் தாங்க! மாற்றி மாற்றி ஏதாவது விழா நடத்திக் கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் பர்யாடன் பர்வ் [சுற்றுலா பருவம்!] என்று ஒரு நிகழ்வு இருந்தது. சென்ற வாரக் கடைசியில் [3-5, நவம்பர், 2017] World Food India 2017 எனும் நிகழ்வு இந்தியா கேட் பகுதியில் நடந்தது. அதே சமயம் ஜன்பத் அருகே வடகிழக்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. INA எனும் பகுதிக்கு அருகே இருக்கும் Dilli Haat சிற்பங்கள் சம்பந்தமான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஏதாவது நடந்தபடியே இருப்பது வழக்கம். பர்யாடன் பர்வ் சென்று வந்தாலும் அது பற்றி இன்னும் ஒன்றும் எழுதவில்லை – அலுவலகத்திலிருந்து மாலையில் சென்றதால் கையில் கேமரா/அலைபேசி இரண்டுமே இல்லை. படங்கள் இல்லை என்றாலும் எழுத வேண்டும்.
ஃப்ரூட்டி டெட்ரா பேக் வண்டி!

இன்றைக்கு World Food India 2017 நிகழ்வு பற்றிய விஷயங்கள் பார்க்கலாம். மத்திய அரசாங்கம் இந்திய மாநிலங்கள், வெளி நாடுகள் ஆகியவற்றிலிருந்து புகழ்பெற்ற சமையல் நிபுணர்களை வரவைத்து அவர்களுடன் உரையாடல், நிகழ்வுகள், பல உணவுகள் சுவைக்க ஒரு வாய்ப்பு என அனைத்தும் அமைத்திருந்தார்கள். மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் Food Street என்ற பகுதிக்கு மட்டும் உள்ளே நுழைய 500 ரூபாய் கட்டணம்! மற்ற இடங்களில் சாப்பிடக் கிடைக்கும் என்றாலும் காசு கொடுத்து சாப்பிட வேண்டும்! Food Street செல்ல நண்பர் ஒருவர் மூலம் பாஸ் கிடைத்தது! [500 ரூபாய் செலவு மிச்சம்! எப்படியும் இவ்வளவு காசு கொடுத்து போயிருக்க மாட்டேன்!] கிடைத்த போது விடுவானேன் – அதுவும் நிறைய புகைப்படங்கள் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் என நண்பர் சொல்லியிருந்ததால் ஞாயிறு [05-11-2017] அன்று சென்றிருந்தேன்.


ஜப்பானிய ஸ்ப்ரிங் ரோல், சமோசா!


ஜப்பானிய ஸ்ப்ரிங் ரோல், சமோசா!

பல விதமான உணவுகள் – வேவ்வேறு மாநில உணவுகள், ஜப்பான், சைனா, துபாய் போன்ற நாடுகளின் உணவுகள் என நிறையவே உணவை ருசிக்க வாய்ப்பு கிடைத்தது! எந்த பகுதிக்குச் சென்றாலும் ஏதோ ஒரு உணவின் வாசம் வந்து கொண்டிருந்தது. எதைச் சுவைப்பது, எதை விடுப்பது என மனதுக்குள் பெரிய போராட்டம்! இதில் இன்னும் ஒரு விஷயமும் கவனிக்க வேண்டியிருந்தது – அது சைவமா? அசைவமா? பார்க்க சைவம் போல இருந்தாலும் அது அசைவ உணவாக இருந்தது! – அசைவமோ என நினைத்த உணவு சைவ உணவாக இருந்தது! ஒரே கன்ஃப்யூஷன்! எந்த இடத்திற்குச் சென்றாலும் முதல் கேள்வி – “சைவமா, அசைவமா?” என்பது தான்!


தால் Bபாட்டி சூர்மா - ராஜஸ்தானிய உணவு


பாக்கு மட்டையில் சிறிய தொன்னைகள்!


இந்த உணவில் மேலே போட்டிருப்பது பீட்ரூட் சட்னி!

Food Street பகுதியில் காட்சிக்கு வைத்திருந்த பல உணவு வகைகளும் சுவைக்கத் தந்தார்கள் – தனியாகக் காசு தர வேண்டாம் [நுழைவுச் சீட்டில்/பாஸில் இதுவும் அடக்கம்! கொடுத்தது கொஞ்சமாக இருந்தாலும் ருசி அபாரம், கூடவே அந்த உணவை வைத்துக் கொடுக்க பயன்படுத்திய பாக்கு மட்டை/இலை கிண்ணங்கள் ரொம்பவே அழகாய் இருந்தது! எத்தனை விதமான உணவுகள் – தேநீரில் எத்தனை வகை, அரிசி உணவில் எத்தனை வகை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் உண்டான சிறப்பு உணவு என எங்கே பார்த்தாலும் வா வா என அழைக்கும் உணவுகள்!


சனஸ் - கோவா இட்லி!


Dhab Chingri - side dish for Sanas!

ஒரு இடத்தில் இளநீர் காயை மேல் பகுதியில் வெட்டி, இளநீர் இருக்கும் கீழ்பகுதி தேங்காயை அடுப்பில் அப்படியே ஏற்றி சூடுபடுத்திக் கொண்டிருந்தார். ஆஹா ஏதோ சைவ உணவு போலும் என அருகே சென்று பார்த்தால், தேங்காய்ப்பாலில் இறால் மீன்கள்! அது ஒரு சைட் டிஷ் என்றார் அங்கே நின்றிருந்த இளைஞர்! எதன் கூட சாப்பிட வேண்டும் எனப் பார்த்தால் – இட்லியோடு – மினி இட்லியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் அந்த இட்லிக்குப் பெயர் – சனஸ்! கோவா மாநில இட்லி!

ஒரு இடத்தில் வேப்பிலை இலைகள் இருக்க அதன் மேல் ஒரு பாத்திரத்தில் பச்சை நிற திரவம் – கூப்பிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு ஸ்பூன் சோம்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் ஐந்து வேப்பிலைகள், ஒரு சிறு கட்டி கல்கண்டு ஆகிய மூன்றையும் அரைத்து, தண்ணீர் சேர்த்தால் அந்த திரவம் ரெடி! ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் குடித்தால் வயிற்றுக்கு நல்லதாம்!


சர்க்கரை வள்ளிக்கிழங்கு தந்தூரி ரொட்டி


ருமாலி ரொட்டி!


ருமாலி ரொட்டி தயாரிக்கும் அழகு!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்த தந்தூரி ரொட்டி, பீட்ரூட் சேர்த்த தந்தூரி ரொட்டி, ருமாலி ரொட்டி, புதினா தந்தூரி ரொட்டி என்று விதம் விதமாய் ரொட்டிகள். கூட அதற்கேற்றவாறு சப்ஜி என எல்லாம் கிடைத்தது – சாப்பிட நமக்கு வயிறு வேண்டுமே! அனைத்தும் நிச்சயமாக சாப்பிட முடியாது – என்னதான் சின்னச் சின்னதாய் இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒன்று சாப்பிட்டாலே வயிறு ரொம்பிவிடும்! இதில் வேறு உணவுகள் வேறு உண்டு! காலையிலிருந்து இரவு வரை இருந்தால் மட்டுமே எல்லா உணவையும் சுவைத்திருக்க முடியும்.


Ghokhru Kanta Chai!

வேறு ஒரு இடத்தில் தேநீர் – எதில் தயாரிக்கிறார்கள் என்று கேட்க ”Gகோக்ரு கான்டா” என்று சொல்லி, பாத்திரத்தில் வைத்திருந்த பொருளைக் காண்பிக்க, “அட நம்ம நெருஞ்சி முள்ளு” என்று சத்தமாகவே தமிழில் சொல்லி விட்டேன்! பக்கத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் விழிக்க, சமாளித்துக் கொண்டேன். நெருஞ்சி முள்ளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொடுக்கிறார்கள் – இதற்கு நிறைய பலன்கள் உண்டு என்றும் சொல்லிக் கொண்டிருந்தார் – சீறுநீரகக் கற்களை கரைக்க வல்லது, சீறுநீரக கோளாறுகளுக்கு நல்ல மருந்து, என்றெல்லாம் சொல்லிக் கொண்டே, இன்னும் ஒரு விஷயத்தினையும் சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் – வீரிய விஷயம்! ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்க இந்த தேநீர் குடிக்கலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த தேநீரைச் சுவைத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி வேகவேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றார். தூரத்திலிருந்து இரண்டு ஆண்கள் வேகமாக அங்கே வந்தார்கள்…..


விதம் விதமாக பானி பூரி!

லால் மாஸ் [அசைவம்]!!


பாத்திரங்களின் அணிவகுப்பு! 


வலது பக்கம் இருப்பது ”காவா” எனப்படும் தேநீர் தயாரிக்கும் குடுவை!

கிச்சடி – சில நாட்களாகவே இந்த கிச்சடி பலரின் வாயில் அகப்பட்டுத் தவிக்கிறது! இங்கேயும் கிச்சடி – அதுவும் Record Breaking கிச்சடி – ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட வாணலியில் கிச்சடி செய்தார்கள் – Chef சஞ்சீவ் கபூர் தலைமையில் பலர் சமைத்த கிச்சடி அங்கே வந்திருந்தவர்களுக்குக் கொடுத்தது போக, நிறைய விடுதிகளில் கொடுத்திருக்கிறார்கள். கிச்சடி இந்தியாவின் தேசிய உணவா? என்ற பட்டிமன்றம் வைக்கலாம்!


இனிப்பு சாதம்

இனிப்பு சாதம் கொடுக்கும் ஒரு இடத்தில் நின்று அதைச் சுவைத்த போது ஒரு தமிழ்க் குரல்! ”நல்லா இருக்கு – இன்னும் கொஞ்சம் கொடுத்தா பரவாயில்ல! ஒரு ஸ்பூன்ல தான் கொடுக்கறான்!” அதற்கு பக்கத்தில் இருப்பவர் பதில் – “கேளு, தந்தாலும் தருவான்!”  - விசாரித்தேன் – தஞ்சாவூரிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு ஸ்டால் போல வந்திருக்கிறார்களாம்!


வாசபி வசாபி - இதுவும் ஜப்பான்!

ஜப்பானிய ஸ்டால் ஒன்றில் வாசபி வசாபி [Wasabi] எனும் கிழங்கு வகை வைத்திருந்தார்கள்! அதை அவர்களது பல உணவில் சேர்ப்பார்கள் என்றும் ஜப்பானிய ஆங்கிலத்தில் விளக்கினார் ஒருவர். ஒரு இடத்தில் உப்பில்லாத உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் கொடுத்தார்! :) அதை வாங்க பெரும் போட்டி – சாப்பிட்ட பிறகு தானே தெரிந்தது – உப்பே இல்லை என! மைக்கேல் மதன காமராஜன் படத்து காமேஸ்வரன் போல, வாயில் போட்ட பிறகு “உப்பே இல்லையே” என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தேன்!


ஒரு இடத்தில் உடுப்பி ஸ்டால் போட்டிருக்க, அங்கே இருந்த தோசை வகைகளைப் பார்த்தேன் – மசாலா தோசா, சாதா தோசா, சாக்லேட் தோசா! அட சாப்பிட்டு பார்க்கலாம்னு போனா – சின்னச் சின்ன தோசை கல்லிலே – சாக்லேட் தோசா கேட்க, Hershey’s Chocolate Syrup தோசை மேல் விட்டு ஒரு தடவு, மடிச்சு கொடுத்துட்டாங்க! அதான் சாக்கலேட் தோசா! போங்கடா இது போங்கு ஆட்டம்னு, தோசை மாஸ்டர்கிட்ட உடுப்பியா நீங்க என்று கேட்டேன் – வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் இருந்தாலும், வேட்டி கட்டியிருந்த முறை கொஞ்சம் சந்தேகமா இருந்தது! சந்தேகம் சரி தான் – அவர் வட இந்தியர்! தோசை போடறதால இப்படி ஒரு வேஷம்! நல்ல வேளை லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ்னு ஆடாம இருந்தாரே [நன்றி: சுபா!].


பார்க்க கொஞ்சம் பயமா இருக்கோ? 


மல... சாக்லேட் மல!


தஹி பல்லே பாப்டி! 

இப்படி எல்லா இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்தாலும், வெளியே வரும்போது ஐந்து கிலோ அதிகமான ஒரு உணர்வு – அன்னிக்குன்னு பார்த்து, என்னைப் பார்த்து ஒருவர் கேட்ட கேள்வி – “தொப்பை கொஞ்சம் அதிகமாகத் தெரியுதே?” நானும் குனிந்து பார்த்தேன் – அட ஆமாம். கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கு!


புளிச் சாற்றில் தோய்த்த வேக வைத்த சோளம்!


சிக்கன் மோமோஸ்!


கேரள இனிப்பு உணவோ என அருகில் சென்றால் இது சிக்கன்!!

படங்கள் நிறையவே இருக்கு. இப்போதைக்கு இந்தப் பதிவில் கொஞ்சம் படங்கள் மட்டும்!

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


22 கருத்துகள்:

 1. ஆபிஸில் இருப்பதால் வீடு வந்ததும் படித்து பதில் இடுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது படியுங்கள்.... ஆஃபீஸ் வேலை தான் முக்கியம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 2. மிக மிக மிக சுவாரஸ்யமான பதிவு. ரசித்துப் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நல்ல பசி காலம்பரேயே! இதைப் பார்த்துப் படிச்சதும் வயிறே நிறைஞ்சாப்போல் ஓர் உணர்வு. அப்புறமா இந்த நெருஞ்சி முள் கஷாயம் நானும் குடிச்சிருக்கேன். சிறுநீர்த் தொற்றுக்கு ஆயுர்வேதத்தில் கொடுக்கிறாங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெருஞ்சி முள் கஷாயம் நான் கேள்விப்பட்டதில்லை. மருத்துவ குணம் உண்டு என இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 4. ஆகா..அழகழகான படங்கள்..
  சுவை கூட்டும் உணவு வகைகளுடன் பதிவும் அருமை..

  வாழ்க உணவுடன்.. வாழ்க நலமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு

 5. என்னதான் வித விதமாக சமைச்சாலும் நம்ம செளத் இண்டியன் சமையலுக்கு ஈடாகதுங்க சம்பார் வத்த குழம்பு பொறியல் உளுந்த வடை பஜ்ஜி தயிர் சாதம் இவைகளுக்கு ஏதும் ஈடாகவே ஆகாது. பட்ங்கள் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்குப் பிடித்த உணவு தென்னிந்திய உணவு தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.

   நீக்கு
 6. பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. உங்கள் மனைவியும் குழந்தையும் இவைகளை மிஸ் செய்கிறார்கள்.

  எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என் குடும்பத்தோடு செல்லவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பத்தோடு செல்ல வேண்டும் - வாய்ப்பு கிடைக்கட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. இந்திய உணவாக இந்தக் கிச்சடி அறிமுகமானது இந்த நிகழ்ச்சியிலா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நிகழ்வுக்கு ஓரிரு நாட்கள் முன்னர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 8. துளசிதரன்: சுவையோ சுவை!! பல்சுவை!! இந்த உணவுகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றாலும் உங்கள் பதிவு படங்கள் அருமை.

  கீதா: எத்தனை வகை உணவுகள்!! நாவில் நீர் ஊறிடுச்சு. சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து ரொட்டி செய்ததுண்டு. ஸ்டஃப் செய்து. படங்கள் எல்லாம் கண்ணை மட்டுமில்ல நாக்கையும் கவருது!!! வெங்கட்ஜி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாக்கையும் கவருது! :) உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 9. இன்னொண்ணு வெங்கட்... அளவுலாம் கம்மியா? ஒருத்தர் அவரது வயிற்றின் கொள்ளளவைவிட எப்படி அதிகமாகச் சாப்பிடமுடியும்? சர்க்கரைப் பொங்கள் ஸ்பூன்ல கொடுத்தாங்கன்னு சொல்றீங்க. மோமோஸ் 4 வேணும்னா தரமாட்டாங்களா? சாம்பிளுக்கு மட்டும்தான் தருவாங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாம்பிள் மட்டுமே! சர்க்கரை பொங்கல் இல்லை - மீட்டா சாவல்! :)

   வயிறின் கொள்ளளவை விட அதிகமாக எப்படிச் சாப்பிட முடியும்? - வயிறு போதும் என்றாலும் மனது கேட்பதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. எனக்கு சாக்லேட் மலை மட்டும்...

  தோசைல நானே பல வெரைட்டி காட்டுவேன். சாக்லேட் தோசை நிஜமாவே போங்குதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாக்லேட் மலை மட்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 11. வாவ் சூப்பர் சகோ நான் ரொம்ப சந்தோஷமானேன் படங்களையும் பதிவையும் படித்து இந்த மாதிரி விஷேஷமா வித்யாசமான உணவு வகைகளை பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும் அதுவும் அதை எங்கே என்னது என்பதை தெரிந்தகொள்வதில் மிக ஆர்வம் ஹி ஹி திரும்பவும் இந்த பதிவை தொடரவீர்களா ஹாப்பி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி அடிக்கடி செல்வதுண்டு. அடுத்த முறை செல்லும் போதும் பதிவு வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....