வியாழன், 9 நவம்பர், 2017

புகை மண்டலத்தில் வாழ்க்கை – சுவாசம் முட்டும் தலைநகர்!


 இந்தப் படத்தில் இருப்பது இந்தியா கேட் பகுதி!
நிஜமாத்தாங்க!


இரண்டு நாட்கள் முன்னர் தான் தலைநகரில் பல நிகழ்வுகள் நடப்பது ஒரு வசதி என பதிவிட்டு இருந்தேன். ஆனால் வசதிகள் மட்டுமே நிறைந்தது வாழ்க்கை அல்லவே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது தலைநகரம் – ஒரு நகரமே மூச்சு விடத் திணறிக் கொண்டிருக்கிறது! பெரும்பாலும் இந்த மாதங்களில் தலைநகர் தில்லியை ஒரு போர்வை போல போற்றியிருக்கிறது புகை மண்டலம்! பனிமூட்டம் என்று நினைத்தாலும், இது பனி அல்ல! புகை! Visibility ரொம்பவே குறைவாக இருக்க, எங்கே பார்த்தாலும் விபத்துகள். நேற்று காலை தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் யமுனா எக்ஸ்ப்ரெஸ்வேயில் நடந்த ஒரு விபத்தில் பல வாகனங்கள் முட்டிகொண்ட காட்சி இப்போது வைரலாக பரவி வருகிறது. பார்க்காதவர்கள் பார்க்க இங்கே ஒரு காணொளி!பனிமூட்டம், புகைமூட்டம் என இரண்டும் கலந்து இருப்பதால் தில்லி மக்கள் அனைவருக்குமே கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிக்கல்கள் என நிறைய பிரச்சனைகள். இந்த நிலையில் அதிகாலையில் [07.00 மணிக்குள்] பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் நிலையைக் கருத்தில் கொண்டு வரும் ஞாயிறு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறது தில்லி அரசாங்கம். எங்கள் அலுவலகம் இருக்கும் பகுதிகளிலும் Visibility 5 மீட்டர் அளவு தான் இருக்கிறது. வரலாறு காணாத Pollution! வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! பள்ளிகளுக்கு விடுமுறை விட்டது போல அலுவலகத்திற்கும் 10 நாட்கள் விடுமுறை விட்டால் தமிழகம் வந்து விடலாம் எனத் தோன்றுகிறது! – Jokes Apart, ரொம்பவே கஷ்டம் தான்.

பொதுவாக இந்த மாதங்களில் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசத்தில் அரிசி அறுவடை முடிந்து தானியம் எடுத்த பிறகு இருக்கும் வைக்கோலை எரித்து விடுகிறார்கள். அரிசி அறுவடை முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே கோதுமை விதைக்க வேண்டும் என்பதால், வைக்கோலை எரிப்பது தவிற வேறு வழியில்லை என்கிறார்கள் விவசாயிகள். எரிக்கக் கூடாது என உத்தரவு இருந்தாலும் எந்த விவசாயியும் கேட்பதில்லை. இது ஒன்று தான் எங்களுக்கு வழி! வேறு எதையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய காசு செலவாகும் – அதை அரசாங்கம் தான் தரவேண்டும் என்பது அவர்களது வாதமாக இருக்கிறது. இல்லை என்றால் அரிசிக்கு பதில் வேறு ஏதாவது பயிர் செய்ய வழி செய்ய வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக இருக்கிறது!

பெரும்பாலும் தீபாவளி பண்டிகையும் இந்த சமயத்தில் இருந்தால் இன்னும் புகை மண்டலம் அதிகமாகும் என்று இந்த முறை முன்னாலே வந்துவிட்டாலும் பட்டாசு விற்கத் தடை விதித்தது நீதிமன்றம். இருந்தாலும் பட்டாசுகள் விற்கவும் வெடிக்கவும் செய்தார்கள் தில்லி மக்கள் – எதையும் செய்யக்கூடாது என்றால் நாங்கள் கேட்போமா என்ன? பட்டாசு வெடிப்பது குறைந்தாலும் புகை குறையவில்லை என்பதால் அந்த தடையினால் பலன் ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது! எதனால் இந்த புகை என்று புதிது புதிதாக காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  விதம் விதமான காரணம் சொன்னாலும் கஷ்டங்களை அனுபவிப்பது தில்லி வாசிகள் தான். 


இன்று காலை ஆக்ரா செல்லும் வழியில் உள்ள பல்வல் எனும் இடத்திற்கு அருகில் நடந்த ஒரு விபத்தின் காணொளியும் இணைத்திருக்கிறேன்.  [Sorry for Cuss words used by the persons in the video! They are used to it and they can’t speak without those words!]இன்று தில்லி அரசாங்கம் மூன்றாம் முறையாக Odd-Even திட்டத்தினை வரும் 13-17 வரை அமுல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். மெட்ரோவும் தனது ரயில்களின் எண்ணிக்கை/ஓட்டங்களை அதிகரிக்க ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பிரச்சனை நீடிக்கும் என்று தெரியவில்லை. என்ன நடக்குமோ? எத்தனை புகை இருந்தாலும் அலுவலகத்திற்கு போகத் தானே வேண்டியிருக்கிறது! பெரும்பாலான தில்லி மக்கள் முகமூடிகள் அணிந்து வெளியே வருகிறார்கள். இவற்றினாலும் எந்த பயனும் இல்லை என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள். நண்பர் பத்மநாபன் சொல்வது போல “பத்து ரூபாய்க்கு வாங்கி பதினைந்து நாள் அதையே பயன்படுத்தினால்” என்ன பலன் இருக்கப் போகிறது! பல சாலை சந்திப்புகளில் இப்படி முகமூடிகள் விற்பனை தொடங்கி இருக்கிறது – புகை மூட்டத்தினால் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு கிடைத்திருக்கிறது!

விரைவில் இந்தப் பிரச்சனை தீர வேண்டும், வருடா வருடம் இந்தப் பிரச்சனை தொடர்கிறது என்பதால் ஒரு நிரந்தரத் தீர்வும் வேண்டும். பார்க்கலாம் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என! அது வரை மூக்கை மூடிக்கொண்டு மூச்சு விடப் பழகிக் கொள்வோம்!

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


16 கருத்துகள்:

 1. புகை மண்டலம் என்றாலே கஷ்டம்தான். இங்கு திருச்சியிலும் இரவானதும், கொசுவுக்கு பயந்து, எதை எதையோ போட்டு கொளுத்துகிறார்கள். சுவாசிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகையில் சுவாசிப்பது கஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 2. பீஜிங்க் ற்கு அடுத்தபடியாக தில்லி ஆகிவிட்டது போல் இருக்கிறது. ஸ்மாக் அதிகரித்துள்ளதால் என் தங்கையும் சொன்னாள் அவள் வேலை செய்யும் ஸ்கூல் டைம் நாளையிலிருந்து மாறியிருக்கிறது என்று. குளிர் காலத்தில் இப்படி பனி மூட்டம் போல் ஸ்மாக் வந்து பனியுடன் சேர்வதால் தெரிகிறது. இதே அளவு பொல்யூஷன் கோடைகாலத்திலும் இருக்கத்தான் செய்கிறது வெளியில் அவ்வளவாகத் தெரியாமல்...ம்ம்ம் வளர்ச்சி என்ற பெயரில் மனிதனின் சுயநலம் கூடக் கூட சுற்றுப்புறச் சூழல் ரொமப்வே பாதிக்கப்பட்டுள்ளது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்மாக் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம். பல ஆஸ்த்மா நோயாளிகள் அவதியுறுகிறார்கள். புதிதாய் பலருக்கும் இந்தப் பிரச்சனை வந்திருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. நானும் இந்த செய்தி படித்தேன். வானிலிருந்து நீர் தூவப் போவதாயும்படித்த நினைவு. வைக்கோல் மாடுகளுக்கு உணவாச்சே.. மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி / விற்று விட முடியாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டன் கணக்கில் வைக்கோல் - அதை விற்பது இல்லை. எரிப்பது தான் வழக்கம். இங்கே இருக்கும் எருமை மாடுகளுக்கு வைக்கோல் கொடுப்படு அரிது - பச்சைப் புல், கோதுமை என நிறைய விஷயங்கள் தருவார்கள் - அதனால் தான் பாலும் அதிகம் கறக்கின்றன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. சோதனைகள் விரைவில் தீரட்டும்
  இந்த மாதிரி அபுதாபி, துபாயிலும் வருடத்தில் ஒரு மாதமாவது நடக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோதனைகள் தீர வேண்டும். பார்க்கலாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அவதி என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 5. இந்த நிலை நீடித்தால் அரசியலில் bickering அதிகமாகும் ஒருவரை ஒருவர் குறை சொல்லக் காரணம் கிடைத்து விட்டதே ஜோக்ஸ் அபார்ட் தவிர்க்கப்பட முடியாதவை அனுபவித்தே தீரவேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பிரச்சனைகள். இரண்டு நாட்கள் முன்னர் ஹரியானா முதல்வரும், தில்லி முதல்வரும் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 6. சென்னையில் போகியன்று டயர் போன்றவைகளை எரிக்கக்கூடாது என்று சொன்னாலும், மக்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தை ஒரு நாள் தாங்குவதே எங்களுக்கு கடினமாக உள்ளது. தில்லியில் தொடர்ந்து பல நாட்கள் போல் புகை மூட்டம் இருந்தால் எப்படித்தான் மக்கள் தாங்கிக்கொண்டு பணிகளுக்கு செல்கிறார்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஷ்டத்துடன் தான் சென்று கொண்டிருக்கிறோம். முகமூடி அணிந்து கொண்டாலும் அத்தனை பலன் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. இப்படியொரு கஷ்டம் வருடாவருடம் கேள்வி படடதுதான் வாய் பேச்சாய் தெளிவாய் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் காணொளிகள் பயத்தை கொடுத்தன எல்லாப்பக்கமும் எதோ ஒரு கஷ்டம் மக்களை படுத்த இயற்க்கை தீர்மானிக்கிறதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருடா வருடம் இதே பிரச்சனை - கடந்த மூன்று நான்கு வருடங்களாகவே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி ஜி!

   நீக்கு
 8. தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் உங்களைத் தான் நினைச்சுப்போம். கவனமாக இருக்கவும்! வேறே வழியில்லையே! :( ஒரு காலத்தில் தில்லியில் வசிக்கணும்னு நினைச்சிருக்கேன். இப்போதோ!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லி வசிக்கத் தகுந்த ஊராக இல்லை. வேறு வழியில்லாமல் தான் இங்கே இருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....