சனி, 3 ஏப்ரல், 2021

காஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மையும் - (d)டு(b)புக் - துணுக் துணுக் துன் - மின்னூல் எழுத்து - ஆறிலிருந்து அறுபது வரை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட, யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு.


******
இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - வலைச்சரம்


இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய பதிவு வலைச்சரத்தில் மகிழம்பூ!.  இதே நாளில் 2012-ஆம் வருடம் தொடங்கிய திங்கள் கிழமையிலிருந்து ஞாயிறு வரை வலைச்சரத்தின் ஆசிரியராக இருந்திருக்கிறேன். வலைச்சர நாட்கள் இன்னமும் மறக்க முடியாதவை! எத்தனை எத்தனை பதிவர்கள், அறிமுகங்கள் என மிகச் சிறப்பாக வலையுலகம் இயங்கிக் கொண்டிருந்த காலம்.  அந்த வாரம் முழுவதும், எனது பக்கத்தில் ஒரு பதிவும், வலைச்சரத்தில் ஒரு பதிவும் என சுறுசுறுப்பாக இயங்கிய நாட்கள்! எனது பக்கத்தில் எழுதிய  பதிவிலிருந்து சில வரிகள் கீழே.


வலைச்சர ஆசிரியர் – பதிவுலகில் சில பதிவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அந்தஸ்து! நான் பதிவுலகில் கால் பதித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள், இல்லை இல்லை, மாதங்கள் கழித்து எனக்கு அந்த அந்தஸ்து இப்போது கிடைத்திருக்கிறது. ஆம். இன்று முதல் ஆரம்பிக்கும் வாரத்தில் வலைச்சரத்தில் நான் தொடுக்கப் போகிறேன் சரம்சரமாய் வலைப்பூக்கள்… வலைச்சரத்தில் முதல் பூவாய் மகிழம்பூ! என் சுயச்சரமாக!

 

வலைச்சர ஆசிரியர் பதவி இப்போது தான் வாய்த்தது என்றாலும் வலைச்சரம் எனக்கோ, நான் வலைச்சரத்திற்கோ புதியவன் இல்லை. எனது வலைப்பூ இது வரை இருபது முறை வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. எனது வலைப்பூவினை அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

 

இப்படி மகிழம்பூவாய் ஒரு சுயச்சரம் இன்றைய வலைச்சரத்தில். வந்து பாருங்களேன்…..


முழுப்பதிவையும் படிக்க சுட்டி கீழே!


வலைச்சரத்தில் மகிழம்பூ


*****


இந்த வாரத்தின் விளம்பரம் - பொய்யும் உண்மையும்:


இந்த விளம்பரம் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஆனால் இன்றைக்கு வரை கண்களால் பார்க்கும் அனைத்தும், குறிப்பாக சோசியல் மீடியா தளங்கள் வழி வரும் அனைத்தையுமே உண்மை என்று நம்பி, உண்மையா பொய்யா என்று தெரியாமல் நாமும் அதை பலருக்கும் பகிர்ந்து கொண்டு, மேலும் மேலும் பொய்யைப் பரப்ப ஒரு காரணியாக இருக்கிறோம்.  இந்தக் காணொளி வழி அதனைச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.  பாருங்களேன்.*****


இந்த வாரத்தின் உணவு - (d)டு(b)புக்:

(d)டு(b)புக் - வார்த்தையைப் பார்த்து ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டது போல எண்ண வேண்டாம்.  மலைப்பிரதேசமாம் உத்திராகண்ட் மாநிலத்தில் சாப்பிடப்படும் ஒரு உணவின் பெயர் தான் இந்த (d)டு(b)புக். (d)டு(b)புக் அல்லது (d)டு(b)புகே என்று அழைக்கிறார்கள் இந்த உணவினை.  அரிசி சாதத்துடன் கலந்து சாப்பிட ஏதுவான ஒரு உணவு இது.  சோயா Bபீன் பருப்புகளைக் கொண்டு செய்யப்படும் ஒரு உணவு இது.  இதுவரை சுவைத்ததில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.  உத்திராகண்ட் மாநிலத்தினைச் சேர்ந்த நண்பர்களிடமிருந்து தெரிந்து கொண்ட உணவு வகை இது.


*****


இந்த வாரத்தின் WhatsApp Status - TUNUK TUNUK TUN:


உண்மையும் பொய்யும் என்று மேலே எழுதிய விஷயத்திற்கு, வாட்ஸ் அப் நிலைத் தகவலாக வைத்திருந்த இந்தக் காணொளியும் ஒரு உதாரணம்.  இந்தக் குழந்தை இப்படியான பாடலிற்கு, இப்படியெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பும் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு, குழந்தை உண்மையாகவே அப்படிச் செய்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டு பாருங்களேன்!

 

*****


இந்த வாரத்தின் எண்ணங்கள் - வாகனம்:படம்:  நாராயணன்... வாகனமும் அவருடையதே!


வாகனம் - எந்த வித வாகனமும் இதுவரை நான் வாங்கவில்லை.  இரு சக்கர வாகனமும் சரி நான்கு சக்கர வாகனமும் சரி.  இதுவரை வாகனம் தேவை, வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருவதில்லை - அவசியமில்லாதது என்று தோன்றும்.  அப்படியே வாங்கினாலும் வாங்க வேண்டும் என்று நினைத்த வாகனம், YEZDI அல்லது ROYAL ENFIELD!  பென்சில் போல இருந்த காலத்தில், வாகனத்தினை நிறுத்தவோ, ஸ்டாண்ட் போடவே கூட முடியாது என்ற எண்ணத்திலேயே அந்த ஆசையை விட்டு விட்டேன்.  இப்போது வாங்கலாம் என்றால், வேண்டாத வேலை எதற்கு என்று தோன்றுகிறது.  அதுவும் இப்போது பலரும் ROYAL ENFIELD வாங்கி உலாத்துவதைப் பார்க்கும்போது ஆசை வரத்தான் செய்கிறது.  கிட்டத்தட்ட இரண்டு லட்சம் செலவு செய்து ROYAL ENFIELD வாங்குவதற்கு, இன்னும் கொஞ்சம் பணம் போட்டால் நான்கு சக்கர வாகனமே வாங்கி விடலாம் என்று தோன்றிவிட, “ரெண்டுமே வேணாம் போ!” என்று சும்மா இருப்பது தொடர்கிறது - வாகனம் இருப்பவருக்கு ஒரு வாகனம் மட்டும் - இல்லாதவர்களுக்கு பல வாகனம் என்று நண்பர் சொல்வது நினைவுக்கு வருகிறது! 


*****


எல்லோரும் எழுத்தாளர்கள் - அமேசான் கிண்டில்:அமேசான் கிண்டில் வழி ஒவ்வொருவரும் தங்களது எழுத்துகளை, மின்னூலாகக் கொண்டு வர முடியும் என்று ஆனதிலிருந்து, பலரும் மின்னூல்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.  இது ஒரு நல்ல விஷயம் தான்.  ஆனாலும் சில சிக்கல்கள் இருக்கிறது.  ஒரு மின்னூலை வெளியிட்டு விட்டாலே, தன்னை பெரிய எழுத்தாளர் என நினைத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் எழுதுவதில் சிறப்பு இருக்கிறதோ இல்லையோ, தரம் இருக்கிறதோ இல்லையோ, தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.  சில மின்னூல்களைப் படிக்கும்போது, வடிவேலு மாதிரி “உனக்கு இது தேவையா?” என்று என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  நான்கு ஐந்து பக்கம் வரும் சிறுகதையை(?) எழுதி, அமேசான் கிண்டிலில் மின்னூல் என்ற பெயரில் வெளியிட்டு, அதற்கு அமேசான் கிண்டிலின் குறைந்த பட்ச விலையான 49/- ரூபாய் என்பதைக் கூட வைக்காமல் 75 ரூபாய் என்று வைப்பது என்ன வகை நியாயம் என்று புரியவில்லை.  Amazon Unlimited கணக்கு இருப்பவர்களுக்கு, பரவாயில்லை.  அது இல்லாமல் காசு கொடுத்து வாங்கினால் எப்படி இருக்கும் (திருப்பித் தரும் வசதி இருக்கிறது என்றாலும்!) வாசிக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வரும் இந்த நாட்களில் இப்படியான மின்னூல்கள் அந்த ஆர்வத்தினை மேலும் குறைத்து விடும் என்று தோன்றுகிறது.  வாசிப்பை நேசிப்போம் என்று சொன்னாலும் இந்த மாதிரி மின்னூல்களை நேசிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனம்.


*****


இந்த வாரத்தின் தகவல் - ஆறிலிருந்து அறுபது வரை:


ஆறிலிருந்து அறுபது வரை - 1979-இல் வெளி வந்த ரஜினிகாந்த் திரைப்படம் - அவர் “நடித்த” படங்களில் சிறப்பானது என்று சொல்வதுண்டு! அவருக்கு இப்போது Dada Saheb Phlake விருது அளித்திருக்கிறார்கள்.  ஆறாம் தேதியை மனதில் கொண்டு அறிவித்திருக்கலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அது உண்மையோ, பொய்யோ அதைப் பற்றி நான் பேசப்போவதில்லை.  ஆறில் நீங்கள் செய்யப்போகும் விஷயம், அறுபது மாதங்கள் (ஐந்து வருடம்) உங்களை பாதிக்கும் என்பதை நினைவில் கொண்டு ஆறாம் தேதி செய்யப்போவதை தெளிவாகச் செய்யுங்கள்!  எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கலாம்! 


*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

18 கருத்துகள்:

 1. நீ என்ன பெரிய டைபுக்கா என்று சொல்வார்கள். அந்த உணவு அவ்வளவு ருசியோ? வித்தியாசமான தகவல்.

  பயணங்கள், அனுபவங்கள் போன்றவையில்தான் என் ஆர்வம். மற்ற சப்ஜெக்ட் புத்தகங்களை நான் படிக்க சூழல் இல்லை.

  வாகனம் - இது பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. நம்ம ஊரில் வாகனம் ஓட்டும் தைரியம் வரவில்லை. முன்பு (ஒரு வருடத்துக்கு முன்) சொந்த வாகனம்-நாலு சக்கர, வைத்திருந்தால் எவ்வளவு செலவு, அதற்குப்பதில் ஓலா போன்றவைமூலம் சென்றால் நமக்கு எவ்வளவு லாபம் என்றெல்லாம் எழுதியிருந்தார். (வண்டி வாங்கினால், எந்த வண்டி வைத்திருக்கிறார் என்பதும் ஸ்டேடஸ் சிம்பல் ஆகிவிட்டது) அது இன்னும் என்னைத் தயங்கச் செய்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   வாகனம் - ஸ்டேட்டஸ் சிம்பல் - பலரும் இப்படி இதற்காகவே வாங்கி விட்டு வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் - பயன்பாடு இல்லாமல்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. கதம்பத்தை ரசித்தேன்.  குழந்தை வீடியோ...  என் புகைபபடத்தை வைத்து அதே போல ஒரு வீடியோ செய்து அனுப்பி இருந்தான் என் மகன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வலைச்சரம் இயங்கிய காலம் பொற்காலம்தான் ஜி.

  ஆம் மின்நூலின் விலைகளில் கவனம் தேவைதான்.

  பைக் வாங்குவதற்கு கார் வாங்கி விடலாம்தான்.

  நம்மூரில் டுபுக்கு என்றால் சண்டைக்கு வந்து விடுவார்களே... ஹா.. ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. வலைச்சரம் சென்று வந்தேன்... இனிய பல நினைவுகள்... ம்...

  மின்னூல்கள் - அளவுக்கு மீறினால் _____

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வலைச்சர ,தமிழ்மண நாட்கள் இனிமையானவை.
  ஏதோ அங்கீகாரம் கிடைத்தது.
  அதுவும் நம்மை எழுதத் தூண்டியது.

  மகிழம்பூ பதிவு மிகச் சிறப்பு. மீண்டும் வாழ்த்துகள் வெங்கட்.

  இன்றைய பதிவும் அருமை.
  தாய்' காணொளி மனதுக்கும் இதம்.

  அந்த டுபுக் செய்முறை தேடிப் பார்க்கிறேன்.
  நன்றி மா. நலமுடன் இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கதம்பம் அருமை.
  காணொளிகள் எல்லாம் பார்த்தேன்.
  வலைச்சரம் காலம் நிறைய படித்தோம். எப்படி நேரங்கள் கிடைத்தன! வியப்பை தரும் விஷயம்.
  வீட்டு வேலைகளை தள்ளி வைத்து விட்டு வலைச்சரபொறுப்பை நிறைவு செய்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்ட காலம் மகிழ்ச்சியான காலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வலைச்சரத்தில் மகிழம் பூ கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடிதததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. மீண்டும் வந்தால் மகிழ்ச்சி தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நல்லா இருக்கு. டுபுக் கேள்வியே படலை. தேடிப் பார்த்துச் செய்து பார்த்துட்டுச் சொல்றேன். வலைச்சரமெல்லாம் இப்போது மூடி எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன. நான் 3 முறை ஆசிரியராக இருந்தும் திரும்பவும் வைகோ மூலம் கூப்பிட்டார்கள். மறுத்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....