வெள்ளி, 23 ஏப்ரல், 2021

சினிமா - மண்டேலா - யோகி பாபு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


IF SPEAKING KINDLY TO PLANTS CAN HELP THEM GROW, JUST IMAGINE WHAT SPEAKING KINDLY TO HUMANS CAN DO!


******


திரையரங்கத்திற்குச் சென்று சினிமா - எந்த மொழியாக இருந்தாலும் சரி - பார்த்து நீண்ட மாதங்கள்/வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக நான் பார்த்த படம் எது என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்காது - நினைவில் இருந்தால் தானே?  எப்போதாவது பொழுதைப் பிடித்து தள்ள வேண்டியிருக்கும் சமயத்தில், யூட்யூபில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பேன் - அது கூட சினிமாவாக இருக்காது - விளம்பரங்கள், குறும்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என்றே இருக்கும்!  சமீபத்தில் பரிவை குமார் அவர்களின் பதிவில் “மண்டேலா” என்ற சினிமா குறித்து எழுதி இருந்தார். புதிய இயக்குனர் ஒருவரின் படம் என்றும், நன்றாக இருக்கிறது என்றும் எழுதி இருக்க, பார்க்கலாம் என்று தோன்றியது.  தியேட்டர் சென்று பார்க்க விருப்பமில்லை - அதுவும் இப்போதுள்ள சூழலில் அலுவலகம் தவிர வேறெங்கும் சென்று வருவதைத் தவிர்த்து வேறெங்கும் செல்வதில்லை.


யூட்யூபில் தேட, மண்டேலா முழு படமும் இருந்தது.  புதிய படமாக இருந்தாலும் அதற்குள்ளாகவே யூட்யூபில் இருக்கிறதே என்ற நினைவுடனே பார்க்க ஆரம்பித்தேன்.  நடுநடுவே சமையல், வீடு சுத்தம் செய்தல் என்ற வேலைகளும் நடந்தது - யூட்யூபில் இது ஒரு வசதி!  நடுவே போரடித்தால் நிறுத்திவிட்டு மற்ற வேலைகளைச் செய்யலாம்! படத்தில் பிரதான கதாபாத்திரம் யோகிபாபு - இளிச்சவாயன் என்ற பட்டப் பெயர் அவருக்கு - அதனை ஆங்கிலத்தில் ”ஸ்மைல்” என்று வைத்துக் கொண்டு அவரது சூரங்குடி கிராமத்தில் முடி திருத்துபவராக இருக்கிறார்.  கூடவே ஊர்காரர்கள் சொல்லும் அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும் - அதற்கு பணமாகக் கிடைப்பதை விட, பொருட்களாக கிடைக்கும் கூலி தான் - பல சமயங்களில் அது கூடக் கிடையாது!  இளிச்சவாயனாகவே ஊருக்குள் சுற்றி வருகிறார்.  அவருக்கு உதவியாளாக, “கிருதா” என்ற பட்டப் பெயருடன் ஒரு இளைஞன்.  


சூரங்குடி கிராமத்தில் இரண்டு பகுதிகள் - வடக்கூர், தெக்கூர்! இரண்டு பகுதி மக்களுக்கும் எப்போதும் தகராறு - அடிதடி, ஜாதிச் சண்டை என இருக்கிறது.  கிராமப் பஞ்சாயத்து தலைவர் இரண்டு பகுதிகளையும் சச்சரவில்லாமல் வைத்துக் கொள்ள இரண்டு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஆளுக்கு ஒரு பிள்ளை என இருக்கிறார்.  ஆனாலும் இரு பகுதிகளுக்கும் சண்டை தீர்ந்தபாடில்லை.  பள்ளிக்கூடம், கழிப்பறை  என எதைக் கட்டினாலும் எங்கூர், எங்க ஜாதிக்காரனுக்குத் தான் முதலிடம் என்று சண்டை வர, கட்டிய பள்ளிக்கூடம், கழிப்பறை இரண்டுமே இடிக்கப்பட்டு பழையபடியே படிக்க வேறொரு ஊருக்கும், காலைக் கடன்களுக்கு காட்டுக்குள்ளும் செல்கிறார்கள். 


பஞ்சாயத்துத் தலைவரான ஊர் பெரியவர், இந்தச் சண்டைகளை தீர்த்து வைக்க எத்தனை முயன்றும் முடியவில்லை. கழிப்பறைக்கான சண்டையில் அவர் உடல்நிலை பாதிக்க,  பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் வருகிறது - அதே சமயத்தில்.  இரு மகன்களும் தேர்தலில் நிற்கிறார்கள்.  ஓட்டுகளை எண்ணி எண்ணி, 20 ரூபாய் நோட்டு கொடுத்து, 2000 தருவேன் என்பது, தாலி மீது சத்தியம் செய்ய வைத்து 2000 ரூபாய் கொடுப்பது என எல்லா அரசியல் லீலைகளும் நடக்கிறது.  இருவருமே ஓட்டுக் கணக்கு பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இருவருக்குமே சம ஓட்டு என்ற நிலை இருக்கும்போது தான் தெரிய வருகிறது “ஸ்மைல்” எனும் இளிச்சவாயன் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி இருப்பது!  அதன் பிறகு ஆரம்பிக்கிறது நாற்காலிக்கான போட்டி அவலங்கள்!


ஒப்புக்குச் சப்பாணியாக, கதாநாயகி பாத்திரத்தில் ஒரு நடிகை - உள்ளூர் தபால் நிலையப் பணியாளராக!  அவர் தான் ஸ்மைல்-க்காக அஞ்சலகத்தில் கணக்குத் துவங்க அடையாள அட்டைகளை ஏற்பாடு செய்வது, அவனுக்கு “நெல்சன் மண்டேலா” என்று பெயர் வைப்பது, அவ்வப்போது காதலுடன் பார்ப்பது :), உதவியாளர் கிருதாவுக்கு அடிபட்ட போது மருத்துவ உதவிகள் செய்வது, மண்டேலா தவறான வழியில் வாக்கை விலை பேசுவது போன்ற வழியில் போகும்போது தட்டிக் கேபது என எல்லாம் செய்கிறார்.  மொத்தத்தில் அவருக்குக் கிடைத்த சிறு வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.  


ஸ்மைல்/மண்டேலா பாத்திரத்தில் வரும் யோகிபாபு தனக்குக் கிடைத்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் - கூப்பாடு இல்லாத சின்னச் சின்ன நகைச்சுவை பஞ்ச், தனது உதவியாளர் அடிபட்டுக் கிடக்கும்போது ஊரில் பலரிடம் உதவி கேட்டபடி அலையும்போது போன்று சில சில இடங்களில் மிளிர்கிறார்.  கடைசியில் அவரது வாக்கை சரியானபடி பயன்படுத்திக் கொண்டாரா, தேர்தல் என்னவாயிற்று, ஊர் ஒன்று சேர்ந்ததா போன்ற விஷயங்களை நீங்களும் சினிமா பார்த்து தெரிந்து கொள்ளலாம்!  என்ன நீங்கள் தியேட்டரிலோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியிலோ பார்க்க வேண்டியிருக்கும்.  யூட்யூபில் அந்த இணைப்பை இப்போது எடுத்து விட்டார்கள் - காப்பி ரைட் பிரச்சனைகளால்!

எனக்கு படத்தில் மிகவும் பிடித்த ஒன்று - யோகிபாபு அந்தப் பெரிய மரத்தில் படுத்து உறங்க கட்டி இருக்கும் தூளி போன்ற அமைப்பு!  இயற்கைச் சூழலில் அப்படி படுத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது! அப்படிப் படுத்துக் கொண்டு இயற்கையை ரசித்தபடி இருக்கலாம் - என்ன என் உயரத்துக்கு தூளி அமைக்க வேண்டும் - அது தான் ஒரு கஷ்டம்! ஹாஹா...


******


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


24 கருத்துகள்:

 1. காலை வணக்கம் வெங்கட்ஜி!

  வாசகம் அருமை ஆம் செடிகளோடு பேசுவது கண்டிப்பாக வளர உதவும்.

  ஆனால் அடுத்த பகுதிக்கு நமக்கு நிறைய பொறுமை வேண்டும் அதாவது மனிதர்களோடு அன்பாகப் பேசுவதற்கு..அதற்கு அதீதமான மனப்பக்குவம் வேண்டும். கிட்டத்தட்ட முற்றும் துறந்த ஞானி அளவிற்கு.!!!!!முடிந்த அளவு செய்யலாம்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் ஓகே தான் இல்லையா? யுட்யூபில் இருந்து எடுத்துவிட்டார்களா? அப்ப நான் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்
   நா
   கீதா

   நீக்கு
  2. வாசகம் குறித்த தங்கள் எண்ணங்கள் சிறப்பு. முதல் விஷயம் சுலபம். இரண்டாவது கொஞ்சமல்ல நிறையவே கடினம்தான் கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. படம் ஒரு முறை பார்க்கலாம். பொதுவாக தெரிந்த விஷயம் தான் என்றாலும் சொல்லும் விதம் நன்று கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நான் இதை நெட்ப்ளிக்சில் பார்த்தேன்.  ரொம்பக் குறை சொல்ல முடியாதபடி இருந்தது படம்.  முடிவு வழக்கமான பாணி என்றாலும் ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் தொலைக்காட்சி பெட்டியே வைத்துக் கொள்ளவில்லை! கணினி மற்றும் அலைபேசி தான். அதனால் Netflix மற்றும் Amazon Prime போன்றவை தேவையில்லை ஸ்ரீராம். நீங்களும் படம் பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படம் சார்.
  தேர்தல் அன்று ஓட்டு போட்டுவிட்டு படம் பார்த்தேன்.
  யூட்டியூப் சுட்டியை நம்ப தேவையில்லை.
  நெட்ஃபிளிக்ஸ் இல் தறமான பிரிண்ட் இருக்கு.
  அதில் பணம் செலுத்தி பல தறமான படங்களைப் பார்த்து மகிழலாம்.
  மாற்றுத்திறனாளிகளுக்காக பல படங்களில் வசனம் இல்லாமல் காட்சிகள் நகரும்போது அதற்காக "Audio descriptions" உம் இனைக்கப்பட்டுள்ளன.
  அணைத்தையும் அணைத்துத் தறப்பினரும் பார்த்து மகிழலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் தொலைக்காட்சி பெட்டியே வைத்துக் கொள்ளவில்லை! கணினி மற்றும் அலைபேசி தான் அரவிந்த். அதனால் Netflix மற்றும் Amazon Prime போன்றவை தேவையில்லை. அதில் உள்ள வசதிகள் குறித்து படித்திருக்கிறேன். நீங்களும் படம் பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது ஜி.

  நானும் தியேட்டரில் திரைப்படங்கள் பார்த்து முப்பது ஆண்டுகளாகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முப்பது வருடம்! ஆஹா.. நான் அவ்வளவு வருடங்கள் அல்ல! சில வருடங்கள் முன்னர் பார்த்தேன். படம் குறித்த இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. மண்டேலா பட விமர்சனமும் அருமை. இதை முதன் முதலில் விஜய் டிவிதான் வெளியிட்டது. வீட்டிலிருந்தபடியே பார்க்கும் வசதி கிடைத்தும் நான்தான் பார்க்கவில்லை. இப்போதைய திரைப்படங்களையே நான் பார்ப்பதில்லை. என்னவோ விருப்பமில்லை. ஆனால் இந்தப்படம் பார்த்தவர்கள் நன்றாக உள்ளதென கூறினார்கள். தாங்களும் நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள். முடிந்தால் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி. எனக்கும் இன்றைய திரைப்படங்கள் பார்ப்பதில் அத்தனை ஆர்வம் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. தொலைக்காட்சியில் பார்த்தேன்... அருமையான படம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் படத்தினை பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பார்க்கத் தூண்டும் விமர்சனம்.

  தூளி ஆசை புன்னகைக்க வைத்தது :).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. சின்னச்சின்ன ஆசைகள் நமக்கு வருவது இயல்பு தானே :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. யோகி பாபு அவர்கள் சில வருடங்களுக்கு முன் நடிச்ச ஒரு படமும் பிரபல்யமானதெல்லோ.. இதுவும் நன்றாக இருக்கும் எனத் தெரிகிறது உங்க?ள் விமர்சனம் படிக்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகி பாபு நடித்த படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. சிலகாட்சிகளை இணையத்தில் பார்த்தது உண்டு அதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. படம் நன்றாக இருக்கும் போல ! பார்க்க தூண்டும் விமர்சனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் பார்க்கலாம் கோமதிம்மா. நேரம் கிடைத்தால் பாருங்களேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. நெட்ஃப்ளிக்ஸ் ,முதல் படமாக மண்டேலா
  படம் வந்து கொண்டிருந்தது.
  நீங்கள் பார்த்துவிட்டேன் என்று சொல்வதால்,
  இன்று பார்க்கலாம்.
  யோகி பாபு நடித்த படம் ஒன்று முன்பு பார்த்தோம்.
  நன்றாக இருந்தது.
  நாகேஷுக்கு அடுத்தபடி
  இவர் நன்றாக நடிப்பதாகத் தோழி சொன்னார்.
  நன்றி மா.
  எங்கள் சிங்கம் இருந்திருந்தால் உங்கள் வாக்கிய வரிகளை
  அமோகமாக ஆதரித்திருப்பார்.
  நானும் தான். நன்றி வெங்கட். நலமாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகிபாபு - நாகேஷுக்கு அடுத்தபடி - அப்படி எல்லாம் எனக்குத் தோன்றவில்லை வல்லிம்மா. இவர் வழி தனி வழி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. எனக்கு இந்த யோகிபாபு எல்லாம் இப்போத் தான் சில மாதங்களாகத் தெரியும். இப்படி ஒரு படம் வந்திருப்பதாக முகநூல் விமரிசனங்கள் மூலம் அறிந்து கொண்டேன். எனக்குப் படம் பார்க்கப் பொறுமை இருப்பதில்லை. இத்தனைக்கும் ஜியோ எத்தனையோ வசதிகள் கொடுத்திருக்கு. நான் எதையும் பயன்படுத்துவதே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகிபாபு - நானும் இவரது படங்கள் பார்த்ததில்லை. சில காட்சிகள் பார்த்ததுண்டு - இணைய வழி தான் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....