புதன், 28 ஏப்ரல், 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்று - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


IT IS NOT IMPORTANT IN LIFE THAT WHO IS AHEAD OR BEHIND US; WHAT TRULY MATTERS IS WHO IS WITH US IN LIFE. 


******
சென்ற வாரத்தில் நண்பரின் மேகாலயா பயணம் தொடர்பான கட்டுரையின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.  நினைவு இல்லாதவர்கள் இந்தப் பக்கத்தில் முதல் பகுதியையும், இந்தப் பக்கத்தில் இரண்டாம் பகுதியையும் படித்து, இந்த மூன்றாம் பகுதியைத்  தொடரலாம். இனி பயந்த தொடர் நண்பர் சுப்பு எனும் சுப்ரமணியன் அவர்களின் வார்த்தைகளில்! - வெங்கட் நாகராஜ் 


******


உமியம் ஏரி - சில காட்சிகள்...

முதல் இரண்டு பகுதிகளில் நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கு மனம் நிறைந்த நன்றி.  இதுவரை நாம் பார்த்தது தகவல்கள் - பயணம் குறித்த தகவல்கள் மட்டுமே!  இனிமேல் நாங்கள் பார்த்து ரசித்த சில சுற்றுலாத் தலங்களை குறித்துப் பார்க்கலாம்.  முதலில் நாம் காணப்போவது, முன்பு சொன்னது போல உமியம் ஏரி. நமது வீராணம் ஏரியை விட பெரியது.  தூய நீர் கொண்ட ஏரி! மிகவும் ரம்யமான சூழல். மாலை ஆகிவிட்டதால் ஆதவன் மறையும் முன்னர் ஏரியின் நீர்ப்பரப்பு முழுதும் தன் கதிர்களை வீச, தன்னிலை மறந்தோம். தண்ணீரில் கால்கள் நனைய, கற்பனையில் மிதந்தோம். இங்கு உங்களை மகிழ்விக்க மேலும் ஒரு தகவல் - ஓட்டுநர்கள் நம்மை துரிதப்படுத்துவது இல்லை. இஷ்டம்போல நேரம் செலவழித்து இன்புறலாம். செல்லும் பாதை முழுக்க மிகவும் ரம்மியமாய் இருப்பதால் அதுவே ஒரு சுற்றுலா ஆகிவிடுகிறது. 
தங்குமிடத்தின் முகவரி...


ஒருவழியாக உமியம் ஏரியில் இருந்து புறப்பட்டு முதல் தங்குமிடமான, BONNIE GUEST HOUSE,  SHILLONG வந்து சேர்ந்தோம். தங்குமிடத்தில் பதிவு வேலைகளை முடிந்த பின் அறைக்குச் சென்று சற்று இளைப்பாறினோம். பின்னர்,  வாகனத்தில் ஷில்லாங் நகரில் மிகப் பிரசித்தி பெற்ற வியாபார ஸ்தலமான போலீஸ் பஜார் சென்று வந்தோம். இந்த போலீஸ் பஜார்  வளாகத்தில் ஒரு பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்ளது. அங்கே நம்மை விட்டு விடுவார்கள். சுற்றி முடித்து திரும்பி வந்தால் நம்மை அழைத்துச் செல்வார்கள். 


இந்த போலீஸ் பஜார் நம் ஊர் (சென்னை) தி.நகர் ரங்கநாதன் தெருவையும், திருச்சிராப்பள்ளி என்.எஸ்.சி. போஸ் சாலையையும் நினைவுபடுத்தும். இங்கே அனைத்து வித கடைகளும் உண்டு.  நடைபாதைக் கடைகள் முதல், மேட்டுக்குடி மக்கள் செல்லும் நியான் ஒளி வண்ணமாய் கசிய, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் நளின மங்கையர்கள் வலம் வரும் நூதனக் கடைகள் வரை ஏராளமாய் உண்டு.  பொழுது போவதே தெரியாது. முகப்பிலேயே KHASI EMPORIUM எனும் மூங்கிலாலான கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது. அனைத்தும் மர/மூங்கில் தயாரிப்புகள் மட்டுமே. அங்கே சுற்றித் திரிந்து சில பொருட்களை வாங்கிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு தங்குமிடம் திரும்பினோம். தங்கும் இடத்திலேயே இரவு  உணவு கிடைத்துவிட, உண்டு இனிமையாக உறங்கினோம். எங்கள் பயணத்தின் முதல் நாள் (10 ஏப்ரல்) இனிதாக நிறைவடைந்தது. காலை உணவு…


மூடியிருந்த தேயிலைத் தோட்டம்...


ELEPHANT FALLS...

எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் (11 ஏப்ரல் 2021) காலை ஒன்பது மணி அளவில் காலை நேர சிற்றுண்டியை முடித்து, ஓட்டுநர் நண்பர் மனோஜ் உடன் பயணப்பட்டோம். முதலில் சென்றது ஒரு தேயிலைத் தோட்டம். ஆனால் விடுமுறையாதலால் அது மூடப்பட்டிருந்தது. ஒரு சில புகைப்பட க்ளிக்குகளுக்குப் பின் வந்தது முதல் நிறுத்தம் -  ELEPHANT FALLS எனும் அருவி. இங்கு மூன்று அருவிகள் உள்ளன முதல் இரண்டையும் தொலைவிலிருந்து தான் காணமுடியும். மூன்றாவது அருவி மிக அருகிலேயே செல்லலாம். சிறிதோ பெரிதோ மலைகளில் ஊடுருவி மரம் செடி கொடிகள் மற்றும் பாறைகளின் ஊடே நீர் அருவியாய் கொட்டும் அழகும் அதன் ஓசையும் தேனாய் செவியில் பாய்வது ஒரு அலாதி இன்பம் தான். எத்தனை வார்த்தை ஜாலங்களில் வர்ணித்தாலும் அனுபவிப்பதே மேலானது. MONKDOK DYMPEP VALLEY VIEW POINT-லிருந்து...

நல்லதோர் அருவியை ரசித்து அடுத்து சென்ற இடம் நெடுஞ்சாலையிலேயே (SHILLONG-SOHRA HIGHWAY) MONKDOK DYMPEP VALLEY VIEW POINT. மேகாலயா மாநிலத்தின் பல பகுதிகளில் பெயர்கள் வாயில் நுழைய வாய்தா கேட்கிறது. எனவே அவற்றின் பெயர்களை முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதி விடுகிறேன். இருபக்கமும் படுகை படுகையாய் புடவையை மடித்து வைத்தது போல மலைத்தொடர். நடுவில் அதலபாதாளம் பள்ளத்தாக்கு. அலைபேசி மற்றும் மகளின் CANON DSLR கேமராவில் கண்ணுக்கெட்டிய தூரம் சிறைப்படுத்தினோம். இங்கே ZIP LINING என்ற ஒரு சாகச விளையாட்டு முறை உள்ளது. தக்க பாதுகாப்பு கவசங்கள் உடன் மூன்று கம்பி வடங்களை நன்கு பிடிக்கச் செய்து அந்தரத்தில் ஒரு மலை முகட்டில் இருந்து மற்றொரு மலை முகட்டுக்கு அனுப்புகின்றனர். சற்றே அபாயகரமாக இருந்தாலும் படு சவாலாக (THRILLING) இருக்கும். நாங்கள் செல்லவில்லை ஹிஹிஹி. இதற்கான கட்டணமும் சற்று அதிகம்தான். 


அங்கிருந்து புறப்பட்டு அடுத்து சென்ற இடம் NOHKALIKAI அருவி. இந்த அருவிக்கு அருகில் செல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட 200 அடிக்கு சீறிப்பாயும் அருவி உயர்ரக கேமராவினால் நன்றாய் படம் பிடிக்கலாம். எங்களால் இயன்றவரை காட்சிகளை சிறைப் பிடித்தோம். மேலே சமவெளி. தூரத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி. சுகமான காற்று. பகலவன் இருந்தும் மிதமான சூடே இருந்தது. கவிஞர்களுக்கு கொண்டாட்டமான இடம். இந்த அருவியை போலவே கவிதைகளும் அருவியாய் கொட்டும். நான் கவிஞன் இல்லை நல்ல ரசிகன் மட்டுமே. கவிஞனாக இருந்திருந்தால் இப்படி கட்டுரை எழுதாமல் கவிதையாய் எழுதி இருப்பேன் இந்தப் பயணத் தொடர் முழுமையாகவே!  அடுத்ததாக என்ன பார்த்தோம் என்ற தகவல்களை…


அடுத்த பகுதியில் பார்க்கலாமா? 


மேலும் பயணம் தொடரும்…


ஆர். சுப்ரமணியன் 


******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் மூன்றாம் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


24 கருத்துகள்:

 1. அருவியின் படங்களும், ஏரியின் படங்களும் கவர்ந்தன.  அதைவிட அந்த சப்பாத்தியின் படம்!!  பார்க்கும்போதே அதன் தரம் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அழகான மேகாலயா படங்கள் . இயற்கை அழகை ரசித்து கொண்டே பயணம் .
  அருவி அழகு, பசுமை போர்த்திய மலைகள் எல்லாம் அழகு.

  பயணக்கட்டுரை அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள், பயணத் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாசிப்பதற்கு முன்: நேற்று இரவு தான் ஒரு பதிவை வாசித்தேன். அதற்குள் மற்றொரு பதிவா? ஸ்ஸப்பா... அது சரி.... வருடத்தின் 3650 நாட்களும் (365 அல்ல) நீங்கள் பயணப் பதிவுகளை இடுவது எவ்வாறு? எனக்குப் பொறாமையாக இருக்கிறது. (நல்ல பொறாமை தான்).

  நமது வலைத்தளம்: எழுத்தாளர் சிகரம் பாரதி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் ஒரு பதிவு - இந்த வருடம் தினம் ஒரு பதிவு என எழுத ஆரம்பித்தாலும், சில நாட்கள் எழுத முடியாத சூழல்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   நீக்கு
 4. ம்ம்ம்... சிறப்பு. நீங்கள் எழுதினாலும் வேறு யார் எழுதினாலும் வலைத்தளத்துக்கான தனித்துவம் அப்படியே இருக்கிறது. சிறப்பு. நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அடுக்கடுக்காக சொல்லிச் செல்லும் விதம் அழகு.

  வர்ணனையாளருக்கு வாழ்த்துகள் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  உமியம் ஏரியின் அழகான படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. அருவி படமும், மலைத்தொடர்கள் படமும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. காலை உணவு படம் கூட பார்த்தவுடன் சாப்பிடும் பசியுணர்வை தூண்டாமல், கலையுணர்வு மிக்கதாகவே காட்சி தருகிறது...

  மேகாலயா பயணம் அழகாக செல்கிறது. அருவி, மற்றும் மலைத்தொடர்கள் இயற்கை காட்சிகளை சகோதரர் ஆர். சுப்பிரமணியன் அவர்களின் வார்த்தைகளால் படிக்கும் போது, நன்கு ரசிக்கத்தக்கதாக உள்ளது. தொடர்ந்து பயணிப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   படங்களும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்த விதத்தில் இருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அருவியின் ரசிப்பை வரிகளில் உணர முடிகிறது... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்த விதத்தில் இருப்பதில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. அசாத்தியமான விவரணம். ரொம்ப அழகாய்ச் சொல்கிறார் உங்கள் நண்பர். பெயர் தான் வாயில் நுழைய ஆங்கிலத்திலும் தான் , கஷ்டமாக இருக்கிறது...அதனால் என்ன...அருவிதானே முக்கியம். அருவி சூப்பர். அந்த உமியம் ஏரி வாவ். படங்களும் அருமை.

  கடைசி வரிகளை ரசித்தேன். கவிதை வரலைனா என்ன கட்டுரையே கவிதையாகத்தான் அருவி போல் கொட்டுது!!! அடுத்த் அருவி அது என்ன நோக்கியா அருவியா? ஓ நோக்லிகாய்? ஏதோ ஒன்று அதை நோக்க நாங்கள் ஆவலுடன்!! அடுத்த பதிவை எதிர்"நோக்கு"கிறோம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கேயுள்ள இடங்களின் பெயர்கள் வாயில் நுழைய கடினம் தான் கீதாஜி.

   நோக்காலிக்கா - இது குறித்து எனது பயணக் கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. கண் கவர் காட்சிகள். சப்பாத்தி உட்பட என்ன ஒரு கலைநயம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்களும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முரளிதரன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. அன்பு இனிய காலை வணக்கம்.
  அற்புதமான ஏரி, அருவிப் படங்கள்.
  படங்கள் மட்டும் இல்லை ...உங்கள் நண்பரின் அனுபவ எழுத்துக்கள் அப்படியே அருவியை இங்கே கொண்டு வந்து விட்டன. இவர்
  வலைப்பதிவு வைத்திருந்தால்
  தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கலாம்.
  அன்பு வாழ்த்துகள் நண்பர் சுப்புவுக்கு. பதிவிட்டதற்கு
  உங்களுக்கும் அன்பு நன்றிகள்.
  நலமாக இருங்கள் அன்பு வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா.

   படங்களும், பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அழகியபடங்கள், அற்புதமான இடங்கள்...தெளிவான விவரங்கள்.

  பயணப் பதிவு நன்றாக இருக்கிறது.

  அழகான பராத்தாக்களோடுகூடிய இடுகை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. போட்டோ அருமையாக உள்ளது . எங்களையெல்லாம் நேரே கூட்டிச் சென்றது போல உள்ளது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....