சனி, 17 ஏப்ரல், 2021

காஃபி வித் கிட்டு - 107 - தடுப்பூசியும் குழந்தை பிறப்பும் - Road Rage - மகுடி - ஃப்ரூட்சாலட் - ராஜஸ்தானி பாடல் - சுமை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணம் செய்ய ஆசை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை!


******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - தடுப்பூசியும் குழந்தை பிறப்பும்


இந்தியாவில் தீநுண்மியின் தாக்கம் அதிகரித்து வருவது அறிந்ததே.  தொடர்ந்து சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கிறது! தடுப்பூசி போடுவது தொடர்ந்தாலும், இன்னமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை - விழிப்புணர்வை விட தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், கவலைகளும் அதிகமாகவே இருக்கிறது - இந்த மாதிரி சந்தேகங்களை பரப்புவதில் Social Media பங்கு மிக மிக அதிகம்.  சில நாட்கள் முன்னர் உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து ஒரு அழைப்பு - தடுப்பூசி குறித்த சந்தேகம் கேட்டு வந்த அழைப்பு அது. தடுப்பூசி போட்டுக்கலாமா, வேண்டாமா என்று அதனால் பாதிப்பு ஒன்றும் இல்லையே என்றெல்லாம் வழ வழ கொழா கொழா கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.  கடைசியாக அவர் கேட்ட கேள்வி - “தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தை பிறக்காதாமே? இது உண்மையா?” 


நான் அவரிடம் பதில் கேள்வி கேட்டேன் - “அரசாங்கம் தற்போது 45 வயதுக்கு மேலானவர்களுக்கு தான் தடுப்பூசி போடுகிறது.  உங்களுக்கு வயதென்ன?”  அவர் சொன்ன பதில் - 55! ஆமாங்க சரியாத் தான் படிச்சு இருக்கீங்க!  ஐம்பத்தி ஐந்து வயது!  என்ன பதில் சொல்லலாம் என யோசித்து, ”உனக்கு போட வேண்டியது ஊசி அல்ல! உனக்கு ஆபரேஷன் தான் செய்யணும் - வாசக்டமி ஆபரேஷன்!” என்று சொல்லி ஃபோனை வைத்தேன்.  அடுத்த நாள் வந்த இன்னுமொரு அழைப்பு - அது பீஹாரிலிருந்து!  ”தீநுண்மி என்று ஒன்று இல்லவே இல்லை! அப்படி இருக்கும்போது தடுப்பூசி எதற்கு?  இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது - அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை.  அதனால் இப்படி ஒரு நோயைப் பரப்பி, தடுப்பூசி என்ற பெயரில் ஊசி போட்டு எல்லோரையும் சாவடிக்கப் பார்க்கிறார்கள்”  - MBA படித்தவராம் அவர்!  


அவருக்கும் பொறுமையாக பதில் சொல்லி விட்டு - இரண்டு நபர்களின் எண்ணையும் Blocked List-ல் சேர்த்தேன்!  என்னதான் தெரிந்தவர்களாக இருந்தாலும், இப்படியானவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு பொறுமை இல்லை!  பொறுமை இருப்பவர்கள் சொன்னால், அவர்களின் அழைப்புகளை மடை மாற்றி விட நான் தயாராக இருக்கிறேன்! யாராவது ரெடியா? :) 


*****


இந்த வாரத்தின் விளம்பரம் - Road Rage - Peppermint:


சாலைகளில் நடக்கும் பல விஷயங்கள் மனதுக்கு உளைச்சலைக் கொடுப்பவை.  தில்லி போன்ற பெரு நகரங்களில் இந்த Road Rage பிரச்சனைகள் அதிகம்.  சில இடங்களில் சின்னச் சண்டைகளில் ஆரம்பித்து கொலையில் முடிபவை நிறையவே.  இப்படியான சண்டைகள் ஆரம்பிப்பது ஒரு சிறு விபத்தினால்!  இந்த மாதிரி விபத்துகள் நடந்தபிறகு கோபம் கொள்வது அவசியமற்றது என்பதைச் சொல்லும் விளம்பரம் இது.  பாருங்களேன்.  இந்த விளம்பரமும் தாய்லாந்திலிருந்து தான்.*****


இந்த வாரத்தின் உணவு - மகுடி:மகுடி - பெயரைப் பார்த்தாலே நம் ஊர் மகுடி நினைவுக்கு வருவதோடு, ”ஆடு பாம்பே விளையாடு பாம்பே” என்ற பாடலும் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்!  இந்த மகுடி அந்த மகுடி அல்ல!  Makuti என்பது ஒரு பீஹார் மாநிலத்தின் இனிப்பு. பால், அரிசி, பாசிப்பருப்பு மற்றும் சில பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பினை எப்படிச் செய்வது என்று குறிப்புகள் இணையத்திலும் உண்டு.  விருப்பமிருந்தால் செய்து பார்க்கலாம்!


*****


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - ஃப்ரூட் சாலட்:


இதே நாளில் 2014-ஆம் வருடம் எழுதிய ஃப்ரூட் சாலட் பதிவில் வெளியிட்ட கதை ஒன்றின் பகுதி கீழே.


புத்தர் பொதுவாகத் தன் கருத்துகளைக் கதைகள் மூலம் விளக்குவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு கதை காசியின் அரசனைப் பற்றியது.


அந்த அரசன் நல்ல பலசாலி. ஒரு முறை கோசலை நாட்டின் மீது அவர் படையெடுத்தார். கோசலை நாட்டின் அரசனும் அரசியும் ஓடிப் போய் ஒரு குயவர் வீட்டில் ஒளிந்துகொண்டார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய பெயர் திகவு.


ஆனால், சில ஆண்டுகளிலேயே கோசலை அரசன் ஒளிந்திருக்கும் ரகசியம் வெளியே தெரிந்துவிட்டது. கோசலை நாட்டு அரசனையும் அரசியையும் காசி அரசன் கைது செய்தார். இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டபோது கோசலை அரசன், தனக்கு எதிரே இருந்த கூட்டத்தில் தன் மகனும் நிற்பதைக் கண்டார். தூக்கு மரத்தில் ஏறுவதற்கு முன் அவர் தன் மகனிடம், "வெறுப்பை அன்பினால் வெல்லலாம்" என்றார்.


திகவு வளர்ந்து நல்ல பாடகனாக மாறினான். அவனுடைய புகழ் எட்டுத் திசையும் பரவியது. காசி மன்னர் அவனைத் தன்னுடைய அரசவையில் சேர்த்துக்கொண்டார். மெல்ல மெல்ல திகவு அரசனின் நன்மதிப்பைப் பெற்றான். உயர்ந்த பதவியும் கிடைத்தது. ஒரு நாள் திகவு அரசனுடன் வேட்டைக்குச் சென்றான். காட்டில் யாருமே இல்லாத ஓர் இடத்தில் அரசன் களைத்துப் போய் உறங்கிவிட்டார். திகவு தன் வாளை உருவினான். "நீ என்னுடைய தாய்-தந்தையைக் காரணமில்லாமல் கொலை செய்தாய். இதோ உன்னையும் எமனிடம் அனுப்பிவிட முடியும்" என்று உரத்த குரலில் சொன்னான்.


முழுப்பதிவும் படிக்க சுட்டி கீழே…


ஃப்ரூட் சாலட் - 89


*****


இந்த வாரத்தின் ரசித்த படம் - கள்ளி:கள்ளி [Cactus] தாவரத்தினை குறுக்காக வெட்டிய பின் எடுத்த படம்.


*****


இந்த வாரத்தின் ரசித்த பாடல் - ராஜஸ்தானி பாடல்:


இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ராஜஸ்தானிலிருந்து கூமர் நடனத்திற்கான ஒரு பாடல். உங்களுக்கும் பிடிக்கலாம்! பாருங்களேன்.


*****


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை - சுமை:


சொல்வனம் இணையப் பக்கம் அவ்வப்போது சென்று அங்கே இருக்கும் பதிவுகளைப் படிப்பதுண்டு - பெரும்பாலும் சிறுகதை மற்றும் கவிதைகள் தான். அப்படிச் சமீபத்தில் படித்த கதை ஒன்று ஐ. கிருத்திகா என்பவர் எழுதிய “சுமை” என்கிற சிறுகதை. பிள்ளைப் பேறுக்கு வந்திருக்கும் மகளுக்கு, செய்ய வேண்டிய சீர் குறித்த, தாயின் கவலைகளைச் சொல்லும் ஒரு கதை. இன்னமும் இப்படியான பிரச்சனைகள் பல வீடுகளில் இருக்கத் தான் செய்கிறது.  கதையைச் சிறப்பாக எழுதி இருக்கும் கதாசிரியருக்கு வாழ்த்துகள்.  நீங்களும் படித்துப் பார்க்க, கதையின் சுட்டி கீழே.


சுமை


*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


16 கருத்துகள்:

 1. உங்கள் போன் அழைப்புப் பேச்சுகள் புன்னகைக்க வைக்கிறது!  நான் நேரிலேயே இப்படிப்பட்ட ப்ரகிருதிகளைச் சந்தித்து வருகிறேன்!


  மகுடி என்றால் எனக்கு நினைவுக்கு வரும் பாடல் நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடவா...!


  காணொளிகளை பார்பபதைவிட அந்த ரசித்த சிறுகதையை வாசிக்கவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரில் சந்திகும் ப்ரகிருதிகள் - :) எஞ்சாய். பல சமயங்களில் பொறுமையை இழந்து விடுவோமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது!

   நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடவா - பாடல் எனக்கும் பிடித்த பாடல் ஸ்ரீராம்.

   காணொளிகள் பார்ப்பதை விட - ஹாஹா... புரிகிறது! :) படிப்பதில் இருக்கும் ஆர்வம் காணொளிகள் பார்ப்பதில் இல்லை - எனக்கு குறிப்பாக நீண்ட நெடும் சினிமாக்கள்! பத்து நிமிடத்திற்கும் குறைவான காணொளிகள் எனில் ஓகே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. நேற்று பீஹாரில் ரயில் நிலையத்தில் பரிசோதனைக்கு பயந்து ஓடியவர்கள் குறித்து பார்த்தபின் இக்கேள்விகள் ஆச்சரியம் அளிக்கவில்லை சார்.
   எனினும், அதிகாரிகளுக்கு கஷ்டம்தான்.
   இங்கு சில படித்தவர்களும் அப்படித்தான்.
   இன்ரு நான் அலுவலகம் வந்தவுடன், சின்னக்கலைவானரை தடுப்பூசி தானே கொன்றுவிட்டது என என்னிடம் கேட்டார்கள்.
   அவர்களுக்கும் பொருமையாக பதில் அளிக்க வேண்டியிருந்தது.
   விளம்பரமும் சிறுகதையும் சீக்கிரம் வாசிக்கிறேன்.

   நீக்கு
  3. நிறைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. இதுவும் கடந்து போகும் அரவிந்த்.

   காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துகள் கண்டு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. காணொளிகள் அருமை.
  போனில் அழைத்து கஷ்டபடுத்துபவர்களை என்னவென்று சொல்வது!
  சுமை கதை படித்தவுடன் அந்த அம்மாவின் மனச்சுமை நம் மனதில் ஏறி கொள்கிறது.
  கதை சொன்னவிதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   ஃபோனில் கஷ்டப்படுத்தும் நபர்கள் - ஒன்றும் சொல்வதற்கில்லை - இதுவும் கடந்து போகும்!

   சுமை கதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இப்படியுமா கேள்விகள்...!

  சுமை இணைப்பிற்கு செல்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் கேள்விகள் - இதற்கு மேலும் கேள்விகள் உண்டு தனபாலன்!

   சுமை - உங்களுக்கும் கதை பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. //இரண்டு நபர்களின் எண்ணையும் Blocked List-ல் சேர்த்தேன்!// - விநோத மனிதர்களால் நிரம்பியது இந்தியா. இவங்களுக்கெல்லாம் இந்த மாதிரி எப்படித்தான் சந்தேகங்கள் வருதோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விநோத மனிதர்களால் நிரம்பிய உலகம் - ஹாஹா. உண்மை தான் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இன்றைய காஃபி வித் கிட்டு பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

  ஃபோனில் பேசியவர்களின் சந்தேகங்கள் சிரிப்பைத்தான் வரவழைத்தது.

  மகுடி உணவின் பெயரும் வினோதமாக உள்ளது. உண்ணும் போது கண்டிப்பாக அதன் தொடர்புடையவை நினைவுக்கு வரும்.. ஹா.ஹா.

  ரசித்த படமும், ஃப்ரூட் சால்ட் கதையும் நன்றாக உள்ளது.

  ரசித்து படித்த கதையாகிய சுமை படிக்க விறுறுப்பாக இருந்தது. இறுதியில் அந்த தாய் எப்படி சமாளிக்க போகிறார் என்ற சுமையை நம் மனதிலும் ஏற்றி விட்டார் கதாசிரியை. அவருக்கு என் வாழ்த்துகளும். பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அன்பு வெங்கட்,
  காஃபி வித் கிட்டு மிகச் சிறப்பு;

  அராத்தாகக் கேள்வி கேட்பவர்களை
  ஃபோன் வழியாகவே ஒரு அறை விட
  ஆப் ஒன்று வேண்டும்:)

  சரியாகப் பதில் சொன்னீர்கள்.!!!

  தாய்" குறும்படம் மிக இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா.

   அராத்தாக கேள்வி கேட்பவர்களை ஃபோன் வழி ஒரு அறை - ஹாஹா.. அப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும்!

   குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பன்னாரே'' பாடல் மிக இனிமை. மக்கூட்டி'
  செய்யும் முறையைப் போய்ப் பார்க்கிறேன். நன்றி மா/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடலும், இந்த வார உணவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....