வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பயணம் செய்ய ஆசை - 2: Umngot River - Dawki, Meghalaya


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


PEOPLE CAN’T CHANGE THE TRUTH, BUT THE TRUTH CAN CHANGE PEOPLE.******


சில வாரங்களுக்கு முன்னர் பயணம் செய்ய ஆசை என்ற தலைப்பில் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள (CH)சோப்(TA)டா என்ற இடத்திற்குச் செல்வது குறித்தும், அங்கே இருக்கும் இடங்கள் குறித்தும் எழுதி இருந்தேன்.  அந்தப் பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி பார்க்கலாம்/படிக்கலாம்.  பயணம் செய்ய ஆசை, வரிசையில் இந்த வாரம் நாம் பார்க்கப் போவது, இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் இருக்கும் Umngot என்று அழைக்கப்படும் ஏரி இருக்கும் டாக்கி (Dawki) நகரப் பகுதி!  இந்த ஆறும், ஆற்றின் நீரும் அவ்வளவு சுத்தம் - மேலே இருந்து பார்க்க ஆற்றுப் படுகை தெரியும் அளவிற்கு அவ்வளவு தெளிந்த நீர் கொண்ட ஆறு.  நம் நாட்டில் பல ஆறுகள்/நதிகள் இருக்கும் நிலை கண்டு வேதனை தான். அவை சுத்தமாகவே இருந்தன - மனிதர்கள் தான் அவற்றை அசுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.  நல்ல வேளையாக மேகலாயாவில் இருக்கும் இந்த ஆறு இன்னமும் இயற்கை வடித்த அழகிலேயே இன்னமும் இருக்கிறது.  
எங்களது பதினைந்து நாள் வட கிழக்கு மாநிலப் பயணத்தின் போது, மேகாலயாவிற்கும் சென்று வந்தோம் என்றாலும், ஒரே ஒரு நாள் பயணம் தான் வாய்த்தது.  மேகாலயாவில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறையவே உண்டு.  நான்கு முதல் ஐந்து நாட்கள் அங்கே இருக்கும்படி சென்றால் நிறைய இடங்களைப் பார்க்க முடியும்.  சிரபுஞ்சி, அருவிகள், வேர்களால் அமைந்த பாலங்கள், குகைகள், இந்தியா-பங்க்ளாதேஷ் எல்லை என நிறைய இடங்களைப் பார்க்கலாம் - அப்படி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று தான் இன்றைக்கு, இந்தப் பதிவின் வழி நாம் பார்க்கப் போகும் Umngot River. இந்தியா-பங்க்ளாதேஷ் எல்லை நகரமான டாக்கி (Dawki) பகுதியில் தான் இந்த ஏரி இருக்கிறது.  சமீபத்தில் எனது நண்பர்கள் சிலர் அவர்களது ஐந்து நாள் மேகாலயா பயணத்தின் சமயத்தில் இந்த டாக்கி நகருக்கு சென்று வந்திருக்கிறார்கள்.  அவர்களை, அவர்களது பயணம் குறித்து எழுதச் சொல்லி இருக்கிறேன்.  முடிந்தால் விரைவில் அவர்கள் அனுபவத்தினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

Khasia மற்றும் Jaintia மலைத் தொடர்களுக்கு இடையில் இருக்கும் இந்த ஆறானது இந்தியாவில் தொடங்கி பங்க்ளாதேஷ் நாட்டிற்குச் சென்றடைகிறது.  இந்த ஆறும் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு எல்லையாகவும் இருக்கிறது.  பளிங்கு போன்ற நீர் கொண்ட இந்த ஆற்றில் ஒரு படகுப் பயணம் சென்றால் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், அப்படி ஒரு பயணமும் உங்களால் செய்ய முடியும்.  நான்கு முதல் ஐந்து பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் நீண்ட கட்டுமரங்கள் போன்ற படகுகளில் இந்த ஆற்றின் எழிலை ரசித்தபடியே நீங்கள் பயணிக்க முடியும். ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இரும்புப் பாலமும் இருக்கிறது - ஆற்றைக் கடந்தால் பங்க்ளாதேஷ் சென்றுவிடலாம்! ஆனாலும் எல்லோருக்கும் அப்படிச் சென்று விட அனுமதி இல்லை! ஆற்றின் வழி படகில் செல்லும்போது நீங்கள் எல்லையைத் தாண்டி சென்று விடமுடியாது - அதற்கும் அனுமதி இல்லை என்பதையும் தெளிவுபடுத்திவிடுகிறேன். எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அங்கே உண்டு. 

படகுப் பயணத்தின் போது உங்களை அவர்கள் ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு தீவுக்கும் அழைத்துச் செல்வார்கள் - அங்கே நீங்கள் இந்தச் சுத்தமான தண்ணீரில் குளிக்கவும் முடியும்.  அங்கே சென்று வந்த நண்பர்கள் இந்தப் பகுதியில் மிகவும் சந்தோஷமாக இருந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  சுத்தமான தண்ணீரை விட்டு வெளியே வரவே மனமிருக்காது என்பதையும் சொல்லச் சொல்ல, இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது - ஆசைக்கு அளவேது? இல்லையா!  “அத்தனைக்கும் ஆசைப்படு!” என்று வேறு ஒருவர் சொல்லி இருக்கிறாரே! இதுவரை இங்கே, இந்த மேகாலயா மாநிலத்திற்கு நீங்கள் பயணித்ததில்லை என்றால், இங்கே சென்று வர நீங்கள் திட்டமிடலாம். சென்னையிலிருந்து கௌஹாத்தி வரை விமானத்திலும், அதன் பிறகு சாலை வழியேயும் மேகாலயா சென்று வரலாம்.  கௌஹாத்தி நகரிலிருந்து ஷில்லாங் வழி டாக்கி வரை சுமார் 175 கிலோமீட்டர் தொலைவு.  ஷில்லாங்க் நகரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர்.  தேசிய நெடுஞ்சாலை எண் 6 மற்றும் 206 வழி பயணித்து இங்கே அடைய முடியும்.  


எங்கே தங்கலாம்? செலவு எவ்வளவு? 

டாக்கி பகுதியில் ஒன்றிரண்டு தங்குமிடங்கள் உண்டு.  ஷில்லாங், சிரபுஞ்சி பகுதிகளிலும் தங்குமிடங்கள் உண்டு.  கௌஹாத்தி நகரிலிருந்து ஆரம்பித்து மீண்டும் கௌஹாத்தி நகரில் கொண்டு வந்து விடும்படி பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நலம்.  தனியாக நீங்களே வாகனத்தில் சென்று வருவதை விட, Conducted Tour ஏற்பாடு செய்து கொண்டால், அனைத்து ஏற்பாடுகளும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் - உங்கள் வேலை பயணத்தினை ரசிப்பது மட்டுமே!  நண்பர்கள் அப்படிச் சென்று வந்த Conducted Tour பயணத்திற்கு தலைக்கு 9000/- ரூபாய் ஆனது (தில்லி - கௌஹாத்தி - தில்லி விமானக் கட்டணம் தனி). இந்தக் கட்டணத்தில், தங்குமிடம், வாகனம் மற்றும் ஒரு வேளை உணவு உள்ளடக்கம்.  நுழைவுக் கட்டணங்கள், படகுக் கட்டணங்கள், நிழற்படக் கருவிக்கான கட்டணங்கள் ஆகியவை இதில் சேர்க்கப்படவில்லை - அவை அனைத்தும் நீங்கள் தர வேண்டியிருக்கும்.இங்கே பயணம் செய்ய எல்லா நாட்களும் சிறப்பான நாட்கள் என்றாலும், மழைக்காலம் முடிந்த பிறகு இங்கே சென்றால் எல்லா அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் அப்போது அங்கே சென்று பார்க்க ஆனந்தம் அதிகமாக இருக்கும். தற்போது இந்தியாவையும், உலகத்தின் பல பகுதிகளையும் தாக்கி இருக்கும் தீநுண்மியின் கொடுமை முடிந்த பிறகு, உங்களுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தால், ஆசை இருந்தால் இப்படி நான்கு-ஐந்து நாட்கள் பயணமாக மேகாலயா சென்று வரலாம்! முடிந்த போது சென்று வர உங்களுக்கு வாழ்த்துகள்.  


நண்பர்களே, இந்தப் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


18 கருத்துகள்:

 1. இப்படிப்பட்ட அழகான இடம் என்றால் பயணம் செய்ய ஆசை அனைவருக்கும் வரும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான இடம் தான் தனபாலன். முடிந்தால் சென்று வரலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. மேகாலயா மிகவும் அழகு.பார்க்க ஆவலை ஏற்படுத்தும் படங்கள்.
  பயணவிவரங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்க ஆவல் ஏற்படுத்தும் படங்கள் - உண்மை தான் கோமதிம்மா.

   விவரங்கள் உங்களுக்கும் பிடிதஹ்தில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. படகுகள் hovercraft போன்று தண்ணீரை தொட்டும் தொடாமலும் செல்வது போன்று உள்ளது. எடுத்த கோணமும் வித்தியாசமாக பாராட்டத்தக்க விதத்தில் நன்றாக உள்ளன. இது போன்ற பதிவுகளே உங்களது சிறப்பு.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. படங்கள் இணையத்திலிருந்து தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. புகைப்படத்தில் தண்ணீரின் தெளிவு அழகாக இருக்கிறது ஜி. வாழ்வில் ஓர்முறையேனும் சென்று வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவான தண்ணீர் - மரகதப் பச்சை நிறத்தில். பார்க்கவே அழகு தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. படங்கள் அசத்தல்.  குறிப்பாக மூன்றாவது படமும் நான்காவது படமும் பிரமிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். படங்கள் இணையத்திலிருந்து தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. ஆசையைத் தூண்டுகிறது.
  தீநுண்ணி சென்றபிறகு பயணம் திட்டமிடவேண்டும்.
  இப்போது வாரணாசி கூட பயணிகளுக்கு தடை சொல்லத் தொடங்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீநுண்மிக்குப் பிறகு... அது தான் எல்லோருடைய எண்ணமும். வாரணாசி தவிர வேறு உத்திரப் பிரதேச நகரங்களிலும் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு - இரவு எட்டு மணி முதல் காலை ஏழு மணி வரை என உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி இருக்கிறார்கள். வீட்டில் இருப்பதே நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 8. மிக அழகான படங்கள். Trick photography என்று தோன்றியது அத்தனை துல்லியமான நீரா? சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான இடம் தான் பானும்மா. சமீபத்தில் சில நண்பர்கள் சென்று வந்தார்கள். அவர்கள் எடுத்த படங்களும் நன்றாகவே இருந்தது.

   பதிவு குறித்த உங்கள் கருத்துப் பகிர்வு கண்டு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. மிக அழகான இடம் மேகாலயா. தங்கள் நண்பர்களும் அவர்களது
  அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள் வேண்டும்.
  சிறப்பான படங்கள் அன்பு வெங்கட்.
  பசுமையும் தூய்மையும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

  எல்லோருக்கும் சுதந்திரம் கிடைக்கட்டும்.
  நுண்மிக்குத் தப்பி வாழ்வது
  இப்போதைய நிதர்சனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா.

   மேகாலயா பயணம் குறித்த அனுபவங்கள் - நண்பர்களின் அனுபவங்கள் - எழுதுவார்கள் எனத் தோன்றுகிறது. விரைவில் பதிவாக வரலாம்! காத்திருங்கள்.

   பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தீநுண்மி பாதிப்பு முடிந்து அனைவரும் சுதந்திரமாக வெளியே செல்ல வேண்டும் - ஆண்டவன் அருள் புரியட்டும்.

   இப்போதைக்கு தப்பிப்போம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....