வியாழன், 25 மார்ச், 2021

பயணம் போக ஆசை - (CH) சோப்டா - உத்திராகண்ட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சால்கிரா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அவமானப் படுத்தியவர்களுக்கு வார்த்தைகளில் பதில் சொல்வதை விட, நம் வாழ்க்கையையே பதிலாகச் சொல்வதில் இருக்கிறது சாமர்த்தியம்.  நம் தலை நிமிர நிமிர அவர்கள் தம் தலை குனிந்தே தீருவார்கள்.


******

பயணம் எனக்குப் பிடித்தமான விஷயம் என்பதை இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை.  எனது வலைப்பூவினைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு பயணம் எனக்கு எத்தனை பிடித்தமானது என்பது நன்றாகவே தெரியும்.  கடந்த 2019-ஆம் வருடத்தின் அந்தமான் பயணத்திற்குப் பிறகு எந்த ஒரு பயணமும் செய்ய முடியவில்லை. திட்டமிட்டிருந்த சில பயணங்களையும் தள்ளிப்போடவேண்டிய நிலை - தீநுண்மி வந்த பிறகு பயணங்கள் செய்யவே முடியாத சூழல்.  அப்படியே பயணிக்க நினைத்தாலும், பயணத்திற்குத் தோதான நண்பர்கள் வர இயலாத சூழல். அதனால் பயணக் கனவுகள் இப்போதைக்கு கனவுகளாகவே இருக்கின்றன.  அப்படியான கனவுப் பயணங்கள் சிலவற்றை அவ்வப்போது எழுத எண்ணம் வந்தது இந்த வாரம்!  இதோ தொடங்கி விட்டேன்.  முதலாவதாக நாம் கனவில் பயணிக்கப் போவது உத்திராகண்ட் மாநிலத்தின் ஒரு அற்புதமான இடத்திற்கு.  இந்த இடம் குறித்து நான் அறிந்த தகவல்கள், இணையத்திலிருந்து எடுத்த தகவல்கள் போன்றவற்றை இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  நான் பயணிக்கிறேனோ இல்லையோ, பயணிக்க விரும்பும் சிலருக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கலாம். வாருங்கள் நம் கனவுப் பயணத்தினைத் தொடங்குவோம்!


எங்கே இருக்கிறது இந்த (CH) சோப்டா?உத்திராகண்ட் மாநிலத்தின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பான இடம் இந்த (CH) சோப்டா.  கடல் மட்டத்திலிருந்து 2700 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த இடத்திற்குச் செல்ல சிறந்த சமயம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை.  பனிப்பொழிவினை பார்க்க விருப்பம் இருந்தால் ஜனவரி முதல் மார்ச் வரை இங்கே பயணிக்கலாம்.  தவிர மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள் இங்கே நிச்சயம் செல்லலாம்.  குளிர்காலத்தில் நிறைய பனிப்பொழிவு இருக்கும் என்பதால் -15 டிகிரி C வரை தட்பவெப்பமில்லை செல்ல வாய்ப்புண்டு.  அதனால் குளிர்காலத்தில் இங்கே செல்ல நினைத்தால் அதற்குத் தகுந்த உடைகளோடு செல்வது சாலச் சிறந்தது! தகுந்த உடைகள் இல்லையெனில் ”கிடுகிடுக்கும் நடுக்கத்தில்” நீங்கள் இருக்க வேண்டி வரலாம்! 


(CH) சோப்டா வில் என்ன இருக்கிறது?


சுற்றிலும் பனிபடர்ந்த ஹிமாலயா மலைச்சிகரம், அழகான புல்வெளிகள், மலைப் பிரதேசத்திற்கே உரித்தான தட்பவெப்பம் என மிக அழகான இடம் இந்த (CH) சோப்டா.  சூழலைப் பொறுத்து, மலையேற்றம், பனிச்சறுக்கு விளையாட்டுகள், மலைப்பிரதேசத்தில் Camping, யோகாசனம், இயற்கை வளம், Rock Climbing, Rappelling, Bird Watching, Cycling என பல விஷயங்கள் இங்கே உண்டு.  மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் சந்திரஷீலா/துங்க்நாத் மற்றும் தேவரியாதால் போன்ற இடங்களுக்கு இங்கேயிருந்து மலையேற்றம் செல்ல வாய்ப்பு உண்டு.  எந்த வித சாகச நடவடிக்கைகளை நீங்கள் செய்யாவிடிலும், இயற்கை அழகை ரசித்தபடி, நட்சத்திரங்களைப் பார்த்தபடி, சூரியாஸ்தமனம், சூரியோதயம் ஆகிவற்றை ரசித்தபடி ஓய்வெடுக்க இது ஒரு சிறந்த இடமாக இருக்கலாம்.  


Rhododendron (பூவரசு வகை) பூக்கள்:
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூவரசு என நாம் அழைக்கும் Rhododendron பூக்கள் இந்தப் பகுதியில் பூத்துக் குலுங்கும் என உத்திராகண்ட் மாநில நண்பர் ஒருவர் சொன்னதோடு, என்னையும் இந்தச் சமயத்தில் செல்லச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.  அந்த நண்பர் உத்திராகண்ட் மாநிலத்தின் பல மலைச் சிகரங்களுக்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பவர்.  அவரது பயணங்கள் சிலவற்றைப் பற்றி அவர் பகிர்ந்து கொள்ளும்போதும், அவர் எடுத்த நிழற்படங்களை பகிர்ந்து கொள்ளும்போதும் பலமுறை ரசித்திருக்கிறேன்.  பொதுவாக படங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் அவரை அவரது பயணங்கள் குறித்து எழுதச் சொன்னாலும், அவரை எழுத வைக்க முடியவில்லை.  எழுத்து அனைவருக்கும் பிடித்து விடுவதில்லையே.  


பஞ்ச கேதாரம் - சில தகவல்கள்:
கேதார்நாத் - இந்தப் பெயரை உங்களில் பலரும் அறிந்திருக்கலாம். (CH)சார் (DH)தாம் என்று அழைக்கப்படும் நான்கு இடங்களில் கேதார்நாத் இல்லை - பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய நான்கு இடங்களையே (CH)சார் (DH)தாம் என்று அழைப்பது வழக்கம்.  (CH)சோட்(Ta)டா (CH)சார் (DH)தாம் என்று அழைக்கப்படும் நான்கு இடங்களில் ஒன்று தான் இந்த கேதார்நாத் - (CH)சோட்(Ta)டா (CH)சார் (DH)தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுமே உத்திராகண்ட் மாநிலத்தில் இருப்பவை - கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் - ஆகிய  நான்கு இடங்கள் தான் அவை.  இந்த இடங்களில் கேதார்நாத்-க்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு.  அந்தச் சிறப்பு - பஞ்ச கேதாரங்கள் என அழைக்கப்படும் கோவில்களில் ஒன்று இந்த கேதார்நாத்.  மற்ற நான்கு?  துங்கநாத், ருத்ரநாத், மத்யமஹேஷ்வர் மற்றும் கல்பேஷ்வர்! இந்த ஐந்து கேதாரங்களும் இருப்பது உத்திராகண்ட் மாநிலத்தில் தான்.  

இந்தப் பதிவில் இந்தத் தகவல்களைச் சொல்வதன் காரணம், பஞ்ச கேதாரங்களில் ஒன்றான துங்கநாத் செல்ல (CH)சோப்டாவிலிருந்து தான் மலையேற்றம் தொடங்குகிறது என்பது தான். (CH)சோப்டாவிலிருந்து மூன்றரை கிலோமீட்டர் மலையேற்றம் செய்து இந்த துங்கநாத் செல்ல முடியும்.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 3700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் கோவில் அதிகமான உயரத்தில் இருக்கும் சிவன் கோவில் என்றும் சொல்வதுண்டு.  மற்ற பஞ்ச கேதாரங்களை விட சுலபமாகச் சென்றடையக் கூடிய கேதாரமும் இந்த துங்கநாத் தான் - மூன்றரை கிலோமீட்டர் நடை - ஆனால் ஹிந்தியில் சொல்வது போல இந்த மலையேற்றம் - Khadi Chadaai - அதாவது Steep ஆன பாதை! ஆனால் இங்கே செல்வதை பலரும் விரும்புகிறார்கள்.  வருடத்தின் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்தக் கோவில் மூடியே இருக்கும் - மற்ற கேதாரங்களைப் போலவே! 


எப்படிச் செல்வது? தங்குமிடங்கள் உண்டா?

தில்லியிலிருந்து ஹரித்வார்/ரிஷிகேஷ் வரை இரயில்/பேருந்தில் சென்று, அங்கேயிருந்து ருத்ரப்ரயாக்/ஊக்கிமட் வரை மீண்டும் பேருந்துப் பயணம்.  பிறகு அங்கேயிருந்து உள்ளூர் வாகனங்களை அமர்த்திக் கொள்ளலாம்.  இல்லை என்றால் ஹரித்வார்/ரிஷிகேஷிலிருந்தும் வாகனம் அமர்த்திக் கொண்டு சென்று வரலாம்.  இரண்டு நாட்கள் தங்கும்படிச் சென்றால், அருகே இருக்கும் ருத்ரப்ரயாக், ஊக்கிமட் (கேதார்நாத் கோவில் மூடியிருக்கும் குளிர் சமயத்தில் இந்த இடத்தில் தான் கேதார்நாத், மத்யமஹேஷ்வர் மற்றும் துங்கநாத் ஆகிய மூன்று கேதார்நாத் கோவில்களின் பூஜைகளும் இங்கே தான் செய்வார்கள்) போன்ற இடங்களையும் அருகே இருக்கும் வேறு சில இடங்களையும் பார்க்க முடியும்.  இந்தப் பகுதிகளில் சில தங்குமிடங்களும் உண்டு.  வசதிகள் குறைவாக இருந்தாலும் நிறைவான பயணமாக இருக்கும். 


நண்பர்களே, இந்தப் பதிவின் வழி ஒரு சிறப்பான இடத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.  விரைவில் இந்த இடத்திற்குச் சென்று வர வேண்டும் என்ற எண்ணமுண்டு.  நேரமும் இறைவனின் அருளும் இருந்தால் இங்கே பயணித்து வந்து, பயணம் குறித்த கட்டுரைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  நாளை வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


20 கருத்துகள்:

 1. எவ்வளவு அழகான இடங்கள்...   நீங்கள் செல்ல ஆசைப்படுவதில் ஆச்சர்யமே இல்லை.  சீக்கிரமே அங்கு சென்று வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான இடங்கள் தான் ஸ்ரீராம். பார்க்கலாம் இங்கே செல்ல எப்போது வாய்ப்பு கிடைக்கும் என.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. கனவுப் பயணம் - அழகான சொல்லாடல்.

  படித்து முடித்ததும் உத்தர்கண்டில் பத்து நாள் பயணம் போகத் திட்டம் போட்டிருக்கேன். திட்டம் செயல்ப்ட்டா நல்லாருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   உங்கள் திட்டப்படி பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் அப்பாதுரை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. சில படங்களே இடத்தின் அழகை விளக்குகிறது... பயணத்திற்கு முன்பே அருமையான பல திட்டமிடல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பயணம் விரைவில் தொடங்க வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் விரைவில் தொடங்க ஆசை தான் அரவிந்த். பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்குமென!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. சிறப்பான அறிமுகம். என்றாவது பஞ்ச கேதாரங்களுக்குச் சென்று சேவிக்கணும்

  நீங்கள் கல்பேஷ்வர் போனதாக எழுதியிருந்தீங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பஞ்ச கேதாரங்களுக்குச் செல்ல வேண்டும் என நானும் நினைத்திருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

   கல்பேஷ்வர் குறித்து எழுதியதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. மிகவும் அற்புதமான படங்கள். விரைவில் உங்கள் பயணம் தொடங்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

   நீக்கு
 7. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
  இவ்விடங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்னும் ஏக்கம் மனதில் எழுகிறது
  தங்களின் பயணம் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா. உங்களுக்கும் இது போன்ற இடங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. படங்கள் மிக அழகு. இந்த மாதிரி பயணங்கள் இந்தப் பிறவியில் எப்போதோ? குளிர் பிரதேசமெல்லாம் செல்ல உடம்பு ஒத்துக் கொள்ளுமா? உங்கள் கனவுப் பயணத்தையே மிக அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். விரைவில் தங்களின் இந்த கனவு நனவாக பிரார்த்தித்துக் கொள்கிறேன். அப்போதுதான் எங்களுக்கும் தங்கள் விரிவான பகிர்தலில் நிறைவாக ஒரு பயண கட்டுரை கிடைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும், படங்களும், பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. இது போன்ற பயணங்கள் அமையும் நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. சீக்கிரமே சென்று வந்துவிட்டு உங்கள் அனுபவங்களையும் பகிர்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். நல்ல இடங்கள் தாம். சார் தாம் எனப்படும் அனைத்துக்கும் போயிருக்கோம். பத்ரிநாத், பூரி, ராமேஸ்வரம் மற்றும் துவாரகா! துவாரகாவுக்கு 3,4 தரம் போயிருக்கோம். ராமேஸ்வரமும் 3,4 தரம் போனோம். பத்ரிநாத் பயணத்தின் போது திடீரென்று மோசமான என்னோட உடல்நிலை காரணமாகக் கேதார்நாத் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தது. ஆனால் அதுவே திருக்கயிலை யாத்திரையின் போது எதுவும் பண்ணலை. நன்றாக இருந்தேன். பஞ்ச கேதாரமும் போகலை. எல்லாப் படங்களும் அழகு, அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. இன்றைய வாசகமும் சிறப்பு. இதையும் எனக்குச் சொன்னதாகவே எடுத்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....