புதன், 24 மார்ச், 2021

சால்(g)கிரா - தீநுண்மி - கோடை - அலுவலகம்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


A SINGLE MOMENT OF MISUNDERSTANDING IS SO POISONOUS, THAT IT MAKES US FORGET, WITHIN A MINUTE. THE HUNDRED LOVABLE MOMENTS SPENT TOGETHER.


******சால்(g)கிரா என்கிற ஹிந்தி வார்த்தைக்கு சமமான ஆங்கில வார்த்தை Anniversary!  தமிழில் ஆண்டு நிறைவு என்று சொல்லலாம்!  தீநுண்மி பரவியதைத் தொடர்ந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்து ஒரு வருடம் ஓடி விட்டது.  நடுவில் சிறிதளவு தளர்வுகள் வந்து மக்கள் மீண்டும் முன்பு போல நடமாட ஆரம்பித்து விட்டார்கள்.  ஆனால் கடந்த சில வாரங்களாக தீநுண்மி மீண்டும் தன் கோர முகத்தினை வெளியே காண்பிக்கத் தொடங்கி இருக்கிறது. என்னதான் மருத்துவர்களும், நிபுணர்களும் தகுந்த பாதுகாப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும் நம்மில் பலர் அதனைக் கேட்பதில்லை.  இன்று எனக்குத் தெரிந்த ஒருவர் முகக்கவசம் அணிந்து கொள்ளாமல் தில்லியில் நகர்வலம் வந்ததையும், அவரைத் தட்டிக் கேட்ட காவல்துறை ஊழியர்களை, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தனக்கு இருக்கும் தொடர்புகளைச் சொல்லி, ஊழியர்களை மிரட்டி அங்கிருந்து எந்தவித அபராதமும் கட்டாமல் சென்றதையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இப்படிச் செய்வது அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் தொல்லை தரக் கூடும் என்பதை அவர் உணர்ந்து கொள்ளவே இல்லை. 


இங்கே தற்போது முகக் கவசம் இல்லாமல் வெளியே செல்வோரை 10 மணி நேரம் வரை “உள்ளே” வைத்து அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள்.  சில மாதங்கள் முன்னர் 2000 ரூபாய் அபராதம் என்று சொல்லி இருந்தார்கள்.  நீங்கள் என்ன சொன்னாலும் எங்கள் காதுகளில் அது விழாது என்று கர்வத்துடன் உலா செல்பவர்கள் இங்கேயும் நிறையவே.  சமீப நாட்களாக ஆந்திர, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து பேருந்துகளிலும், இரயில்களிலும் சுற்றுலா வருபவர்களும் வர ஆரம்பித்து இருக்கிறார்கள்.  பத்து, பதினைந்து நாட்கள் சுற்றுலா - வட இந்தியா முழுவதும் சுற்றி வந்து ஊர் திரும்புவார்கள்.  அப்படிச் சுற்றுலா வருபவர்கள் சிலரை கடந்த இரண்டு மூன்று நாட்களில் பார்த்தேன் - பேருந்துகளுடன் வீட்டின் அருகே இருக்கும் லக்ஷ்மி நாராயண் மந்திர் அருகே!  ஒருவர் கூட முகக் கவசம் அணியவில்லை!  அவர்களது பேருந்தின் ஜன்னலில் சில முகக் கவசங்கள் கட்டியிருக்க, சிலர் முகக் கவசங்களை தங்கள் இடுப்பில் சொருகி வைத்திருந்தார்கள்!  


பிரச்சனைகள் குறைய வாய்ப்பில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்க, அலுவலகத்தில் ஆணிகள் அதிகரித்து இருக்கிறது.  சில நாட்களாக மாலை வேளைகளில் வீடு திரும்பும் நேரம் மாறியிருக்கிறது.  தொடர்ந்து சில நாட்களாக காலை 08.45 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால், வீடு திரும்புவதற்கு இரவு 08.30 மணி ஆகிவிடுகிறது!  பன்னிரெண்டு மணி நேர அலுவலகம் என்பதாக மாறியிருக்கிறது.  தொடர்ந்து கணினியைப் பார்த்துப் பார்த்து இரவு நேரத்தில் கண்களில் அப்படி ஒரு அயற்சி.  இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலை தொடரும் என்றே தெரிகிறது.  தீநுண்மி பிரச்சனை அதிகரித்தால் வேலைகளும் அதிகரிக்கலாம் - ஊரடங்கு வருமா வராதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை ஊரடங்கு கொண்டு வரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. 

இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் நாள் வரை இந்தியாவில் மட்டும் 4.84 கோடி தீநுண்மிக்கான தடுப்பூசிகள் (4.06 கோடி முதல் ஊசி, 0.78 கோடி இரண்டாம் ஊசி) போடப்பட்டு இருக்கிறது.  இதற்கான புள்ளி விவரங்கள் பார்க்க ஆசை இருந்தால், இந்தத் தளத்தில் பார்க்கலாம்.  தடுப்பூசி குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் விதமாக சில கேள்வி-பதில்களும் இந்தத் தளத்தில் உண்டு - அதற்கான சுட்டி - தடுப்பூசி.


தீநுண்மி பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, தில்லியில் கொஞ்சம் கொஞ்சமாக கோடையும் தன் கோர முகத்தினைக் காண்பிக்க ஆரம்பித்து இருக்கிறது.  கோடை காலங்களில் வரும் சில பிரச்சனைகளும் வரத் தொடங்கி இருக்கிறது.  அலுவலகத்தில் தற்காலிகப் பணியில் இருக்கும் ஒரு இளைஞரின் வீட்டில் அவரது சகோதரன், சகோதரனின் மனைவி, குழந்தை என அனைவருக்கும் Chickenpox.  கடந்த வாரம் அவருக்கும் வந்துவிட, முழுவதும் குணமடைந்த பிறகு அலுவலகம் வந்தால் போதும் என்று சொல்லி இருந்தாலும், இன்றைக்கு காலையில் அலுவலகம் வந்து விட்டார் - முழுவதும் குணமாகாமல்!  வேலைக்கு வராவிட்டால் சம்பளம் குறைத்து விடுவார்கள் என்ற கலக்கத்தில்!  அப்படியெல்லாம் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம் - நீ வீடு சென்று, ஓய்வெடுத்துக் கொண்டு, முழுவதும் குணமான பிறகு வந்தால் போதும் என்று சொல்லி அனுப்பி வைக்க வேண்டியதாயிற்று!  இந்த நோய் ஒரு தொற்றுநோய் என்பதை அவருக்குச் சொல்லி புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 


இதுவும் கடந்து போகும்” என்ற நம்பிக்கையில் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றது.  நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!  நம்பிக்கை தானே வாழ்க்கை. 


*****


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

 1. கோடைக்கால சிரமங்கள் ஒரு பக்கம்...  தீநுண்மியே இப்போது மறுபடி வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது.  எங்கள் அலுவலகத்தில் மூன்று பேருக்கு.  அதில் ஒருவர் மற்றவர்களுக்கு வரும்போது எச்சரிக்கை சொன்னவர், இப்போது தனக்கு வந்திருப்பது அது இல்லை என்று சொல்லி வந்து கொண்டே இருந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரச்சனைகள் விரைவில் தீர வேண்டும் என்பது மட்டுமே நமது வேண்டுதல்கள் இப்போதைக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. மக்களின் அலட்சிய மனப்பான்மை, வழிபாட்டுத்தலங்கள் பள்ளிகள் உள்ளிட்டவை திறப்பு, ஆங்காங்கு திருவிழாக்கள், தேர்தல் ஊர்வலங்கள்......உள்ளிட்ட பல காரணங்கள். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவு ஆபத்தாகும். அரசியல்வாதிகள் அரசியலை மட்டுமே நோக்குகிறார்கள். மக்களை அல்ல, என்பது வேதனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அரசியல்வாதிகள் அரசியலை மட்டுமே நோக்குகிறார்கள்// வேதனையான உண்மை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இங்கு சுத்தமாக விழிப்புணர்வு என்பதே இல்லை... மிகவும் சிரமம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //விழிப்புணர்வு என்பதே இல்லை// - உண்மை தான் தனபாலன். பெரும்பாலானோரின் மெத்தனமான போக்கினைப் பார்க்கும்போது வருத்தம் தான் மிஞ்சுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கலக்கமாக இருக்கு பதிவு பார்த்து. மக்களுக்கு இதையெல்லாம் புரிந்துகொள்ளும் சக்தி இல்லையா இல்லை அலட்சியமா என்று தெரியவில்லை. அதுவும் தவிர, சுற்றுலா செல்லும் நேரமா இது? இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிந்தவர், திருச்சிக்கு இங்கிருந்து இரயிலில் பயணம் சென்று திரும்பினார். அவர் சொன்னார், இரயிலில் கூட்டம் சொல்லி மாளலை.. எல்லோரும் நெருக்கியடித்துக்கொண்டு (அதாவது ஒவ்வொரு சீட்டுக்கும் ஒருவர்தான், ஆனால் packedஆக இருந்ததாம்) முககவசம் இல்லாமல் பிரயாணம் செய்தார்கள் என்றார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லியிலாவது பரவாயில்லை - மற்ற மாநிலங்களில் எனக்குத் தெரிந்த வரை மாஸ்க் பயன்பாடு குறைவாகவே இருப்பதாகவே எனக்குத் தெரிந்த பல நண்பர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தீநுண்மியின் பாதிப்பு குறித்து பலருக்கும் கவலையில்லை என்றே தோன்றுகிறது - மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர செயலில் பெரிதாக ஒன்றுமில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. உண்மையில் தமிழக மக்களுக்கு கொரோனா பயமே கிடையாது ஜி.

  ஊரடங்கு வந்தாலும் அடித்தட்டு மக்களின் பிரச்சனையை காவலர்கள் சந்திக்க வேண்டிய நிலைவரும்.

  காரணம் அவர்களும் சாப்பிட வேண்டுமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயம் கிடையாது - இருக்கலாம்! ஆனாலும் உயிர் பயம் பலருக்கும் இருக்கத் தான் செய்கிறது கில்லர்ஜி! "Body Strong Basement Weak” வடிவேலு கதை தான் பலருக்கும்! வெளியில் சொல்லிக் கொள்வதில்லை அவ்வளவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. உயிர் கொல்லி வியாதி என்று தெரிந்தும் சில மனிதர்கள் தங்கள் விருப்பம் போல் வாழ்வது மிகவும் கொடுமையான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுமை தான் ராமசாமி ஜி. சரியான புரிதல் இல்லை என்பது வேதனை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அன்பு வெங்கட்,
  நீங்கள் குறித்திருக்கும் அத்தனை விஷயங்களும் உண்மை.
  அந்த சிக்கன் பாக்ஸ் மனிதருக்கு அடிப்படையே தெரியவில்லையே,.

  எத்தனையோ கோடி மக்கள்
  நோயினால் பாதிக்கப் பட்டும் இன்னும்
  முகக் கவசம் அணியாமல்
  கேளிக்கைகளில் வேற பங்கேற்கிறார்கள் .
  இங்கேயும் சில மாகாணங்களில் பெரும்பாலான
  மக்கள் கட்டுப்பாடுகளை அனுசரிப்பதில்லை.

  அவதியும் படுகிறார்கள்.
  பாதிக்கப் படுவது முதியோர்கள்.

  மரணிப்பதும் அவர்களே. என்ன செய்யலாம்.
  தடுப்பூசிக்கே மறுப்பு சொல்பவர்களும் நிறைய
  இருக்கிறார்கள்.
  நலமுடன் இருங்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா. பெரும்பாலான மக்களின் நிலை பார்க்கிற போது வேதனை தான் மிஞ்சுகிறது. நலமுடன் இருக்க வேண்டும் - அனைவருமே! அது தானே நம் ஆசையும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இப்படி கவனமாக இருக்க வேண்டிய காலத்தில் மக்கள் கொஞ்சம் கூட பயமில்லாமல் இருக்கிறார்களே என கவலையாகத்தான் உள்ளது. அந்தந்த பருவ காலங்களில் வரும் நோய்கள் போததென்று இந்த வைரஸ வேறு கடந்த ஒரு வருட காலமாக மக்களை பாடாய்ப்படுத்துகிறது. இதில் கொஞ்சமாவது விழிப்புணர்வு மக்களுக்கு எழ வேண்டாமா? இந்த இரண்டாவது அலை என்னவாகுமோ என்ற கலக்கமாக உள்ளது. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   கவனமாக இல்லாமல் நினைத்தபடி இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். “புரிந்து கொள்ள மாட்டேன்” என பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்வதற்கில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. வெயில் காலத்தில் அலுவலக வேலை முடித்து இரவு வந்து வீட்டிலும் வேலை என்றால் கஷ்டம் .

  //இதுவும் கடந்து போகும்” என்ற நம்பிக்கையில் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றது. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது! நம்பிக்கை தானே வாழ்க்கை. //

  ஆமாம் , நம்பிக்கைதான் வாழ்க்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிக்கை தான் வாழ்க்கை - அதே தான் கோமதிம்மா. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் தான் நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மக்களுக்கு ஒன்று சுயபுத்தி இருக்கனும் இல்லையென்றால் சொல்புத்தி கேட்கும் திறனும் இருக்கனும் இரண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சனை கடந்த வருடம் மிக ஜாக்கிரதையாக இருந்தாலும் இதே நாளில்தான் எனக்கு கோவிட் பாதித்து இரண்டு மாதம் வீட்டில் இருந்தேன்

  எனக்கென்னவோ இந்தியாவில் கோவிட் பாதிப்பை விட ஊரடங்கினால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என நினைக்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒண்ணு சுயபுத்தி இருக்கணும்... இல்லை சொல்புத்தி வேணும்! உண்மை தான் - இன்றைக்கு பலருக்கும் இரண்டுமே இல்லை!

   அனைவரும் நலமுடன் இருக்கட்டும் மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. இதற்காகவே தான் கோயில்களுக்குப் போகவில்லை. அதிலும் இங்கே ஶ்ரீரங்கத்தில் கூட்டம் அதிகம் எனச் சொல்கின்றனர். தெருக்களிலும் கூட்டம் கூட்டமாய் மக்கள் செல்வதைப் பார்க்க முடிகிறது. யாரும் பாதுகாப்புடம் இருப்பதில்லை. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணைத்தினம் கேட்கணும், "ஏன் மாஸ்க் போட்டுக்கலை?" என்று. கேட்டால் அடுத்த நாள் மாஸ்க் இடுப்பில் தொங்கும். பின்னர் அவ்வளவு தான்! :( சொல்லிச் சொல்லி அலுத்து விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாஸ்க் போட்டுக் கொள்வதில் பலருக்கும் பிரச்சனைகள் - அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தலையாய பிரச்சனை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....