திங்கள், 1 மார்ச், 2021

நீ மட்டும் போதும் - மின்னூல் விமர்சனம் - இரா. அரவிந்த்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நல்ல தகப்பனிடம் வளர்ந்த பெண்ணிற்கு ஆணைப் பற்றிய எண்ணம் அழகானது…; நல்ல தாயிடம் வளர்ந்த ஆணிற்கு பெண்ணைப் பற்றிய சிந்தனை பேரழகானது...******
இன்றைய நாளில் நாம் பார்க்கப் போவது நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்று - ஓவர் டு அரவிந்த்!


*******


நீ மட்டும் போதும்: பிடிவாதத்தின் பரிசு.

'விட்டுக் கொடுப்பவர் கெட்டதில்லை' என பலர் சொல்லிய போதிலும் அதை கடைபிடிப்போர் வெகு சிலரே.


அதன் ஆபத்தான விளைவுகளை சுவாரசியமாகவும், உருக்கமாகவும்  எடுத்துக்காட்டுவதே திரு அகிலா வைகுண்டம் அவர்களின் 'நீ மட்டும் போதும்' புதினம்.


நிகழ் காலம், கடந்த காலம் என மாறி மாறி கதையை நகர்த்திச் செல்வதும்; நிகழ் காலச் சூழலையும் கடந்த கால நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்கும்படியும் அமைக்கப்பட்ட புதின வடிவம் வாசிப்பை பரபரப்பாக்குகிறது.


புதினத்தின் ஆரம்பப்பகுதியில் பூரணி, தன் கணவன் முத்து ராஜைப் பிரிந்து மகளுடன் தனி வீட்டில் வசிக்க, முத்து ராஜோ அவளை தன் வீட்டுக்கு வருமாறு மீண்டும் மீண்டும் அழைக்கிறான்.


இச்சூழ்நிலையில் பெண் பக்கம் நம் பரிதாபம் இயல்பாக சாய, பூரணியோ, தன்னை மன்னித்தால் ஒழிய வீடு திரும்புவதில்லை என்கிறாள்.


அதற்கு முத்து ராஜ் மறுப்பதோடு நில்லாமல், குழந்தை அனுபாரதியையும் தன்னுடன் வைத்துக்கொள்ள முயல்கிறான்.


இதற்கிடையில் புவனா என்ற பெண்ணுடனும் ஒரு உறவு முறை செல்ல அவளுக்கு முத்து ராஜ் மாப்பிள்ளை பார்க்கிறான்.


அதை மறுக்கும் புவனா, பூரணியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த அவளை விலக்க இயலாமல் முத்து ராஜும் தடுமாறுகிறான்.


இப்படி முத்து ராஜின் தவறான உறவால் பூரணி என்ற அப்பாவிப் பெண் பாதிக்கப்பட்டதாக நாம் எண்ணி அவள் ஏன் மன்னிப்பு கேட்கிறாள் என குழம்ப, இடையிடையே வரும் அவர்களின் கடந்த காலக் கதையோ நம்மை பேரதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.


முற்காலத்தில், அன்னையை இழந்த முத்து ராஜும், தந்தையை இழந்த பூரணியும், பாட்டி அன்னபுஷ்பம் வீட்டில் வளர, முத்து ராஜுவுக்கும் ஏழைக் குடும்ப புவனாவிற்கும் காதல் முளைக்கிறது.


பணக்காரக் குடும்பமாயினும், முத்து ராஜின் இல்லம், திருமணத்திற்குச் சம்மதித்து மணக்கோலத்தில் இருவரும் தயாராக, எப்படி விதி சதி செய்து இந்நிலை வந்தது என்பதையும் இறுதியில் யாரோடு யார் சேர்கிறார்கள் என்பதையும் சுவாரசியமாகக் காட்டுகிறது இப்புதினம்.


சிறு வயதில் பெற்றோரில் ஒருவரின் இழப்பால் செய்யப்படும் மறுமணத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் ஆற்றொண்ணா வலியை முத்து ராஜ்-பூரணி வாயிலாகச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.


கூட்டுக்குடும்பத்தின் மகிமையையும், அதன் ஒற்றுமையைப் பேணும் முயற்சியில் அன்னம் போன்ற பெரியோர், மஹாபாரத பீஷ்மர் அம்புப் படுக்கை போன்ற பெரு மனவலியை அனுபவிப்பதையும் கதை முழுதும் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.


அவ்வண்ணமே, கூட்டுக் குடும்பத்தைச் சிலாகித்துக்கொண்டே தனிக்குடும்பங்களை நோக்கி நகரும் இந்த நாகரீக சமூகத்தின் நியாயங்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.


பெண்கள் படும் துன்பத்தை மட்டும் காட்டாமல், முத்து ராஜ் முதலிய ஆண் சமூகத்தின் பெரும் துன்பங்களும், சிக்கல்களும் அவற்றை வெளிக்காட்ட இயலாத அவர்களின் கைய்யறு நிலையும் மிக உருக்கமாகக் காட்டப்பட்டது கதையின் தலை சிறந்த பகுதிகளாகும்.


எளிதில் பேசித் தீர்க்கப்படக் கூடிய சிக்கல்கள், பிடிவாதத்தால் காலகாலத்திற்கும் தீர்க்க இயலாதவையாக மாறும் அவலமே கதையின் மையக்கரு என்பதோடு அதையே சமூகத்தில் பலரும் இன்று செய்து வருவதை எவராலும் மறுக்க இயலாது.

 

அவ்வாறு பெரும் புற்றுநோயாய் வளர்ந்துள்ள உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் மருந்தாக நட்பு இருப்பதை, சந்தோஷ் போன்ற எதார்த்தப் பாத்திரங்கள் காட்டுகிறது.


எவரையும் அவரின் ஒரு செயலைக் கொண்டு அளவிடுதல் தவறு என்பதையும், ஒவ்வொரு செயலுக்கும் அதைச் செய்வோர் தரப்பில் நியாயமான காரணம் இருக்கும் என்பதையும் கதை, மீண்டும் மீண்டும் ஆழமாக வலியுறுத்திக்கொண்டே செல்கிறது.


அடுத்தவர் தவறை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவரை நோக்கிப் பேச நாம் ஓரடி எடுத்து வைத்தால், அவர் இரண்டடி வைத்துப் பேச வரும் அற்புத எதார்த்தம் காட்டப்படும் கதையின் இறுதிக் காட்சிகளில், சமூகம் முழுவதும் கற்கவேண்டிய பாடம் உள்ளது எனலாம்.


இத்தகைய அற்புத புதினத்தை படித்து மகிழ பின்வரும் கிண்டில் சுட்டியைத் தொடரவும்.


நீ மட்டும் போதும்


நட்புடன்,


இரா. அரவிந்த்


******


என்ன நண்பர்களே, இந்த நாளின் வாசிப்பனுபவம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

20 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான கதை என்று தெரிகிறது.  படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறார் அர்விந்த்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
   நூலை முடியும்போது வாசித்துப்பாருங்கள்.
   இன்றைய வாசகம் மிக அருமை வெங்கட் சார்.
   குழந்தை வளர்ப்பு குறித்த பல நூல்கள் இருப்பினும் அவற்றின் சாராம்சத்தை ஒரே வரியில் இவ்வாசகம் சுட்டுகிறது.

   நீக்கு
 2. நன்றி சகோ மீண்டும் மீண்டும் என்னை நெகிழ வைக்கறீங்க 🙏🏿🙏🏿🙏🏿

  நன்றி சகோ ❤️❤️❤️

  பதிலளிநீக்கு
 3. விமர்சனம் படிக்கும் போது படிக்க ஆர்வம் தோன்றுகிறது ஆனால் படிக்க நேரம் எங்கே என்று நினைக்கும் போது ஆயாசம் ஏற்படுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம் நன்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி கறந்தை சார்

   நீக்கு
 6. அழகிய விமர்சனம் நூலுக்கு மேலும் அழகூட்டுகிறது.

  வாசகம் அற்புதம் ஜி

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. சிறப்பான ஒரு கதையை பற்றிய திரு. அரவிந்த் அவர்களின் கண்ணோட்டத்தில் அவர் உள்ளத்தில் எழுந்த விமர்சன வரிகள் மிகவும் கவர்கிறது. விமர்சனமே இவ்வளவு அழகாக இருக்கும் போது கதையின் சுவாரஸ்யம் மனதுக்குள் அருமையாக வந்து அமர்ந்து கொள்கிறது. சிறப்பானதொரு கதை எழுதிய திருமதி. அகிலா வைகுண்டம் அவர்களுக்கும், அதை அழகாக விமர்சனம் செய்த திரு அரவிந்த் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள். பகிர்வுக்கு தங்களுக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. விமர்சனங்கள், விளம்பரங்கள்தானே படிக்கும், வாங்கும் ஆவலைத் தூண்டுபவை, அந்த வகையில் இந்தக் கதைக்கான விமர்சனம் மிக அருமை, அரவிந்த் அவர்களின் எழுத்துநடை அழகு.

  கதையின் பெயரும், முகப்புப் படமும் சூப்பர்.. ஆசிரியருக்கும், விமர்சனம் பண்ணியவருக்கும், அதை இங்கு பதிவிட்டவருக்கும்:).. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 9. ஆறு பகுதிகள் வரை படித்திருக்கிறேன். அதற்கு மேல் சூழ்நிலைகளால் தொடர முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது வாசிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது படியுங்கள் எம்.ஞானசேகரன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. படிக்கணும்னு ஆசை தான்! அதுவும் கின்டிலில். ஆசை இருக்கு தாசில் பண்ண! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கலாம்! விரைவில் வாய்ப்பு அமையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....