திங்கள், 8 மார்ச், 2021

மகளிர் தினம் - கால விலாசம் - மின்னூல் - விமர்சனம் - இரா. அரவிந்த்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆண்களை கேளுங்கள், செய்து முடிக்க பெண்களை கேளுங்கள் – மார்கரெட் தாட்சர் 


******

இன்று மகளிர் தினம். அனைத்து மகளிர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.  இன்றைய தினத்தின் சிறப்புப் பதிவாக, நண்பர் இரா. அரவிந்த் எழுதிய ஒரு மின்னூல் விமர்சனம் - நூலும் மகளிர் குறித்த நூல் தான்.  படித்துப் பாருங்களேன்.  ஓவர் டு அரவிந்த்.


******


கால விலாசம் : ​ ​ ​ சாதனைப் பெண்களின் நேர நிர்வாகம்ஒரு பெண்ணின் வெற்றி ஒரு தலைமுறையின் வெற்றி எனவும், ஒரு பெண் படித்தால், ஒரு குடும்பமே படித்த மாதிரி எனவும் சொல்கிறோம். 


அதற்கேற்ப இன்று பெண்கள் பல துறைகளில் சாதிக்க ஆரம்பித்த போதிலும், அவர்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், வீடு சார்ந்த வெளி வேலைகள் என்ற முச்சுமைகள் உண்டு.


அச்சுமைகளாலேயே வாழ்வின் ஒரு கட்டத்திற்கு மேல், சமூகத்தில் உயரிய இடங்களை அடையும் பெண்களின் சதவிகிதம் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டால் நம் நாட்டில் மிகக் குறைவே.


அப்படி சமூகத்தில் உயர்ந்த இடங்களை அடைந்து தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கும் பதினைந்து தமிழகப் பெண்களின் எளிமையான வெற்றி ரகசியங்களை எடுத்துக்காட்டுவதே, 2012 இல் குங்குமம் தோழி இதழில் வெளிவந்து தற்போது கிண்டிலில் பதிப்பிக்கப்பட்டுள்ள திரு வே. நீலகண்டன் அவர்களின் 'கால விலாசம் : ​ ​ ​ சாதனைப் பெண்களின் நேர நிர்வாகம்' நூல்.


இந்த நூல் குறித்து விவாதிக்கையில், தோழி ஒருவர் 'இதை ஒரு ஆண் தானே எழுதியது' எனக் கேட்டதும் நான் திகைப்போடு இந்த ஒரு விஷயத்தாலேயே பெண்கள் இந்நூலை ஒதுக்கிவிடவும் கூடும் என உணர்ந்தேன்.


'ஒரு ஆணுக்கு எங்கள் வலியும் வேதனையும் என்ன தெரியும்? அதை அறியாமல் அவர்கள் வாரி வழங்கும் அறிவுரைகள் எப்படி எங்களுக்குப் பொருந்தும்?' என நீங்கள் கேட்பது மிகவும் நியாயமானதே.


இதில் சொல்லப்பட்டவை அனைத்தும் பெண்களே முன்வந்து அளித்த அவர்களின் சுய அணுபவப் பேட்டிகளின் தொகுப்பு என்பதால், அவர்களின் அனைத்து வெற்றி ரகசியங்களும் எதார்த்தமாகவும், பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொருந்துபவையாகவும்  இருப்பது நூலின் சிறப்பு அம்சம்.


'வெற்றிபெற்ற பெண்களின் பின் ஒரு பெரிய குடும்பப் பின்னணி இருக்கும்', 'அவர்கள் பிறவிப் பணக்காரர்களாகத் தங்கள் சொந்த வேலைகளைச் செய்ய ஏவலாளர்களை வைத்திருப்பார்கள்' போன்றவை இயல்பாகப் பெண்கள் சொல்லிப் புலம்புபவை.


அவர்களைப் போலவே இல்லத்து அரசியாகவும், தன் கணவர் நடிகர் நாசரின் படங்களுக்கு மேலாளராகவும், உளவியல் ஆலோசகராகவும், நியூட்ரீஷியனிஸ்ட் ஆகவும், திரைத்துறையில் ஒரு சங்கத்தையே உருவாக்கிய திரு கமீலா நாசர் அவர்களின் பன்முக வாழ்வை வாசித்தால் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவதோடு நம்மாலும் எதையும் சாதிக்க முடியும் என தோன்றுவது இயல்பே.


இதைப் போலவே, தேசிய விருது வென்ற நடிகை திரு சரண்யா, பன்முக ஆளுமை திரு ரேவதி சங்கரன் உட்பட்டோரின்  சமையல் முதல் பொதுவாழ்வு வரையிலான அனுபவக் குறிப்புகள், அனைவருக்குமான சிறந்த வழிகாட்டிகள்.


'எனக்குத் திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகளும் பிறந்துவிட்டன, அவர்களை மேய்க்கவே நேரம் போய்விடுமே? இனி என்ன செய்ய முடியும்' என விரக்தியுடன் கேட்கிறீர்களா?


இதே சூழ்நிலையிலிருந்து, அரசாங்கப் போட்டித் தேர்வில் வெற்றிபெற்று, பல கடுமையான உடலியல் தேர்வுகளையும் மனதளவிலான விமர்சனங்களையும் கடந்து, சென்னை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை புறநகர் மண்டல அதிகாரியாக உயர்ந்துள்ள திரு மீனாட்சி விஜயகுமார் அவர்களின் தினசரி வாழ்வைப் படித்தால் என்ன சொல்வீர்கள் என வியக்கிறேன்.


'எனக்கு விடிகாலையிலேயே கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் சமைத்து, அவர்களை அனுப்பும் வேலையிலிருந்து வீட்டு வேலைகளே என் நாளைத் தின்றுவிடுகிறதே? இவற்றிற்கு அப்பால் எனக்கு எங்கே நேரம்?' என இல்லத்தரசிகள் கோபமாகக் கேட்கிறீர்களா?


காலை ஆறே முக்காலுக்கே கணவரை அனுப்புதல், பெற்றோரைக் கவனித்தல் போன்ற இல்லறக் கடமைகளோடு, அலுவலகத்தில் 11 தொழிற்சங்கங்களை கையாண்டு நிறுவனத்தின் லாபத்தையும் உறுதி செய்து மனித வளத்துறையில் உயர் பதவியை அடைந்துள்ள திரு லதா நம்பீசன் அவர்களின் நேர நிர்வாக ரகசியத்தை வாசித்துப் பாருங்களேன்.


'ஐ.ஏ.எஸ் போன்ற சாதனைகளுக்குத் தினமும் பத்து மணி நேரமாவது படிக்கணுமே? மற்றவர்களின் தேவைகளால் தீர்மானிக்கப்படும்  எங்கள் நேரம் இதை எப்படி அனுமதிக்கும்?' என மாணவிகள் கேட்கிறீர்களா?


உங்கள் வாழ்வை வளமாக்கும் இரகசியங்கள், திரு அபூர்வா ஐ.ஏ.எஸ், டாக்டர் ஷாலினி போன்றோரின் வாழ்வனுபவங்களாகவும், அவர்களின் சராசரி 24 மணிநேர அட்டவணைகளாகவும் இந்நூலில் ஒளிந்துள்ளன.


'என் திறமைகளை இளம் வயதிலேயே என் குடும்பச் சூழல் அடக்கிவிட்டதே! இவர்களைப் போல் நான் அதிர்ஷ்டசாலி இல்லையே!' என அலுத்துக் கொள்கிறீர்களா?


தன்னை டென்னிஸ் ஆட பாட்டி அனுமதிக்காத போதிலும், உள்ளரங்கு விளையாட்டான ஸ்குவாஷ் போட்டியில் தன் ஆர்வத்தைத் திருப்பி, 15 வயதிலேயே சாதித்த வீராங்கனை அனகா அலங்காரம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கானவையும் உங்கள் பெண் குழந்தைகளுக்குப் பகிரப்பட வேண்டியவையுமானவை.


'இதையெல்லாம் சொல்வது எளிது, எப்படி இவர்களைப்போல் என் வாழ்வை திடீரென மாற்ற முடியும்?' எனக் கேட்பது மிகச் சரியானது.


சமையலே அறியாமல் செல்லமாக வளர்க்கப்பட்டு, திருமணத்தால் பெண்களே இல்லாத வீட்டிற்கு வாக்கப்பட்டு, வீட்டு நிர்வாகத்தைக் கற்று, வங்கிப்பணியோடு பட்டிமன்றப் பேச்சாளராகவும் சாதித்த திரு பாரதி பாஸ்கர் அவர்களின் வாழ்வனுபவங்கள் உங்களுக்கானவை.


'இப்படிச் செயல்பட்டால் வாழ்வே எந்திரகதியாகிவிடுமே! பிறகு நெறுங்கிய உறவுகளையும் இழந்து வாழ்வே வெறுமையாகிவிடுமே!' எனக் கேட்கிறீர்களா?


இதைக் கையாளும் ரகசியங்கள், இசைக்கலைஞர் மகதி-அவர் கணவர் மருத்துவர் ஸ்ரீகுமார் வாழ்வனுபவங்களிலும், மூன்று இடங்களில் பிரிந்து வாழும் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் குடும்ப அனுபவங்களிலும், இசை சகோதரிகள் ஷண்முகப்ப்ரியா-ஹரிப்ரியா அவர்களின் தினசரி அட்டவணையிலும்  ஒளிந்துள்ளன.


'இருக்கிற வேலைகளைச் செய்வதற்குள்ளேயே எங்கள் சப்த நாடியும் களைத்து ஓய்வை விரும்புகிறோம்! இவன் என்ன  மேலும் பல வேலைகளைச் செய்யலாம் என உளருகிறான்!' எனக் கொலைவெறியுடன் என்னைப் பார்க்கிறீர்களா?


'ஓய்வுங்கிறது ஒன்னுமே செய்யாம இருக்கிறது இல்லை. இன்னொரு வேலையை செய்யிறதுதான்' போன்ற நூலெங்கும் கொட்டிக்கிடக்கும் பெண்களின் அனுபவப் பொன்மொழிகள், உங்கள் பல் திறன்களை உலகிற்குக் கொண்டு சேர்க்கும் ரகசியங்களின் திறவுகோல்கள்.


'நான் இல்லாவிட்டால் இவ்வேலை என்ன ஆகும்' என்ற எண்ணத்திலிருந்து, வேலைகளைச் சரியான நபரை அடையாளம் கண்டு பகிர்ந்தளித்து, அவரவர் பொறுப்புகளை உணரச் செய்யும் உத்திகளில் தேர்ச்சியடைந்து, தனக்கான நேரத்தை உருவாக்கி பல் திறன்களை வெளிப்படுத்தும் ரகசியத்தை அறிந்துகொண்டால், எல்லா நாட்களும் உங்களுக்கு மகளிர் தினம்தான்.


'என்னுடைய அடுத்த ஒருமாதத்துக்கான வேலைகளை என் டைரி சொல்லும். அன்றன்றைக்கான வேலைகளை என் இருக்கைக்கு எதிர்ல இருக்கிற கரும்பலகை சொல்லும்' என்கிறார் தானம் மக்கள் கல்வி நிலையத்தின் இயக்குனர் திரு சாந்தி மதுரேசன் அவர்கள்.


தொழில்நுட்ப யுகத்தில் இவை அனைத்தையும் கைப்பேசியிலேயே திட்டமிடும் செயலிகள் இருக்க அவற்றை உபையோகிக்க மற்றும் கற்றுக்கொண்டால் உங்கள் வல்லமை பெருகுவது உறுதி.


'வீட்டில் எங்களின் எந்த பொருள் காணாமல் போனாலும் அதை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்கும் திறமை சாலிகளான  உங்களுக்கு நேர நிர்வாகம், இட நிர்வாகம் குறித்து புதிதாக என்ன இந்நூல் சொல்லப்போகிறது' என்ற கேள்வியோடுதான் நான் இந்நூலை அணுகினேன்.


பெரும் ஆளுமைகளின் அனுபவங்கள் மூலம், இல்லத்தரசிகளில் பலரை தேசத்தையே ஆளும் தலைவிகளாக மாற்றும் வல்லமை கொண்ட இப்புத்தகத்தை வாசித்து மகிழ இச்சுட்டியைத் தொடருங்கள்.


கால விலாசம்: சாதனைப் பெண்களின் நேர நிர்வாகம் (Tamil Edition) eBook: ., வெ.நீலகண்டன், V, Neelakandan: Amazon.in: Kindle Store


நட்புடன்,இரா. அரவிந்த்


*****


என்ன நண்பர்களே, நண்பர் அரவிந்த் அவர்களின் மின்னூல் விமர்சனம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப்  பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


26 கருத்துகள்:

 1. மகளிர் தினத்துக்குப் பொருத்தமான பதிவு, விமர்சனம்.  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
   வாசகம் அருமை வெங்கட் சார்.
   பெண்கள் உண்மையிலேயே செய்து முடிப்பவர்கள்தான்.
   நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 2. உண்மைதான். பெண்கள் சாதிப்பவர்களே! நேர நிர்வாகம் என்பதும் முக்கியம். இங்கு குறிப்பிடப்பட்ட பெண்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். மேன்மேலும் சாதிக்கவும் பிரார்த்தனைகள். மின்னூல் விமரிசனம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி Geetha Sambasivam மேடம்.
   நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 3. நேர நிர்வாகம் இல்லாவிட்டால், வேலைகள் நஷ்டப்படும். அருமையான
  விமரிசனம். வாழ்த்துகளைச் சொல்லுங்கள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
   நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  அருமையான விமர்சனம். அதுவும் இன்றைய நாளுக்கான பொருத்தமான நூல் விமர்சனம். கால விலாசம் என்ற புத்தகத்தின் தலைப்பே மனதை ஈர்க்கிறது.

  நேரத்தை சரியாக உபயோகப்படுத்தி அதை சரியானபடி நிர்வாகம் செய்யும் பெண்களால்தான் சாதனை படைக்க முடியும். இந்நூலில் அவ்வாறு சாதனைகள் செய்ததாக அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்கள் சம்பந்தபட்ட இந்நூலை எழுதிய ஆசிரியர் வெ. நீலகண்டன் அவர்களுக்கும், அதை அருமையாக விமர்சனம் செய்த சகோதரர் இரா. அரவிந்த் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். சிறப்பான பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.
   நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.
   நேர நிர்வாகம் ஒரு கலை தான், பெண்களுக்கு இயற்கையாய் அமைந்த ஒன்று அது.

   நீக்கு
 5. மகளிர் தினத்தில் அருமையான மின் புத்தக விமர்சனம்.

  //தனக்கான நேரத்தை உருவாக்கி பல் திறன்களை வெளிப்படுத்தும் ரகசியத்தை அறிந்துகொண்டால், எல்லா நாட்களும் உங்களுக்கு மகளிர் தினம்தான்.//

  உண்மைதான்.

  அரவிந்த் நன்றாக விமர்சனம்செய்து இருக்கிறார்.

  மகளிர்தின வாழ்த்துக்கள்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.
   நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 6. இன்றைய நிலைக்கு தகுந்த நூல் விமர்சனம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய நிலைக்கு பொருந்தும் விமர்சனம்தான் கில்லர்ஜி சார்.
   தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 7. உங்கள் வீட்டு பிரபலங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்.
   தங்களின் வீட்டார் அணைவருக்கும் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்.

   நீக்கு
 8. இன்றைய சிறப்பான தினத்திற்கேற்ப நல்லதொரு விமர்சனம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
   நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 9. அவசியம் வாசிக்க வேண்டிய நூல். சிறப்பான விமர்சனம். இன்றைய தினத்திற்குப் பொருத்தமானதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்.
   நூலை முடியும்போது வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 10. மகளிர் தினத்துக்கு பொருத்தமான விமர்சனம். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி Nagendra Bharathi சார்.

   நீக்கு
 11. மகளிர் தினத்திற்குப் பொருத்தமாய்...

  பதிலளிநீக்கு
 12. மகளிர் தினத்தில் மகளிருக்கான...அனைவருக்குமான அருமையான நூலை..அருமையாகப் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..அவசியம் படித்து விடுவேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சார்.
   நூலை முடியும்போது வாசித்து மகிழுங்கள்.

   நீக்கு
 13. வணக்கம். விமர்சனம் காத்திரமாக இருக்கிறது. விரிவாகவும் செய்திருக்கிறீர்கள். பேரன்பும் நன்றியும் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி வே. நீலகண்டன் ஐய்யா.
   தங்களின் பிற நூல்களையும் வாசித்து விரைவில் கருத்துக்களை பகிர்கிறோம்.
   தங்களிடமிருந்து மேலும் பல நல்ல படைப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....