செவ்வாய், 30 மார்ச், 2021

கதம்பம் - தண்ணீர் தினம் - ரங்கன் - ஓவியம் - பிறந்தநாள் - அரிசி வடாம் - கீ ஹோல்டர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LIFE IS GOOD, MAKE IT BEAUTIFUL.  FIGHT WITH YOUR STRENGTH, BUT NOT WITH OTHER’S WEAKNESS! BECAUSE TRUE SUCCESS LIES IN YOUR EFFORTS, NOT IN OTHERS DEFEATS.


******உலக தண்ணீர் தினம் - 22 மார்ச் 2021: 

தங்கத்தை விட விலை மதிப்பானது தண்ணீர் என்பது சொல்வழக்கு! நவீன யுகத்தில் தண்ணீரின் உபயோகம் அதிகம் தான். முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்வோம்! இருக்கும் நீர்நிலைகளை மாசடையாமல் பாதுகாப்போம்! அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சொத்தாக வைத்து விட்டு செல்வதை உறுதியாக மனதில் வைப்போம்!  தண்ணீர் சிக்கனம்! தேவை இக்கணம்!


ரங்கனின் தரிசனம் - 22 மார்ச் 2021:


நேற்றைக்கு இரவு 10:30 மணியளவில் எங்கள் அபார்ட்மெண்ட் வாசலில் ரங்கனின் தரிசனம் கிடைக்கப் பெற்றது. ஒரு நிமிடம் தான்! கொரோனா கிருமி உலகத்தை விட்டு போகணும் என்று தான் பிரார்த்திக்கத் தோன்றியது! வேற எதுவுமே தோன்றவில்லை..


கூடவே வரும் மக்கள் வெள்ளத்தைப் பார்க்கையில் பக்தி தான் நம் பாரத தேசத்தின் வலிமை என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாகிறது. நல்லதே நடக்கட்டும்!


காத்திருந்த நேரத்தில் அண்டை வீட்டாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வெளியே சென்று அரட்டை அடிக்கும் பழக்கம் எனக்கு  இல்லாததால், இப்படி பார்க்கும் சந்தர்ப்பங்களில் தான் பேசிக் கொண்டிருப்பேன்.


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 24 மார்ச் 2021:

மகள் சமீபத்தில் colours of India என்ற தலைப்பிற்காக வீட்டில் வரைந்து பார்த்த ஓவியம்! JSW paints Future scapes & The Hindu young world சேர்ந்து நடத்திய Painting competitionல் பங்கேற்பதற்காக.


செகண்ட் இன்னிங்க்ஸ் - 25 மார்ச் 2021:


மருதாணியால் சிவந்த கைகள், கோவிலில் அர்ச்சனை, அம்மா கையால் குலாப்ஜாமூன், அக்கம் பக்கத்தினருக்கும் தோழிகளுக்கும் சாக்லேட் விநியோகம், சில வருடங்கள் அன்றைய நாளில் என் கையால் இல்லாதோருக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம் என்று இருந்தது அன்றைய நாட்கள்!!!


அலைபேசியில், குறுஞ்செய்தியில், முகநூலில், வாட்ஸப்பில் என வாழ்த்து மழை!!  'நமக்கு நாமே' என்ன இனிப்பு செய்து கொண்டாடுவது என்று தவிர்க்கப்பட்டது..🙂 புத்தாடைகள் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கலாம் என்பதால் அதை உடுத்துவதில் ஈர்ப்பும் பெரிதாக இருப்பதில்லை..🙂 யாராவது ஒருநாள் ரெஸ்ட் கொடுக்க மாட்டார்களா என்பதே இன்றைய நாளுக்கான ஏக்கமாக மாறியது! இப்படியாக இருக்கின்றன இன்றைய நாள் கொண்டாட்டங்கள்!!


வருடங்கள் உருண்டோடிக் கொண்டே தான் இருக்கின்றன. கேசத்தில் ஆங்காங்கே தென்படும் வெள்ளிக் கம்பிகளையும், வயதையும் மறைத்துக் கொள்வதில் எனக்கு  உடன்பாடில்லை...🙂 மனம் பக்குவப்பட வேண்டும்! தாமரை இலைத் தண்ணீராய் மாற வேண்டும்..!! எதிர்பார்ப்பே வைத்துக் கொள்ளாத  மனம் வேண்டும்! நிதானம் வேண்டும்!


இன்றைய நாளில் வாழ்த்திய, வாழ்த்திக் கொண்டிருக்கிற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் வாழ்த்துகளால் இன்றைய நாள் சிறப்பானது!


அரிசி வடாம் - காணொளி - 27 மார்ச் 2021:

கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டது. வேர்க்குரு, உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் என வெயிலின் தாக்கத்தால் வரும் இடையூறுகள் துவங்கி விட்டன.


இந்த சமயத்தில் தாகத்தைத் தணிக்க நீர்மோர், இளநீர், பானகம், பழச்சாறு, நன்னாரி சர்பத்  என்று பருகலாம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் இதையே கொடுக்கலாம். பாட்டிலில் அடைத்து விற்கும் குளிர்பானங்களை தவிர்க்கலாம்.


அடிக்கின்ற வெயிலை வீணாக்காமல் வத்தல், வடாம் செய்து வைத்துக் கொள்ளலாம்.. காலையில் வெயிலுக்கு முன்பே சென்று காயவைத்து விட்டால் மாலை வரை காய்ந்து கொண்டிருக்கும்..காய்கறி இல்லாத நாட்களிலோ, மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவும் பயன்படுத்திக்கலாம்.


இன்று Adhi's kitchen சேனலில் சம்மர் ஸ்பெஷலாக  'அரிசி வடாம்' செய்முறை பகிர்ந்துள்ளேன். இது வடாம் சீரீஸ்ஸில் இரண்டாவது செய்முறை.. மிகவும் எளிதானது தான். பொதுவாக என் அம்மாவும் சரி, மாமியாரும் சரி மிஷினில் அரைத்து வந்த உதிரி மாவில் தான் செய்வார்கள். அப்படிச் செய்யும் போது அதில் மாவு கட்டி தட்டும் வாய்ப்புகள் அதிகம்..பின்பு அதையெல்லாம் எடுத்து விட்டோ இழுத்து பிசைந்தோ தான் பிழிய வேண்டியிருக்கும். கைகளும் மிளகாய் காரத்தால் எரியும்! தெரிந்த ஒருவரிடமிருந்து எளிதான வழியை கற்றுக் கொண்டேன். அந்த முறையைத் தான் சில வருடங்களாக பின்பற்றி வருகிறேன். அந்த முறையை வீடியோவில் செய்து காண்பித்திருக்கிறேன்.


அரிசி வடாம்


ரோஷ்ணி கார்னர் - காணொளி - Key Holder - 27 மார்ச் 2021:


மகளின் சேனலிலும் இன்று வீடியோ பகிர்ந்திருக்கிறாள்..வீட்டிலேயே செய்யும் சாவி ஹோல்டர்.


Key Holder


இரண்டு வீடியோக்களையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

 1. பல்சுவைக் கதம்பம்.  பிறந்தநாள் எண்ணங்கள் நன்று.  ரோஷ்ணியின் ஓவியம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அருமையான வாசகம். ரங்கன் தரிசனம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி. இங்கே வாசலோடு போயும் அசடு மாதிரிப் பார்க்கவே இல்லை. ரங்கனாய் வரட்டும். பார்ப்போம். ரோஷ்ணி வர வர அசத்துகிறாள். குழந்தைக்கு திருஷ்டிப் படாமல் இருக்கணும். நான் இப்போதெல்லாம் வடாம் போடுவதையே நிறுத்திட்டேன். முடியலை என்பதோடு ஒரு சிலருக்குத் தட்டோடு/காய வைத்த துணியோடு திருட்டுப் போகிறது. எனக்கும் முன்னர் ஒரு முறை வெங்காய வடாம் திருட்டுப் போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   திருட்டுப் போகும் வடாம் - அடடா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. முகநூலிலும் எல்லாவற்றையும் பார்த்தேன். ரசித்தேன். மீண்டும் இங்கேயும். வாழ்த்துகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலிலும் இங்கேயும் பார்த்து ரசித்தமைக்கு நன்றி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஆம் தண்ணீர் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்ல வேண்டும்.

  ஓவியம் அருமை ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

  கதம்பச்செய்திகள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அன்பு வெங்கட்,
  கதம்பம் மிக நன்று. ஆதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தாமதாகச் சொல்கிறேன்.
  நல்ல பெண். என்றும் வளமாக இருக்க வேண்டும்.

  திருச்சி வெய்யிலை அனுபவித்த தாக்கம் இன்னும் என்னிடம்.
  அன்பு ஆதி சமாளித்து வடாமும் போட்டிருப்பதில் மிக மிக மகிழ்ச்சி.
  பத்திரமாக இருக்கச் சொல்லுங்கள்.
  சீக்கிரமே கொப்பளங்கள் குணமாக வேண்டும்.

  குழந்தை ரோஷ்ணியின் ஓவியம் மிக மிக சிறப்பு.
  நல்ல கற்பனை வளம்.
  அதிகமாக முக நூல் பக்கம் போகாததால்
  பார்க்கவில்லை.

  உலக தண்ணீர் தினம் மிக மிக முக்கியம். நீர் வளம் நிறைய வேண்டும்.
  குடும்பம் செழிக்க என் ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா.

   கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கதம்பம் பிடித்திருந்தது. தாமதமான வருகை.

  பெண்ணுடைய ஓவியத்தில் நிறைய improvements தெரிகின்றன. அவள் போட்டிருக்கும் காஷ்மீர் பகுதியை ரசித்தேன். பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். மென் மேலும் உயரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரி

  இன்றைய கதம்பம் அருமை. நான்தான் சற்று தாமதமாக வருகை தந்துள்ளேன்.

  உலக தண்ணீர் தனத்தில் தண்ணீர் சிக்கனம் பற்றிய கருத்து அருமை.

  தங்கள் மகள் ரோஷ்ணியின் ஓவியம் அவ்வளவு அழகாக உள்ளது. குழந்தை ரோஷ்ணிக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  பிறந்த நாள் பற்றிய உங்கள் கருத்துக்களை ரசித்தேன். தங்கள் பிறந்த நாளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் என்றும் நலமுடன் இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

  வெய்யில் காலத்தில் மழை காலத்திற்கு தேவையானவையான வடாம், வத்தல் போன்றவைகளுக்காக உழைக்கும் உங்களின் செயல் சிறந்தது. பாராட்டுக்கள். பகிர்ந்த அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. கதம்பம் அருமை.

  //ரங்கனின் தரிசனம் கிடைக்கப் பெற்றது. ஒரு நிமிடம் தான்! கொரோனா கிருமி உலகத்தை விட்டு போகணும் என்று தான் பிரார்த்திக்கத் தோன்றியது! வேற எதுவுமே தோன்றவில்லை..//

  நல்ல பிரார்த்தனை.
  ரோஷ்ணி ஓவியம் அருமை. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. நல்ல பகிர்வு. எல்லோரும் water is preciousன்னு சொல்வதோடு சரி அதை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது இல்லை.
  ஓவியம் அருமை ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். Keep going. All the best
  Vijay
  Delhi

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜயராகவன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. எங்கேயோ படித்தது போல் இருக்கிறது என யோசித்தேன். :) முக நூலில் தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூல் இற்றைகள் இங்கே ஒரு தொகுப்பாக!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில் சகோ.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....