வியாழன், 18 மார்ச், 2021

சாப்பிட வாங்க - Bபகோசா - உத்திரப் பிரதேசத்திலிருந்து...அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தில்லி உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LUXURY AND LIES HAVE HUGE MAINTENANCE COSTS. BUT…. TRUTH AND SIMPLICITY ARE SELF MAINTAINED WITHOUT ANY COST.


******சற்றே இடைவெளிக்குப் பிறகு ஒரு சாப்பிட வாங்க பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  இந்த நாளில் நான் பகிர்ந்து கொள்ளப் போகும் உணவின் பெயர் Bபகோசா என்பதாகும்!  பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் உணவு இது!  இந்தியாவின் உத்திரப் பிரதேசம் பகுதிகளில் இந்த உணவு பிரபலம்.  இந்த உணவுக்கான வேலை அதிகம் என்பதால், தற்போது யாரும் மெனக்கெட்டு பெரும்பாலும் செய்வதில்லை.  அலுவலக நண்பர் ஒருவர் உணவுப் பொருட்களை விதம் விதமாகச் சமைப்பதில் ஆர்வம் உள்ளவர் - தனியாக இருந்தாலும் அவ்வப்போது அவர்களது ஊர் பாரம்பரிய உணவுகளைச் செய்து, தான் சாப்பிடுவதோடு, அலுவலகத்திற்குக் கொண்டு வந்து தருவார்.  அப்படி ஒரு நாள் கொண்டு வந்த போது, படம் எடுத்துக் கொண்டதோடு, அவரிடமே இந்த உணவிற்கான செய்முறையும் கேட்டுக் கொண்டேன் - இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் - நான் இதுவரை இந்த உணவை செய்ய முயற்சிக்கவில்லை!  சுவைத்ததோடு சரி. Bபகோசா செய்ய என்ன பொருட்கள் தேவை, எப்படிச் செய்ய வேண்டும் போன்ற தகவல்களைப் பார்க்கலாம்! 


தேவையான பொருட்கள்:


கடலைப் பருப்பு - ½ கப் (ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்)

கருப்பு உளுந்து - ½ கப் (ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்)

சீரகம் - 2 ஸ்பூன்

தனியா பொடி - ½ ஸ்பூன்

மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்

இஞ்சி - 1 இஞ்ச் துண்டு

பெருங்காயத் தூள் - ¼ ஸ்பூன்

சோம்பு - 2 ஸ்பூன் (தேவையெனில்!)

மிளகாய்த் தூள் - தேவையான அளவு

Gகரம் மசாலா தூள் - ½ ஸ்பூன்

கொத்தமல்லி விதைகள் - ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கோதுமை மாவு - ஒன்றரை கப்

சமையல் எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - பொடியாக நறுக்கியது ஒரு கப்

பச்சை மிளகாய் - 1


யம்மாடி லிஸ்ட் பெரிசா இருக்கே! சரி இந்தப் பொருட்களை வைத்து Bபகோசா எப்படிச் செய்ய வேண்டும் என்று பார்க்கலாமா?


எப்படிச் செய்யணும் மாமு?


கடலைப் பருப்பு மற்றும் கருப்பு உளுந்து ஆகிய இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 


ஒரு பெரிய கிண்ணத்தில் வடி கட்டி வைத்திருக்கும் கடலைப்பருப்பு மற்றும் கருப்பு உளுந்தைச் சேர்க்கவும். அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி விதைகள், சீரகம், இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து, அவற்றை கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும் - மைய அரைக்க வேண்டிய அவசியமில்லை.  அரைத்ததை ஒரு கிண்ணத்தில் போட்டு, பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து வைத்துவிடலாம்! உப்பு இப்போது சேர்க்கத் தேவையில்லை. இதற்கான வேலை இப்போதைக்கு இல்லை!


அடுத்து ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு எடுத்துக் கொண்டு சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.  கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.  மிருதுவாக பிசைந்து வைத்து, பத்து நிமிடங்கள் விட்டு விடுங்கள் - அதற்குள் வேறு வேலை ஒன்றைச் செய்யலாம்! என்ன வேலை - உங்கள் இஷ்டம் தானே!


பிசைந்து வைத்த மாவினை எடுத்து சிறு உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளுங்கள்.  எல்லா உருண்டைகளையும் சப்பாத்திகளாக இட்டுக் கொண்ட பிறகு, அரைத்து வைத்திருக்கும் பருப்புக்   கலவையை எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கலக்கிக் கொள்ளுங்கள்.  முதலில் உப்பு சேர்த்தால் கலவை நீர்த்து விடக்கூடும். 


இட்டு வைத்திருக்கும் சப்பாத்தியில் பருப்புக் கலவையை,  ஒன்றிரண்டு ஸ்பூன்கள் நீள வடிவில் சேர்த்து, சப்பாத்தியை, நீள வாக்கில் மடித்து, ஓரங்களை, கைவிரல்களை நனைத்துக் கொண்டு ஒட்டி விடுங்கள்.  எல்லாச் சப்பாத்திகளிலும் இருக்கும் பருப்புக் கலவையைச் சேர்த்து, மேலே சொன்னது போல செய்து, ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.  


பிறகு ஒரு பெரிய வாணலியில் தண்ணீர் வைத்து சூடாக்குங்கள்.  கொதிநிலைக்கு வந்ததும், மடித்து வைத்திருக்கும் சப்பாத்தி ரோல்களை கைகளில் சுடு தண்ணீர் தெறித்து விடாதபடி சேருங்கள்.  கைகள் பத்திரம்! ரோல்கள் நன்கு வெந்து மிதக்க ஆரம்பிக்கும் போது அவற்றை எடுத்து துளையுள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீரை சுத்தமாக வடிகட்டி விடுங்கள்.  


சற்றே ஆறிய பிறகு கத்தி கொண்டு, அந்த சப்பாத்தி ரோல்களை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  


ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு, சூடானதும், பெருங்காயம், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், Gகரம் மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு (தேவையான அளவு) உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தி ரோல் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டவும்.  மேலே பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை நிறுத்தி விடவும்.  


இந்த Bபகோசா தக்காளி சட்னி, புதினா சட்னி போன்றவற்றுடன் அல்லது தக்காளி/மிளகாய் Sauce உடனோ தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்!  நல்லதொரு சுவை.  நம் ஊரில் பருப்புக் கொழுக்கட்டை செய்வது போல இருந்தாலும், இதில் இருக்கும் செய்முறை வேறுபட்டு இருக்கிறது.


நான் இரண்டையும் சுவைத்திருக்கிறேன் - நீங்களும் இந்த Bபகோசா செய்து சுவைத்துப் பாருங்களேன்.  நண்பர்களே, இந்தப் பதிவில் பகிர்ந்து கொண்ட உணவு வகை உங்களுக்கும் புதியதாக இருக்கும் என நம்புகிறேன்.  பதிவு/உணவு குறித்த உங்களுடைய எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  நாளை வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


24 கருத்துகள்:

 1. மோதகம் என்பார்களே அந்த வகை போல இருந்தாலும் வித்தியாசமாய்தான் இருக்கிறது.   செய்து பார்க்கலாம் ஒருமுறை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தியாசம் தான் - முடிந்த போது, வீட்டில் செய்து பாருங்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வித்தியாசமான சமையல் குறிப்பு நேரம் கிடைத்தால் செய்து பார்க்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரம் கிடைத்தால் செய்து பாருங்கள் மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. புகைப்படமே ஆசையை தூண்டுகிறது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையும் நன்றாகவே இருந்தது கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. வித்தியாசமான சமையல் குறிப்பு. ஏற்கனவே சுவைக்கவேண்டியது நிறைய பெண்டிங்கில் இருப்பதால் இதனைச் செய்து பார்ப்பது சந்தேகம். இருந்தாலும் புதிய குறிப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கனவே சுவைக்க வேண்டியது நிறைய பெண்டிங்! :)) முடிந்த போது ஒவ்வொன்றாக சுவைத்து விடுங்கள் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வாசகம் உண்மை. சமையல் பதார்த்தத்தின் பெயரும் நன்றாக உள்ளது. வித்தியாசமான இந்த சமையல் குறிப்புகளும் நன்றாக உள்ளது. செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும் போலிருக்கிறது. ஆனாலும், இந்த மாதிரி ஒரு தடவை கண்டிப்பாக செய்யலாம். சுவையாக இருக்குமென தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவும், வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. முடிந்த போது ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. படத்தைப் பார்த்தவுடன் ஒரு நொடி வேக வைத்த நிலக்கடலை என்று நினைத்து விட்டேன்...

  எளிதான குறிப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேகவைத்த நிலக்கடலை - :) குறிப்பு எளிது! வேலை கொஞ்சம் அதிகம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. ரொம்ப நாட்களுக்கு பின் நம்ம ஏரியா சாப்பாடு பதிவு.
  மகிழ்ச்சி சார், செய்து பாப்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது செய்து, சுவைத்துப் பாருங்கள் அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. பூரண கொழுகட்டை போல் இருக்கு. இதை ஆவியில் வேகவைக்க கூடாதா?
  சரியாக ஒட்ட வில்லை என்றால் பிரிந்து தண்ணீரில் போய் விடும் போலவே!

  என் மருமகள் எண்ணெய்யில் பொரித்து எடுப்பாள். அரிசியும் மைதாவும் கலந்து பிசைந்து செய்த அப்பளத்தில் நடுவில் பூரணகலவையை வைத்து செய்வாள்.

  சாரின் ஆச்சி வறுத்து அரைத்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து சின்ன சின்ன துண்டாக வெட்டி இப்படி கொதிக்கும் தண்ணீருக்குள் போட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு தேங்காய் சீனி போட்டு இனிப்பும், வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளி அரைத்து போட்டு தாளித்த காரமும் தருவார்கள் நன்றாக இருக்கும்.

  சப்பத்திக்கள் வெந்த தண்ணீரில் வெல்லம் ஏலக்காய், தேங்காய்பூ போட்டு குடிக்க கொடுப்பார்கள் மிக ருசியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூரண கொழுக்கட்டை போல் இருக்கு! ஆமாம் கோமதிம்மா.

   குக்கரில் தண்ணீரில் போட்டு ஒரு விசில் விட்டும் வேக வைக்கிறார்கள். நம் ஊர் போல இட்லி இங்கே வழக்கம் இல்லை என்பதால் இப்படிச் செய்கிறார்கள் போலும்!

   உங்கள் அனுபவங்களையும் சொன்னதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. சாப்பிட வாங்கோ என்றதைப் பார்த்ததும் ஓடிவந்தேன்.. பந்திக்கு முந்துவது எங்கட பழக்கம் ஹா ஹா ஹா.

  கொழுக்கட்டை, மோதகம் போல இது ஸ்பைசி கொழுக்கட்டை எனச் சொல்லலாம்:)).. அதென்ன அந்த ஊர்ப் பெயர் கள் எல்லாம் B இலேயே ஆரம்பிக்குதே.. முன்பும் ஒன்று போட்டீங்கள், நான் கூட செய்து என்பக்கம் போட்டேனே.. தயிர் புடிங்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பந்திக்கு முந்துவது எங்கட பழக்கம் - ஹாஹா... பலரின் பழக்கமும் அது தான் அதிரா.

   ஸ்பைசி கொழுக்கட்டை - அப்படியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அன்பு வெங்கட் ,இனிய காலை வணக்கம்.

  இன்றைய செய்முறை பகோசா மிக நன்றாக இருக்கிறது.

  கொஞ்சமே நீளமான நேரம் எடுக்கும். நல்ல உழைப்பு தேவை இல்லையா.
  கருப்பு உளுந்து உடலுக்கு மிக நல்லது.
  தெம்பு கொடுக்கும்.

  நன்றாக விளக்கி இருக்கிறீர்கள் தெளிவாகவும் இருக்கிறது.
  நான் இதே போல குஜராத்தி செய்முறை.
  ஆனால் எண்ணெயில் பொரிக்க வேண்டும்.
  நல்லதொரு செய்முறைக்கு மிக நன்றிமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா.

   செய்முறை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கொஞ்சம் நேரம் எடுக்கும் சமையல் தான் மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. நானும் குஜராத், மஹாராஷ்ட்ராவில் எண்ணெயில் பொரித்துப் பார்த்திருக்கேன். குஜராத்தில் சப்பாத்திகளை இட்டுப் பருப்பு தாலில் போட்டுக் கொதிக்கவிட்டுக் கொடுப்பார்கள். விருந்தினருக்கான சிறப்பு உணவு அது. இம்முறை ஒரு தரம் செய்து பார்க்கிறேன். கறுப்பு உளுந்து இல்லை. சாதாரண உளுந்திலேயே செய்து பார்க்கிறேன். கொஞ்சம் கனமான ஆஹாரம். கொஞ்சமாய்ப் பண்ணணும். போன வாரம் மிஸ்ஸி ரொட்டி பண்ணிட்டு ஒன்றுக்கு மேல் சாப்பிட முடியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிஸ்ஸி ரொட்டி - ஒன்றுக்கு மேல் சாப்பிட முடியவில்லை - உண்மை தான். அதிகம் சாப்பிடுவது கடினம் தான் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....