வியாழன், 4 மார்ச், 2021

பதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தில்லி உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Everything becomes beautiful if you start loving it… even loneliness!


தனிமையும் இனிமையே - நீங்கள் அதனை விரும்பிவிட்டால்! என்று சொல்லும் இந்தக் கூற்று உண்மை தான் - நானே உணர்ந்திருக்கிறேன்! :)


******
கடந்த மாதத்தில் எனது பக்கத்தில் ”பதிவுலகம் - நேற்றைய சந்திப்பு”  என்ற தலைப்பில் பதிவர் திரு ரமணி அவர்களுடன் சந்தித்தது  குறித்து எழுதிய போது, ஒரு பிரபல பதிவர் தில்லி வருகிறார் என்று ஸ்ரீராம் எழுதி இருந்தார். யார் அந்த பிரபல பதிவர் என்பதை அவர் சொல்லவில்லை!  பிறகு அவரை தொடர்பு கொண்டபோது தான் தெரிந்தது.  அந்தப் பிரபல பதிவரும் தகவல் அளித்தார்!  அந்தப் பிரபல பதிவர் “தம்பட்டம்” வலைப்பூவில் எழுதி வரும் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்!  அவரது மகன் வழி பெயர்த்திக்கு பெயர் சூட்டும் வைபவத்திற்கு அழைக்கவே சென்ற சனிக்கிழமை அன்று சென்று வைபவத்தில் கலந்து கொண்டு, அவரையும் குடும்பத்தினரையும் சந்தித்து வந்தேன்!  கூடவே மதிய உணவும் அங்கேயே! (ஒரு வேளை சமையலில் இருந்து விடுமுறை! ஹாஹா!).  பெயர் சூட்டும் வைபவத்தில் அவர்களைச் சந்தித்ததோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு, அதே நோய்டாவின் வேறு செக்டரில் இருக்கும் நீண்ட கால நண்பர், சக தில்லி பதிவர் ஒருவரையும் சந்தித்தேன்! 


தில்லி மெட்ரோ பயணம் - நீண்ட இடைவெளிக்குப் பிறகு:

தீநுண்மி காலம் ஆரம்பித்த பிறகிலிருந்தே தில்லி மெட்ரோவில் பயணிக்கவே இல்லை.  சில மாதங்களுக்கு முன்னர் தில்லி மெட்ரோ Services தொடங்கி விட்டாலும் அதில் பயணிக்கவே இல்லை.  மேலே சொன்ன பெயர் சூட்டும் வைபவத்திற்குச் செல்ல தோதானது மெட்ரோ பயணம் தான்.  அதனால் மெட்ரோவில் பயணிக்க இராமகிருஷ்ண ஆஸ்ரமம் மெட்ரோ நிலையத்திற்குச் சென்றபோது மெட்ரோ கார்டில் இருந்த பாக்கித் தொகை (ரூபாய் 04.50  மட்டும்! ஹாஹா)  காரணமாக நுழைவாயில் திறக்க மறுத்தது!  அதில் முன்பணம் போட்டு பிறகு தான் நுழைய முடிந்தது.  என்ன தான் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், தீநுண்மி குறித்த அறிவிப்புகளையும் மெட்ரோ நிறுவனம் கதறிக் கதறிச் சொன்னாலும் மக்கள் கேட்டால் தானே! ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமரச் சொன்னால் பல இருக்கைகளில் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள் - குறிப்பாக ஜோடிகள்! பயணித்தபடியே காதல் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அப்படியே காதலன்/காதலி தன் பக்கத்தில் இல்லாவிட்டால் - அலைபேசி வழி காதல் தொடர்கிறது! 


அதிலும் ஒரு இளம் பெண் ஆளை அடிக்கும் வண்ணத்தில் உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு (அணிந்திருந்த மாஸ்க் கழுத்தில் இருந்தது!) இரண்டு அலைபேசி வழியே இரு நபர்களிடம் மாற்றி மாற்றி வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தார்.  காதல் சிம்பல் காண்பிப்பதும், பறக்கும் முத்தங்கள் அனுப்புவதும் என அவர் தன் உலகத்தில் மூழ்கியிருக்க, மற்ற மெட்ரோ பயணிகள் அவரைக் கவனித்துக் கொண்டே இருந்தார்கள் - சிலருக்கு வயிற்றில் புகை! சிலருக்கு வேடிக்கை - தள்ளியிருந்த ஒரு சிலர் கொஞ்சம் உரக்கவே அப்பெண் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள் - “குசுகுசுன்னு என்னதான் அப்படி பேசுவாங்களோ?” என்று ஒரு மூதாட்டி சொன்னது கேட்டு எனக்கு சிரிப்பு!  அத்தனையும் கவனித்தபடியே என் பயணம் தொடர்ந்தது!  இங்கே யாரும் தங்கள் இஷ்டப்படி இருப்பது கொஞ்சம் கடினம் தான் என்பதை உணர முடிந்தது! 


அக்வா லைன் - நோய்டா மெட்ரோ:

தில்லி மெட்ரோவைப் பார்த்து நோய்டாவிலும் உத்திரப் பிரதேச அரசு அக்வா லைன் என்ற மெட்ரோவினை ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிவிட்டன.  தில்லி மெட்ரோவின் பயண அட்டை நோய்டா மெட்ரோவில் செல்லாது என்பது ஒரு விதத்தில் கடினம் - ஒவ்வொரு முறையும் பயணச் சீட்டு பெற வேண்டியிருக்கிறது.  தில்லி மெட்ரோ அளவு மக்கள் அதிகம் இந்த அக்வா லைன் நோய்டா மெட்ரோவினை பயன்படுத்துவதில்லை என்பதை இதில் பயணிக்கும் போதும், நண்பருடன் பேசும்போதும் தெரிந்து கொள்ள முடிந்தது - ஏனெனில் இதில் கட்டணம் அதிகம் - ஃபட்ஃபட் சேவாக்கள் என அழைக்கப்படும் ஆட்டோக்களில் 10 ரூபாய் கட்டணம் எனில் இந்த மெட்ரோவில் கட்டணம் ரூபாய் 20/-.  இப்பகுதிகளில் பெரும்பாலானவர்கள் ஃபேக்டரிகளில் பணிபுரியும் தொழிலாளிகள் என்பதால் இந்த அக்வா லைன் பயன்படுத்துபவர்கள் குறைவே! 


அடுத்த சந்திப்பு - நண்பர் - பதிவர்:


முதல் பதிவர் சந்திப்பிற்குப் பிறகு அதே நோய்டாவின் வேறு செக்டரில் இருக்கும் நண்பர் வீட்டிற்குச் சென்று அவரையும் குடும்பத்தினரையும் சந்தித்து வந்தேன்.  நண்பர் ஒரு பதிவரும் கூட - அவர் தனது தளத்தில் பதிவுகள் எழுதுவதோடு சரி - வேறு பதிவர்களின் பதிவுகளை வாசிப்பது/கருத்துரைப்பது குறைவு!  பதிவுலகத்திலிருந்து நட்பானவர்கள் பலர் என்றால் இவருடனான நட்பு பதிவுலகத்திற்கு வருவதற்கு முன்பானது!  27 வருட நட்பு எங்களுடையது!  ஒரே வீட்டில் சில வருடங்கள் இருந்திருக்கிறோம்.  அவரது இல்லத்திற்குச் சென்று நீண்ட நேரம் அளவளாவிய பிறகு வீடு திரும்பினேன்!  


தீநுண்மிக்குப் பிறகு சென்ற முதல் நிகழ்ச்சி, முதல் மெட்ரோ பயணம் என சென்ற சனிக்கிழமை முழுவதும் சிறப்பாகக் கழிந்தது!  நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்!  மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


24 கருத்துகள்:

 1. பதிவர்களை சந்தித்தது உங்கள் தனிமையை சற்றே போக்கி இருக்கும்.  தனிமையின் இனிமையிலிருந்து சந்திப்பின் இனிமைக்கு அன்று மாறி இருக்கிறீர்கள்!  நான் சென்னை மெட்ரோவில் ஒரே ஒருமுறை பயணித்திருக்கிறேன்!  மெட்ரோவில் பயணிகள் பற்றிய விவரணம் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிமை குறித்த உங்கள் எண்ணங்கள் நன்று! மெட்ரோ நிறைய பயணித்திருக்கிறேன் - தில்லியில் மெட்ரோ ஒரு வரப்பிரசாதம். சென்னையில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்பது சோகம்.

   தில்லி மெட்ரோ உலா வந்தால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சனிக்கிழமை, பயணம், சந்திப்பு, ஒரு வேளை உணவு தயாரிப்பிலிருந்து விடுதலை என நீங்கள் enjoy செய்தது மகிழ்ச்சி. ஜூலையில் நீங்கள் பெங்களூர் வரவில்லை. அடுத்து வரும்போது சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜூலை பயணம் தடைபட்டது நெல்லைத் தமிழன் - தீநுண்மியால். அந்த டிக்கெட் இந்த மார்ச் வரை பயணிக்கும்படி இருக்கிறது - ஆனாலும் அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது கடினம் - பாராளுமன்றக் கூட்டம் ஆரம்பிக்கிறது - வரும் திங்கள் அன்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.

  மிக அருமையான சந்திப்புகளுடன் மெட்ரோ பயணமும்
  அமைந்தது இனிமை.

  தங்கள் நண்பர் பதிவையும் சென்று படித்தேன்.
  அருமையாகக் கவிதைகள் எழுதி இருக்கிறார்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் வல்லிம்மா.

   சந்திப்புகள் மகிழ்ச்சி தந்தன - மெட்ரோ பயணமும்.

   கவிதைகள் தவிர வேறு சில பதிவுகளும் அத்தளத்தில் உண்டு வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. தனிமை இனிமை தரும்''
  இது உண்மைதான். யாருடனும் பேசாமல்
  நான் கடந்து வரும் காலைத் தனிமைகள்
  ஒரு சுதந்திரம் கொடுக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருடனும் பேசாமல் கடந்து வரும் காலைத் தனிமைகள் சுதந்திரம் கொடுக்கின்றன - உண்மை தான் வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. காலம் கடந்ததாலோ என்னவோ
  எனக்கும் மெரினாவில் காதலர்களை அந்த வெய்யில் வேளையில் காண்பது அதிசயமாக இருக்கும். அவர்கள் உலகம் தனி:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிய வேளையில் மெரினாவில் காதலர்கள் - :) கொடுமை - கடுமையான வெய்யிலில் எப்படி அங்கே அமர்ந்திருக்க முடிகிறதோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 6. நண்பர் எந்தப் பதிவுக்கும் வருவதில்லை. கருத்துப் பதிவதில்லை
  என்பது புதுமை இல்லை. நானும் இப்போது பல பதிவுகளுக்குப்
  போக முடிவதில்லை.
  என் திருப்திக்காக நானும் காணொளிகளைப்
  பதிகிறேன். எல்லோருக்கும் அதைப் பார்க்க நேரம் இருக்குமா:)
  எழுத முடிந்த போது எழுதப் போகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு செல்ல முடியாமல் இருப்பதும் அவ்வப்போது நடக்கிறது. பணிச்சுமை! முடிந்த போது விடுபட்ட பதிவுகளை படித்து விடுகிறேன். உங்கள் பதிவுகளும் தொடரட்டும். முடிந்தபோது படியுங்கள் மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சந்திப்பு மகிழ்ச்சி...

  மெட்ரோ பயணத்தில் சினிமா பார்த்ததும் மகிழ்ச்சி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெட்ரோ பயணத்தில் சினிமா - ஹாஹா... கண்ணெதிரே இப்படி நிறைய காட்சிகள் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. இனிது இனிது ஏகாந்தம் இனிது என்ற ஔவையாரின் சொல்படி தனிமையும் ஒருவகை இனிமைதான்.

  தங்களின் பதிவர்கள் சந்திப்பும், நீண்ட இடைவெளிக்குப் பின் மெட்ரோவில் பயணித்த இனிமையும் தங்களுக்கு அன்றைய தினம் மகிழ்வை தந்தது குறித்து மிக்க சந்தோஷம். சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் பதிவில் தாங்கள் அவர்கள் வீட்டு விஷேடத்திற்காக வந்திருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தை அறிந்தும் மகிழ்வுற்றேன்.

  தில்லி வரும் பதிவர்களை தவறாது உங்களுடைய கடுமையான பனிச்சுமைகளுக்கு நடுவே சென்று பார்த்து,அளவளாவி அவர்கள் மனம் மகிழும் வண்ணம் செய்யும் உங்களது நல்ல மனதிற்கு பாராட்டுக்கள். அதுவே அவர்களுக்கும் உங்களுக்கும் மனதிற்கு ஒரு உற்சாகம் தரும் என்பது உறுதி.

  உங்கள் நண்பரின் பதிவுக்கும் சென்று படிக்க முயல்கிறேன். அனைத்து தகவல்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. மகிழ்ச்சியான நிகழ்வுகள் ...தொடரட்டும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சியான நிகழ்வுகள் தொடரட்டும் - டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 10. சந்திப்பு மகிழ்வு
  சென்னையில் மெட்ரோவில் ஒருமுறை பயணித்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை மெட்ரோவில் நான் பயணித்ததில்லை கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. இனிய சந்திப்புகள், மீண்டும் மெட்ரோ பயணம்.. வாழ்த்துகள்! பயண அனுபவம்.. சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 12. பதிவர் சந்திப்புக்கு மகிழ்ச்சி. மெட்ரோக்களில் பயணிக்க வாய்ப்பே கிடைத்தது இல்லை. இனியும் கிடைக்குமா சந்தேகமே! தில்லி மெட்ரோவின் வசதிகள் பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை மெட்ரோவில் பயணிக்கலாமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....