திங்கள், 5 ஏப்ரல், 2021

ஒரு மின்னூல் - பூதம் காக்கும் புதையல் - இரு விமர்சனம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நம்முடைய சொற்கள் பிறருடைய இதயத்தில் விதையாக விழ வேண்டும்… விஷமாக இறங்கக் கூடாது; பூவாக உதிர வேண்டும்… முள்ளாகக் கிழிக்கக் கூடாது.


******







இந்த நாளில் நாம் பார்க்கப் போகும் மின்னூல் - பூதம் காக்கும் புதையல் என்ற மின்னூல்.  ஞா. கலையரசி அவர்கள் எழுதிய சிறுவர்களுக்கான நூல்.  நூல் குறித்த தகவல்கள் கீழே! தகவல்களுக்குப் பிறகு இந்த நூலுக்கு எனது இல்லத்தரசி எழுதிய வாசிப்பனுபவம் - அதனைத் தொடர்ந்து எனது வாசிப்பனுபவம்!  வாருங்களேன் படித்துப் பார்க்கலாம்!


வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 56

விலை: ரூபாய் 50


வாசிப்பனுபவம் - 1 - ஆதி வெங்கட்:


ஆதவன், கவின், இனியன், கதிர், வேலு என்று இந்த ஐந்து சிறுவர்களும் ஆகாய கோட்டையில் உள்ள புதையலைத் தேடிச் செல்கின்றனர்.


இந்தப் புதையலை ஒரு பூதம் காத்து வருவதாகவும், அதைத் தேடிச் செல்வோர் பலியாவார்கள் என்றும்  சொல்லப்படுகிறது.. அதையும் மீறி இந்த பயணத்தை மேற்கொள்ளும் இந்த சிறுவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் தான் கதை..


ஆடு மேய்க்கும் சிறுவனான வேலு பள்ளி மாணவர்களான இவர்களை வழிநடத்திச் செல்கிறான்..வேலுவின் இயற்கையை குறித்த விஷயங்களும், கவினின் தமிழார்வமும், ஆதவனின் பலமும் என ஒவ்வொருவரின் பங்கும் சேர்ந்து இந்த புதையலைப் பெற்று தந்ததா என்பது தான் கதை.


செல்லும் வழியெங்கும் கிடைக்கும் குறிப்புகள், அதை சிறுவர்கள் யோசித்து செயல்படும் விதம், நுணுக்கமான அதேசமயம் ஆச்சரியம் தரும் விஷயங்கள், திடுக்கிடும் சம்பவங்கள் என கதை முழுவதும் சுவாரஸ்யம்.


சிறுவர் கதை என்று சொன்னாலும் பெரியோர்களும் வாசிக்கலாம்..நிச்சயம்  விறுவிறுப்பைத் தருகிறது இந்தக் கதை.


இது போன்ற கதைகளைத் தொடர்ந்து தந்து மாணவமணிகளுக்கு வாசிப்பில்  ஆர்வத்தை உண்டு பண்ண  ஆசிரியருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்..எங்கள் வீட்டிலும் மகள் வாசிக்கப் போவதாக சொல்லியிருக்கிறாள்.


******

வாசிப்பனுபவம் - 2 - வெங்கட் நாகராஜ்:


சிறுவர் நாவல் என்று சொன்னாலும் அனைவரும் படிக்கலாம் - வயதானாலும், நமக்குள் இன்னும் குழந்தைத் தனம் ஏதோ ஒன்று இல்லாமல் இல்லை!  அவ்வப்போது இந்த குழந்தைமை வெளியே வரத்தான் செய்கிறது இல்லையா?  கடந்து போன நம் சிறுவயது வாழ்க்கையை நினைத்துப் பார்க்காதவர்கள் யார் தான் இல்லை! சிறு வயது நினைவுகள் என்றைக்கும் இனிமை தான்.  நாம் இப்போது சிறுவராக இருந்து சில செயல்களைச் செய்ய முடியாது என்றாலும் இது போன்ற சிறுவர்களுக்கான நூலை வாசிப்பதன் மூலம் நம் ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாமே!  


ஆகாய கோட்டையில் ஒரு புதையல் இருக்கிறது என்றும் அந்த புதையலை பூதம் காத்துக் கொண்டிருக்கிறது என்று பரவலான செய்தி இருக்கிறது.  அந்த புதையலைத் தேடிச் செல்கின்றனர் ஐந்து சிறுவர்கள்.  அந்தக் குழுவில் இருப்பவர்கள் - ஆதவன், கவின், இனியன், கதிர் மற்றும் வேலு!  - ஐந்து பேருக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கிறது - வேலு அந்த மலைப்பகுதியில் வசித்து ஆடுமேய்க்கும் சிறுவன் - மலைப்பகுதி முழுவதும் அவனுக்கு அத்துப்படி!  அறிவியலில் ஒரு சிறுவனுக்கு ஆர்வம் அதிகம் என்றால், மற்றொரு சிறுவனுக்கு தமிழில் ஆர்வம் - அந்த தமிழ் ஆர்வம் - புதையலைத் தேடிச் செல்லும் வழியில் இருந்த சங்கேதக் குறியீடுகளைக் கொண்டு புதையல் இருக்கும் இடம் நோக்கி பீடுநடை போட வைக்கிறது.  


வழியில் பார்க்கும் சில நபர்கள் இவர்களை புதையல் தேடிச் செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள் - புதையலைத் தேடிச் சென்ற பலர் திரும்பவே இல்லை என்ற செய்தியும் சொல்கிறார்கள் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புதையலைப் பற்றியும், அந்த புதையலைக் காப்பாற்றி வரும் பூதம் பற்றியும் சொல்லி வருகிறார்கள் - அனைத்தும் செவி வழி செய்தி தான் - பூதத்தினை நேரில் பார்த்தவர் என ஒருவரும் இல்லையே!  பெரும்பாலும் புதையலைத் தேடிச் செல்பவர்கள் தனக்கு ஆதாயம் கிடைக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் செல்லும்போது சில சின்னச் சின்ன சங்கேத மொழிகளைத் தவற விடுவதுண்டு.  ஆனால் புதையலைத் தேடி புறப்படும் போதே இந்த சிறுவர்களின் நோக்கம் - அந்த புதையலை தங்களுக்காக எடுத்துக் கொள்ளாமல் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்கிறார்கள்.


ஒவ்வொரு குறிப்பையும் தேடிக் கண்டுபிடித்து, அதனைப் படித்து அது சொல்ல வரும் விஷயத்தினைச் சரியான விதத்தில் புரிந்து கொண்டு புதையலைத் தேடிச் செல்கிறார்கள். அவர்கள் வழியில் எதிர்கொண்ட விஷயங்கள் என்ன, புதையலை அடைந்தார்களா, போன்ற விஷயங்களை மிகவும் ஸ்வாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர் ஞா. கலையரசி. நூலின் வழி சிறுவர்களுகு அவர் சொல்லிச் செல்லும் அனைத்து அறிவுரைகளூம், விளக்கங்களும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.  ஊஞ்சல் வலைப்பூவில் எழுதி வரும் இந்த நட்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.   சிறப்பான மேலும் பல நூல்களை அவர் எழுதிட வாழ்த்துகள்.  


******


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


https://venkatnagaraj.blogspot.com/p/blog-page.html



நண்பர்களே, இந்த திங்களன்று உங்களுக்கு ஒரு மின்னூலை அறிமுகம் செய்து வைத்ததில் மகிழ்ச்சி.  நூலாசிரியர் ஞா. கலையரசி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


14 கருத்துகள்:

  1. எனக்கு கல்கியில் விழுந்து விழுந்து படித்த ஒரு கார்ட்டூன் தொடரும், கோகுலத்தில் படித்த எரிமலை அரக்கன் vs பனிமலை அரக்கன் (பெயர் மறந்துவிட்டது) என்ற வாண்டுமாமா கதையையும் நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாண்டுமாமா, அம்புலிமாமா - எவர்க்ரீன் எனக்கும்!

      உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. இன்னமும் முத்து காமிக்ஸ் வாங்கிப் படிக்கும் அப்பழக்கம் இருக்கிறதே...   அதுபோல இந்த மாதிரிக் கதைகளும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து காமிக்ஸ் - அது ஒரு கனாக்காலம் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகமும் விமர்சனங்களும் அழகு.
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    குழந்தையிடமும் வாசிப்புப் பழக்கம் தொடர்வது மகிழ்ச்சி.
    நூலை செந்ற வாரம் தறவிறக்கம் செய்தேன்.
    விரைவில் வாசிக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாசகம் அருமை.
    விமர்சனம் இருவரும் நன்றாக செய்து இருக்கிறீர்கள்.
    ஆசிரியருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமையான விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி வெங்கட்ஜி. துணைவியாருக்கும் என் அன்பைச் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூலாசிரியரின் வருகை மகிழ்ச்சி தந்தது. மேலும் பல நூல்களை நீங்கள் வெளியிட வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி.

      நீக்கு
  7. இந்த விமரிசனம் முகநூலிலும் பார்த்தேன்/படித்தேன். கார்ட்டூன் புத்தகங்களோ, கார்ட்டூன் சீரியல்களோ பிடிக்காதவர் யார்? எனக்கு இப்போவும் டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனும் ஆர்ச்சி/ஆர்க்கி கார்ட்டூனும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....