வெள்ளி, 9 ஏப்ரல், 2021

லட்சங்களில் ஒருவன்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE STRONGEST PEOPLE MAKE TIME TO HELP OTHERS, EVEN IF THEY ARE STRUGGLING WITH THEIR OWN PROBLEMS.


******

தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் போட ஆரம்பித்து விட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் நாள் வரை 8.71 கோடி மக்களுக்கு, தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் (7.59 கோடி முதல் தடுப்பூசி, 1.12 கோடி இரண்டாம் தடுப்பூசி). படிப்படியாக, முதலில் Front Line Workers எனச் சொல்லப்படும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கும், பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட ஆரம்பித்த போதே, எங்கள் அலுவலகத்தில் தடுப்பூசி போடுவதற்காக Camp ஏற்பாடு செய்வார்கள் என, சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  இது நாள் வரை அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக இல்லை.  


இந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிப்பு வந்தவுடன், முன்பதிவு செய்து கொள்ள வேண்டிய இணைய தளத்தில் என்னுடைய அலைபேசி எண் மற்றும் ஆதார் எண் கொடுத்து முன்பதிவு செய்து கொண்டேன்.  இந்தத் தளத்தில் சுலபமாக நீங்களும் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.  தடுப்பூசி போட்டுக்கொள்ள நாளும், நேரமும், இடமும் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதும் ஒரு வசதி. அரசு மருத்துவமனையாக இருந்தால் கட்டணம் ஏதுமின்றி நீங்கள் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முடியும்.  தனியார் மருத்துவமனை எனில் ரூபாய் 250 மட்டும் செலுத்தினால் போதுமானது.  


ஏப்ரல் ஒன்றாம் தேதி தானே ஆரம்பிக்கிறது என, அன்றைக்கு விட்டுவிட்டு, இரண்டாம் தேதி காலை நேரத்தில் முன்பதிவு செய்திருந்தேன்.  எனது வீட்டின் அருகிலேயே இருக்கும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் மூன்று Site-களில் தடுப்பூசி போடுவதற்கான வசதிகளைச் செய்திருக்கிறார்கள்.  அதில் Site-1-ஐத் தேர்ந்தெடுத்து இருந்தேன்.  இரண்டாம் தேதி சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது தான் பாக்கி!  மார்ச் மாத கடைசியில், அலைபேசிக்கு ஒரு தகவல் - நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்திருக்கும் முன்பதிவு  ரத்து செய்யப்பட்டு விட்டது.  மீண்டும் முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற தகவல் தான் அது!  விடுமுறை நாள் என்பதால் ரத்து செய்ததாகத் தெரிந்தது.  பிறகு எல்லா நாட்களிலும், விடுமுறை நாளாக இருந்தாலும், தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு வந்தது.  


மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டிய தளத்திற்குச் சென்று அடுத்த நாள் - மூன்றாம் தேதிக்காக முன்பதிவு செய்து கொண்டேன்.  வீட்டில் தெரிவித்த போது அவர்களுக்கு அப்படி ஒரு ஆச்சர்யம் - ஏனெனில் என்னைப் பற்றிய நினைப்பு அப்படி - பொதுவாகவே சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு மருத்துவமனையை நாடாதவன் நான்.  ஜூரம் என்றால் கூட முடிந்த வரை வீட்டு/நாட்டு மருத்துவம் தான்.  தவிர ஊசி போட்டுக் கொள்வதென்றால் எட்டிக்காய் கசப்பு எனக்கு!  சிறு வயதிலிருந்தே ஊசி என்றால் ஒரு வித அலர்ஜி! நெய்வேலி மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் ஐந்து நாட்களுக்கு கால்பால், அவில் மூன்று வேளை கொடுப்பதோடு, ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்குச் சென்று PP4 என்று சொல்லப்பட்ட பென்சிலின் ஊசி தான்! 


ஒரு முறை ஊசி போடும் குண்டான செவிலியர் ஊசியினை எடுத்துக் கொண்டு வர, அவரைப் பார்த்து பயத்தில் நடுங்கி அந்த இடத்திலிருந்து விட்டேன் ஓட்டம்! நேரடியாக வீடு தான்!  ஊசி போட்டுக் கொண்டேன் என்று பொய் சொல்லி விட்டேன்! அதிலிருந்து எப்போது மருத்துவமனைக்குச் சென்றாலும், மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, ஊசி சீட்டைக் கிழித்து காற்றில் எறிந்து விட்டு, கைகளைத் தேய்த்துக் கொண்டே (ஊசி போட்ட மாதிரி!) வீட்டுக்கு வந்து விடுவேன்!  இந்தக் கதையெல்லாம் மனைவிக்கும் மகளுக்கும் தெரிந்ததால், நானே தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்திருப்பது அறிந்து அவர்களுக்கு அதிர்ச்சி!  


மூன்றாம் தேதி காலையில் எப்போதும் போல காலை நடைப்பயிற்சி முடித்து வீடு வந்து குளித்து, சமைத்து உணவு உட்கொண்ட பிறகு (தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், உணவு உட்கொண்ட பிறகே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்க!) Dr.RML மருத்துவமனைக்குச் சென்று, வெளியே இருந்த ஒரு ஊழியரிடம், முன்பதிவு செய்திருந்த போது வந்த SMS தகவலைக் காண்பிக்க ஒரு சீட்டில் 2 (Site 2 என்பதைக் குறிக்க - இந்த மருத்துவமனையில் மூன்று Site) என்று எழுதிக் கொடுத்து உள்ளே அனுப்பினார்.  வரிசையாக இருக்கைகள் இருக்க அமர்ந்து கொண்டேன்.  சில நிமிடங்கள் காத்திருந்த போது, பத்துப் பன்னிரெண்டு பேர் கொண்ட குழு வந்தது.  வரிசையின்றி, அவர்களில் இரண்டு பேரும், காத்திருந்தவர்களில் இரண்டு பேர் என உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்கள் - அவர்கள் அனைவரும் சிபாரிசில் வந்தவர்கள் - சிபாரிசு இல்லா இடம் ஏது - இறப்பதற்கு மட்டும் தான் இன்னும் சிபாரிசு வரவில்லை!  அங்கே வந்து தங்கள் திறமைகளைக் காண்பித்த சிலரையும் பார்க்க முடிந்தது - ”நான் இந்த மந்திரியின் நான்காம் மனைவியின் ஐந்தாம் தம்பி, எனக்கு முதல்ல ஊசி போடுங்க” போன்ற கேடுகெட்ட கதைகள் தான்! 


என் முறை வந்தபோது, உள்ளே சென்று அலைபேசி எண் தெரிவித்து, பெயரையும் குறித்துக் கொண்ட பிறகு, ஒரு செவிலியர் என்னிடம், “காலை உணவு எடுத்துக் கொண்டீர்களா? உங்களுக்கு முதலாவது தடுப்பூசியா இல்லை இரண்டாவதா? என்று தகவல்கள் கேட்டுக் கொண்ட பிறகு, “உங்களுக்கு “COVAXIN” தடுப்பூசி போடுகிறோம். இரண்டாம் முறையும் இதே தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் - நான்கு முதல் ஆறு வாரத்திற்குள்” என்று சொல்லி தடுப்பூசியைப் போட்டு விட, அரை மணி நேரம் பக்கத்தில் இருக்கும் அறையில் காத்திருந்து, எதிர்வினை ஏதும் இல்லை என்றால் நீங்கள் செல்லலாம் என்று சொல்லி அனுப்பினார்.  அவருக்கு நன்றி சொல்லி  வெளியே வந்து காத்திருந்தேன்.  அரை மணி நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பினேன்!  இப்படியாக அன்றைக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாக ஆனேன் - லட்சங்களில் ஒருவன் - தலைப்பு வந்துடுச்சா! 


நண்பர்களே, உங்களுக்கும் 45 வயதுக்கு மேலாகி விட்டால், நீங்களும், உங்கள் வீட்டினரும் விரைவில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்.  தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பிரச்சனைகள் என்று வாட்ஸ் அப் வழி வரும் செய்திகளை அப்படியே உண்மை என்று நம்பி விட வேண்டாம்.  கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள்.  முடிந்த வரை தீநுண்மி தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  வாழ்க வளமுடன்…


நண்பர்களே, இந்த நாளின் பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


20 கருத்துகள்:

 1. நல்லபடி முதலாம் டோஸ் போட்டுக்கொண்டது நிம்மதி, மகிழ்ச்சி.  எனக்கு என்ன கவலை என்றால் இரண்டாம் டோஸ் நாளன்று  ஊசி கையிருப்பில் இருக்க வேண்டுமே என்றுதான்.   நான் ஆறு வாரங்கள் கழித்தே போட்டுக்கொள்ளப் போகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து உற்பத்தி நடந்து கொண்டே இருப்பதாகத் தகவல் உண்டு. ஊசி கையிருப்பு குறித்த விளக்கங்கள் பார்த்தேன்.

   இரண்டாம் டோஸ் நான் இன்னும் பதிவு செய்யவில்லை. விரைவில் செய்து விடுவேன் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. லட்சத்தில் ஒருவனை சரியான இடத்தில் புகுத்தி விட்டீர்கள் ஹா.. ஹா..

  எனக்கும் ஊசி என்றாலே அலர்ஜிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லட்சத்தில் ஒருவன் - :) மகிழ்ச்சி கில்லர்ஜி.

   ஊசி உங்களுக்கும் அலர்ஜியா - ஹாஹா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. நன்று. விரைவில் நானும் போட்டுக் கொள்ள இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் போட்டுக் கொள்ள இருப்பது அறிந்து மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. நல்லதே நடக்கட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நாளை இராண்டாம் முறை ஊசி போட போகிறேன்.
  நீங்கள் போட்டு வந்தது நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளை இரண்டாம் ஊசி - நல்லது கோமதிம்மா. நலமே விளையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தடுப்பூசி போட்டுக் கொண்டதை மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள். தாங்களும் லட்சங்களில் ஒருவராகி இருப்பதற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. நானும் முதல் டோஸ், சென்ற மாதம் 10ம் தேதி போட்டுக்கொண்டேன். வரும் 25ம் தேதிக்கு மேல் இரண்டாம் டோஸ் கோவிஷீல்ட் போட்டுக்கணும்.

  தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிவது தொடரணும்னு நினைக்கிறேன். இரண்டாம் கட்ட ஊசிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பயமில்லையாம். (அப்படியும் ஓரிருவருக்கு கோவிட் வந்திருந்தாலும் பாதிப்பு குறைவாம்)

  லட்சத்தில் ஒருவனாகிவிட்டீர்கள். விரைவில் எல்லோரும் போட்டுக்கொள்ளும் நிலை வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், முகக் கவசம் அணிவது அவசியம் தான். Social distancing, Mask and Hand Hygiene ஆகியவை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் தான் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. தடுப்பூசி போட்டமைக்கு வாழ்த்துக்கள்.. நான் இனித்தான் போடப்போகிறேன் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்..
  :)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி அதிரா. நீங்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. இங்கே பெரிய மருத்துவமனைகளில் கோவேக்சின். நம் ஊரில் அதிகம் கோவிஷீல்டு தான் எனத் தெரிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. லட்சத்தில் ஒருவர் ஆனது குறித்து வாழ்த்துகள். இங்கே நாங்களும் இப்போது குடும்பத்தில் உள்நாட்டுப் பிரச்னைகள்/குழப்பங்கள் ஓரளவு தீர்ந்ததால் ஊசி போட்டுக்கொள்ள முடிவு செய்திருக்கோம். இங்கேயும் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் தான். சிலர் கோவிஷீல்ட் போட்டுக்கச் சொல்லியும் சிலர் கோவாக்ஸின் என்றும் சொல்லிக் கொண்டிருக்காங்க. நாங்க போகும் மருத்துவமனையில் என்ன ஊசி போடறாங்களோ அதைத் தான் போட்டுக்கப் போறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது நீங்களும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....