வியாழன், 19 ஏப்ரல், 2018

இடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....




வீதிக்கு வந்த குடும்பம் ஒன்று....


நான் இருப்பது மத்திய அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு. இந்தக் குடியிருப்புகளின் பராமரிப்பு அரசுத்துறை ஒன்றையே சாரும் என்றாலும், அதற்கான பணியாளர்கள் குறைவானவர்களே என்பதால், தனியார் Contractors மூலம் தான் பல விதமான பரமாரிப்புப் பணிகளைச் செய்வார்கள். இந்த Contractor-களிடம் வேலை செய்வது பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்த பணியாளர்கள் – பெரும்பாலும் குடும்பத்துடன் வேலைகளைச் செய்ய வந்துவிடுவார்கள். இந்த பணியாளர்களை Contractor-கள் அரசின் காலி இடம் ஒன்றிலேயே தங்க வைத்திருந்தார்கள். சின்னச் சின்னதாக Tent-களாக இருந்த தங்குமிடங்கள், மண்குடிசைகளாக மாறி, செங்கல் சுவர்களோடு, மேலே தகர ஷீட் போட்ட வீடுகளாக மாறி விட்டன. 

Contractor-கள் மாறினாலும், இந்த குடிசைகள் அங்கேயே இருக்கும். இவற்றை அரசியல்வாதிகள், காவல்துறை என யாருமே கண்டுகொள்வதில்லை. வாராவாரம் வரவேண்டிய ஹஃப்தா வந்தால் போதும் அவர்களுக்கு. குடிசைகளிலேயே வாழ்க்கை என்றாலும், பெரும்பாலான வெயில்கால இரவுகளில் பக்கத்து நடைபாதைகளில், காற்றாடப் படுத்துக் கொள்வார்கள். வேலை முடித்து வந்தால் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு டிவி பார்ப்பதும், பாட்டு கேட்பதும் தான். ஒவ்வொரு பணியாளருக்கும் கணக்கில்லாமல் குழந்தைகள். அந்தக் குழந்தைகளை படிக்க வைப்பதோ, பராமரிப்பதோ இல்லை. குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வேலைக்கு வந்துவிடுவார்கள். அரைகுறை ஆடையில் அந்தக் குழந்தைகளும் கல்லும் மண்ணும் தூக்கிக் கொண்டு விளையாடி மகிழ்வார்கள்.

அவர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் – நிரந்தர வேலை இல்லாதது, ஒழுங்கான வருமானம் இல்லாமை, வசதி இல்லாத தங்குமிடம், மானத்தினை மறக்க சரியான உடை இல்லாமை, கழிவறை வசதிகள் என நிறையவே பிரச்சனைகள். அவர்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவு இருந்தாலும், அன்றாடங்காய்ச்சியாக இருந்தாலும், சந்தோஷமாகவே இருந்து வந்தார்கள். திருவிழா, பண்டிகை சமயத்தில் அவர்கள் பகுதியிலிருந்து சத்தமாக ஒலிக்கும் பாட்டுக்கள் – ஹோலி சமயத்தில் ரொம்பவே அதிகமாக – குடியிருப்புவாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தாலும் யாரும் எதுவும் சொல்வதில்லை. எல்லா இடங்களிலும் இருக்கும் Bad elements போலவே இந்தப் பகுதியிலும் சிலர் உண்டு – சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபட்டு வருபவர்கள் இப்பகுதியில் உண்டு.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்தக் குடிசைகளை காலி செய்ய வேண்டுமென்று உத்தரவு. அனைவருக்கும் வேறு பகுதியில் காலி மனைகள் கொடுத்து குடிசைகள் கட்டிக்கொள்ள பண உதவியும் செய்தார்கள். அதை வாங்கிக் கொண்டு சிலர் வெளியே சென்றுவிட்டாலும் நிறைய குடும்பங்கள் இங்கேயே இருந்து வந்தார்கள். பலமுறை காலி செய்யச் சொல்லியும் காலி செய்ய வில்லை. கடைசியாக கொடுத்த கெடுவும் முடிந்து விட்டது. ஆனாலும் காலி செய்ய வில்லை என்பதால் அரசு காவல்துறையின் உதவியோடு குடியிருப்புக்கு வந்து காலி செய்ய புல்டோசர்களைக் கொண்டு வந்தது.  நிலைமை கைமீறிப் போக, காவல் துறை உதவியோடு குடிசைகள் அனைத்தும் இடிக்கப்பட்டன.

பாத்திரம் பண்டம், துணிமணிகளோடு அனைவரும் நடைபாதைக்கு வந்து விட்டார்கள். சில குடும்பங்கள் மட்டும் வண்டிகளில் வேறு பகுதிக்குச் சென்று விட, “எங்கே போறது, நமக்கேது போக்கிடம்?” என்ற நிலையில் இருக்கும் சில குடும்பங்கள் மட்டும் இன்னும் நடைபாதையில் அவர்களது உடைமைகளோடு இருக்கிறார்கள் – குழந்தைகள், பெண்கள் என அனைவரும் சாலையில் – தலைக்கு மேல் கூரை இல்லாமல் – சாலையிலேயே சமையல், உறக்கம் என அனைத்தும். பார்த்தால் பாவமாக இருக்கிறது. அனைவருக்கும் வேறு இடம் கொடுத்தாலும் அங்கே போவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. புதிய இடத்திற்குச் சென்றால், பணிபுரிய அங்கிருந்து இந்தப் பகுதிக்கு வந்து செல்லவே தினமும் ஐம்பது ரூபாய்க்கு [ஒரு ஆளுக்கு] மேலே ஆகும் என்பதால் யாருக்கும் இஷ்டமில்லை. அங்கேயே வேலை கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதும் ஒரு காரணம்.

இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி நடைபாதையில் இருப்பது என ஒரு பெண் தன் கணவனிடம் கேட்க, அவர் சொன்ன நம்பிக்கை தரும் பதில் – “எப்படியாவது ஒரு முடிவு தெரியும்… இரண்டு மூணு நாள்ல இங்கேயே தங்கலாம்னு சொல்லிட்டா இங்கேயே இருக்கலாம். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு, இங்கேயே இருப்போம் என்கிறார் அப்பெண்ணின் கணவர். இத்தனை பிரச்சனையிலும் தன்னம்பிக்கையோடு இருக்கும் அவருக்கு ஒரு சல்யூட்… ஆனால் அந்தப் பெண் தான் பாவம் – ”யோவ் ரெண்டு நாளா குளிக்கல, ரொம்ப கஷ்டம்யா, ரோட்டுல இருக்கறது” என்று மெல்லிய குரலில் சொல்லும்போது என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திணறுகிறார்.

குடிசைகளை கட்ட அனுமதிப்பது, பிறகு அதை மாற்றச் சொல்வது, அவர்களிடம் “ஹஃப்தா” என்ற பெயரில் வாரா வாரம் கையூட்டு வாங்கிக் கொள்வது என இருந்து விட்டு One fine/bad morning மொத்தமாக இடித்துத் தள்ளிவிடுகிறார்கள்.  எல்லாவற்றிலும் அரசியலும், பணமும் விளையாடுகிறது. தில்லி முழுவதுமே இப்படியான குடிசைகள் – இவற்றை ஜுக்கி-ஜோம்ப்டி [Juggi-Jhompri] என்று சொல்வார்கள் – உண்டு. எத்தனை தான் லஞ்ச எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு திரிந்தாலும், ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவிதத்தில் இவை அனைத்திற்கும் துணைபோகத்தான் செய்கிறான் – இங்கே யாருமே உண்மையானவர்கள் இல்லை. வேறென்ன சொல்ல.  

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங்க் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். ஹஃப்தா ன்னா மாமூல்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை 🙏 ஸ்ரீராம்.

      வாரா வாரம் கொடுக்கும் மாமூல் தான் ஹஃதா.

      நீக்கு
  3. இது போன்ற குடிசைகள் எல்லா ஊரிலும் உண்டு. சென்னையிலும் பல இடங்களிலும் இருந்தாலும் சைதாப்பேட்டை ஆற்றோரம் இருந்த குடிசைகளை அந்த டிசம்பர் 15 வெள்ளம் வந்தபின் அகற்றத் தொடங்கும்போது இதே மாதிரி பிரச்சனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகரிலும் நிறைய இடங்களில் இருக்கிறது. யமுனா நதிக்கரையில் இருந்த பல குடிசைகள் அகற்றி விட்டார்கள். இரயில் நிலையம் அருகே நிறைய குடிசைகள் உண்டு. அவர்களுக்கும் வாழ்க்கை ஓடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வெள்ளம் வரும்போது ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று குறைகூறும் அதே மக்கள் இவர்கள் இன்னும் சில ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அதற்கு எதிர்ப்பும் தெரிவிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எல்லாமே அரசியல் மயம். ஓட்டுக்கள் மட்டுமே முக்கியமாக இருக்கிறது இங்கே. இந்த மக்கள் பல விதங்களில் பயன்படுத்தப் படுகிறார்கள் அரசியல் ஆதாயத்திற்காக. ஆதங்கம் மட்டுமே மீதம்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பாவம் அந்தத் தெருவோரத்துக் குடும்பத்தின் பெண்கள், மற்றும் குழந்தைகள். அவர்கள் கஷ்டம் தெரியாமல் இருக்கும் ஆண்களைத்தான் குறை சொல்லவேண்டும். ​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பெண்களின் நிலை தான் ரொம்பவே கஷ்டம்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. உண்மைதான் ஜி. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் லஞ்சத்திற்குத் துணை போகிறான் தான். பாவம் இப்படியானவர்கள். பதவி முடிந்த பிறகும் அரசு குடியிருப்பை விட்டுக் காலி செய்யாதவர்களை - சில அரசியல்வாதிகள் - என்ன செய்வார்கள்? இப்படிச் செய்ய முடியுமா அவர்களால்.

    இங்கு சென்னையில் கூட வெள்ளம் வந்த போது பல குடிசைவாழ் மக்கள் உயிரிழந்தனர். அப்போது வந்த ஒரு செய்தியில் வாசித்தது இதுதான் குடிசை மாற்று வாரியம் அவர்களுக்கு ஹவுஸிங்க் போர்ட் வீடு வழங்கியிருந்தாலும் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு குடிசையில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் வந்தது.

    என்ன சொல்ல? யாரைக் குற்றம் சொல்லுவது என்று குழப்பம் தான். என்றாலும் ஊழல் மலிந்து கிடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊழல் மலிந்து கிடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது - உண்மை. மனிதர்கள் லஞ்சம் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் அடிமைகளாகி விட்டார்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. தவறுகளின் தொடக்கம் மக்களிடமும் இருக்கிறது. நம்மால் பரிதாபப்படவே முடிகிறது வேறென்ன ?

    புறம்போக்கு இடம் என்று தெரிந்தும் மின்சார இணைப்பு கொடுக்கின்றார்களே எப்படி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்சார இணைப்பு - தில்லியில் பல இடங்களில் மக்களாகவே எடுத்துக் கொள்வதுண்டு - கொக்கி போட்டுவிடுவார்கள் - இப்போது தான் insulated overhead wires முன்பு சுலபமாக கொக்கி போட முடியும். இணைப்பு கொடுக்கவும் காசு - லஞ்சம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. பதிவைப் படிக்கும்போதே பரிதாபமாகத்தான் இருக்கிறது. வெளி இடங்களில் இருந்து, கான்ட்ராக்ட் பேசி அழைத்துவரும் கான்ட்ராக்டர்கள், இது மாதிரியான பாவப்பட்ட குடும்பங்களை தங்களது வேலை முடிந்ததும் அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காண்டிராக்டர்கள் அவர்கள் வேலை முடிந்ததும் இப்படி அம்போவென விட்டுச் செல்வதும் உண்டு, அவர்களாகவே தங்கிவிடுவதும் நடக்கிறது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  9. நடைபாதைகளில் வாழும் மக்கள் போல்தான் வாழ வேண்டும்,
    தற்காலிக குடியிருப்புகள் இடிக்கபடும் போது.

    அதில் வாழும் குழந்தைகள், பெண்கள் நிலை மிகவும் கஷ்டம்.
    பாதுகாப்பு இருக்கா அவர்களுக்கு?

    படிக்கும் போதும் பார்க்கும் போதும் கவலைபடுவதுடன் நம் வேலை முடிந்து விடுகிறது, நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? அவர்கள் நிலையை மாற்ற தேவதூதன் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதுகாப்பு - பெரிய அளவில் மக்கள் இருப்பதால் ஒன்றும் தவறாக நடக்காது என்ற நம்பிக்கை.

      தேவதூதன் வர வேண்டும் - ம்ம்ம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. எல்லாம் அவங்க தலையெழுத்துன்னு ஈசியா கடந்துடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. தலையெழுத்தை யாரால் மார்ற முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. வேதனை தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....