புதன், 25 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – நாய்தா குகைகள் - இயற்கையா செயற்கையாஇரு மாநில பயணம் – பகுதி – 30

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நாய்தா குகைகள், தியு


குகை வாசலில் நான்....

நாய்தா குகைகள், தியு

கடற்கரையில் இருந்த கங்கேஷ்வர் கோவிலும், அங்கே அலைகள் அலுப்பில்லாமல், சிவபெருமானுக்குச் செய்து கொண்டிருக்கும் அபிஷேகத்தினையும் பார்த்த பிறகு தன்னம்பிக்கைப் பெரியவர் Bபவன் அவர்களையும் பார்த்து பேசிக் கொண்டிருந்து அங்கிருந்து புறப்பட்டோம். குகைக் கோவிலுக்கு அடுத்ததாக இருந்த எங்கள் இலக்கும் குகைகளாகத் தான் இருந்தது. தியு நகரில் இருக்கும் புகழ்பெற்ற குகைகளான நாய்தா குகைகளைக் காண்பது என்பது தான் எங்கள் அடுத்த திட்டம். கோவிலிலிருந்து சிறிது தொலைவிலேயே இருக்கும் இந்த நாய்தா குகைகள் இயற்கையிலேயே உருவானது என்றும், இல்லை இல்லை கோட்டை கட்டும்போது பாறைகளை வெட்டியதால் உருவானது என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு – எதுவாக இருந்தாலும் இப்போது சுற்றுலாத் தலமாக இருக்கிறது!

போர்த்துகீசியர்களின் பிடியில் இருந்த கோவா போலவே இந்த தியுவும் அவர்களது பிடியில் தான் இருந்தது. அவர்கள் இப்பகுதியை தங்களது நாடு போலவே மாற்றியிருந்தார்கள். அதனால் தான் இங்கே சரக்கு வியாபாரம் நிறையவே நடக்கிறது போலும். அவர்கள் காலத்தில் இங்கே கட்டிய கோட்டை, சர்ச்சுகள் இன்னமும் அவர்களது நினைவுகளுக்கு சாட்சியாக இருக்கிறது. மிகப் பெரிய கோட்டை ஒன்றை தியு கடற்கரையில் கட்டி வைத்திருக்கிறார்கள் – அது பற்றி பின்னால் வரும் பதிவுகளில் பார்க்கலாம். அந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு தேவையான பாறைகளை வெட்டி எடுத்ததால் தான் இந்த நாய்தா குகைகளே உருவானது எனச் சொல்கிறார்கள்.

அப்படி இல்லை. கோட்டை கட்டப்பட்ட இடத்திற்கு அருகே ஏற்கனவே குகைகள் இருந்தன. அந்தக் குகைகளுக்குள்ளே இருந்து மேலும் பாறைகளை வெட்டி எடுத்து கோட்டை கட்டினார்கள் போர்த்துகீசியர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. சில இடங்களில் குகைக்குள் படிக்கட்டுகள் உண்டு – அதன் மேல் ஏறிச் சென்றால் திடீரென பாதை முடிந்து விடும். திரும்ப இறங்கி வர வேண்டியது தான். குகைப்பாதை வழியே செல்லும் போது திடீரென மேலே இருக்கும் திறப்பின் வழியே இயற்கை ஒளி தெரியும்! குகைக்குள்ளெ இப்படி சூரியனின் கிரணங்கள் வருவதால் குகைக்குள் மிகவும் அழகிய காட்சியாக அமைகின்றன.  நிறைய இடங்களில் குகையின் மேலிருக்கும் மரங்களின் வேர்கள் நீண்டு கீழே வரை தெரியும்….

இயற்கை தரும் வெளிச்சம் தவிர குகைக்குள்ளே விளக்குகளும் இருப்பதால் பயமின்றி நடக்கலாம். நிறைய பாதைகள் குகைக்குள்ளெ இருப்பதால் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வர குறைந்தது முக்கால் மணி நேரமாவது இங்கே செலவிட முடியும். நாங்களும் அங்கே நிறைய நேரம் இருந்து நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். சில இடங்களில் மேலிருக்கும் பாறைகள் விழும் நிலையில் இருப்பதால் இரும்புத் தூண்கள் கொண்டு பாறைகளுக்கு முட்டுக்கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய பாறைக்கு முன் இரும்புத் தூண்கள் எம்மாத்திரம் எனத் தோன்றியது. ஒவ்வொரு இடத்தினையும் பார்த்தபடி வெளியே வந்தால் சில தள்ளுவண்டிகள் இளநீர் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேவையெனில் வாங்கிக் குடித்து விட்டு அங்கிருந்து புறப்படலாம்.
இந்தக் குகைகள் போலவே வேறு ஒரு குகைப் பயணம் பற்றி அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரில் எழுதி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். விசாகப்பட்டினம் அருகே இருக்கும் Bபோரா குகைகள் தான் அவை. அந்தக் குகைகள் பற்றிய தகவல்கள் கீழே உள்ள பதிவில் இருக்கின்றன. படிக்காதவர்கள் படிக்கலாம்!
நாய்தா குகைகளுக்கு வெளியே ஒரு ஜுஹாட் [சகடா எனப்படும் ஆல் இன் ஆல் அழகு ராஜா] வண்டி நிற்க, இதில் பயணிக்கத்தான் முடியவில்லை – ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து புகைப்படமாவது எடுத்துக் கொள்வோம் என்ற ஆசை வந்தது. வண்டி ஓட்டுனரிடம் அனுமதி வாங்கி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். என்னைப் போலவே கேரள நண்பர்களும் அந்த மாதிரி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ”இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா உனக்கு?” என்ற கேள்விகள் வந்தாலும் கவலை கொள்ள வேண்டாமே! அல்ப ஆசை தானே! நிறைவேற்றிக் கொள்வதில் என்ன தவறு! நாய்தா குகைகளிலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் சென்ற இடம் என்ன அங்கே என்ன பார்த்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

20 கருத்துகள்:

 1. அடடா....குகைக்குள் போகலையே நாங்க.....
  லஞ்ச் முடிச்சுட்டுக் கோட்டையை மட்டும் பார்த்துட்டு வந்துட்டோம்.

  ஆனா.... சக்டாவில் பயணம் செஞ்சாச்சு :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா போகலையா... அடுத்த முறை போயிட்டு வாங்க.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வ்ய்க்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட். குகைகளின் படங்கள் அழகாய் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம்.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வ்ய்க்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. குகைகள் எவ்வளவு அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகு தான் ஜி.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வ்ய்க்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. அதென்னமோ இதுமாதிரியான குகைகளில் இருக்க பயமா இருக்கும் எனக்கு. திடீர்ன்னு விழுந்திட்டா என்னாகும்ன்னு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திடீர்னு விழுந்துட்டா? டைரக்ட் ஃப்ளைட் டு சொர்க்கம் தான்....

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வ்ய்க்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வ்ய்க்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அமானுஷ்யமான அழகு என்றும் சொல்லலாம்....

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வ்ய்க்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 7. பையன் ஊருக்கு போய் இருந்த போது இயற்கை குகை ஒன்றைப் பார்த்தோம்.
  மின்சார விளக்கு கிடையாது, டார்ஜ் லைட், இயற்கையாக வரும் ஒளி மட்டும் குகைக்குள்.
  சில இடங்களில் இரும்பு கம்பிகள் தாங்குவதால் அந்த பக்கம் போக தடை.

  படங்களும் செய்திகளும் பார்க்கும் ஆவலை தருகிறது.


  ஜுஹாட் வண்டியில் அமர்ந்து எடுத்துக் கொண்ட படம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வ்ய்க்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  குகைகளின் அழகான படங்கள் மிகவும் அருமையாக இருந்தது. குகை வழி பிரயாணமும் மிகவும் நன்றாக இருந்தது. ஆனாலும் குகையிலிருந்து வெளிவரும் வரை சற்று பயமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தங்கள் படங்கள் அங்கெல்லாம் சென்று பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. அடுத்து சென்ற இடங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குகையிலிருந்து வெளியே வரும் வரை கொஞ்சம் பயம் - எனக்கு இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 9. நாய்தா குகைகளும் லிஸ்டில் உண்டு…கோவா தியு டாமன் லிஸ்டில் இருப்பதால்…ஹையோ ஜி இதுவும் போரா கேவ்ஸ் போல இருக்கிறதே….அழகாக இருக்கின்றன. ரொம்பவே அழகு.போரா ஒருவித அழகு என்றால் இவை மற்றொருவகையில் மிக அழகாக இருக்கின்றன. படங்களும் ரொம்பவே அழகு ஜி…ரொம்ப ரசித்தேன்..மந்தைக் கொள்ளை கொள்ளுகின்றன உங்கள் ஃபோட்டோக்கள் நல்ல ஆங்கிளில் எடுத்திருக்கீங்க ஜி

  அட சகடா வண்டி….சகடா வண்டினு இங்கும் சொல்லுவதுண்டே பழைய வண்டிகளை….இது மாடிஃபைய்ட் பைக் போல!!
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாய்தா குகைகளும் Bபோரா குகைகளும் கொஞ்சம் ஒரே மாதிரி தான். ஆனாலும் வேறு வித உணர்வுகள். நாய்தா குகைகள் போரா அளவு பெரியதல்ல...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 10. அழகான இடம் அருமையான பயணம் போலத் தெரிகிறது. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. ரொம்பவே அழகு! தொடர்கிறோம் ஜி,
  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நல்லதொரு பயணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....