செவ்வாய், 24 ஏப்ரல், 2018

கதம்பம் – மணிப்பூர் டு தில்லி – தில்லி 27 – ஸ்டைல்… - அப்பாவின் அறிவுரைபேருந்திலேயே மணிப்பூர் டு தில்லி


வரைபடம் - இணையத்திலிருந்து....

மணிப்பூர் தலைநகர் இம்ஃபால் நகரிலிருந்து தில்லி வரை பேருந்திலேயே வருவது சாத்தியமா? கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் தொலைவு! ஆனால் அடிக்கடி இப்படி பேருந்திலேயே தில்லி வரை – வழியில் பல இடங்களைப் பார்த்தபடியே வரும் சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பேருந்தின் மேற்புறத்தில் கட்டியிருக்கும் பொருட்களைப் பார்த்தால் ஒரு மாத சுற்றுலாவாக வருபவர்கள் போல் தோன்றும். தில்லிக்கு வரும் வழியிலேயே அசாம், மேற்கு வங்காளம், பீஹார், உத்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று கடைசியாக இந்தியத் தலைநகருக்கு வந்து இங்கே சுற்றிப் பார்த்து விட்டு நிறைய பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.  அடிக்கடி இப்படியான சுற்றுலாப் பயணிகள் எங்கள் குடியிருப்பின் அருகே இருக்கும் Chugh தரம்ஷாலாவில் பார்க்க முடிகிறது.


இத்தனை தூரம் பயணிக்க அவர்களுக்கு முடிகிறதே என்பதை நினைத்தால் ஆச்சரியமும் அவர்களது உடல்நிலையும் ஒத்துழைக்கிறதே என்ற எண்ணமும் வருவதுண்டு. ஒரு சில நாட்கள் பயணிப்பதற்கே நிறைய வசதிகளை எதிர்பார்க்கும் பலரை பார்க்க முடிகிறது. அவர்களையும் இவர்களையும் ஒப்பீடு செய்யாமல் இருக்க முடியவில்லை. இந்த வாரத்தில் இப்படி இரண்டு மூன்று பேருந்துகளை பார்த்தேன். இவர்கள் இப்படியே இந்தியா முழுவதும் சுற்றுவதுண்டு என்று நண்பர் சொன்னார் – ஆந்திரப் பிரதேசத்தின் அகோபிலம் அருகே இப்படி மணிப்பூர் பேருந்தினைப் பார்த்ததாகச் சொன்னார் நண்பர்! எப்படிதான் இவர்களால் இவ்வளவு தொலைதூரம் பேருந்தில் பயணிக்க முடிகிறதோ? Hats Off to them!

ஸ்டைலு ஸ்டைலு தான் – மை க்ளிக்ஸ்!


ஸ்டைலு ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்!
சென்ற வாரத்தில் ஒரு நாள் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தில்லி கோவிலிலிருந்து நண்பர்களோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இரண்டு சிறுவர்கள் – குழந்தைகளுக்கான சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தார்கள். அந்த பழைய ஓட்டைச் சைக்கிளை ஓட்டும்போதும் பயங்கர ஸ்டைல்! வழியில் கிடைத்த ஒரு உடைந்த Cooling Glass பார்த்ததும் ஒரு சிறுவனுக்கு மகிழ்ச்சி – கண்ணாடி இல்லாது வெறும் Frame மட்டுமே இருந்ததை எடுத்து முகத்தில் மாட்டிக்கொண்டு ஒரே ஸ்டைலு தான்! பார்த்தவுடன், ”சூப்பரா இருக்குப்பா, இரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்!” என்றவுடன் ”இருங்க, சரியா போட்டுக்கறேன்” என்று போட்டுக்கொண்டு “யோ…” என்று விரல்களால் கண்ணாடியைக் காண்பித்தபடி ஒரு போஸ்! சிறுவர்களாக இருக்கும்போது யார் என்ன நினைப்பார்கள் என்ற கவலையே வேண்டாம் – எவ்வளவு மகிழ்ச்சியான காலம் அது…..  சிறுவர்கள் நன்றாக இருக்கட்டும்!

அப்பா குழந்தைகளுக்குச் சொன்ன அட்வைஸ்!:

வழக்கம் போல காலையில் எழுந்து தால்கட்டோரா பூங்காவிற்கு நடைப் பயிற்சி. பூங்கா வாயிலில் நிறைய செல்லச் செல்வங்கள் இருப்பதை முன்பு ஒரு பதிவிலும் எழுதி இருந்தேன். அன்றும் நிறையவே இருந்தன – சின்னதும் பெரியதுமாய். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் தனது இரு வாரிசுகளோடு - ஒரு அப்பா.  ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு வாரிசுகள் – இருவருக்கும் வயது ஏழுக்குள் இருக்கலாம். குழந்தைகளைப் பார்த்தவுடன் நாய்க்குட்டிகளுக்கு குதூகுலம். பின்னாலே வர, குழந்தைகள் சற்றே பயத்துடன் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த அப்பா குழந்தைகளுக்குச் சொன்ன அறிவுரை!

“அவற்றைப் பார்த்து பயப்படக் கூடாது. அப்படி இப்படி நகர்ந்தால் இன்னும் துரத்தும். ஓரிடத்தில் நிலையாக நில்! Stand to your place. Establish yourself!” இதுவரை சரியாகத்தான் இருந்தது! அதற்கப்பிறகு சொன்ன அறிவுரை தான்…..  ”அப்படியும் கிட்ட வந்தால் “லாத் மார்!” அதாவது எட்டி உதை!”  நல்ல அப்பா, நல்ல அறிவுரை!

தில்லி-27:இன்றைக்கு 24 ஏப்ரல்! இதே நாளில் தான் 27 வருடங்களுக்கு முன்னர் தலைநகர் தில்லியில் அரசுப் பணியில் சேர்ந்தேன். நாட்கள் தான் எத்தனை வேகமாக ஓடுகின்றன. இருபது வயதில் சேர்ந்தது. மொழி தெரியாது, வெளியுலகம் தெரியாது, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டார்போல இங்கே வந்து சேர்ந்தேன். இத்தனை வருடங்கள் ஓடிவிட்டன.  திரும்பிப் பார்க்கும் போது இங்கே கிடைத்த அனுபவங்கள், நட்பு, சிலரின் துரோகம் என அனைத்தும் மாற்றி மாற்றி காட்சிகளைக் காண முடிகிறது! இந்த 27 வருடங்கள் எனக்குத் தந்த அனுபவங்கள் எத்தனையோ. அத்தனையும் இங்கே எழுதவும் முடியாது, எழுத விருப்பமுமில்லை. சில மகிழ்வான தருணங்கள், சில தவிர்க்கமுடியாத சம்பவங்கள் என நிறையவே உண்டு.  இந்த 27 வருடங்களில் இழந்தது நிறையவே என்றாலும், அதை விட இங்கே கிடைத்த அனுபவங்கள், கற்றுக்கொண்ட விஷயங்களும் சம அளவில் உண்டு.

தொடர்ந்து பணியில் இருக்க விருப்பமில்லை என்றாலும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இங்கே இருந்தாக வேண்டும். இங்கே தொடர்ந்து பணியிலிருந்தால் 2031, இன்னும் 13 வருடங்களுக்குப் பிறகு தான் பணி ஓய்வு! என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்/சூழல்களின் கையில் விட்டுவிடுவோம்! வாழ்க்கையே சூழல்களிலும், சுழல்களிலும் தானே அகப்பட்டுக் கிடக்கிறது!

சின்னச் சின்னதாய் வேறு சில விஷயங்களோடு, வேறொரு கதம்பம் பகிர்வில் மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்... என்ன தளத்தின் தோற்றம் மாறி இருக்கிறது?

  பதிலளிநீக்கு
 2. பின்னூட்டம் இட்டதும் பழைய தோற்றத்துக்கு வந்துவிட்டது உங்கள் தளம். ஸோ... அது என் கணினிக் கோளாறு போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சமயங்களில் இப்படித்தான் படுத்துகிறது. காரணம் கூகிளாண்டவரே அறிவார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. அவ்வளவு தூரம் எப்படிப் பயணம் முடிகிறதோ ன்பதற்கு உடல் ஒத்துழைப்பை மட்டும் சொல்கிறீர்களோ? நேரம்? பணம்? அதுவும் முக்கியமாச்சே..! கொடுத்து வைத்தவர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணம் நேரம் இருந்தாலும், இவ்வளவு தூரம் பயணம் செய்ய உடலும் ஒத்துழைக்க வேண்டுமே! கொடுத்து வைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. இளமை! குழந்தைப்பருவம்.... கவலை இல்லாத - கவலைகளை அறியாத வயது... ம்...ஹூம்... நாம் கடந்து விட்டோமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவலை இல்லாத - கவலைகளை அறியாத வயது.... ம்.... ஹூம் நாம் கடந்து விட்டோமே.....

   இதுவும் கவலைகளில் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது இப்போது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அந்த அப்பாவை அங்கேயே லாத் மார் செய்திருக்க வேண்டியதுதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அங்கேயே லாத் மார்// செய்திருக்கலாம் - ஒரு கோபப் பார்வை மட்டுமே பார்க்க முடிந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. மிகவும் சிறு வயதிலேயே பணியில் சேர்ந்து விட்டீர்கள் போல... தமிழகம் பக்கம் பணி மாறுதல் பெறமுடியாத அலுவலக வகை என்று நினைக்கிறேன். முழு வருடங்களும் அலுப்பில்லாமல் பணி புரிந்துவிட வாழ்த்துகிறேன். உயரங்களை பிடிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இருபது வயது பூர்த்தியாவதற்கு முன்னரே பணியில் இணைந்தாயிற்று. அலுப்பில்லாமல் பணி - பார்க்கலாம்! அரசுத் துறையிலும் நிறைய பிரச்சனைகள் உண்டு! சில தொந்தரவு தருகிறது - மனதுக்குப் பிடித்தமில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. ஹைய்யோ! வாழ்க்கையே அனுபவங்களின் தொகுப்பு இல்லையோ! 2031 அவ்ளோ தூரத்திலா இருக்கு. அதுபாட்டுக்கு அதுன்னு ஓடிரும்! அதுவரை தில்லி வாழ்க்கையை ரசிச்சுக்கிட்டே இன்னும் பல பகுதிகளுக்குப் பயணம் போயிட்டு வாங்க. இனிய வாழ்த்துகளுடன் எங்கள் அன்பும் இத்துடன் !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கையே அனுபவங்களின் தொகுப்பு - உண்மை தான். தொட்டு விடும் தூரத்தில் 2031! ஆமாம் காலம் வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 8. முடிந்தவரை தில்லி வாழ்க்கையைத் தொடருங்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடரவேண்டும். பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. இன்னும் 13 வருடங்கள்தானே?! கண்மூடி திறப்பதற்குள் ஓடிவிடும்ண்ணே...

  நானும் பசங்களுக்கு இப்படிதான் சொல்லிக்கொடுப்பேன்/.. நாய் துரத்தினா ஓடாதீங்கன்னு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்மூடி திறப்பதற்குள் ஓடிவிடும் - உண்மை தான். காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 10. கதம்பம் நல்லாத்தான் இருந்தது. உங்கள் தில்லி வாழ்க்கையை நினைக்கும்போது, 'எங்கே வாழ்க்கை தொடங்கும்' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் சொன்ன பரிவு, அன்பு, துரோகம், நடிப்பு போன்றவற்றை ஆபீசில் சந்திக்காதவர் யார்?

  எனக்கும் நீண்ட தூரம் இந்த மணிப்பூர் வாசிகளைப்போல் பயணம் செய்யணும் என்ற எண்ணம். ஆனாலும் 4 நாளுக்குமேல் அலுத்துவிடும், உடம்பும் கழன்றுவிடும். பயணத்தில் ரொம்ப ஈசியானது, அதற்கான பணம் செலவழிப்பதுதான். மற்றபடி அட்ஜஸ்ட்மெண்ட், உடம்பு தாக்குப்பிடிப்பது போன்றவைதான் கஷ்டம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கே வாழ்க்கை தொடங்கும் பாடல் - நல்ல தத்துவ பாடல். சில சமயங்களில் இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்பதுண்டு.

   உடம்பு தாக்குப்பிடிப்பதும் கண்டிப்பான தேவை - பணம் இருந்தும் உடல்நிலை சரியில்லை என்றால் பயணிக்க முடியாது. நீங்கள் சொல்வது போல, பயணத்தில் ரொம்ப சுலபமானது பணம் செல்வழிப்பது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. அனுபவங்கள் கிடைக்காதவை கிடைப்பதை அனுபவிக்க வேண்டும் டெல்லியில் ஒரே இடத்தில் வேலையா ஆச்சரியம் தான் இப்போதெல்லாம் பணிமாற்றங்கள் அதிகம் செய்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே இடத்தில் அல்ல். வேறு வேறு பிரிவுகள் வேறு வேறு மனிதர்கள், விதம் விதமான அனுபவங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. வட நாட்டினர் வயதானவர்கள் நீண்ட தொலைவு பஸ் பயணம் செய்வதை பார்த்து இருக்கிறேன்.
  வழியில் இறங்கி சமைத்து சாப்பிடுவார்கள். அவர்கள் உடல் பலு வியக்க வைக்கும்.
  சிறுவன் படம் அருமை.

  சார் மாதிரி சிறு வயதில் வேலைக்கு வந்து விட்டீர்கள்.
  அவர்களை போலவே ஒரே ஊரில்.

  வேலை காலம் முழுவதும் நிறைவு செய்து ஒய்வு பெறுங்கள் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். சமையலுக்கான எல்லா பொருட்களும் கூடவே எடுத்து வந்து வழியில் நிறுத்தி சமைத்துச் சாப்பிடுவார்கள் - நீண்ட நாள் பயணங்கள்......

   சார் மாதிரி சிறு வயதில் வேலைக்கு வந்து விட்டீர்கள் - ஆமாம்மா. 19 வயதில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  ஒரேடியாக பஸ் பயணம் அலுப்பைத்தான் தரும். எப்படித்தான் பயணம் செய்கிறார்களோ . நீங்கள் சொல்வது போல் மனதிலும் உடலிலும் தெம்பு இருந்தால் ஒரளவு கஸ்டங்களை தவிர்த்து விடுமோ?
  வாழ்வின் அனுபவங்கள் சிலசமயங்களில் நமக்கு நிறைய கற்றுத் தரும். வேலை பளு சிரமம் தந்தால் இயலுமானால் தாங்கள் விரும்பியவாறு வேறு பணி மாற்றம் செய்து கொள்ளலாமே..ஆனால் குடும்பத்தையும் உத்தேசிக்க வேண்டுமே..

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதில் உறுதியும், உடலில் தெம்பும் - முக்கியத் தேவை - கூடவே பணமும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 14. அந்த அப்பாவை என்ன செய்யலாம் ஜி?!! ஹா ஹா கோபம் நல்ல அப்பா நல்ல அட்வைஸ்..
  மணிப்பூர் வாசிகளைப் போல் பஸ்ஸில் பயணம் செய்யும் மக்களைக் கண்டுள்ளேன் ஜி. எங்க ஊருக்கெல்லாம் கூட வந்திருக்கிறார்கள். அவர்களே சமைத்தும் சாப்பிடுவார்கள். ஆற்றிலோ, குளத்திலோ குளித்துத் துணிகளைக் தோய்த்து எடுத்து கரைகளில், மரங்களில் எல்லாம் காயப் போட்டு எடுத்துக் கொண்டு போவார்கள். இப்படி ஒவ்வொரு ஊரிலும் தங்கிப் போக பல மாதங்கள் கூட ஆகலாம் என்று நினைத்ததுண்டு.
  கொடுத்துவைத்தவர்கள் என்று தோன்றியதுண்டு. இப்படியும் பயணம் செய்ய ஆசை என்றாலும் யதார்த்தப் பிரச்சனைகள் மற்றும் உட்கார்ந்தே பயணம் என்பதும்….சில சமயம் அவர்கள் இரவு ஏதேனும் ஊரில் கோயில் மண்டபத்தில் கூடப் படுத்துக் கொண்டு அடுத்த நாள் காலை மீண்டும் பயணம் என்றும் தொடர்வதையும் கண்டுள்ளேன் எங்கள் ஊரில். நல்ல மனோபலம் உடல்பலம் இவர்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதில் பல வயதானவர்களையும் பார்க்க முடியும்.
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி பயணம் செய்பவர்களில் நிறைய வயதானவர்களையும் காண்பதுண்டு. அவர்களுக்கு மனோ பலம் அதிகம்! இப்போதைய இளைஞர்கள் சுகவாசிகளாகவே இருக்கிறார்கள். எதற்கும் அதிகம் சிரமப் பட விரும்புவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 15. ஆமாம் ஜி நீங்கள் முன்பே குறிப்பிட்டிருக்கிறீர்கள் உங்கள் டிகிரி முடிக்கும் முன்னர்/தருவாயிலேயே வேலை கிடைத்து தில்லிக்கு வந்துவிட்டதாக. ஆமாம் இத்தனை வருடங்கள் கொஞ்சம் நஞ்சமா இருக்கும் அனுபவங்கள்…கலந்து கட்டி அடித்திருக்கும்.
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய அனுபவங்கள் - அவற்றை எழுதினால் பல பக்கங்களுக்குப் போகலாம்! சில இங்கே எழுத முடியாதவை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 16. அட 27 வருடங்கள் தில்லி வாழ்க்கையா?! தமிழ்நாட்டிற்கு மாற்றம் பெற்றுக் கொள்ள முடியாதோ?
  அந்த அப்பா ஏன் இப்படி சொல்லிக் கொடுக்கிறார் தன் குழந்தைகளுக்கு.? !!
  மனீப்பூர் பயணிகளை நினைத்தால் ரொம்பவே பிரமிப்பாக இருக்கிறது. என்னால் எல்லாம் இப்படிப் ப்யணிக்க முடியுமா என்று தெரியவில்லை…..
  கதம்பம் நன்றாக இருக்கிறது ஜி
  துளசிதரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழகத்திற்கு மாற்றம் - கொஞ்சம் கடினம் தான். சில பிரச்சனைகள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....