திங்கள், 15 ஜூலை, 2013

விடைபெறுகிறேன்.....பட உதவி: கூகிள்


இத்தனை வருடங்களாக உங்களுடன் ஒருவராகவே இருந்து தகவல் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்கிறேன். இனிமேல் அப்படிச் செய்ய முடியாது. நானே நினைத்தாலும், முடியாது. ஏனெனில் அபாய சங்கு ஒலித்து விட்டது. இனிமேல் நான் யாருக்கும் பயன்படப் போவதில்லை. அதனால் நான் விடைபெறுகிறேன் நண்பர்களே.

இத்தனை வருடங்களில் என்னால் பயனடைந்தவர்கள் நிறையவே என எனக்குத் தெரியும். புள்ளிவிவரங்கள் எல்லாம் நான் இங்கே கொடுக்கப் போவதில்லை. நான் சொன்ன சில செய்திகள் சில வேதனைகளைக் கொடுத்திருந்தாலும் பல நல்ல செய்திகளையும் அவ்வப்போது சுமந்து வந்திருக்கிறேன். தகவல் பரிமாற்றம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். என் மூலம் சிலராவது பயனைப் பெற்றிருப்பார்கள் என நினைக்கும்போது மனதில் ஒரு ஆனந்தம். அந்த மகிழ்ச்சியோடே விடைபெறப் போகிறேன்.

திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்! இந்த நவீன யுகத்தில் என்னால் பயனேதுமில்லை. இந்த அவசர யுகத்தில் தகவல் பரிமாற்றங்களுக்கு பல விதமான வழிகள் இருக்கிறது. நானும் சில தகவல் பரிமாற்றங்களுக்கு உதவி இருந்தாலும், எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் என்னால் பலனில்லை. என்னை கவனிப்பாரும் யாருமில்லை. ஓரமாக ஒதுங்கிப் போ!என ஒதுக்கியபின் எனக்கான இடம் வேறு என ஆகிவிட்டது. அதனால் இனிமேல் உங்களால் என்னைக் காணவோ, என்னால் நீங்கள் பயன்பெறவோ முடியாது என்பதில் எனக்கு வருத்தமே. இருந்தாலும் விடைபெறத்தான் வேண்டும்.....

இது வரை என்னையும் தொடர்ந்து ஆதரித்து வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியோடு விடைபெறுகிறேன்......

இப்படிக்கு

தந்தி!

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
செய்தி: இன்று முதல் தந்தி சேவை ரத்து. 160 ஆண்டுகளாக செய்தி பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தப்பட்ட தந்தி சேவை நிறுத்தப்படுகிறது. ஒரு தந்தி அனுப்ப சுமாராக 430 ரூபாய் செலவு ஆகிறது. ஆனால் வரும் வருமானமோ மிகவும் குறைவு. மின்னஞ்சல், அலைபேசி என தகவல் பரிமாற்றத்திற்கு வேறு வழிகள் வந்துவிட, இவ்வளவு செலவு செய்து இந்த தந்தி சேவையைத் தொடரவேண்டாமென நிறுத்தி விட்டார்கள்.

  

பட உதவி: கூகிள்

 
சார் தந்தி என்ற குரல் கேட்டாலே இன்றைக்கும் என்ன கெட்ட செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதோ இத்தந்தி எனஒரு வித நடுக்கம் தோன்றும். பல சமயங்களில் வாழ்த்துச் செய்திகளைத் தாங்கி வந்திருந்தாலும், ஏனோ ‘சார் தந்திஎன்ற குரலே கெட்ட செய்தியைத் தரப்போகிறதோ என பதைபதைப்புடன் வாங்குவது தொடர்ந்து நடக்கும் ஒரு விஷயம்.
பட உதவி: கூகிள்
 


இதோ தந்திக்கு ஒரு முடிவு கட்டி விட்டார்கள். கடைசியாக அடிக்கப்படும் தந்தி அருங்காட்சியகத்தில் வைக்கப்போகிறார்களாம்! ஏற்கனவே கணினி வந்த பிறகு, முன்னர் தந்தி அனுப்ப பயன்பட்ட எந்திரத்தை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விட்டார்கள். இப்போது தந்தி சேவையும்!

இத்தனை வருட சேவைக்கு மிக்க நன்றி தந்தி!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


72 கருத்துகள்:

 1. அட போங்க சார்... தந்தியே போலவே பகிர்வும்...!

  கலக்கலுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதும் போல, தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்தமைக்கு நன்றி தனபாலன். உங்கள் பதிவினையும் படிக்கிறேன்.

   நீக்கு
 3. வருத்தம் அளிக்கும் செய்தி. இதை முதலில் கேள்விப்பட்டதிலிருந்தே மனத்தில் பாரம்தான். இங்கு தந்தி தன் வாயாலேயே விடைபெறுவதைச் சொல்லியிருப்பது இன்னும் பாரம் கூட்டுகிறது. சில நாட்களில் தந்தியை மறந்துவிடலாம். ஆனால் அந்நாளைய தந்தி நினைவுகளை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்கவே இயலாது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நாட்களில் தந்தியை மறந்துவிடலாம். ஆனால் அதன் நினைவுகளை..... நிச்சயம் மறக்கவே இயலாது. உண்மை தான் கீதமஞ்சரி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. தந்தியால் கிடைத்த நல்ல் செய்திகளும்
  துயரச் செய்திகளும் வரிசையாய் என்னுள் வந்து போக
  ஒரு நல்ல உறவினரை இழந்த சோகம்
  படர்ந்து விரிகிறது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிமையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 5. சென்று வா தந்தி. இது காலத்தின் கட்டாயம். ஆனால் உனது சேவையை எம் தலைமுறையினர் என்றும் மறவோம். நன்றியுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 6. ஆரம்பத்தில் படித்தபோது உண்மையிலேயே மனமுடைந்துபோனேன்.. தங்களுக்கு எதேனும் பிரச்சனையோ.. விடைபெறுகிறீர்களே, என்று பதறியது மனம். தந்தி சொல்வதைப்போல் சொன்னதைப் படித்தவுடந்தான் நிம்மதியாய் இருந்தது.

  நிஜமாலுமே தந்தியின் சேவை மறக்கமுடியாத ஒன்று.
  என் திருமண நாள் அன்று ஒன்று தந்தி வந்து என்னையும் என் குடும்பத்தையும் கதிகலக்கவைத்தது. பார்த்தால் என்னுடைய பள்ளித்தோழன் ஒருவன் எனக்கு வாழ்த்து சொல்லி தந்தி அனுப்பியிருந்தான்.

  நல்ல பகிர்வு, தொடருங்கள்.. விடைபெறாமல். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... மனமுடைய நான் காரணமாகிவிட்டேனே! :(

   நிச்சயம் மறக்க முடியாத சேவை தான் தந்தி சேவை.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   நீக்கு
 7. தந்தியை இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும். டக் டக் என்ற தந்திக்கு பிரியா விடை கொடுப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளி.

   நீக்கு
 8. தந்தி வந்திருக்குன்னதும் பதறும் மனோரமாவிடம், ‘‘இது உங்கப்பன் செத்துட்டதா உங்கம்மா குடுத்த தந்தி. இது உங்கம்மா செத்துட்டதா உங்கப்பன் குடுத்த தந்தி. தந்தின்னா ‌நல்ல விஷயமே வராதா என்ன?’’ என்பார் நாகேஷ். அது நினைவிற்கு வந்தது இதைப் படித்ததும். இதுநாள் வரை பயன்தந்த சேவையாக இருந்த இந்தத் தந்தி இன்று எஸ்.எம்.எஸ். யுகம் பிறந்ததும் விடைபெறுகிறது. தந்தியின் பயனை சென்ற தலைமுறையினர் மறக்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனே இந்த காட்சியெல்லாம் உங்கள் நினைவுக்கு வருது பாருங்க! நமக்கு நினைவாற்றல் ரொம்ப சுத்தம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 9. சொன்ன விதம் அதிர்ச்சியாக இருந்தது அப்புறம்தான் உண்மை தெரிந்தது .தந்திக்கு டாட்டா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   நீக்கு
 10. ஹா ஹா ஹா ஹா உங்களுக்குத்தான் என்னவோ பிரச்சினைன்னு பயந்து போனேன், தந்தியா.....? அவ்வ்வ்வ்வ்.....

  உலக முன்னேற்றம் வரும்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாத ஒன்று இல்லையா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா மனோ பயப்படலாமா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   நீக்கு
 11. ஹா ஹா ஹா ... நானும் குழப்பம் அடைந்தேன்....

  இனி மாணவர்களுக்கு பள்ளியில் பல வித கடிதங்கள் எழுத கொடுக்கும் பயிற்சியும் நின்று விடுமோ? அங்கும் மின்னஞ்சல் பயிற்சிகள் தொடங்கிடுமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கனவே சில பள்ளிகளில் மின்னஞ்சல் பயிற்சி கொடுக்கிறார்கள்... :) ஹோம் வொர்க் அனுப்புவதே மின்னஞ்சலில் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   நீக்கு
 12. ஒரு கணம் அசர வைத்து விட்டீர்கள்.தந்திக்கு பதிலாக e தந்தி அறிமுகம் ஆகிறது.செலவு ரூ பத்து மட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. e-தந்தி - தகவலுக்கு நன்றி ஸ்ரீனிவாசன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. கடைசியாக அடிக்கப்படும் தந்தி அருங்காட்சியகத்தில் வைக்கப்போகிறார்களாம்! ஏற்கனவே கணினி வந்த பிறகு, முன்னர் தந்தி அனுப்ப பயன்பட்ட எந்திரத்தை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விட்டார்கள். இப்போது தந்தி சேவையும்!

  இத்தனை வருட சேவைக்கு மிக்க நன்றி தந்தி!

  காலம் செய்யும் கோலம் ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு

 14. தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி தான்,(அந்த காலத்தில் தந்தி தந்த அதிர்ச்சி போலத்தான்) தந்தி விடைபெறுகிறேன் எனபதை படித்தவுடன் ஆறுதல்.
  அந்தக் காலத்தில் தந்தி மகிழ்ச்சியான செய்திகளையும் , வருத்தமான செய்திகளையும் அள்ளி வந்து இருக்கிறது.
  கல்யாண வீடூகளுக்கு வரமுடியாதவர்கள் வாழ்த்து தந்தி அடிப்பார்கள். திருமண நாள் வாழ்த்துக்கு தந்தி அடிப்பார்கள். பிறந்தநாளுக்கு வாழ்த்து தந்தி வரும். அதை எல்லாம் நினைவுகளாய் இன்னும் வைத்து இருக்கிறேன்.
  முதல் குழந்தை பிறந்த போது தந்தியில் தான் உறவினர்களுக்கு சொல்லப்பட்டது.
  தந்தியின் சேவை மனதுக்கு வருத்தம் அளித்தாலும் ராமலக்ஷமி சொன்னது போல் புதியவை வரும் போது பழமை அடித்து செல்லப்படுவது காலத்தின் கடடாயம் தான். தந்தி தந்த நினைவுகள் மனசுரங்கத்தை விட்டு மறையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் தலைப்பு எல்லோரையும் அதிர்ச்சி அடையச் செய்து விட்டது போலும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. உண்மைதாங்க...உங்களுக்குதான் ஏதோ பிரச்சனை என்பதாக நினைத்தேன்... அறிவியல் மாற்றங்களால் மூலைக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களில் இனி தந்தியும்...தெரிந்த செய்தியாயினும் கொடுக்கப்பட்ட விதம் அருமை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு பிரச்சனை என நினைத்தீர்களா! பிரச்சனை என எதையுமே நினைப்பதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 16. தலைப்பைப்பார்த்ததும் தந்தி வந்தது போல தவித்துப்போனேன், வெங்கட்ஜி.

  அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா, நீங்களும் தவித்து விட்டீர்களா? :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 17. டேஸ்போர்டில் பார்த்த பொழுது குழப்பமாய் இருந்தது, இருந்தாலும் ஒரு நிமிடத்திற்குள் கண்டு பிடித்துவிட்டேன்.. நல்ல வைக்ராயிங்க சார் தலைப்பு :-) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கண்டுபிடிப்பு சீனு! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. தந்திக்கு விடையா..... சரி..சரி...

  இளையோருக்கு தந்தி என்பதே தெரியாமல் போய் விடும் இன்னும் கொஞ்ச காலத்தில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ளாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகிவிடும்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்வாசி பிரகாஷ்.

   நீக்கு
 19. தந்தியின் இடத்தை இப்போ மொபைல் மெசேஜ் பிடிச்சுட்டிருக்கு. அது அடிக்கும் டிங்டிங் நம்ம லப்டப்பை எகிற வைக்குது :-))

  தந்தி-- left peacefully.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெசேஜ் மட்டுமல்ல, மொபைல் அடித்தாலே பிடிப்பதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கவி.

   நீக்கு
 21. ஆமாம், ஒரு கணம் குழம்பிப் போனோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 22. தலைப்பைக் கண்டு பயந்து விட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயப்பட வேண்டாம் புலவர் ஐயா..... இன்னும் சிறிது காலத்திற்கு பதிவுலகை விட்டு விலகப் போவதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 23. ஹா...ஹா... என்னவோன்னு நினைச்சேன்! நேற்று எக்கச்சக்க பேர்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டி தந்தி கொடுத்தார்களாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... இன்றைய நாளிதழில் சில புகைப்படங்கள் பார்த்தேன். தந்தி அலுவலகத்தில் பயங்கர கூட்டம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 24. எனது முகப்புத் தளத்தில் (DASHBOARD) “ விடைபெறுகிறேன்..... ” என்று உங்கள் பெயர் வந்தவுடன் ஆச்சரியப்பட்டு விட்டேன். பதிவின் உள்ளே சென்றபிறகுதான் உண்மைநிலவரம் தெரிந்தது.
  ” கடகடா கட்கட் “ அந்த சின்ன கருவியின் ஒலி இனி கேட்காது. காலம்தான் எவ்வளவு வேகமாக மாறுகிறது. இந்த மாறுதலுக்கு காரணமான, எல்லா பணிகளையும் ஒருங்கே செய்யும், அந்த செல்போனுக்கும் இந்த நிலைமை வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடகடா கட்கட்.... ஒலி இனிமேல் ஒலிக்கப் போவதில்லை! :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 25. நாகராஜ் ஜி... “ எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் என்னால் பலனில்லை. என்னை கவனிப்பாரும் யாருமில்லை. ”ஓரமாக ஒதுங்கிப் போ!” என ஒதுக்கியபின் எனக்கான இடம் வேறு என ஆகிவிட்டது.“

  இப்படியெல்லாம் படிக்கும் பொழுது... நாகராஜ் அவர்களுக்கு எழுதக் கூட
  முடியாத அளவிற்கு தள்ளாத வயது ஆகிவிட்டதா...?
  ஒவ்வொரு பதிவுக்கும் ஹிட் வாங்குபவரை கவனிப்பார் யாரும் இல்லையா...?
  இவரைப்போய் “ஒதுங்கிப் போ“ என்று சொல்பவர்களும் இருக்கிறார்களா...? என்று மனம் பரபரக்கப் படித்தேன்.
  “தந்தி“ என்றதும் தான் சற்று நிம்மதி வந்தது.

  பதிவு மிக மிக அருமையாக கொண்டு சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  தந்தி, பிடிக்காத செய்தியைக் கொண்டுவந்தாலும், அதற்கே ஒரு நாள் இறப்பு வர(ஒதுக்கப்பட)
  அதை இணையம் அவசரமாகக் கொண்டு வந்து சேர்ப்பதை எண்ணி நிச்சயம் மகிழ்ச்சியுடன் பார்த்து மகிழும்.

  தகவலுக்கு நன்றி நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தள்ளாத வயது! :) ஆமாங்க எதையும் தள்ளாத வயது தான் என்னுடையது! :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 26. ஆஸ்தியை ஆள்வதற்கு
  அழகு நிலா பிறந்ததென்று
  ஆயிரம் காத தூரத்தில்
  அப்பனுக்குக் சொன்னவன்!

  பெண்ணைப் பிடித்ததென்ற
  பேரின்பச் செய்தியையும்
  பெண்ணைப் பெற்றோர்க்குப்
  பொருத்தமாய்ச் சொன்னவன்!

  விடுமுறைக்கு வந்தபின்னே
  விடைசொல்ல மனமின்றி
  விடுப்பு நீட்டம் செய்வதற்கு
  விண்ணப்பம் சுமந்தவன்!

  நாலுபேர் சுமக்கு முன்னே
  நன்றியுள்ள நால்வருக்கு
  நடந்த செய்தி என்னவென்று
  நறுக்கென்று சொன்னவன்!

  நன்றி! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையில கல்க்கறீங்க பத்மநாபன் அண்ணாச்சி! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 27. ”சார் தந்தி” என்ற குரல் கேட்டாலே இன்றைக்கும் ” என்ன கெட்ட செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதோ இத்தந்தி என” ஒரு வித நடுக்கம் தோன்றும்
  >>
  அதேப்போலதான் உங்க தலைப்பும்...,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகையோ மதி காந்தி... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 28. எல்லாரையும் ஒரு நொடி ஆட்டீவிட்டீர்களே!
  ஒரு காலத்தில் தந்தி என்றாலே பலர் பயந்ததுண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தல நீங்க கூடவா.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா...

   நீக்கு
 29. நண்பரே! தங்களின் பதிவு கண்டேன்! தந்தித் துறையில் 83 முதல் பணிபுரிந்த எனக்கு தங்களின் பதிவை ஊகிக்க முடிந்தாலும் உடனடியாக முடிவைப் பார்த்ததும்தான் நினைத்தது சரிதான் என்றுணர்ந்தேன்! நானும் ஒரு பதிவு எழுத எண்ணியுள்ளேன்! பகிர்விற்கு நன்றி! நான் நெய்வேலியில் பணிபுரிந்த காலத்தில் 91 முதல் 95 வரை தந்தி அலுவலகத்தின் பொறுப்பாளராகத்தான் பணிபுரிந்தேன்(Assistant Superintendent Telegraph traffic). அருமையான பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி!


  சேஷாத்ரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னஞ்சல் மூலமாக சொன்ன கருத்தினை இங்கேயே சேமித்துக் கொண்டேன்....

   நெய்வேலியில் நான் 91 ஏப்ரல் வரை இருந்தேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 30. சுண்டி இழுக்கிற தலைப்பில் இதயம் சுண்டிய பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை.... தலைப்பு சுண்டி இழுத்துவிட்டது போலும்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 31. தலைப்பும் முதல் சில வரிகளும் உங்களுக்குத்தான் ஏதேனும் பிரச்சினையோ என்று யோசிக்க வைத்து விட்டது. அந்தக்காலத்தில் தந்தி கொடுத்த கலக்கங்கள் போலவே உங்களின் பதிவும் அதிரடி கலக்கல்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   நீக்கு
 32. தலைப்பையும் தந்தி வாசகங்கள் போல சுருக்கமாகத் தந்து எல்லோரையும் பதற அடித்துவிட்டீர்கள்!
  உங்கள் அதிரடி பதிவுகள் தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... நீங்களும் பதறிவிட்டீர்களா?

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 33. நானும் சற்றே ஆடிப்போனேன்(ஆடி மாதம் என்பதாலோ?: பின்ன என்ன நீங்க பதட்டப்படவைத்தால் நான் கொஞ்சம் சிரிக்கவைக்கவேண்டாமா?:)

  படங்களுடன் நல்ல விவரங்கள்... தந்திச்சேவை மகத்தானது... அதைப்பற்றிய கதை ஒன்றை விரைவில் என் ப்ளாக்கில் அளிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுகதை எழுத போறீங்கள? நல்லது. படிக்க ஆவலுடன்!

   தங்கள்து வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா.....

   நீக்கு
 34. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 35. எனக்கு இரண்டு குழந்தைங்க பிறந்தப்போவும் தந்தி தான் செய்தியைத் தெரிவித்தது. 89 ஆம் வருஷம் பதின்மூன்று வருஷம் கழிச்சு என் அண்ணாவுக்குப் பெண் பிறந்தப்போவும் தந்தி தான் செய்தி கொடுத்தது. எல்லா மாற்றல்களும் தந்தி மூலமே வந்தன. இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்தது. ஆனால் நீங்க கொடுத்த தலைப்பிலேயே விஷயம் புரிந்துவிட்டது. படிக்கையில் நன்றாகவே புரிந்தது. தாமதமா வந்திருக்கேன். :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....