அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதினெட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
Quarantine from Reality என்ற தலைப்பில் சுபஸ்ரீ அவர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சி குறித்த தனது எண்ணங்களை இன்றைய பதிவாக திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
Quarantine from Reality
சுபஸ்ரீ !
படங்களில் பாடல்கள் பார்க்கப்பட்டன;
பாடிய, வாயசைத்த நடிகர்கள் மெச்சப்பட்டனர்;
இதற்குமேல் எதுவும் தெரியாதிருந்தனர், ஜனம் அறியாமையால் கண் மூடியிருந்தனர்!
இசையமைப்பாளர் கவிஞர், பாடகர், பற்றி புத்தி அறிந்தது;
அதன் வீச்சு மெல்லப் புரிந்தது;
ஆயினும் பாட்டினிலுள்ளிருக்கும் நுணுக்கங்கள் புரியவில்லை,
அதனால் அதைப் போற்றவும் தெரியவில்லை;
கோரோனாவால் வந்தது முடக்கம் (lockdown);
அது தந்தது புதிய துவக்கம்;
QFR (Quarantine from Reality) நிகழ்ச்சியின் ஆரோகணம்; அது தந்தது ரசிப்பின் முழுப் பரிமாணம்; அதற்கில்லை ஒருபோதும் அவரோகணம்!
சுபஸ்ரீ எனும் மாயசக்தி நம் கண்கட்டி இட்டுச்சென்றது; திரைஇசையெனும் மலை உச்சி சென்று கட்டவிழ்த்தது;
நமக்குள் பிரமிப்பு மெல்ல மொட்டவிழ்ந்தது!
அவள் வர்ணனைகளில், கவிதைகளின் அழகு தெரிய, கவிஞர்கள் அருமை புரிய, இசை மன்னர்கள் அரியாசனத்தில் அமர; ராகங்கள் வர்ணஜாலமாய்க் கவர, பாடகர்(கள்) குரல் அருவியாய் இறங்க; கள்ளுண்ட வண்டாய் நாம் கிறங்க; இசைக்கருவிகள் ஒன்றை ஒன்று மிஞ்ச;
அவ்வனுபவத்திலேயே திளைத்திட மனம் கெஞ்ச; அப்பப்பா அது வேறுலகம்; சுபஸ்ரீயின் மாயாலோகம்!
இசையை ரசிப்பது ஒரு நிலை; ரசிக்க வைப்பது தனிக் கலை! சுபஸ்ரீக்கு அது கை(வாய்) வந்த கலை! அது அவள் விரித்த மாய வலை! அகப்பட்ட நாம் பெற்றதற்கு ஏது விலை?
திரை இசைக்கடலில் மூழ்கி முத்தெடுப்பதும் அதை மாலையாய்க் (கோர்வையாய்) கோர்த்து நமக்களிப்பதும்
சுபஸ்ரீ பாணி; அது
நம்மை இசை நதியில் இட்டுச்செல்லும் இன்பத் தோணி;
காரணம், அவள் திருவாக்கில் அமர்ந்த வாணி!
பாமர ரசிகரை பட்டதாரியாக்கும் கலையும் அறிவாள்! பண்டிதரையும் வியக்கச் செய்வாள் தன் அறிவால்!
மொத்தத்தில் சுபஸ்ரீ திரைஇசைக் கருவூலம்; இருந்தும் அவள் அடக்கத்தின்
முழுஉருவம்!
QFR ஐ பாட்டுக்காக கேட்பது போய் இப்போ இவள் பேச்சுக்காக நாம் கேட்பது மெய்!
சுபஸ்ரீ, உன்
புகழ் மேன் மேலும் ஓங்கிட; செயல்கள் யாவும் சிறந்திட; சிறப்புகள் யாவும் சேர்ந்திட; திரைஇசை அமிழ்தத்தில் மேலும் எமை ஆழ்த்திட; என்றும் வாழிய வாழியவே💐💐💐
என வாழ்த்தும்,
'திரையிசை என்சைக்ளோபீடியா' வும் 'ரசிகமாமணி'யும் ஆகிய Smt.சுபஸ்ரீயின் ரசிகை Viji.
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
19 நவம்பர் 2024
சுபஸ்ரீ நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன். ஆனால் பாடல்களை இப்போது நீங்கள் வர்ணித்திருக்கும் விதத்தில்தான் ஆரம்பத்திலிருந்தே நான் ரசிக்கிறேன்.
பதிலளிநீக்கு