அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி இருபத்தி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் சிறுகதை : என்றாவது ஒரு நாள்
சிறுகதைகள் படிக்கத் தோன்றும் போதெல்லாம், www.solvanam.com போன்ற இணையதளங்களில் வலைமேய்வது வழக்கம். அப்படி சமீபத்தில் படித்த ஒரு கதை - என்றாவது ஒரு நாள். கங்காதரன் சுப்ரமணியம் என்பவர் எழுதியிருக்கிறார். இனிமையான கதை. காணாமல் போன சகோதரன் பற்றிய கதை. அவரது அம்மா மகன் வருவான் என்று காத்திருக்க, முப்பது வருடங்களுக்குப் பின்னர் அந்த காத்திருப்பு என்ன ஆனது என்பதைச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். கதையிலிருந்து ஒரு பாரா மட்டும் கீழே. முழுதும் படிக்க சுட்டியும் கீழே தந்திருக்கிறேன்.
இன்று கோகுலாஷ்டமி. அம்மா வெல்லச்சீடையும், முறுக்கும் செய்து கொண்டிருந்தாள். வீடு பூராவும் அதன் வாசம் பரவியது. கண்களை மூடி, மூச்சை உள்ளிழுத்து அனுபவிக்கத் தூண்டும் கை பக்குவம் அம்மாவுக்கு. மொறுமொறுவென்று வாயில் போட்டதும் அப்படியே கரைந்து விடும். சுரேஷிற்கு அம்மாவின் வெல்லச்சீடையும், முறுக்கும் ரொம்பவே பிடிக்கும். அம்மாவுக்கும், பாட்டிக்கும் வீட்டில் அவன்தான் செல்லப் பிள்ளை. அம்மா அவனுக்காகவே ஒருபங்கை எப்போதும் தனியே எடுத்து வைத்திருப்பாள். இன்றோடு சுரேஷ் வீட்டை விட்டு ஓடிப் போய் முப்பது வருடங்களாகிறது.
கதையை முழுதும் படிக்க…
என்றாவது ஒரு நாள்…. – சொல்வனம் | இதழ் 328 | 13 அக் 2024
******
பழைய நினைப்புடா பேராண்டி : ஜோத் என்றொரு மலைச்சிகரம்
2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஜோத் என்றொரு மலைச்சிகரம் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
தரம்ஷாலாவிலிருந்து 110 கிலோமீட்டர் பயணித்து நாங்கள் அடைந்த மலைச்சிகரம் ஜோத் எனும் இடம். கரடு முரடான மலைப்பாதையில் பயணித்து அந்த இடத்தினை அடைந்த போது நேரம் காலை 11.30 மணி. சூரியன் கொஞ்சம் மந்தமாகவே இருந்தார்! காலையில் கண் விழிப்பது கொஞ்சம் லேட் தான்! சூரியன் தனது கிரணங்களால் சுட ஆரம்பித்தாலும், இந்தப் பகுதியில் இருக்கும் குளிர் காற்று சூரியக் கிரணங்களின் வீரியத்தினைக் குறைத்திருந்தது. சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திய பின்னர் சில படிகள் வழியே மேலே ஏறி வர, ”Heighest Picnic Spot [Jot]” என்ற பதாகை எங்களை வரவேற்றது. சுற்றிச் சுற்றி மலைகள் – மலைகளில் வளர்ந்திருந்த தேவதாரு மரங்கள் – தூரத்துச் சிகரங்கள் முழுவதும் பனி மூடியிருக்க அற்புதமான காட்சி பார்த்த அனுபவம்.
மேலே இருந்த சிறு கொட்டகையில் அமர்ந்து கொள்ள சிறு பலகைகள் இருக்கின்றன. அங்கே அமர்ந்து குளிர்ந்த காற்று உடலை ஊடுருவிச் சென்று ஊசியாய்க் குத்தினாலும் அந்த அனுபவத்தினை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தோம். காணும் காட்சிகளை புகைப்படம் எடுக்க வேண்டும் என கைகள் பரபரத்தாலும், மனது ”அப்புறம் எடுக்கலாம், முதல்ல கொஞ்சம் அனுபவிடா ராஜா” என்று கட்டளையிட்டது. நீண்ட நேரம் அங்கே நின்றபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். ஐந்து பேருமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை! எங்கே பார்த்தாலும் இயற்கை எழில்! நின்று நிதானித்து அந்த சுகானுபவத்தினை மனதில் உள்வாங்கிய பிறகு சில புகைப்படங்கள் எடுக்கத் துவங்கினேன்.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல்: Aao Hamare Hotel Me
சென்ற மாதம் நண்பர் ஸ்ரீராம் அவரது எங்கள் பிளாக் பதிவொன்றில் தேநீர் குறித்து எழுதி இருந்தார். தேநீர் குறித்த ஒரு மிக மிக பழைய ஹிந்தி பாடல் ஒன்று இந்த வாரத்தின் ரசித்த பாடலாக! படம் - குந்தன். 1955-ஆம் ஆண்டு வெளிவந்தது (நான் பிறப்பதற்கு 16 வருடம் முன்னர்!). பாடலை சமீபத்தில் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. பாடலாசிரியர், நடிகர்கள், இசை அமைப்பாளர், இயக்குனர் என யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் பாடல் மிகவும் பிடித்திருந்தது. கேட்டுப் பாருங்கள்.
மேலே உள்ள காணொளியை பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்.
******
இந்த வாரத்தின் ரசித்த நகைச்சுவை : மூன்று வகை நண்பர்கள்
ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நகைச்சுவை துணுக்குகள் மற்றும் கவிதைகள் சொல்லும் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இங்கே இருக்கும் வட இந்திய நண்பர்கள் அவ்வப்போது எனக்கும் இந்த மாதிரி காணொளிகளை அனுப்பி வைப்பார்கள். ஒரு சில ஓகே ரகமாக இருக்கும். சிலவற்றை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவோ, பார்க்கவோ முடியாதபடி இருக்கும். சில மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும். இப்படி ஒரு நகைச்சுவை காணொளி சில வருடங்களாகவே அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. அது ஒரு முதிய சர்தார்ஜி தர்லோக் சிங் chசுக்g, நண்பர்களின் மூன்று வகைகள் என்று பஞ்சாபியில் சொல்லும் நகைச்சுவை துணுக்கு. காணொளிக்கான சுட்டி கீழே.
அவர் சொல்கிறார் - மூன்று வகை நண்பர்கள் உண்டு - முதலாவது ஆயுர்வேதிக் நண்பர் - அவர்களது பேச்சும், நடை உடை பாவனையும் சிறப்பாக இருக்கும் ஆனால் அவசர காலத்தில் உதவிக்கு வர மாட்டார்கள். இரண்டாவது அலோபதிக் நண்பர் - அவசர காலத்தில் உதவி செய்வார்கள் என்றாலும் அவர்களால் உண்டாகும் Side Effects மிக அதிகம். மூன்றாவது ஹோமியோபதிக் நண்பர் - அவர்கள் மிக மிக நல்லவர்கள் - அவர்களால் நல்லது நடக்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் கெடுதல் செய்ய மாட்டார்கள்.
AyurvedicDost - Allopathic Dost - Homeopathic Dost - Types of Friends - Dost ke Prakaar - Sardaarji
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : பறக்கும் நாட்கள்
இதோ இப்போது தான் இந்த வருடம் ஆரம்பித்தது போன்று இருக்கிறது. ஆனால் பாருங்கள் நாட்கள் எப்படி பறக்கின்றன. அதற்குள் பதினோறு மாதங்கள் கடந்து நாளை இந்த வருடத்தின் கடைசி மாதத்தின் முதல் நாள். ஓடுகிற ஓட்டத்தில் டிசம்பர் மாதமும் கடந்து அடுத்த வருடம் தொடங்கிவிடும். எப்படி நாட்கள் கடந்து போகின்றன என்று தெரியாமலேயே கடந்து விடுகின்றன. நாட்களும், வருடங்களும் கடக்க, ஒவ்வொன்றாக வயதும் ஏறிக்கொண்டே தான் போகிறது! அவசர கதியில் நாட்கள் கடந்தாலும் ஏதோ ஒவ்வொரு நாளும் நாமே பிடித்துத் தள்ளுவது போல சில சிந்தனைகள் நம் மனதில் அவ்வப்போது தோன்றுவதையும் தவிர்க்க முடிவதில்லை அல்லவா? நம்முடைய நாட்களை முடிந்த அளவு பயனுள்ளதாக அமைத்துக் கொள்வோம் என்று சொல்வதைத் தவிர வேறென்னெ சொல்ல! தேவையில்லாத மனஸ்தாபங்களும், சண்டை சச்சரவுகளும் இல்லாமல் ஒருவருக்கொருவர் பரஸ்பர நேசத்துடன் வரும் நாட்களை கடத்துவோமே! என்ன நான் சொல்வது சரி தானே! உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
******
இந்த வாரத்தின் பகிர்வு : நல்வாழ்வியல் சிந்தனைகள்
சந்தோஷமும் நிலை இல்லாததது. துன்பமும் நிலையில்லாதது. எதுவுமே நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொண்டால் வாழும் வாழ்க்கையை எளிதாக கடக்கலாம்.
எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள். உங்களை விட அழகானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை.
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடுங்கள். இல்லையெனில் இந்த உலகம் உங்களை புதைத்து விடும்.
சிந்திக்க தெரிந்தவர்களுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
******
இந்த நாளின் ரசித்த பாடல் : கோவர்த்தன கிரிதர…
சமீபத்தில் இணையத்தில் Iham Khavyam என்கிற பெயரில் இருக்கும் Youtube Channel ஒன்றைக் காண நேர்ந்தது. நான்கு தலைமுறை பெண்கள் சேர்ந்து கோவர்த்தன கிரிதர பாடலை பாடுகிறார்கள். ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் அதற்கு அபிநயம் பிடிக்கிறார். மிகவும் அழகாக இருந்தது அந்தக் காணொளி. பாடல் பிரபலமான பாடல் என்பதால் அதைக் குறித்து ஒன்றும் சொல்லத் தேவையில்லை. அதில் மூத்தவர் 90 வயது பெண்மணி! இப்போதும் மிகவும் அழகாக பாடுகிறார். கேட்டுப் பாருங்களேன்!
மேலே உள்ள காணொளியை பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்.
Govardhana giridhara ft Kamala Subramaniam ,Dr.Lakshmi.S, Lakshya Vidhyasagar | Kavya Ajit - YouTube
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
30 நவம்பர் 2024
புது வருடம் விரைவில். அசைபோட இந்த ஆண்டின் நினைவுகள்
பதிலளிநீக்குபாட்டு பாடி டீக்கடைக்கு ஆட்களை இந்த அளவுக்கு அந்தக் காலத்தில்தான் இழுத்திருக்க முடியும். டிவி இல்லாத காலம். குழந்தையுடன் வந்து நிற்கும் அந்தப் பெண்தான் அநேகமாக ஹீரோயின் அல்லது ஹீரோவின் அம்மா. அனாதையாக வந்து நிற்கும் அவளுக்கு இந்த தம்பதியர் அடைக்கலம் கொடுக்கப் போகிறார்கள் என்பது யூகம்!
பதிலளிநீக்குசிறுகதை அப்புறம் வாசிக்கவேண்டும். திறந்து வைத்திருக்கிறேன். ஜோக் பதிவு மறுபடி பார்த்து வந்தேன்.
கோவர்த்தன கிரிதர் பாடல் பிரமாதம், காணொளியும் ரசித்தேன். தர்பாரி கானடா ராகம் என்று யூகிக்க முடிகிறது - சீர்காழியில் சிவசங்கரி பாடலும், சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடலும் நினைவுக்கு வருவதால்..