அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சென்ற ஐந்து வாரங்களாக நகர்வலம் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதியது நினைவில் இருக்கலாம். அந்த வரிசையில் இன்றைக்கு அடுத்த பதிவு!
தில்லியில் ஒரு நரசிம்மர் ஆலயம்
கரோல் Bபாக்g பகுதியினை அடுத்த பிரசாத் நகரில் ஒரு அழகிய நரசிம்மர் ஆலயம் இருக்கிறது. சில வருடங்கள் முன்னர் இந்த ஆலயம் குறித்து ஒரு பதிவு எழுதிய நினைவு இருக்கிறது. கிடைத்தால் தேடிப்பிடித்து அதன் சுட்டி இணைக்கிறேன். தில்லி வந்த புதிதிலிருந்தே இந்த ஆலயத்திற்கு சென்று வருவது வழக்கம். வந்த புதிதில் இதே பகுதியில் தான் மூன்று வருடங்களுக்கும் மேலாக தங்கியிருந்தேன் என்பதால் வாரம் ஒரு முறையேனும் சென்று வர முயற்சி செய்து சென்றிருக்கிறேன். பிறகு அங்கே இருந்து வேறு பகுதிக்குச் சென்றுவிட எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால் செல்வதுண்டு. சில வருடங்களாக இந்தப் பகுதியின் அருகே (சுமார் மூன்று கிலோமீட்டர்) வீடு இருப்பதால் அவ்வப்போது இந்த ஆலயத்திற்குச் சென்று வருகிறேன். சமீபத்தில் நகர்வலம் சென்றபோது மாலை நேரம் இந்த ஆலயத்திற்குச் சென்று வந்தேன். மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் ஆலயம். லக்ஷ்மிநரசிம்மர், தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உண்டு.
எப்போதும் மாலை நேரத்தில் இங்கே சென்று அரை மணி நேரமாவது அங்கே இருப்பது வழக்கம். பூஜைகள் செய்கிறேனோ இல்லையோ, ஆலய வளாகத்தில் அமைதியாக இறைவன் சன்னதிக்கு எதிரே அமர்ந்து இறைவனிடம் மனதுக்குள் மனதாக பேசிக் கொண்டிருப்பது இதம் தரும் விஷயம். மொத்தமாக பத்து பதினைந்து பேர் இருந்தால் பெரிய விஷயம் என்பதால் நம்மை தொந்தரவு செய்ய அங்கே யாரும் இருப்பதில்லை (திருவிழாக்கள், சிறப்பு நாட்கள் தவிர்த்து) என்பதால் நிறைய நேரம் அங்கே அமர்ந்து இருப்பேன். மாலை நேரம் ஆலயம் திறந்து பூஜைகள் முடிந்து தரிசனம் பெற்றுக்கொண்டு அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து இருப்பது மனதுக்கு இதம் தரும் விஷயமாக இருக்கிறது. லக்ஷ்மிநரசிம்மர் நல்ல பெரிய உருவத்தில் கம்பீரமாக அமர்ந்து கொண்டு இருப்பதோடு தன்னுடனே லக்ஷ்மியையும் அமரவைத்து இருப்பார் என்பதால் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் மனதில் ஒரு வித நிம்மதி. ஆலயத்தில் நிறைய இடமும் இருக்கிறது என்பதால் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு பிரார்த்தனையும் செய்ய முடியும் என்பது இங்கே கூடுதல் வசதி.
ஆலய வளாகத்தின் அருகிலேயே ராதாசுவாமி சத்சங் தியான நிலைய வளாகம், BL Kapoor மருத்துவமனை, தபால் நிலையம், தீயணைப்பு நிலையம் என நிறைய இடங்கள் உண்டு என்றாலும் இன்னுமொரு இடமும் எதிர் பக்கத்தில் இருக்கிறது - அது அந்தப் பகுதிக்கான மயான பூமி. வடக்கில் உள்ள மயான பூமிகளில் ஒரு வழக்கம் உண்டு - நுழைவாயிலில் பார்த்தால் எதோ ஒரு ஆலயத்திற்குச் செல்வது போல சிவன் சிலைகள் இருக்கும், உள்ளேயும் பெரிய சிவன் சிலையை வைத்திருப்பார்கள். புதிதாகப் பார்க்கும் நபர்களுக்கு அது ஒரு சிவாலயமாக தெரிய வாய்ப்புண்டு. ஆனால் ஹிந்தியில் வெளியே ஷம்ஷான் Gகாட் என்று எழுதியிருப்பதை படித்துவிட்டால் பிரச்சனையில்லை. இல்லையெனில் ஆலயம் என நினைத்து மயான பூமிக்குள் சென்றுவிட நேரும். பல வருடங்களாக தில்லியில் இருப்பதால் எனக்கு இந்த பழக்கம் தெரியும் என்பதால் இப்படி நேர்ந்தது இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்த சிலர் இந்த மயான பூமிக்குள் சிவாலயம் என்று சென்றுவிட்ட பிறகு மனக்கஷ்டம் கொண்டதுண்டு.
இந்த நரசிம்மர் ஆலயம் அஹோபில மடத்தின் சார்பாக நிறுவப்பட்ட ஒரு ஆலயம். அஹோபில மடத்தின் பூஜா விதிமுறைகள் மட்டுமே இங்கே கடைபிடிக்கப்பிடிக்கின்றன. நடத்துவது தமிழர்கள் என்றாலும் தில்லியில் உள்ள அனைத்து மக்களும், வட இந்தியர்கள் உட்பட தொடர்ந்து இங்கே வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இங்கே பூஜை செய்வதற்கு ஒருவரும், அவருக்கு உதவி செய்யவும், தளிகை வேலைகளை பார்த்துக் கொள்ளவும் ஒருவர் இருக்கிறார். இந்த இரண்டாம் மனிதர் பல வருடங்களாக இந்த ஆலயத்தில் சேவை புரிகிறார். பலராலும் சித்தப்பா என்றே அழைக்கப்படும் இவர் இறைப்பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இன்றைக்கும் தளிகை விறகு அடுப்பில் தான். சித்தப்பாவின் கைமணத்தில் பிரசாதங்கள் தயாராகின்றன. இவர் கைமணத்தில் தயாரான பிரசாதம் பெருமாளுக்கு கண்டருளப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறை இங்கே செல்லும்போதும், செல்லும் நேரத்தைப் பொறுத்து எனக்கும் பலமுறை இறைவனுக்கு கண்டருளப்பட்ட எள்ளோரை, புளியோதரை, சுண்டல் என ஏதோ ஒன்று கிடைத்துவிடுகிறது.
இந்த முறை சென்றபோது சரியாக மாலை நேர பூஜைகள் முடிந்து திரைவிலகிய சமயம் என்பதால் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இருந்தேன். பிறகு எள்ளோரை மற்றும் கொண்டக்கடலை சுண்டல் தொன்னைகளில் வழிய வழிய கொடுத்தார்கள். “எச்சரிக்கை” என்று சித்தப்பா சொன்னவுடன் எழுந்து கொண்டு ஆலய வளாகத்தில் கையில் பிரசாதத்துடன் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். பொதுவாக ஆலய வளாகத்தில் பிரசாதம் சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கீழே சிந்தும், அதை எடுக்காமல் விட்டால் பக்தர்களின் காலில் படும் என்பதால் வளாகத்தில் உண்பதில்லை. ஆனால் ஆலயத்திற்கு வரும் பலரும் அங்கேயே அமர்ந்து உண்டுவிடுவார்கள். நான் பிரசாதத்தை ஆலயத்தின் நுழைவாயில் வரை எடுத்துக் கொண்டு வந்து அங்கே இருக்கும் படிகளில் அமர்ந்து பொறுமையாக சாப்பிடுவது தான் வழக்கம். இரண்டு தொன்னை பிரசாதம் ஒரு சிற்றுண்டியாகவே இருந்துவிட, ஏதேனும் பழங்கள் சாப்பிட்டு பால் அருந்தினால் இரவு வேளைக்கான உணவு முடிந்துவிடும்! பிரசாதம் கை நிறைய அள்ளிப் போடுவதால் நிறையவே இருக்கும்.
இந்த ஆலயத்தில் பணிபுரியும் நேபாளி குறித்தும் இங்கே சொல்ல வேண்டும். பல வருடங்களாக இங்கே பணிபுரிகிறார். நேபாளி, ஹிந்தி மொழி தவிர தமிழும் கற்றுக்கொண்டு பேசுகிறார். ஆலய வேலைகள் செய்வதோடு ஆலய நுழைவாயில் அருகே, ஆலயத்தின் உள்ளே இருக்கும் இடத்தில் பூக்கள், அவரே தொடுக்கும் மாலைகள், தேங்காய், வெற்றிலை பாக்கு போன்றவற்றையும் விற்பனை செய்கிறார். ஆலய வளாகத்தில் இவை கிடைப்பது நல்ல விஷயம். ஏனெனில் ஆலயம் இருக்கும் பகுதியில் வேறு கடைகள் இல்லை. தில்லி வரும் வாய்ப்பு அமைந்தால், கரோல் Bபாக்g பக்கம் சென்றால் இந்த ஆலயத்திற்கும் ஒரு முறை சென்று வாருங்களேன். லக்ஷ்மிநரசிம்மரின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும். வேறு ஒரு விடுமுறை நாளில் மீண்டும் நகர்வலம் வந்தபோது கிடைத்த அனுபவங்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
தொடர்ந்து வலம் வருவோம்…..
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
6 நவம்பர் 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....